top of page
Search
Writer's pictureBalu

இளஞ்சிவப்பு காலுறை - ஆன்டன் செகாவ்

சலிப்பூட்டக்கூடிய பனிமழை நாள். வான் மேகங்களால் சூழ்ந்திருந்தது. மழை நிற்பதற்கான எந்த வாய்ப்பும் உள்ளதாகத் தெரியவில்லை. அறை அரை இருளில் இருந்தது. நெருப்பைக் கொளுத்தி இதமூட்டிக்கொள்ளத் தூண்டும் அளவுக்குக் குளிர்.


பாவெல் பெட்ரோவிச் சோமோவ், வானிலையைப் பார்த்து முணுமுணுத்தபடி படித்தார். அறையின் இருளும், ஜன்னலில் வழிந்தோடிய மழையின் கண்ணீரும் அவரை மனச்சோர்வுக்கு உள்ளாக்கின. அதற்கு மேல் செய்வதற்கு எதுவுமில்லாதவராய் சலிப்படைந்தார். செய்தித்தாள் இன்னும் வரவில்லை.


சோமோவ் ஒன்றும் தனியாக வாசித்துக்கொண்டிருக்கவில்லை. அவரது மனைவி மிஸ்ட்ரஸ் சோமோவ், லேசான ரவிக்கை மற்றும் இளஞ்சிவப்பு காலுறை அணிந்த ஓர் அழகான பெண், அவருடைய எழுத்து மேசையில் அமர்ந்திருந்தார். அவரது மனைவி ஒரு கடிதத்தைக் கிறுக்கிக்கொண்டிருந்தாள். அவளைக் கடந்து சென்றபோதெல்லாம், அப்படி என்னதான் எழுதுகிறாள் என மேலும் கீழுமாக நோட்டமிட்டார்.


“லிடோச்கா, என்ன இவ்வளவு பெரிய கடிதம்? யாருக்கு?” என்று விசாரித்தார் சோமோவ். லிடோச்கா அப்போது ஆறாவது பக்கத்தை எழுதிக்கொண்டிருந்தாள்.


“தங்கை வார்யாவுக்கு”


“ஹ்ம்ம்… பெரிய கடிதம். எனக்கு சலிப்பா இருக்கு. கொடு, படிக்கிறேன்”


“படிங்க, ஆனா சுவாரசியமா எதுவும் இருக்காது”


சோமோவ் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினார். லிடோச்கா தன் கணவனின் முகபாவனையைக் கவனித்தாள். முதல் பக்கத்தைப் படித்ததும் அவர் முகத்தில் ஏதோ ஓர் அச்சவுணர்வு காணப்பட்டது. மூன்றாவது பக்கத்தில் சோமோவ் முகம் சுளித்து, தலையின் பின்புறத்தைச் சொறிந்தார். நான்காவது பக்கம் முடிந்ததும் அதே அச்சவுணர்வுடன் தன் மனைவியைப் பார்த்தார். மீண்டும் கடித்ததைப் படிக்க ஆரம்பித்தார். அவருடைய முகம் குழப்பத்தால் நிறைந்திருந்தது.


“நம்பவே முடியல” என்று முழு கடிதத்தையும் படித்து முடித்துச் சொன்னார் சோமோவ்.


“என்ன ஆச்சு?” என்றாள் லிடோச்கா.


“என்னா ஆச்சா? ஆறு பக்கம் எழுதி ரெண்டு மணி நேரம் வீணடிச்சிருக்க. வேற ஒன்னும் ஆகல. மூளை காஞ்சிப் போகுது இதைப் படிக்கும்போது”


“உண்மைதான். நான் கொஞ்சம் கவனக்குறைவோட எழுதினேன்”


“ரொம்ப கவனக்குறைவோட. ஒரு கடிதம்னா அதுக்கு பிரத்யேகமான அர்த்தமும் ஸ்டைலும் இருக்கணும். ஆனா உன்னோடது, அதை என்னன்னு சொல்ல? குப்பை. வார்த்தைகளும் வாக்கியங்களும் இருக்கு. ஆனா அர்த்தப்படுதா? சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டு. கேவலமான யோசனைகள் பிசாசு போல நடனமாடுது. எது எங்கே தொடங்குது எங்கே முடியுதுனே தெரியல. எப்படி உன்னால இவ்வளவு மட்டமா எழுத முடியுது?”


