ஹாய் பாலு,
சில நாட்களுக்கு முன் ஜெயமோகன், லக்ஷ்மி சரவணகுமார் படிக விழாவில், “அரசியல் சரிநிலை பார்ப்பது அழுத்தம் தருகிறது” என்றார். அந்தப் பார்வையைச் சரி என்று சொல்லலாமா? முற்போக்கான சமூகத்திற்கு முக்கிய கூறுதானே அரசியல் சரிநிலை? அதைக் கருத்திற்கொள்ளாமல் ஒரு படைப்பைக் கொடுப்பது சரியா? அதுவும் முக்கிய எழுத்தாளர்கள் அப்படிச் செய்வதை எப்படி எடுத்துக்கொள்வது?
மனோஜ்
*
*
கடந்த சில ஆண்டுகளாக என்னை இணையத்தில் பின் தொடர்வோருக்குத் தெரியும். சமூக ஊடகம் உச்சநிலையிலிருந்தபோது நான் அரசியல் சரியுடனே எல்லாக் கலையையும் அணுகியிருக்கிறேன். வாழ்க்கையிலும் அப்படியே! ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘கப்பெல்லா’ போன்ற படங்களை எப்படி அடித்திருக்கிறேன் என்று சில நண்பர்களுக்குத் தெரியும். இப்போது என்னை நானே முரண்படுகிறேன்.
சுய முரண் என்று சொல்வதைவிடப் பக்குவமடைந்ததும் புதிய ஆளுமையைத் தழுவிக்கொண்டேன் எனலாம். அதில் அரசியல் சரிநிலைக்கு இடமில்லை. இப்போது மனோஜின் கேள்விக்கு வருவோம்.
கலையைப் பொறுத்தவரையில் ஒரு கதாபாத்திரத்தின் கோணம் அல்லது செயல் உங்களைத் தொந்தரவு செய்தால் முடிந்தவரையில் அக்கதாபாத்திரத்திற்கு அனுதாபம் காட்டுவதே ஒரு சிறந்த வாசகன் அல்லது ரசனையாளன் செய்வதாக இருக்கும். விடிவி ஜெஸ்ஸி, வெண்ணிற இரவுகள் நாஸ்தென்கா, அன்னா கரீனினா போன்ற பல கதாபாத்திரங்களை அதீதமாக வெறுப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். கலை இரக்கக் குணமற்றவர்களுக்கானது அல்ல.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லக்ஷ்மி சரவணகுமாரின் ‘உப்பு நாய்கள்’ நாவலை என்னால் படிக்கவே முடியவில்லை. ஆசிரியர் நேரடியாகவே அரசியல் சரிநிலை அற்று எழுதியிருக்கிறார். அப்போது அவரை ஃபேஸ்புக்கில் டேக் செய்து கிண்டல் செய்யவும் செய்திருக்கிறேன். எனது அச்செயலை எண்ணி இப்போது வருந்துகிறேன்.
முதலில் வாசகனாகவும், நுகர்வோராகவும் அரசியல் சரியுடன் இருப்பது பல படைப்பாளிகளிடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும், நல்ல கலையிடமிருந்தும் நம்மை நாமே ஒதுக்கி வைத்துக்கொள்வதற்குச் சமம். அரசியல் நிலைப்பாடு என்பது ஒவ்வோர் ஆண்டும் மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. அரசியல் நிலைப்பாடு உள்ளவனைவிட இல்லாதவனால் எல்லா விதமான படைப்புகளையும் Open Mind ஆக அணுகவும், பாராட்டவும், விமர்சிக்கவும் முடியும். கொள்கை உடையவர்களுக்கு இது சாத்தியமில்லை. நீலம் குழுவினரால் வசுமித்ரவை ஒருபோதும் அணுக முடியாது. திகவினரால் ஜெயமோகனை அணுக முடியாது. இப்படிக் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவதையா கலை கற்பித்திருக்கிறது?
அடுத்ததாகப் படைப்பாளி அரசியல் சரிநிலையுடன் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது சரியான அணுகுமுறை கிடையாது. புனைவு எழுதுபவன் திட்டமிட்டு எந்தக் கதையையும் எழுதுவதில்லை. அமரும் முன்பு வரை தாம் என்ன எழுதப்போகிறோம் என்ற தெளிவான திட்டங்கள் இல்லாமல்தான் பலர் எழுதுகின்றனர். எழுதுதல் என்பது விழித்துக்கொண்டே கனவு காண்பது அன்றி வேறெதுவுமில்லை. கனவை நம்மால் இயக்கவே முடியாது. அது எங்குத் தொடங்கி எப்படி முடிய வேண்டும் என்று அது நினைக்கிறதோ அங்கனமே நிகழும். இவ்விடத்தில் ஒரு படைப்பாளி சரி தவறுகளைப் பிரித்தணுக வேண்டுமென எதிர்பார்த்தால், போலியான படைப்புகளைக் கொடுத்தால் போதுமென வாசகன் தனது தரத்தைக் குறைத்துக்கொள்வதோடு படைப்பாளியையும் அவரது தரத்திலிருந்து கீழிறக்கவே செய்கிறான்.
