சிறிய காதல்
சிற்றின்ப சேர்ந்திருத்தலுக்காக நிபந்தனையின் பெயரில்
பெருங்காதலை ஒருபோதும் உன்னிடம் நாட மாட்டேன்
நான் பட்டாம்பூச்சியின்மீது தூசி படியவிடும் பாவியல்லன்
விடுமுறைக் காலத்தின் பெரும் பயணத்திற்காக
நீ காத்திருக்கும் வேளையில்
நாம் பகிர்ந்துகொள்ளும் சிறிய காதலே போதுமானது
நான் போதுமெனக் கருதுவது
எனது போதாமைகளின் பட்டியலில் ஒன்றாகும் என்பதை
நீ மட்டுமே அறிவாய் அன்பே!
*
அசலற்ற மகிழ்ச்சி
நெருக்கடியிலிருந்து பிறக்கும் ஆசுவாசத்தைப் போல
அயற்சியிலிருந்து பிறக்கும் இளைப்பாறல் போலச்
சிக்கலிலிருந்து பிறக்கும் சுதந்திரத்தைப் போலக்
கவலையிலிருந்து பிறக்கும் கலை போல
எனது எல்லா சந்தோஷங்களும்
பெருந்துயரத்திலிருந்து பிறந்த புதுமையுமற்ற உணர்வுகளாகவே இருக்கின்றன
துயரங்கள் யாவும் இதுபோல ஒன்றிலிருந்து விடுபட்டுத் தோன்றுவதில்லை
உலகம் விழிப்பதற்கு முன்பே துயரம் விழித்துக்கொள்கிறது
சின்மணி!
உன் இன்மையிலும்
நம் காதலின் பிரிவிலும் ஏற்பட்ட கொடிய வலிகள் மட்டும்
எனது எல்லா மகிழ்ச்சிகளையும் போல
இரண்டாம் தர உணர்வுகளாக இருக்கின்றன
அவை உன் இருத்தலிலிருந்தும்
நாம் பகிர்ந்துகொண்ட சுகங்களிலிருந்தும் பிறந்தவை.
*
நமக்கேயான ஓர் உலகம்
துயிலுற்றவர்களின் பிச்சையாலும்
புணர்ந்துகொண்டிருக்கும் தெருநாய்களின் காமத்தாலும் ஏற்பட்ட
பேரமைதியான பின்னிரவில்
அந்தக் காதலர்கள்
ஒருவரையொருவர் வினவிக்கொண்டார்கள்.
'நாம் மட்டுமேயான ஓர் உலகம்
எவ்வளவு அழகானதாக இருக்கும்?'
காதலன் சொன்னான்,
’பரந்த புல்வெளியைச் சுற்றி நீ ஓடியாடலாம்
உனக்குப் பாதங்களை அழுத்தி விடுவேன்,
உனக்காகச் சமையல் கற்றுக்கொள்வேன்,
நினைத்த இடங்களில் நாம் முத்தமிட்டுக் கொள்ளலாம்,
உலகைச் சுற்றிப் பார்க்கும்
உனது கனவுகளுக்குத் தடையேதுமிருக்காது,
நாம் ஆடைகளே அணிந்து கொள்ளத் தேவையில்லை,
கால்கள் போகும் தூரம்வரை
வீட்டில் ஒலிக்கும் இசை உடன் வரும்,
பிரபஞ்சத்தில் உயிர்த்திருக்கும் ஒரேயொரு காதலை
பெருஞ்சத்தத்துடன் வெளிப்படுத்திக்கொள்ளலாம்,
உலகின் அனைத்து நதிகளும் நம் குளியலறைகள்,
உலகின் அனைத்து சாலைகளும் நம் வெராண்டாக்கள்,
உலகின் அனைத்து புனிதத்தலங்களும் நம் பூஜை அறைகள்,
கடலும் கரையும் முத்தமிடும் பகுதிகளெல்லாம்
நாம் வரையும் கோலத்திற்காகக் காத்திருக்கும் வாசல்கள்,
அண்டம் அனைத்தும் நமதில்லம்,
அண்டம் அனைத்தும் நம் படுக்கறை’
காதலி சொன்னாள்,
’பதற்றங்களின்றி மகிழ்வுடன் பயணிக்கலாம்,
பிறருக்கு அஞ்சாமல் ஆடையணியலாம்,
பணத்தைச் சார்ந்திருக்காது நம் தேடல்
நமக்குப்பின் உருவாகும் தலைமுறையினர்
நம் சிந்தையில் வளர்வார்கள்,
உன் சோகத்தின் போதெல்லாம்
தாலாட்டில் ஆற்றுவேன்,
நெரூதாவின் கவிதைகளைத்
தேகத்தில் விரலாலே எழுதலாம்,
உன்னை நிம்மதியில் நீந்த வைக்கவே
உலகிலுள்ள அனைத்து கலைகளையும்
கற்றுக் கொள்வேன்,
உருவாக்குவோம் ஓர் இனிய உலகை’
யாருமற்ற பூமியில்
அவனும் அவளும் ஒருவரையொருவர்
மாறி மாறி பலாத்காரம் செய்துகொள்வார்கள்
என்ற உண்மையைத் தவிர
அனைத்து கற்பனைகளையும்
அவ்விரவில் பேசிக்கொண்டார்கள்.