“நான் கவனத்துடன் எழுதியிருந்தா இவ்வளவு பிழைகள் வந்திருக்காது” என்று லிடோச்கா தன்னைத் தற்காத்துக்கொண்டாள்.


“நான் பிழைகளைப் பத்தி பேசல; இலக்கணம். நீ எழுதியிருக்கிற ஒவ்வொரு வரியும் இலக்கணத்தை அசிங்கப்படுத்துது. புள்ளி இல்ல, கமா இல்ல, எழுத்துப்பிழை அவ்வளவு இருக்கு. எழுத்து நடை சொல்லவே வேண்டாம். நான் கேலி பண்ணலை, லிடா. உன் கடிதத்தைப் படிச்சதும் ஆச்சரியமா இருக்கு. நீ என்மேல கோபப்பட மாட்டல, டார்லிங். உன் இலக்கணம் ஏன் இவ்வளவு மோசமா இருக்கு? எழுத்தறிவு இருக்கிற மனிதர்களோடதானே நீ பழகுற? நீ யாரு? ஒரு பல்கலைக்கழக ஆசிரியனின் மனைவி. ஒரு ராணுவ அதிகாரியின் மகள். பள்ளிக்கே போகாதவளா நீ?”


“நான் வான் மெப்கேயில் படித்தேன்”


சோமோவ் பெருமூச்சு விட்டார். லிடோச்காவும் தன் அறியாமையை உணர்ந்து வெட்கப்பட்டு பெருமூச்சு விட்டாள். இருவரும் பத்து நிமிடங்களுக்கு மௌனமாக இருந்தனர்.


“இது சரியில்ல லிடோச்கா. நீ இப்போ ஒரு தாய். புரிதுல, அம்மா! உன் பிள்ளைகளுக்கு நீதானே கற்பிக்கணும். உனக்கே எதுவும் தெரியாத பட்சத்தில் அவர்களுக்கு எப்படிக் கற்பிப்ப? உனக்கு நல்ல மூளை இருக்கு, அதைச் சரியான அறிவுத்தளத்தில் கொண்டு போகாத பட்சத்தில் அது இருந்து என்ன பயன்? அறிவை விடு. பிள்ளைகள் அதைப் பள்ளியிலிருந்து கற்றுக்கொள்வார்கள். ஆனால் அடிப்படை மொழித்திறன் அவசியமில்லையா?”


லிடோச்காவை எண்ணி சோமோவ் மிகவும் வருந்தினார். லிடோச்கா எதிர்ப்பு தெரிவிக்காமல் திருதிருவென முழித்தாள். இருவரும் ஒடுக்கப்பட்டவர்களாகவும், பரிதாபமாகவும் உணர்ந்தனர். நேரம் எப்படிக் கடந்தது என்பதையே அவர்கள் மறந்து போயிருந்தனர்.


இரவுணவின் போது சோமோவ் நிம்மதியாகச் சாப்பிட்டார். பெரிய மதுக்கோப்பையில் ஓட்கா பருகிக்கொண்டே வேறு சில விஷயங்களைப் பற்றி லிடோச்காவிடம் பேசினார். அவளும் அதைக் கேட்டபடி இருந்தாள். திடீரென வெடித்து அழுத அவள், சிணுங்கியபடி செய்வது அறியாமல் திகைத்தாள்.


“எல்லாம் என் அம்மாவின் தவறு. எல்லோரும் என்னை மேற்படிப்பு படிக்கச் சொன்னாங்க, அங்க இருந்து நான் பல்கலைக்கழக படிப்பையும் படிச்சிருக்கலாம்” என்று இரவுணவின்போது கண்ணீரைத் துடைத்துக்கொண்டே சொன்னாள் லிடோச்கா.


“பல்கலைக்கழகம்…மேற்படிப்பு” என்று சோமோவ் முணுமுணுத்தார். “நீல காலுறையாக இருந்து என்ன பயன்? ஆணாகவும் அல்லாமல் பெண்ணாகவும் அல்லாமல் இடையில்தான் நிற்கணும். நீல காலுறையே எனக்குப் பிடிக்காது. என்னால் ஒரு படித்த பெண்ணையெல்லாம் திருமணம் செய்துகொள்ளவே முடியாது…”


“நான் படிக்காததால் என்மேல் கோபப்படுறீங்க; அதேசமயம் படித்த பெண்களையும் வெறுக்கிறீங்க. என் கடிதத்தில் அர்த்தமில்லாதது உங்களுக்கு எரிச்சலூட்டுகிறது; அதே எரிச்சல் நான் படிக்கும்போதும் உங்களுக்கு ஏற்படுகிறது.”


