மறந்த கவிதை
பிற்பகலில் கருமேக மழையளித்த மண்வாசனை
என்னை உன்னிடம் சேர்த்ததும்
நான் கவி கூற நேர்ந்ததும் இந்நாளின் அற்புதம்.
சுவாரசிய உரையாடலின் பின்விளைவால்
நாம் அதனை மறக்க நேர்ந்தது இந்நாளின் துர் நிகழ்வு.
நினைவுபடுத்திக்கொள்ள முடியாதபடி
ஒரு கவிதையைத் தொலைப்பதின்மூலம் காதல் பிறக்குமெனில்
பல கவிதைகளின் இழப்பைத் தாங்கும் என்னிதயம்
அறிவேன் அன்பே!
உனது வருத்தம் கவிதையைத் தொலைத்ததற்காக அல்ல;
நமக்கிடையேயான கவித்துவமான நிகழ்வையே தொலைத்துவிட்ட நாம்,
நாளை நம்மையே ஒருவரையொருவர் தொலைத்துவிடுவோமோ
என்றெண்ணி ஏன் பதறுகிறாய்?
நாமே ஒருவரிடத்தில் மற்றொருவர் தொலைந்துவிட்டதால்
இப்பிரபஞ்சத்தின் வெளியில் தேடும் அவசியமில்லை.
*
காதல் தானம்
அரை நாழி நேரம் கொடுக்க முடியாத பாவி
இப்போது மண்டியிட்டு மன்றாடிக் கெஞ்சுகிறேன்
மறக்க வேண்டாம்! மன்னித்தல் வேண்டும்
நேரத்தின் முக்கியத்தை உணர்ந்துவிட்டு
அழ இயலாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும்
இந்த அரக்கனுக்கு
இவ்விரவை இரவுடன் கழிப்பதைத்தவிரப்
போக்கிடம் இல்லை; புகலிடம் நீயே!
*
காதல் தானம் - II
கதிர் சாயுங் காலத்தில்
மேகங்களிடையில் மறைந்திருப்பதைப்போல
முகம் புதைத்துத் தாழ்வு மனப்பான்மையில்,
'நானுனக்குத் தகுதியற்ற காதலன்' எனச்சொல்லி
உன்னை அன்பின் பெயரால் வரைந்து வைத்த
வட்டத்திலிருந்து விடுவிக்க நினைத்தபோது,
'கலங்கா குணமுடையானே!
வாடிய இந்நிலையில் நின்னை விடுத்து நகர்ந்தால்
உன்னை வாட்டி வதைக்கும் நம் நினைவின் வேர்கள்.
நீ மீளும் நாள்வரை உன்னுடனில்லாவிட்டால்
நீளும் சோகமுன் நெஞ்சைக் கிழிக்கும்'
என்றவாறு எனது கண்ணீரைக் கட்டிப்பிடித்துக்கொண்டாய்.
நாட்கள் கழித்து,
அதிகம் பேசிக் சிரித்த அற்புத மாலை நேரத்தில்,
'நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா?' என்ற உனது கேள்விக்குப்
பதிலளிக்கவே பயமாக இருந்தது.
*
புத்த புராணம்
'நானுன்னை
சலிப்படையச் செய்தாலோ
வெறுப்படையச் செய்தாலோ
யோசனையின்றி விட்டுச் செல்.
திரும்பி வருகையில்
கூரையைப் போலிருந்த காதல்
கோட்டையாகக் கட்டப்பட்டிருக்கும்'
தன் காதலியின் விலாவில்
அழகியச் சிறகை நட்டுக்கொண்டிருக்கையில்
புத்தனாக இருக்க விரும்பியவன்
யசோதரையாக மாறினான்.
*
மூவர் காதல்
நண்பர்கள் மூவரும் ஆளுக்கொரு பெண்ணைத்
தீவிரமாகக் காதலித்து வந்தோம்
மூவருடைய காதலும்
ஒருநாள் முடிவை நோக்கிச் சென்றது
தற்கொலை செய்துகொண்டான் முதல்வன்
பித்து நிலையில் கத்தினான் மற்றொருவன்
நான் வேறொரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்கினேன்
முதல்வனுக்கு முட்டாள் பட்டம் சூட்டியது சமூகம்
மற்றொருவனுக்கு 'ஆண்' பட்டம் சூட்டினர் இளம்பெண்கள்
எனக்குக் கைகுலுக்கி வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு,
மனதிற்குள் 'வேசி' என்ற சொல்லுக்கு
ஆண்பால் அர்த்தம் தேடிக்கொண்டிருக்கின்றனர்
எனக்கு முதல்வன் எடுத்த முடிவே சரியாகப் படுகிறது.
