ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கவிதைகளை வாசிப்பதில் விருப்பமற்றவன் நான். ஒரு கவிதையை சமூக வலைதளத்தில் வாசிப்பதற்கும் பிரதியில் வாசிப்பதற்கும் வித்தியாசங்கள் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? குப்பைத் தொட்டியில் கிடக்கும் மாணிக்கம் மின்னுமா? கவிதைப் புத்தகத்தைக் கையிலெடுத்து கவிஞர் ஏற்படுத்தித் தரும் மனநிலைக்குச் செல்வதே எனது விருப்பம். அதனால்தான் தினகரனை ஓராண்டாகக் கட்டாயப்படுத்திக் கவிதைத் தொகுப்பு கொண்டு வரச் சொன்னேன்.
தினா இதுவரை 500க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருப்பான் என்று நினைக்கிறேன். அதில் சுமார் 80 சிறந்த கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருப்பதால் எந்தப் பக்கத்தைத் திறந்தாலும் மாணிக்கமாகவே இருக்கிறது. இது வியாபாரத்திற்கான மதிப்புரை அல்ல. விமர்சனங்களும் விவாதங்களும் எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை தினா அறிவான். எனவே மகிமைப்படுத்த ஒன்றுமில்லை.
தினகரன் எப்படித் தன் கவிதைகளைத் தொகுத்திருக்கிறான் என்ற ஆர்வமே இந்நூலைக் கையில் பெறும்போது இருந்தது. வாசகர்களைக் கொஞ்சம்கூட Granted ஆக அவன் எடுத்துக்கொள்ளவில்லை என்பது வாசிக்கும்போது தெரிந்தது. தினாவின் மிகச்சிறந்த கவிதை ஒன்று இதில் இடம்பெறாதது எனக்கு ஏமாற்றமே. அவன் செய்த மோசமான தியாகங்களில் அக்கவிதையும் ஒன்று.
நான் தீவிரமாகச் சிந்திக்கும் விஷயங்கள் வார்த்தைகளாகவே என் மூளையில் தோன்றும். விளையாட்டான சிந்தனைகளை இமேஜ் மூலம் கற்பனை செய்வேன். நான் குறிப்பிட்ட தினாவின் அந்த அற்புதமான கவிதையை யோசித்துப் பார்க்கும்போது இன்னும் வார்த்தைகளாகவே மனதில் பதிகின்றன. ஆனால் அவற்றைத் தவிர இத்தொகுப்பில் இடம்பெற்ற பல நல்ல கவிதைகள் இமேஜாக மூளையில் ஓடுகிறது. குறிப்பாக அப்பாவின் படத்திலிருந்து பூ விழும் காட்சி சமநிலையைக் குலைக்கிறது. அதேபோல, ‘முறையிடல்’ கவிதையை எழுதும்போது உண்மையில் அவன் அழுதானா அல்லது கவிதை உருவாகிவிட்ட மகிழ்ச்சியிலிருந்தானா என்றும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். செஸ் ஆட்டத்தைக் கவிதையாக்கிய விதம் பிடித்திருந்தது. அவன் தனியாக செஸ் விளையாடும் இமேஜை விரைவாக மனதிலிருந்து அழிக்க வேண்டும்.
கவிதையின் அர்த்தம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்குச் சொற்களின் லயமும் முக்கியமென மூத்த விமர்சகர்கள் சொல்லி அறிந்திருக்கிறேன். நவீன கவிதைகளாக இருந்தாலுமே அது பொருந்தும். தினாவுக்கு அது சில இடங்களில் கைகூடியிருக்கிறது. மிகச் சிறிய கவிதை எழுதுபவரையும், மிகப் பெரிய கவிதை எழுதுபவரையும் பற்றி தினா எழுதிய கவிதையில் அந்த லயம் தெரிகிறது. அவனது அடுத்த தொகுப்பு வெளியீட்டில் அதை வாசித்துக் காட்ட வேண்டும். இப்போதைக்கு அவனது சில கவிதைகளைக் கீழே தருகிறேன். பெரும்பாலான கவிதைகள் அவனது ஃபேஸ்புக் பக்கத்திலேயே இருக்கும் என்றாலும் புத்தகமாக வாங்கிப் படித்துவிடுங்கள். அதுவே எழுதுபவருக்கான தகுந்த வெகுமதி.
*
எப்போதும் மனிதர்கள்
வேறொரு உடலுக்காக
அலைந்து திரிகிறார்கள்
ஒன்று கிடைத்ததும் மற்றொன்று.
உடல்களை விட்டொழி
அவை பாவம்
நாம் நம் சொற்களால்
அழிந்துபோவோம் வா.
*
வேண்டுதல்
~
தீபாவளிக்கு வாங்கிய
துப்பாக்கியால்
வீட்டிலுள்ள எல்லோரையும்
சுட்டுக் கொண்டிருந்த
சிறுமி
சித்தப்பாவைக் குறிவைத்த போது
அது
நிஜத் துப்பாக்கியாகி விட
வேண்டிக் கொண்டாள்
*
மற்ற தெருக்களை விட
இந்தத் தெருவில்
குழிகள் குறைவு
என்றபோதிலும்
சாமி ஊர்வலம் இந்தத் தெருவில்
வருவதேயில்லை
*
தொகுப்பு : அந்தியின் மதுரம்
பதிப்பகம் : கலக்கல் ட்ரீம்ஸ்
சென்னை புத்தகக் காட்சி அரங்கு எண் : 156, 157
For Orders : 9003156330
Comments