‘அனிமல்’ படத்தை 3வது முறையாகத் திரையரங்குகளில் பார்த்தேன். 4வது முறை தமிழ் மொழியில் பார்ப்பதற்காகத் திட்டமிட்டிருக்கிறேன். அடுத்த வார இறுதியில் பள்ளி நண்பர்களைச் சந்தித்துச் செல்ல வேண்டும்.
கடைசியாக எந்தப் படத்தை 3 முறை திரையரங்கில் பார்த்தேன் என யோசித்தேன். ‘96’ படத்தை 9 முறை பார்த்ததை எண்ணிக் கொண்டேன். ‘செக்க சிவந்த வானம்’ வரை சிம்பு படங்களை 3 முறை காண்பதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்போது சிம்பு வெறியனாக இருந்தேன். கொஞ்சம் வளர்ந்ததும் அந்த வெறித்தனம் அடங்கிவிட்டது. இப்போது கதைகளுக்கு மட்டுமே மரியாதை.
இந்தாண்டு நான் அதிகம் எதிர்பார்த்த ஒரே படம் ‘அனிமல்’. காரணம் அதன் டிரெய்லர் மற்றும் ‘Hua main…’ பாடல். முதல் நாளே பார்த்துவிட்டேன். முதல் நாள் காட்சிகளுக்கு Subtitles இல்லாததால் முதல் வார இறுதியில் மீண்டும் பார்த்தேன். வெறி அடங்காததால் இரண்டாம் வார இறுதியில் மீண்டும் பார்த்தேன். மூன்றாம் வார இறுதியைக் கொண்டாடக் காத்திருக்கிறேன்.
‘அனிமல்’ ஒரு மசாலா படம். ஆனால் எனக்கு அது வெறும் மசாலா படம் இல்லை. என் இளமையின் கொண்டாட்டம். பழைய ஷாருக்கான் படம் ஒன்றை 17 முறை திரையரங்கில் பார்த்துக் கொண்டாடிய அனுபவத்தைப் பகிர்ந்து சிலிர்த்த என் அப்பாவைப் போல, நானும் என் மகனிடம் ‘உன் அப்பன் ‘அனிமல்’ என்ற ஒரு படத்தால் எப்படி அலைக்கழிக்கப்பட்டேன்’ என்பதைச் சொல்லி மெய்சிலிர்ப்பேன்.
இப்படம் குறித்து சமூக வலைதளத்தில் பகிரப்படும் வசைகளைப் பற்றி அறியவே செய்கிறேன். பெரும்பாலும் Woke பெண்ணியவாதிகள். ஆகவே பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை எனத் தோன்றுகிறது. காரணம், அவர்களால் ஒன்றை விமர்சிக்க மட்டுமே முடியும். பாராட்டத் தெரியாது அவர்களுக்கு. இதை என்னால் நிறுவ முடியும். முழுக்க முழுக்க Woke பெண்ணியவாதிகளின் பாராட்டுகளை மட்டுமே பெற்று மாபெரும் வெற்றியடைந்த ஒரு படத்தைச் சொல்ல முடியுமா? அப்படி எதுவுமே இல்லை. அவர்களின் ஆதரவைக் கோரி எடுக்கப்பட்ட படம் ‘ஸ்வீட் காரம் காஃபி’. ஆனால் பாவம் அதுவே கேட்பாரற்று அமேசான் ப்ரைமில் கூப்பில் கிடக்கிறது.
அதேபோல் சமூக வலைதளத்தில் காண்பது போல நிஜத்தில் எதுவுமே நடப்பதில்லை. படம் வெளியாகி பத்து நாட்கள் ஆகி Woke பெண்ணியவாதிகளால் அடித்துத் துவைக்கப்பட்டாலும் திரையரங்கில் 40%க்கும் மேற்பட்டோர் பெண்களாக இருக்கின்றனர். ‘வெஜிட்டேரியன்னு சொல்லிட்டு இங்க என்ன பண்ணிட்டு இருக்க’ என வசூல் ராஜாவில் கமல் சொல்லும் வசனம்தான் நினைவுக்கு வந்தது. அவர்கள் மறைமுகமாக இப்படத்தைக் கொண்டாடவே செய்வதாகத் தோன்றியது. கள நிலவரம் அதைத்தான் காட்டுகிறது. இல்லையெனில், பத்தே நாட்களில் ரூ.700 கோடி வசூலீட்டி சாதனை படைத்திருக்க முடியாது. இன்னும் இரு வாரங்களில் ரூ.1000 கோடி வசூலீட்டிவிடும். எனக்குப் பெரிதும் படத்தின் வசூல் முக்கியமில்லை எனினும், இப்படத்துக்கு அது அவசியமாகிறது. சமூக வலைதளமும் நிஜ மனிதர்களும் ஒன்றல்ல என்பதை நிறுவுவதற்காகவே ரூ.1000 கோடி சாதனைக்காகக் காத்திருக்கிறேன்.