*
உதிர்ந்த இலைகள்
இன்று நான்காம் முறையாகப் பிரிகிறோம்
நெருக்கத்தின் கதகதப்பை உணரும் முன்பே
பிரிவைப் பழக்கப்படுத்தியது பிரியம்
என் முந்தைய காதலியை நினைத்துக் கேட்ட பாடல்களிலெல்லாம் இப்பொழுது நீ புகுந்து விட்டாய்!
உரையாட முடியா நாட்களை நினைத்தால்
உரையாட மறந்த நாட்கள் கசக்கின்றன
மூன்றாம் முறை பார்க்கையில்
முதன்முறை அழவைத்த படத்தைப் போல் உள்ளது இப்பிரிவு!
ஊடலின்போது கெஞ்சியதிலும்
முடிந்ததும் கொஞ்சியதிலும்
புது மனைவியின் முதல் முத்தத்தின் பரவசம்.
தூரம் போகும் இறுதி நாளின் மௌனத்திலும்
திரும்பிய முதல் நாளின் மகிழ்விலும்
நெடுநாள் காதலி தலைகோதும் ஸ்பரிசம்
அடுத்தமுறை நீ திரும்பி வரும்பொழுது
நம்மில் யார் இல்லாக்குறையை அதிகம் உணர்ந்தோம்
என்ற போட்டியே நமக்குள் நிகழ வேண்டும்.
*
உதிர்ந்த இலைகள் - II
செய்த தவற்றை உணர்தலில் முழுமையடைய
மிக நீண்ட இடைவெளியை நாடி நிற்கிறேன்
அதுவரை
உன்னைக் காத்திருக்கச் சொல்லுதல்
தகாது, என் தெய்வச்சின்மணியே!
உனது விலாவின் சிறகுகளை
இன்னும் அகல விரித்து பறந்தவாறிரு
இந்தப் பெரும்பாதையைக் கடந்தும் உயிர்த்திருத்தலில் அடங்கியுள்ளது
நம் காதலின் நித்தியத்துவம்.
*
நிசப்த ரௌத்திரம்
உனது குறைகள் யாவும்
என் உணர்வுக்கு அகப்படாமல் போனது,
உன் வானின் நாள்மீன்கள்
மிளிரும் தன்மையுடையவை என்பதாலல்ல
’நான் ஆர்ப்பாட்டமற்றவன்’ என்பதால்...
நாம் பிறந்திருப்பது பிழை செய்வதற்காக
*
கிழிக்கப்பட்ட புகைப்படம்
காட்டிலிருக்கும் சக மரங்கள்
அவ்வியம் கொள்ளும்
அழகான சாம்பல் மரத்திற்கு
இலையுதிர்காலத்தில் ஆறுதல் சொல்லச்
சென்றிருந்தாள் அன்னக்கொடி.
காகித பிர்ச் செடியின் இலைகள்மீது
கிழிந்திருந்த புகைப்படமொன்றைக் கண்டாள்.
பெண்ணொருவள் புன்னகைக்கும் புகைப்படத்தில்
தற்போதைய சினத்தின் சாயல் மட்டுமின்றி,
அவளது இதழ்களில்
தனக்குப் பரிட்சயப்பட்ட ஆணொருவனின்
உதட்டின் ரேகையைக் கண்டு திடுக்கிட்டாள்.
கிழிக்கப்பட்ட மனைவியின் புகைப்படத்தைத்
திரும்பப் பெறுவதற்காக
இவளை நோக்கி நீட்டப்பட்ட கையில்
முன்னாள் காதலனின் வாசம்.
துயரத்தை சுவாசித்தபடி
உச்சரித்த இவளது பெயரில்
காலம் கடந்த நேசம்.
கிழிக்கப்பட்ட மனைவியின் புகைப்படத்திலிருந்து
தொடங்கப்படும் காதல்கள் அனைத்தும்
இலையுதிர்கால சாம்பல் மரங்களைவிட
சோகமுற்றவை என்பதை இவள் நன்கறிவாள்.
*
コメント