1
ஈவ்னிங் ஷோ போகலாமென இருவரும் முடிவு செய்திருந்தனர். ஏப்ரல் மாத வெயிலில் வெளியே சொல்வதில் இருவருக்கும் விருப்பமில்லைதான். ஆனால் மரங்கள் சூழ்ந்திருக்கும் பெசன்ட் நகர் சாலையில் அந்தி நேரத்தில் நடப்பது அவர்களுக்குப் பிடிக்கும். ஏழு இருபதுக்கு எஸ்.டூவில் காட்சி இருக்க, ஒரு பொடி நடை போட்டுவிட்டுக் கிளம்ப முடிவெடுத்தனர். புதுக் காதலர்கள் எதையெதையோ பேசியபடி நேரத்தைக் கொன்றுவிட்டனர். தெரு முனையில் நிறுத்திவைக்கப்பட்ட வண்டியை எடுத்துப் புறப்படத் தயாரானபோது, அவன் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.
”ப்பா! மணி ஆறரை ஆவுது. அரை மணி நேரம் போனதே தெர்லல?” என்று ஆச்சரியத்துடன் சொல்லிவிட்டு, வண்டி எடுத்துக்கொண்டு திரையரங்கிற்குப் புறப்பட்டான்.
படம் ஆரம்பமாக இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்ததால், அவன் அங்கு வந்திருந்த பெண்களையும் காதலர்களையும் பார்த்துக்கொண்டிருந்தான். ஆண்கள் தங்களது காதலிக்குப் பாப் கார்ன் வாங்கிக்கொண்டிருந்தார்கள். இவன் பார்ப்பதைக் கண்டுவிட்ட அவள் இவனை அடித்துவிட்டு, “என் முகத்த பாரு!” என்றாள் புருவம் சுருங்க.
“என்னாச்சு?”
“ஷோ ஸ்டார்ட் ஆகுற வர அப்டே பாத்திட்டே இருக்கனும். வேறெங்கும் பார்க்கக்கூடாது”
உடைமை ஆட்டம் இன்பமாக இருந்தாலும், “நீயும் க்ரிஞ்சா பிஹேவ் பண்ணாத. இப்போதான் உன்னப் பத்தி பெருமையா நெனச்சன்” என்றான்.
“என்னனு நெனச்ச?”
“நீ மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல. ரொம்ப யூனிக். ’ஒரு பெண்ணுடன் பழகுவதால் ஒரு ஆண் எந்த அறிவையும் பெற்றுவிட முடியாது’னு மானசரோவர் நாவல்ல அசோகமித்திரன் எழுதியிருப்பார். அதுக்கு விதிவிலக்கானவ நீ”
அவள் அறிவாளியான பெண்ணாகவே இருந்தாலும், காதலனின் புகழுரைக்கு வெட்கிக்கொள்வதில் சாதாரணப் பெண்ணாக நடந்துகொண்டாள்.
படம் ஆரம்பமானது; மூன்று வாரங்களுக்கு முன்பு வெளியான படம் என்பதால் அரங்கில் கூட்டமே இல்லை. அரை முகம் மட்டுமே தெரிந்த திரை ஒளியில் இருவரும் அழகாகவே இருந்தனர். இரவில் நடக்கும் படுகொலைக் காட்சி ஒன்று திரையில் ஓடிக்கொண்டிருக்கும்போது, அவளுடைய இதழ் அவனுக்குப் பிடித்த நீல நிறத்தில் தெரிந்தது. அதன் நறுமணச்சுவையை நுகர்ந்துவிடவும் ருசித்துவிடவும் முடிவுசெய்து முத்தமிட்டான். அதில் நாவற்பழச் சுவையை உணர்ந்தான்.
படம் முடிந்து பார்க்கிங் செல்லும்போது, “’நாளைக்கு மீட் பண்லாமானு அர்ஜுன் மெஸேஜ் பண்ணியிருக்கான். நான் என்னனு சொல்லுறது?” எனக் கேட்டாள்.
“எதுக்கு என்னக் கேக்குற? உனக்கென்ன தோனுது?”
“இல்ல நீ சொல்லு. நீ என்ன சொல்றியோ அதையே அவன்கிட்ட சொல்லிடுறேன்”
“’நாளைக்கு பிஸி’னு சொல்லிடு. நம்ம வேறெங்கயாவது போலாம்” என்று அவன் சொன்ன மறுகணமே அவள் அர்ஜுனுக்குக் குறுஞ்செய்தியில் தனது (அவனது) பதிலைச் சொல்லிவிட்டாள்.