அதே போல் பத்திரிகை ஊடகங்கள் எந்தப் படங்களை எல்லாம் நிராகரிக்க நினைக்கின்றனவோ அப்படங்கள் எல்லாம் பல மடங்கு லாபம் ஈட்டுகின்றன. சமீபத்தில் வெளியான ‘பேபி’ படத்துக்கும் இதுவே நடந்தது. முதலீட்டைவிட 7 மடங்கு லாபம் ஈட்டிய பெரும்பாலான ஊடகங்கள் விமர்சிக்கவே செய்தன. Woke கலாச்சாரத்தின் போலி கருத்தியல்களை வைத்து மனிதர்களின் உணர்ச்சிகளை மழுங்கடிக்க முடியாது என்பது இப்படங்களின் வெற்றி உதாரணமாக அமைகிறது.
முதலில் சினிமா என்பது கலை அல்ல; வெறும் வணிகம். இந்தியாவைப் பொறுத்தவரை எவ்வளவு முதலீடு, எவ்வளவு லாபம் என்பதைத் தாண்டி ஒன்றுமே அல்ல. அதில் சிறிதளவு கலையம்சங்கள் இருக்கலாம். ஆனால் முழுமுற்றாகப் பார்த்தால் இது ஒரு வர்த்தகச் சந்தை. பணமீட்டித் தராதவனுக்கு இங்கு இடமில்லை. மாபெரும் கலைஞனானாலும் சரி, க்ளாமரை நம்பிப் படம் எடுப்பவனானாலும் சரி, போட்ட பணம் திரும்பி வரவில்லை எனில் தூக்கி எரியப்படுவான். அந்த வகையில் சந்தீப் ரெட்டி வங்கா, பணம் ஈட்டத் தெரிந்த மாபெரும் கலைஞன். அடுத்த தசாப்தத்தில் மிகப்பெரிய சினிமா ஆளுமையாக வளர்ந்து நிற்கப் போகிறவர். ராம் கோபால் வர்மா விட்ட இடத்தை நிரப்புவதற்காக வந்திருக்கிறவர்.
மனிதனின் இருண்மையான உணர்ச்சிகளில் திரையில் தைரியமாக வெளிக்கொணர்பவர் சந்தீப். மனிதனின் அழுக்குகளைக் காட்சிப்படுத்துவதில் அவருக்கு இருக்கும் தைரியம் இந்தியாவில் எவருக்குமே இல்லை என்பேன். அனுராக் காஷ்யப், ராம் கோபால் வர்மா ஆகியோரை உட்படுத்தியே சொல்கிறேன். இன்ஸ்டாகிராமில் அழகியலை எலும்புத் துண்டை கவ்வ முயலும் நாய் போல தேவுடு காத்திருப்பவர்களுக்கு சந்தீப் காட்டும் இருண்மையின் அருமை புரியாது. வாழ்வில் சிதைவுகளைச் சந்தித்தவனால் மட்டுமே அறிய முடிவது அது.
இப்படம் ஆண்கள் மத்தியிலேயே விமர்சனம் சந்திக்கப்படுவதைக் காண்கிறேன். திரை நுணுக்கங்கள் சார்ந்த சில நல்ல விமர்சனங்களை அவர்கள் எழுதுகின்றனர். அவற்றைத் தவிர வெற்று வசைகளைப் பார்க்க முடிகிறது. அதற்கு முக்கிய காரணம், இப்படத்தில் Masculinity எனும் ஆல்ஃபா ஆளுமைப் பண்பு வலியுறுத்தப்படுகிறது. அந்தப் பண்பு அல்லாதவர்கள் ‘அனிமல்’ படத்தைக் கேலி செய்வதைப் பார்க்க முடிகிறது. பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் மாடல்களுக்காக விந்தணுக்களை வீணாக்குபவர்கள்.
