இன்றுதான் ‘நீயா நானா’ எபிசோட் பார்த்தேன். நீங்கள் பேசிய விஷயங்களை மிகவும் முக்கியமானதாகப் பார்க்கிறேன். காரணம், உறவுகளில் Masculine - Feminine Energy, அது அளிக்கக்கூடிய பங்களிப்பு குறித்து தமிழ் எழுத்தாளர்கள் பேசுவதில்லை. நவீனப் பெண்ணியத்தில் நவீனத் தமிழிலக்கியவாதிகள் சிலர் சிக்கிக்கொண்டதையே அதிகம் பார்க்க முடிகிறது.
முழு எபிசோடையும் ஹார்ஸ்டாரில் பார்த்துவிட்டு உங்கள் பேச்சை மட்டும் யூடியூபில் தேடிப் பார்த்தேன். ஒன்றரை நிமிட யூடியூப் காணொளியில் சில விஷயங்களை வெட்டியெறிந்திருந்திருக்கின்றனர்.
- முந்தைய தலைமுறையினர் தங்களை கெத்தாகக் காட்டிக்கொண்டனர். இந்தத் தலைமுறையினர் பலவீனமாக மாறிக்கொண்டிருக்கின்றனர்.- Masculine Crisis - Feminine Crisis
இவ்விரு முக்கியமான பகுதியை வெட்டியெடுத்தவரோ அல்லது வெட்டியெடுக்க உத்தரவிட்டவரோ ஒன்று இதன் முக்கியத்துவம் தெரியாமல் இருக்க வேண்டும்; அல்லது இது பேசக்கூடாத விஷயமாக அவர்கள் கருதியிருக்க வேண்டும். நல்விதமாக இப்பகுதி நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தது சந்தோஷம்.
நான் சமீபமாக Masculinity பற்றி எழுதி வருகிறேன். அது சார்ந்த பதிவுகளையும் அவ்வப்போது பதிவிடுவது உண்டு. ஆண்மை என்ற பெயரில் இதுவரை பெண்களை எதிர்த்து எழுதியதில்லை. நான் பெண் வெறுப்பாளனும் இல்லை. இருந்தாலும் ஆண்களுக்காக எழுதும் ஒரே காரணத்திற்காகவே chauvinist என்று நண்பர்கள் சிலரால் விமர்சிக்கப்படுகிறேன். இதை எழுதுவதால் வாழ்வில் சில முக்கியமான மனிதர்களையும் இழந்திருக்கிறேன். குறிப்பாகப் பெண்கள். ஓர் ஆண், தன் பருவத்திலுள்ள சக ஆண்களின் நலனுக்காகக் குரல் கொடுத்தல் ஏன் பெண்களை அவ்வளவு தொந்தரவு செய்கிறது என்பதைத் தெளிவாகவே புரிந்துகொள்ள முடிகிறது.
என் நண்பரின் முதல் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் பேசும்போது “இவர் ஒரு Masculine Poet” என்று பாராட்டினேன். உடனே என் நண்பரின் நண்பர் (ஆண்) ஒருவர் “நீங்கள் எப்படி அவரை அவ்வாறு சொல்லலாம்?” என்று கேட்டுவிட்டார். “பாராட்டத்தானய்யா செய்தேன்” என்றாகிவிட்டது. ஆக, அந்தச் சொல்லே பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் Woke கலாச்சாரத்தில் வாழ்ந்துகொண்டிருப்பது வேதனையளிக்கிறது. ஆண்களே இவ்விஷயத்தில் பிரக்ஞையற்று இருக்கும்போது என்னால் எப்படிப் பெண்களை எதிர்த்துக்கொண்டிருக்க முடியும்? அது எவ்வகையிலும் தீர்வளிக்காது என்பதை நன்கறிவேன். ஆனால் பெண்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்தான்! ஆண்கள் இந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ வேண்டும். தன்னைக் கொஞ்சமும் மேம்படுத்திக்கொள்ளாத, உரையாடல் திறன்கூட அற்ற 30 வயது ஆண்களை எனக்குத் தெரியும். அவர்களில் சிலர் இலக்கிய உலகைச் சேர்ந்தவர்கள். நவீனத் தமிழிலக்கியத்தின் சில படைப்புகளும் பெண்ணிடம் பணிந்துபோவதைக் கவித்துவமாக்கிக்கொண்டிருக்கிறது; இதுவே இப்போது அரசியல் சரியாகவும் வந்து நிற்கிறது. இதைக் காணும்போது மிகுந்த வருத்தமாகவும் கோபமாகவும் இருக்கிறது.
இப்படியான சூழ்நிலையில் உங்களைப் போன்ற ஒருவர் ஆண்மைத்தனத்தைப் பற்றி எழுதுவதும் பேசுவதும் மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் உங்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் மகிழ்வேன்.
Comments