top of page
Search
Writer's pictureBalu

ஆணின் துரோகமும் பெண்ணின் துரோகமும் ஒன்றா?

Updated: Jan 14, 2023

ஸ்டீபம் - டாலி என்ற தம்பதியிடமிருந்து தொடங்கும் ‘அன்னா கரீனினா’ கதையில், அவர்களின் குழந்தைகளுக்கு ஃப்ரென்ச் கற்பிக்க ஓர் ஆசிரியை நியமிக்கப்படுவாள். அந்த ஆசிரியையுடன் ஸ்டீபம் கொண்ட கள்ள உறவை, மனைவி டாலி கண்டுபிடித்து விடுகிறாள். கணவனது மாற்று உறவை அறிந்துவிட்ட பெண் எப்படி நடந்து கொள்வாளோ அதேபோல்தான் டாலியும் நடந்து கொள்கிறாள். அவளுடைய வார்த்தைகள் மூலமும் நடத்தைகள் மூலமும் ஸ்டீபனை குற்றவுணர்வு கொள்ளச் செய்கிறாள். கணவனையும் குழந்தைகளையும் பிரியத் துளியும் அவளுக்கு மனம் இல்லையெனினும், பிரிய முடிவெடுக்கிறாள். ஸ்டீபனுக்கு இது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இவர்களுக்கு சமாதானம் பேசும் இடத்தில் அன்னா அறிமுகமாவாள். அவள் ஸ்டீபனின் தங்கை. அண்ணன், அண்ணியைச் சந்திக்க ரயில் ஏறிப் புறப்பட்டு வருகிறாள். அவர்களது பிரச்சனையைப் புரிந்துகொண்ட அன்னா, டாலியிடம் சமரசம் பேசுகிறாள். அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் டாலியின் மனதை மாற்றக்கூடியதாக இருந்தது. கள்ள உறவிலிருந்த கணவனை மன்னிக்கச் செய்கிறது. வந்த வேலை முடிந்ததும் அன்னா புறப்படுகிறாள்.

ஊர் திரும்பும்போது ரயில் நிலையத்தில் விரான்ஸ்கி என்ற ஆணைச் சந்திக்கிறாள். விரான்ஸ்கி ஏற்கனவே கரீனின் என்பவருக்குத் திருமணமான அன்னாவைக் காதலிக்கிறான். கரீனினிடம் “நான் ஸ்டீபனைப் போலல்ல” என்று சொன்ன அன்னா, பின்பு ஸ்டீபன் போலவே கள்ள உறவில் விரான்ஸ்கியைக் காதலிக்கிறாள். இது கரீனினுக்குத் தெரிய வந்த பிறகும், அவர் கண்ணியம் தவறாது நடந்து கொள்கிறார். அந்தப் பெருந்தன்மை அன்னாவை வருத்துகிறது. ஆனால் கரீனின் கோபம் வேறு விதமாக உருவெடுக்கிறது.

இந்த விஷயம் ஸ்டீபனுக்குத் தெரிய வந்ததும், எப்படித் தனது தங்கை தன் பிரச்சனைக்காகப் பரிந்து பேச வந்தாளோ அதேபோல் அவளது உறவுக்கு சமாதானம் பேச கரீனினைச் சந்திக்கிறான். ஆனால் ஸ்டீபனின் வார்த்தைகள் எதுவும் கரீனின் செவிகளுக்கு எட்டவில்லை. ஸ்டீபம் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறான்.

*

ஆண் செய்யும் தவற்றுக்கு எளிதில் மன்னிப்பு கிடைத்து விடுவது போலப் பெண்ணுக்குக் கிடைப்பதில்லை என்றும், பெண்களின் வார்த்தைகள் மன்னிக்கத் தூண்டுவது போல ஆண்களின் வார்த்தைகள் அற்புதம் செய்வதில்லை என்றும் இக்கதையை, நான் பெண்ணியவாதியாக இருந்த காலத்தில் புரிந்துகொண்டேன்.

‘அன்னா கரீனினா’ படித்த 3 ஆண்டுகள் பிறகு இன்று டால்ஸ்டாயின் ‘கிரேய்ஸர் சொனாட்டா’ நாவலை வாசித்தேன். இது கிட்டத்தட்ட ‘அன்னா கரீனினா’வின் குறுநாவல் வெர்ஷன் போல் இருந்ததால் மீண்டும் அன்னாவின் வாழ்க்கை குறித்து யோசிக்க நேர்ந்தது. நானும் கடந்த ஓராண்டில் நிறைய மாறிவிட்டதால் இப்போது ‘அன்னா கரீனினா’ பற்றி வேறு விதமாகத் தோன்றுகிறது.

இரு நாவல்களிலும் பெண்களின் துரோகம் பயங்கரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் ‘கிரேய்ஸர் சொனாட்டா’வின் கடைசி முப்பது பக்கங்களைப் படிக்கும்போது மாப்பசான் எழுத்து போலக் கொடூரமான முறையில் இருந்தது.

செகாவின் ‘The Chorus Girl’ கதையை என் முன்னாள் காதலியிடம் சொன்னபோது, “ஒருவரைத் தக்க வைக்க மற்றொருவரை இழந்தே ஆக வேண்டுமென்ற நிலை வரும்பட்சத்தில் ஆண்கள் தங்கள் கள்ள துணையைப் பிரிந்து மனைவியையே தேர்ந்தெடுப்பார்கள்; ஆனால் பெண்கள் நேர் எதிர்” என்றாள். ஆண்களுக்கு செக்ஸ் என்பது வெறும் செக்ஸ்; பெண்ணுக்கு அப்படி இருக்க முடியாது.

ஆணின் துரோகமும் பெண்ணின் துரோகமும் ஒன்றல்ல. ஆண்களால் பல கள்ள உறவுக்குப் பிறகும் மனைவியைக் குற்றவுணர்வின்றி முழு மனதோடு நேசிக்க முடியும். புணர்ச்சியின்போது பெண்களுக்கு உடலில் சுரக்கும் சில அபூர்வ ரசாயனங்கள், அதே வீரியத்துடன் ஆண்களுக்கு சுரப்பதில்லை என்பதால் பெண்களின் அனைத்துக் கலவியும் Love Making ஆகிறது. போதை வஸ்து எடுத்திருக்கும்போது மட்டும் விதிவிலக்கு.

எனவேதான் டால்ஸ்டாய் தன் நாவலுக்கு ‘ஸ்டீபன்’ என்று பெயரிடாமல் ‘அன்னா கரீனினா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.





74 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page