இது வன்முறைப் படம் என்கிற விமர்சனம் பரவலாகப் பேசப்படுகிறது. அதை முன்னிட்டு அமீர்கானின் பழைய நேர்காணல் காணொளி ஒன்று இன்ஸ்டாவில் பரவுகிறது. அதில் அமீர்கான், “வன்முறையும் காமமும் மனிதனை எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கக்கூடியது. ஆகவே படைப்பாற்றல் இல்லாதவர்கள் இதைத் தேர்ந்தெடுத்துக் கதை எழுதுகின்றனர்” எனப் பேசியிருக்கிறார். இதை வைத்து சந்தீப் ரெட்டி வங்காவின் படைப்பாற்றலைக் கேள்வியெழுப்புகின்றனர் சில மூடர்கள். ‘அனிமல்’ படத்தின் மொத்த நீளம் 200 நிமிடங்கள். இதில் காமம் மற்றும் வன்முறை சுமார் 40 நிமிடங்களுக்கு இருக்கும். இதில் காமம் கதையின் பொருட்டே சேர்க்கப்பட்டுள்ளதே அன்றி, சுந்தர்.சி வகையறா க்ளாமர் காட்சிகள் எதுவுமில்லை. அதேபோல் இதில் தேவையில்லாத வன்முறை காட்சி இருப்பது எனக்குமே விமர்சனமாகப் பட்டது. அப்ரார் தன் திருமணத்தில் தகவல் தெரிவிக்க வந்தவனின் கண்களைக் குத்தும் காட்சி கதைக்குப் பெரிய முக்கியத்துவத்தை அளிக்கவில்லை. இந்த 40 நிமிடங்களைத் தவிர மீதமுள்ள 160 நிமிடங்கள் சந்தீப் ரெட்டி வங்காவின் எழுத்து நின்று பேசியிருக்கும். வழக்கமான படங்களைவிடக் கூடுதல் நேர அளவைக் கொண்டது இது.
இரண்டாவதாக, இது ஒரு சங்கி (வலதுசாரி) படம் எனக் கூறப்பட்டது. இப்படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு ஜோசியர் ரன்விஜய்யிடம், ‘உன் உயிருக்கு ஆபத்து உள்ளது. நீ ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்பார். அதை நிராகரிக்கும்படி ரன்விஜய், சோயாவுடன் உறவை ஆரம்பிப்பான். கட்டம் சரியில்லாததால் ரன்விஜய்யின் உயிருக்கே ஆபத்து எனச் சொல்லப்பட்ட நிலையில், அவன் முதுமை வரை ஆரோக்கியமாகவே வாழ்ந்திருப்பான். இதுபோன்ற மூடநம்பிக்கையை உடைத்தெறிந்த படம், எப்படி சங்கி படமாகும்?
அதேபோல் இன்னொரு முக்கியமான வசனம். "If i don't come, dubara shadi mat karna (don't marry again)" என்பான் ரன்விஜய். இதற்கு மறுமணத்தை எதிர்க்கும் பிற்போக்கான கருத்துக்களை ஊக்குவிக்கிறாரா சந்தீப் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
பணக்காரக் கூட்டுக்குடும்பத்தைச் சேர்ந்த ரன்விஜய்க்கும் (ரன்பீர்) கீதாஞ்சலிக்கும் (ராஷ்மிகா) இரு பிள்ளைகள் (ஓர் ஆண், ஒரு பெண்) உள்ளனர். ரன்விஜய்யின் அப்பாவான பல்பீர் சிங்குக்குப் (அனில் கபூர்) பல தொழில் எதிரிகள். அவர்கள் ரன்விஜய்க்கும் எதிரிகளாக மாறுகின்றனர். ஒருவேளை வில்லன் அப்ராருடனான (பாபி தியோல்) யுத்தத்தில் ரன்விஜய் இறந்துவிட்டால், அதனால் கீதாஞ்சலி மறுமணம் செய்துகொண்டால் இது அக்குடும்பத்துக்கு ஆபத்தாகவும் விளையக்கூடும். ஏனெனில் பல்பீர் சிங் குடும்பத்துக்கு எதிரிகளைவிட துரோகிகளே அதிகம். பல்பீர் சிங்கின் சொந்த மருமகனே அவரைக் கொல்ல திட்டம் தீட்டியிருப்பார். ரன்விஜய்யிடம் காதலியின் பேரில் அவனை நெருங்கி தகவல்களைத் திரட்டிக்கொண்டிருப்பாள் ஒருத்தி. துரோகிகள் படைசூழ்ந்திருப்பதுதான் ரன்விஜய்யை கீதாஞ்சலியிடம் அவ்வாறு சொல்ல வைத்திருக்கும்.