“ஒரே வார்த்தையில் என்னைப் பிடித்துவிட்டாய், அன்பே” - சோமோவ் தனது சலிப்பில் இரண்டாவது கோப்பை ஓட்காவை ஊற்றினார்.


ஓட்காவும் நல்ல இரவுணவும் சோமோவுக்கு இதமூட்டின. தனது அழகான மனைவி பதட்டமான முகத்துடன் சாலட் தயாரிப்பதைப் பார்த்தார்.


‘நான் எவ்வளவு பெரிய முட்டாள். அவளது மனநிலையை இப்படிக் கெடுத்துவிட்டேனே!’ என்று நினைத்து வருந்தினார். ‘நான் ஏன் அவ்வளவு மோசமாகப் பேசினேன்? அவள் வெகுளி! அதுதான் உண்மை. படிக்காத பட்டிக்காடு. ஆனால் ஒரு கேள்விக்கு இரு பக்கங்கள் இருக்கும். எதிர்த்தரப்பும் கேட்கப்பட வேண்டும். ஒருவேளை, பெண்ணின் ஆழமற்ற தன்மை அவளது இயல்பிலேயே தங்கியுள்ளது என்று பலரும் கூறுவது முற்றிலும் சரியாக இருக்கலாம். கணவனை நேசிக்கவும், பிள்ளைகளை வளர்க்கவும், சாலட் சமைப்பதற்காகவுமே அவள் படைக்கப்பட்டிருக்கலாம். அவள் படித்து என்ன செய்யப் போகிறாள்? அவசியமே இல்லை’


அந்த நேரத்தில், படித்த பெண்கள் பொதுவாக அலுப்பானவர்கள், துல்லியமானவர்கள், கண்டிப்பானவர்கள், வளைந்து கொடுக்காதவர்கள் என்பதை நினைவு கூர்ந்தார். மறுபுறம், லிடோச்கா போன்ற பெண்ணைத் துணையாகக் கொண்டிருப்பது எவ்வளவு சௌகரியமாக உள்ளது என்பதையும் சிந்தித்தார். லிடோச்கா எந்த விஷயங்களிலும் மூக்கை நுழைக்க மாட்டாள். அவளுக்கு எதுவும் விளங்காது. தான் செய்த விமர்சனத்தைக்கூட அவள் தடுக்கவில்லையே! லிடோச்காவுடன் நிம்மதி, அமைதி, மனநிறைவு இருந்தன. அவளுடனான உறவில் எந்த ஆபத்தும் இல்லை.


‘புத்திசாலியான பெண்களைவிட எளிமையான பெண்களுடன் வாழ்வது எவ்வளவோ சிறந்தது’ என்று அவர் நினைத்தார். லிடோச்கா அப்போது சிக்கன் சமைத்துக்கொண்டிருந்தாள்.


ஒரு கற்றறிந்த நாகரீக மனிதனாக புத்திசாலி பெண்களுடன் அறிவு சார்ந்த உரையாடல் வைத்துக்கொள்வதற்கான ஆசைகளும் அவ்வப்போது அவருக்கு ஏற்படும். ‘அதுபோன்ற சமயத்தில் என்ன செய்வது?’ என்று சோமோவ் சிந்தித்தார். ‘அறிவு சார்ந்த உரையாடல் வைத்துக்கொள்ளத் தோன்றினால் நான் நதால்யா ஆண்ட்ரியேவ்னா அல்லது மரியா ஃப்ரான்ட்சோவ்னாவிடம் சென்றுகொள்கிறேன். அவ்வளவுதானே! இல்லை, இல்லை! எதற்கு அவர்களிடம் சென்றுகொண்டு? அறிவார்ந்த விஷயங்களை ஆண்களுடன் விவாதிப்பதே சரியாக இருக்கும்’ என்று ஒருவழியாக முடிவு செய்தார் சோமோவ்.


*


குறிப்பு


நீல காலுறை - படித்த பெண்கள்










127 views0 comments

Recent Posts

See All

Commentaires


Post: Blog2_Post
bottom of page