பகல்
Sonnet 7
‘என்னுடன் வந்துவிடு’ என்றேன்
எனது ரணம் எங்கு எப்படித் துடித்ததென யாரும் அறியவில்லை
காதல் எனக்கு வலியின் வாசலைத்தான் திறந்ததே அன்றி,
பூக்களையோ பாடல்களையோ அல்ல
‘என்னுடன் வந்துவிடு’ என மீண்டும் சொன்னேன் மரணித்துக்கொண்டே
என் உதடுகளில் நிலவு வடிந்துகொண்டிருந்ததை யாரும் அறியவில்லை
அமைதியில் மலர்ந்த குருதியையும்
அன்பே, முட்கள் நிறைந்த நட்சத்திரங்களை நாம் மறந்துவிடலாமே!
எனவேதான், ‘என்னுடன் வந்துவிடு’ என நீ திரும்பச் சொல்லும்போது
அது என்னைத் துக்கத்திலிருந்தும், காதலிலிருந்தும்,
ஒரு மதுக்கோப்பையின் சினத்திலிருந்தும் விடுவிப்பதுபோல் உள்ளது
கூரையிலிருந்து வெந்நீர் வடிந்துகொண்டிருக்கிறது
நாவில் நெருப்பின், குருதியின்
பூக்களின் மற்றும் கற்களின் சுவையை உணர்கிறேன்
*
Sonnet 11
உன் இதழ், குரல், கூந்தல், அமைதி ஆகியவற்றிற்காக
ஏங்கிக்கொண்டே தெருக்களில் உலாவியபடி உள்ளேன்
பசி மறந்தேன்; விடியல் இடையூறுகிறது
என் வேட்கை உனது பாதையை நோக்கி உள்ளது
உனது மென்மையான புன்னகையும்,
விரல் நகங்களின் வெளிர் கற்களுமே என் பசி
பாதாமைப் போல் உன் சருமத்தை உண்ணத் துடிக்கின்றேன்
உனது கரங்களுக்கு அறுவடையின் நிறம்
உன் அழகிய உடலில் எரிந்துகொண்டிருக்கும் சூரிய வெளிச்சத்தை உண்ண வேண்டும்
திமிர் பிடித்த முகத்திலிருக்கும் மரியாதைக்குரிய மூக்கை உண்ண வேண்டும்
விழிகளின் இமை நிழலை உண்ண வேண்டும்
அந்தியை நுகர்ந்துகொண்டே
உன்மீதும் உனது இதயத்தின்மீதும் கொண்ட பசியால்
தரிசு நிலத்தின் பூனையைப் போல் உலாவிக்கொண்டிருக்கிறேன்
*
Sonnet 21
வசந்த காலங்களைத் தவிர பிற தினங்களில் வெளியேறாத வண்ணம்
காதல் அதன் நறுமணத்தை என்மீது படரச் செய்துள்ளது
துக்கத்தின்போது, என் கைகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது
அன்பே, முத்தமிட்டு பிரியாவிடை சொல்
இதழின் வெளிச்சத்தை உனது வாசத்தால் மூடிவிடு
உனது கருங்குழலால் கதவுகளை அடை
மறக்காதே, கனவில் தொலைந்துபோன குழந்தையாக
மாறும்போது மட்டுமே நான் விசும்பிக்கொண்டே விழிப்பேன்
உன் கரங்களுக்காகவும், வருடலுக்காகவும்
இரவின் இலைகளை வேட்டையாடுகிறேன்
நீ அளிக்கும் வெப்பமாதல் என்பது நிழலின் ஒளிரும் பேரானந்தம்
அன்பே, உன் கனவில் தோன்றுவது ஒன்றுமல்ல
நீ என்னுடன் நடப்பது போன்ற நிழலுருவம்
எப்பொழுது விடியும் என்பதை நீ சொல்
*
பிற்பகல்
Sonnet 22
நான் உன்னைக் காதலிக்கிறேன், காதலிக்காமலும் இருக்கிறேன்
ஏனெனில், உயிர்ப்புடனிருக்கும் அனைத்திற்கும் இரு துருவங்கள்
வார்த்தை என்பது அமைதியின் மற்றொரு இறக்கை
நெருப்பு என்பது குளிரின் மற்றொரு அங்கம்
நான் உன்னை மீண்டும் தொடக்கத்திலிருந்து
காதலிக்க வேண்டும் என்பதற்காகக் காதலிக்கிறேன்
நான் உன்னைக் காதலிப்பதை நிறுத்தவே கூடாது
என்பதற்காக இன்னும் காதலிக்காமல் உள்ளேன்
எதிர்க்காலத்தின் மகிழ்ச்சிக்காக
மோசமான மற்றும் குழப்பமான விதிக்காக
நான் உன்னைக் காதலிக்கிறேன், காதலிக்காமலும் இருக்கிறேன்
எனது காதலுக்கு இரண்டு உயிர்கள் உள்ளன
எனவேதான், உன்னைக் காதலிக்காமல் இருக்கும்போதும் காதலிக்கிறேன்
எனவேதான். உன்னைக் காதலிக்கும்போதும் காதலிக்கிறேன்
*
மாலை
Sonnet 22
உன்னைக் காதலிக்கிறேன் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் உன்னை நான் காதலிக்கவில்லை
உன்மீதான காதலிலிருந்து காதலின்மைக்குச் செல்கிறேன்
உனக்காகக் காத்திருந்ததிலிருந்து காத்திராமல் இருப்பதற்குச் செல்கிறேன்
உன்னைக் காதலிக்கிறேன் ஏனெனில் நான் உறவிலிருப்பது உன்னுடன்
நான் உன்னை முடிவில்லாமல் வெறுக்கிறேன்
எனது காதலின் அளவுகோல் எந்த வகையில் மாறியிருக்கிறதெனில்,
உன்னைக் காணமலே கண்மூடித்தனமாகக் காதலிக்கும் அளவிற்கு
இருவேளை ஜனவரி மாத ஒளி
என் இதயத்தை
அதன் கொடூரமான கதிரால் நுகருகிறதோ!
கதையின் இந்த அத்தியாயத்தில் அழிவது நான் மட்டுமே
உன்னைக் காதலித்ததற்காகக்
காதலின் பெயரால் நான் மரணித்துப்போகிறேன்
*
Commenti