அதுமட்டுமின்றி, கீதாஞ்சலிக்கு மற்றொரு ஆணின் பாதுகாப்பு அவசியமாகவும் இருக்காது. ஏற்கெனவே அவரின் பிள்ளைகள் பாதுகாப்புப் படையுடன்தான் பள்ளி உள்ளிட்ட எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். தேவைக்கு மீறிய செல்வம் உள்ளது. தன்னால் கொடுக்கக்கூடிய அளவிலான அன்பையும், நேசத்தையும், பாதுகாப்புணர்வையும் வேறு எந்த ஆணாலும் கொடுக்க முடியாது என ரன்விஜய் திடமாக நம்புகிறார். சொல்லப்போனால் அந்த வசனம் அவர்களின் காதலை வலுப்படுத்தவே செய்கிறது.
தனது அக்காவின் கணவனைக் கொன்ற பிறகு, அக்காவிடமே மறுமணம் செய்துகொள்ளும்படி சொல்லும் ரன்விஜய், ஏன் பிற்போக்கான நோக்கம் கொண்டவனாக இருக்கப்போகிறான்? நம் ஆட்கள் இரு விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஒன்று, சமூக வலைதளங்களைத் தூக்கிப் போட வேண்டும். அல்லது கதாபாத்திரத்தின் பின்புலத்தை வைத்து சினிமாவைப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் கருத்தியல் வழியாகவே கண்டால் மூளையில் மலம் தேங்கிவிடும்.
தன் அக்காவிடம் தவறாக நடந்துகொள்பவர்களை எச்சரிக்கிறான் ரன்விஜய். தன் அப்பாவின் எதிரிகளை வேட்டையாடுகிறான். ஆனால் குடும்பம் அவனைப் புரிந்துகொள்ள மறுக்கிறது. இருந்தாலும் அவன் யாரிடமிருந்து கருணையை எதிர்பார்க்கவில்லை. கண் கசங்கவில்லை. இதுவே ஆல்ஃபா ஆணின் பண்பு. என் நினைவிலிருந்து சொல்கிறேன். ரன்விஜய் இரு இடங்களில் மட்டுமே கண்ணீர் சிந்தினான். முதன்முறை, தன் ரத்த உறவான அப்ராரை கொல்லும் முன்பு கண்ணீர் விட்டான். எவ்வளவு அழகான காட்சி அது! அத்துடன் கடைசிக் காட்சியில் தன் தாத்தாவைக் கட்டியணைத்துத் தேம்பித் தேம்பி அழுவான். திரையரங்கில் பல ஆண்கள் கண்ணீர் சிந்திய காட்சி அது.
விசனப்படுவதில் நம்பிக்கையற்றவர் பல்பீர் சிங். அவரையே கடைசிக் காட்சியில் விசனப்பட வைத்தது ரன்விஜய்யின் அன்பு. முதன்முறையாகத் தனது தந்தை அழுவதைப் பார்த்த ரன்விஜய், தாத்தாவிடம் மனம் நொந்து அழும்போது தேம்பலை அடக்கிக்கொண்டேன். அந்தக் காட்சியில் அவன் சொல்லும் ஒரு வசனம் மனதுக்கு மிக நெருக்கமானது. ‘இந்த முறையும் நீங்கள்தான் வென்றீர்கள், அப்பா. நீங்கள் எப்போது என் எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்த விட்டிருக்கிறீர்கள்’ என்பான் ரன்விஜய். சொல்ல வார்த்தையே இல்லை! இப்படி ஒரு வசனத்தை எழுதியவைப் பார்த்து எப்படிப் படைப்பாற்றல் அற்றவன் எனச் சொல்ல முடிகிறது இவர்களால்? கருத்தியலில் ஊறிப்போன மூடர்கள்.