சூரியன் மெல்ல மேலெழும்பத் துவங்கியிருந்தது!
*
மதுவடிமையின் மகன்களிருவர்
மது குடித்தே மரணித்தவனின் மகன்களிருவரும்
தகப்பனுக்குத் தப்பாமல்
குடிகாரர்களானார்கள்.
மறைந்த மதுவடிமையின் மனைவி
முதல் மகன்மீது மட்டுமே கோபம் கொண்டாள்.
இளையவன்
மகிழ்ச்சியின்போது மட்டுமே மது அருந்தினான்
மூத்தவனோ
துக்கத்தின் போதெல்லாம் பருகினான்.
*
நீயா? நல்லிசையா?
வெதுவெதுப்பான
உனது மெல்லிய கரத்தைப் பற்றியபடி
ஆர்வத்தாலும் ஆசையாலும்
விரிந்திருந்த உன் கண்களைக் காணும்போதும்,
ஓவல் வடிவ முக அழகை விழுங்கும்போதும்,
வலக்கை விரலொன்றில்
வருட நேர்ந்த மண மோதிரம்
நெருடலை ஏற்படுத்தியது.
அக்கணம்,
எனக்கு மிகவும் பிடித்த
காதல் பாடலொன்று
ஒலிக்கும் கணமாகவும்
உன்மீது காதல் கொண்ட
அற்புதக் கணமாகவும் மாறியது என் தவறா?
இயற்கையின் பிழையா?
உண்மையில் நானுன்னைக் காதலித்ததற்குக் காரணம்
நீயா நல்லிசையா?
இசையின் மிகப்பெரிய பலம் எதுவெனில்,
அது நம்மை யோசிக்க விடாமல்
மயக்கத்தில் ஆழ்த்திவிடுவது.
இசையின் மிகப்பெரிய சாபம் எதுவெனில்,
அது நம்மை யோசிக்க விடாமல்
மயக்கத்தில் ஆழ்த்திவிடுவது.
*
இவ்வளவு மனிதனாக
அவர்கள்
காதலின் தேவதைகளாக இருக்க
நான் மட்டும் ஏன் இவ்வளவு மனிதனாக இருக்கிறேன்?
*
என் ஓல்கா செகாவ்
ஆழியின் பேரலை ‘சி மேஜர்’ ஸ்ருதியானால்
உன் கைவிரல்கள்தானே பியானோ கட்டைகள்
பிரபஞ்சத்தின் ஆணைக்கு இணங்கி அக்கடல் அமைதியாகும்போது
உன் கரங்களின்மீது பதித்த முத்தம் ஓங்கி ஒலித்துவிடுகிறது
நம் காலடி கடற்கரை மண்ணின் மதிப்பு
பொன்னையும் மிஞ்சுமல்லவா
உனது பாதி முகத்தை மறைத்திருக்கும் வளைந்த கூந்தல்
ஓவியத்திற்கு நிகரல்லவா
‘எதிர்காலம்’, ‘பிரிவு’, ‘இழப்பு’, ‘துயரம்’ போன்ற சொற்களை
உச்சரிப்பதற்காகவா உன்னை இறுக அணைத்துக்கொண்டிருக்கிறேன்
ஜீவனே!’
உனது வலது செவியிலும் எனது இடது செவியிலும்
‘ஆப் கி நஸ்ரோனே’ இசைக்கும்போது
என் ஓல்காவைக் கண்டடைந்துவிட்ட நிறைவுதான்
நீ வினவிய என் பெருமூச்சின் காரணம்
விடைபெறும் சமயத்தில் பேரன்பு பார்வையிட்டு
நகர இயலாமல் தத்தளிக்கச் செய்யாதே
*
என் ஓல்கா செகாவ் - II
நம் காதலில்
ரணங்கள் அதிகம் நிறைந்திருக்கவே விரும்புகிறேன்
நீ எனக்கு இருந்த நாட்களைவிட
இல்லாமலிருந்த நாட்கள் அதிகம்
நீ எனக்கு இருக்கப்போகும் நாட்களைவிட
இல்லாமலிருக்கப்போகும் நாட்கள் அதிகம்
நீ இருந்த நாட்களில்
எனக்குக் கிடைத்த இன்பங்கள் யாவும்
நீ இல்லாமலிருக்கும் நாட்களில்
கிடைக்காமல் போகும் துயரத்தின் காரணமாகவே
நம் காதலில்
ரணங்கள் அதிகம் நிறைந்திருக்கவே விரும்புகிறேன்
*
Comments