வண்டியில் சென்றுகொண்டிருக்கும்போது, “நான் ஏன் தெரியுமா உன்கிட்ட எல்லாத்தையும் கேட்டுக் கேட்டு செய்றேன்? ஐ ஃபீல் செக்யூர்ட் வித் யூ” என்றாள். அவன் தன்னை ஒரு சிறந்த ஆணாக நினைத்து நெகிழ்ந்தான். அந்நேரத்தில் வான் இடியிடித்து இசையமைத்தது. மழை லேசாக ஆரம்பமாகியிருந்தது. வண்டியை ஓரங்கட்டாமல் கட்டியணைத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தனர். அவன் தனது வீட்டை அடைந்து, “மழை நிக்கிற மாதிரி தெரில. நீ இன்னைக்கி இங்கயே ஸ்டே பண்ணிட்டு காலைல போ” என்றான்.
“வீட்ல யாரும் இல்லையா?”
“ஃபேமிலி ஃபன்ஷனுக்குப் போயிருக்காங்க”
அவள் தனது தோழி யமுனாவுக்கும், தன் அம்மாவுக்கும் கான்ஃபரன்ஸில் அழைத்து யமுனாவை ம்யூட்டிலிருக்க சொன்னாள். அம்மாவிடம் யமுனாவின் வீட்டில் தங்கிவிட்டுக் காலை வருவதாகச் சொன்னாள். அம்மா ‘யமுனாவிடம் கொடு’ என்று சொன்னபோது, யமுனா அன்ம்யூட் செய்து பேசினாள். மகள் அவளது தோழியின் வீட்டில்தான் தங்குகிறாளா என்பதை அம்மா உறுதி செய்துகொண்டாள்.
அவள் தலையைத் துவட்டியபின் அவனுடைய டீ - ஷர்ட்டை அணிந்துகொண்டாள். இருவரும் ஒரே படுக்கையில் உறங்க வேண்டியிருந்தது. கட்டிலுக்கு அருகிலிருந்த ஜன்னலின் வழியே நுழைந்த மஞ்சள் தெருவிளக்கு அவளுடைய எழிலைக் கூட்டிக் காட்டியது. குளிரில் காமம் கொதித்துக்கொண்டிருந்தது. அவளுடைய தேகத்தைக் கொண்டாடி, கௌரவித்து காதலின் பெயரால் கலவியை நிகழ்த்தினான். விடிந்ததும், அவளைத் திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்தான். கடந்த பதினான்கு மணிநேரத்தை அவர்கள் தங்களது வாழ்வின் மிகச்சிறந்த நாழியாகக் கருதினர். துலக்காத பற்களால் இவனுக்கு ஒரு நன்றி முத்தமிட்டு வீட்டிற்குத் திரும்பினாள்.
2
அலுவலகம் முடிந்ததும் மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்புவதே அவருடைய வழக்கம். அன்று மனைவியின் அலுவலகத்திலிருந்து சூப்பர் மார்கெட்டுக்குச் சென்று தேவையான சில பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்பினர். காரின் ஸ்பீக்கரில் மதன்மோகன் பாடிக்கொண்டிருந்தார். வீட்டை அடைய ஒரு கிலோமீட்டர் இருக்கும் சமயத்தில் கார் நின்றுவிட்டது.
“ப்ச்! டீசல் தீர்ந்துரிச்சு. மறந்துட்டேன்”
“வயசாகுது”
அவள் சொன்னது உண்மையாகவே இருந்தாலும், அதைக் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லையென நினைத்தார். இருவரும் சேர்ந்து காரை ஓரமாக நிறுத்தினர். மளிகைப் பொருட்களைக் கையிலெடுத்துக் கொண்டு நடந்தே வீட்டிற்குச் சென்றனர். அப்பொழுது அவர்களுக்கிடையில் பேசுவதற்கு எதுவுமேயில்லை என்பது இருவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது. வீட்டை அடைந்தவுடன் கணவன் கைக்கடிகாரத்தைப் பார்த்து, “ட்வன்டி மினிட்ஸ்ல வந்துட்டோமா? ரொம்ப நேரம் நடந்த மாதிரி இருக்கு” என்றார்.
இருவரும் குளித்து முடித்து, இரவுணவைச் சாப்பிடும்போது வரவு/செலவு கணக்கைச் சரி பார்த்தனர். பின்பு ஹால் விளக்குகளை அணைத்துவிட்டுப் படுக்கையறைக்குச் சென்றனர். படுக்கையறையில் நைட் லாம்ப் மட்டும் எரிந்துகொண்டிருந்தது. மனைவி சுவரைச் சந்தித்தவாறும், கணவன் மனைவியின் விலாவைச் சந்தித்தவாறும் படுத்திருந்தனர். அப்போது அவர் மனைவியின் முழங்கையை வருடி தன் நாவால் முத்தமிட்டார். இதுதான் அவர் கலவிக்கு அழைக்கும் சமிக்ஞை. மனைவி தனது ஆடை களைந்து தன்னை ஒப்படைத்தாள். கணவன் அவளது வாயை முத்தமிடும்போது தடுத்துவிட்டு, ‘வேண்டாம். ஸ்மெல் வருது’ என்றாள். அவளுடைய தலையை அழுத்தித் தனக்குக் கீழே கொண்டு வர நினைத்த அவரிடம் அவள் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக முகங்காட்டினாள். ப்ளோஜாப் செய்ய மறுத்ததால், பழிவாங்கும் வகையில் அவளது உடலை மேலோட்டமாக புணர்ந்து முடித்தார். அந்தக் கலவி பசியின் பெயரால் நடந்து முடிந்தது.
ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இவர்கள் வீட்டிலேயே நேரத்தைக் கழித்தனர். மனைவி வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள். கணவன் நாள் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸில் வெப் சீரிஸ் பார்த்து நேரத்தைக் கழித்தார். யாரோ அழைப்பு மணியடிக்க, யாரெனக் கதவைத் திறந்து பாக்கையில், அலங்காரமாக உடையணிந்திருந்த அழகிய இள மங்கையொருத்தி வந்திருந்தாள். அவளுடைய உதட்டில் லிப்ஸ்டிக் அளவிற்கு மீறி இருந்ததாக அவருக்குத் தோன்றியது. மனைவி அவளைப் பார்த்ததும் உள்ளே வருமாறு அழைத்து, “Sir’s Room is upstairs. You can go & wait there. He’ll be coming right now” என்றாள். நடப்பது புரியாமல் திகைப்பில் விழித்துக்கொண்டிருக்கும் அவரிடம் மனைவி சொன்னாள்:
“I’m not at the age of exploring all your sexual Fantasies. உங்களுக்குத் தேவைப்பட்டா Pay பண்ணி எடுத்துக்கிறதுல எனக்கு எந்தப் பிரச்சனையுமில்ல”
“யாரைக் கேட்டு நீ இதெல்லாம் செய்ற? அப்படியென்ன என் உடம்புமேல உனக்கு அக்கரை. அப்படியே புருஷன ரொம்ப கேரிங்கா பாத்துக்கிறதா நெனப்போ? I can take care of myself. அதான் சொல்லிட்டல விருப்பம் இல்லனு. அத்தோட விடு. வெளியே போ சொல்லு அவள”
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இருவரும் ஒருவரையொருவர் தொட்டுக்கொண்டே ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஒருமுறை கணவர் அவளது முழங்கைக்கு முத்தமிட்டதை அவள் தட்டிவிட்டதிலிருந்து அவர் நிம்மதியிழந்தார். அவளுக்குத் தன்னுடன் புணர விருப்பமில்லையென நினைத்து வருந்தினார். தன் அழகின்மீதும், வயதின்மீதும் பல சுய சந்தேகங்கள் அவருக்கு எழுந்தன. நடுத்தர தாம்பத்தியத்தைப் பற்றிய பல விஷயங்களை அவர் தேடித் தேடிப் படித்தாலும் நடைமுறையில் எதுவுமே அவருக்கு உதவவில்லை.
ஒருநாள் காலை மனைவிக்குச் சீக்கிரமே முழிப்பு வந்துவிட்டது. கணவன் வெப் சீரிஸ் பார்த்துவிட்டு இராத்திரி தாமதமாகத்தான் தூங்கினார். சலிப்பாக இருந்ததால் மனைவி தன் கைப்பேசியை எடுத்து வாட்ஸப் ஸ்டேடஸ்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதன் ஒலி கணவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பி எரிச்சலூட்டியது.
“ஏய் ச்சீ! தூங்கிட்டு இருக்கிறது தெரில? ஃபோன நோண்டனும்னா ஹாலுக்குப் போய் நோண்டு. ஏன் என் உயிர வாங்கிற? சனியன் ஏன்தான் இதக் கல்யாணம் பண்ணித் தொலச்சேனோம்?” என்று தூக்கத்தில் திட்டிவிட்டுப் படுத்தார். அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை அவளைக் கொன்றுவிட்டது. உடைந்துபோன அவள், தன் தோழிக்கு அழைத்துக் கடந்த ஆண்டுகளில் நடந்தவை அனைத்தையும் சொல்லியழுதாள்.
மதியம் கணவன் எழுந்தபோது அவருக்கு அழைப்பு வந்தது. கைப்பேசியை எடுத்துப் பார்க்கையில் ’யமுனா’ என்ற பெயர் இருந்தது. அவர் அழைப்பை எடுத்துப் பேசினார்.
”நடந்ததெல்லாம் கேள்விப்பட்டேன். காலைலதான் அவ கால் பண்ணி சொன்னா! லவ் பண்ணும்போதெல்லாம் அவ எதாவது கோவமா பேசுனாக்கூட அதைப் பாசாங்கா எடுத்துகிட்டு அவ்ளோ சந்தோஷமா இருந்தீங்க. இப்போ அவ ஏதாவது உங்களுக்கு நல்லது நெனச்சாக்கூடக் கசக்குதுல? இதுகூட அவமேல இருக்கிற லவ்னாலதானா?” என்ற யமுனாவின் கேள்விக்கு அவரால் பதிலளிக்க இயலவில்லை.
(Homage : குறுந்தொகை - 196, மருதம், தோழி கூற்று, மிளைக் கந்தனார்)
Comments