படத்தில் எனக்கு இன்னொரு காட்சி பிடித்திருந்தது. பல்பீர் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டபோது ரன்விஜய் அப்பாவைப் பார்த்துக்கொள்வான். ரன்விஜய் காயத்துக்கு உள்ளான போது பல்பீர் சிறு குழந்தையை கவனிப்பது போலக் கடுமையாக கவனிப்பார். ரன்விஜய்யின் சகோதரர்களை ஊருக்குத் திரும்பச் சொல்வார். அப்போது ரன்விஜய் சொல்லும் வசனம்: “உங்களுக்கு 66 வயது ஆகிறது. நீங்கள் குணமடைந்துவிடுவீர்கள் என நம்பினேன். குணமடைந்துவிட்டீர்கள். எனக்கு 39 வயதுதான் ஆகிறது. நான் குணமடைந்துவிடுவேன் என நீங்கள் நம்பவில்லையா?”
கடைசிக் காட்சியிலும் தான் கடைசிக் காலத்தை எண்ணிக்கொண்டிருப்பதாக பல்பீர் சொன்னபோதும்கூட அப்பாவுக்கு ஒன்றும் ஆகாது என தம்மபிக்கையுடனே இருப்பான் ரன்விஜய். எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து இறுதியில் கண்ணீர் சிந்துவான்.
முதலில் ரன்விஜய் உத்தமப் புருஷன் இல்லை என்பதை அறிக. ஒரு படத்தின் கதாநாயகன் லட்சிய மகானா இருக்க வேண்டும் என்பது முட்டாள்தனம். வியப்பாக இருக்கிறது! தங்களை நவீன மனிதர்களாக வெளிப்படுத்திக்கொள்ளும் இவர்கள் யாருமே எம்ஜிஆர் காலத்திலிருந்து முன்னேறி வரவே இல்லை. ஒரு படத்தின் ஹீரோ அவனுக்கேயான நிறைகுறைகளோடுதான் இருக்க வேண்டும். ஆகவேதான் ‘அர்ஜூன் ரெட்டி’ மிகப்பெரிய வெற்றியடைந்தது. ‘அனிமல்’ படமும் அதனால்தான் வென்றிருக்கிறது. மக்கள் யாரும் திரையில் ‘நாடோடி மன்னன்’ எம்ஜிஆரைப் பார்க்க வருவதில்லை. ஹீரோவிடம் தங்களை எங்கேனும் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா என்பதைத்தான் தேடுகின்றனர். ஆகவேதான் சந்தீப் ரெட்டி வங்கா ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார் என்கிறேன்.
ரன்விஜய்யும் அப்ராரும் சண்டையிடும் அருமையான காட்சி ஒன்று உள்ளது. பிற இயக்குநர்களாக இருந்திருந்தால் மாஸ் பின்னணி இசை போட்டு அக்காட்சியைத் தேய்வழக்காக்கியிருப்பார்கள். ஆனால் சண்டையிடும் இருவருக்கும் ரத்த உறவு இருப்பதால் தாலாட்டு பாடல் ஒன்றைக் கேட்டு வாங்கியிருக்கிறார் சந்தீப். அவரின் இசை அறிவும், ரசனையும் வியக்க வைக்கிறது. சிறந்த படத்தொகுப்பாளராகவும் இருக்கிறார். படத்தொகுப்பாக அவர் பல விருதுகளை வென்று குவிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
அப்பா என்றாலே கடுமையானவர், கெட்டவர், மோசமானவர் என்று சொல்லும் சமூகத்தில் வாழ்ந்த எனக்கு, இப்படம் பெரிய திறப்பாக இருந்தது. இது அன்பை மட்டுமே விதைக்கிறது. பெண்ணியவாதிகளைப் போல வெறுப்பை விதைப்பதில்லை. தந்தை எவ்வளவு முக்கியமானவர் என்று சொல்வதோடு, சகோதரத்தின் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது ‘அனிமல்’. இப்போது நமக்குத் தேவையானது எல்லாம் இவ்விரண்டும்தான்.
Comments