ஒரு படைப்பில் அரசியல் சரிநிலை இல்லாததாகத் தனிநபருக்குத் தோன்றினாலும் அவரால் அந்தப் படைப்பு அழகியல் மதிப்பீட்டுடனே அணுகப்பட வேண்டும். இதை இப்படித்தான் அணுக வேண்டும் என்று சொல்வதே ஒருவகை ஃபாசிசமாகத் தோன்றலாம். அப்படிக் கற்பிப்பதோ வழிகாட்டுவதோ தவறில்லை. இதையும் நான் சொல்லவில்லை. முன்னோடி படைப்பாளி சொன்னதுதான். “ஒரு நாவல் ஃபாசிசக் கருத்தைச் சொன்னாலும் அது நாவலுக்கு உண்டான நேர்த்தியில் எழுதப்பட்டிருந்தால் அதை அங்கீகரிக்கவே செய்வேன்” என ஜெயமோகன் கூறியிருக்கிறார். இதிலிருந்து என்னை சுய பரிசோதனை செய்து பார்க்கிறேன். நான் பெண்ணியவாதியாக இருந்தபோதும் சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி நாவல்களை ரசித்திருக்கிறேன்; பெண்ணியம் மீது நம்பிக்கை இழந்திருக்கும் இந்தப் பருவத்தில் ‘கன்னியாகுமரி’ போன்ற நாவலைப் படித்து நெகிழ்ந்தும் உள்ளேன். ஆக, என் நம்பிக்கைகள் ஒருபோதும் என் ரசனையைத் தீர்மானிக்காது. அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன். இதுவே இலக்கியத்திற்கும் நான் செலுத்தும் குறைந்தபட்ச மரியாதை.
மனோஜுக்கு நான் டால்ஸ்டாயின் ‘கிரேய்ஸர் சொனாட்டா’ நாவலைப் பரிந்துரைக்கிறேன். ஆண் - பெண் விஷயத்தில் எந்தக் கோணம் உடையவராக இருந்தாலும் அந்நாவலில் ஏற்றுக்கொள்வதற்கு ஒருநூறு விஷயங்கள் உள்ளன; முரண்படுவதற்கும் ஒருநூறு விஷயங்கள் உள்ளன. இதில் அரசியல் சரிநிலை உள்ளதா என்று யோசிக்கும்போதே அடுத்தடுத்த கண்ணிவெடிகளை வீசிக்கொண்டே இருப்பார் டால்ஸ்டாய். அரசியல் சரிக்குக் காத்திருந்து அந்நாவலை வாசித்தால் அதன் சுவையை உணர முடியாமலே போய்விடும்.
தமிழ்ப்பிரபா சொல்லியிருப்பது போல் பெண்ணையோ மனிதர்களையோ வதை செய்யாமல் இருப்பது அரசியல் சரியாகக் கருதமுடியாது. அதை Common Sense என்றுதான் சொல்ல வேண்டும். இந்த விவாதத்திற்குள் அதைச் சேர்க்க முடியாது.
*
ஜெயமோகனின் ‘ஆட்டக்கதை’ என்ற சிறுகதையிலிருந்து :
‘...ஓர் ஆணும் பெண்ணும் அப்படி சந்தித்து உடனே மிக நெருக்கமாக ஆகிவிடுவதில் கவித்துவமான ஏதோ ஒன்று இருக்கிறது இல்லையா? இரண்டு மின்சார முனைகள் தொட்டுக்கொள்வதைப்போல? முற்றிலும் புதிய ஒருவரை தொட்டு அணைத்து முத்தமிட்டு உடலிணைந்து அறிவது என்பது ஒருவகையில் ஒருவன் ஒரு புதிய தெய்வத்திற்கு தன் உடலை ஆவேசிப்பதற்காக அளிப்பதுதானே? பழங்காலத்தில் குரங்குகளாக இருந்த மனிதர்கள் அப்படித்தானே இருந்திருப்பார்கள்?
உண்மையில் எனக்கு அது ஓர் அழகான அனுபவம். ஒரு கதகளி நிகழ்வுபோல.
அது ஒரு முழுமையான கலையனுபவம். முன்னரே அறிந்த இருவர் என்றால் அது நிகழாது. முன்னரே பேசியிருந்தால்கூட நிகழாது. வடக்கே ருத்ரப்பிரயாகில் அலகநந்தாவும் மந்தாகினியும் ஒன்றாக இணைவதுபோல. ஒருவரை ஒருவர் அப்படித்தான் தெரிந்துகொள்ள முடியும். சரேலென்று எல்லா திரைகளையும் விலக்கி நேருக்குநேர் காணுதல்., ஆவேசமாக ஒன்றாகுதல். ஒவ்வொரு திரையாக விலக்குவதெல்லாம் நாடகம். ஒரு திரையை விலக்க ஒன்பது திரையை போட்டுக்கொள்வார்கள். காதலிப்பவர்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் வேடமிட்டுக்கொண்டு காட்டுகிறார்கள். பின்னர் அதை கிழித்து ஒருவரை ஒருவர் பார்க்க முயல்கிறார்கள்.’
*
இந்த எழுத்தில் எவ்வளவு வாசிப்பின்பம் இருக்கிறது பாருங்கள்! அரசியல் சரியுடன் கலையை அணுகுபவனால் இதை ரசிக்கவே முடியாது. தற்போதைய சமூக ஊடகக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை Arranged Marriage என்பதே அரசியல் சரிநிலையற்ற செயல்பாடுதான். காதலித்துத் திருமணம் செய்துகொள்வது மட்டுமே சரியான உறவு என்று பலரால் பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில், எது அரசியல் சரிநிலை அல்ல என்று சொல்லப்படுகிறதோ அதன் அழகியலை எழுதுவதும், ரசிப்பதும் அவசியம் என்பதற்காகத்தான் நான் இதை எழுதுகிறேனே தவிர பிற மனிதர்களை மோசமாக நடத்தும் அரசியல் சரிநிலை அற்ற தன்மையைப் பற்றி எனக்கு எந்தக் கருத்துமில்லை. மீண்டும் சொல்கிறேன், ஒருவரைச் சரியாக நடத்துவது அரசியல் சரிநிலை அல்ல; Common Sense.
Comentarios