தங்களை மேம்படுத்திக்கொள்வதில் தடைகளைக் காணும் கோடிக்கணக்கான ஆண்களிடம் பேசுபவராய் ஜோர்டன் பீட்டர்சன் அறியப்படுகிறார். “இப்படியான ஓர் அடையாளத்தை வெளிப்படையாகவே நீங்கள் முன்வைக்கும்போது பெண்கள் ஏன் உங்கள் நூலைப் படிக்க வேண்டும். ஏன் உங்கள் பேச்சுகளைக் கேட்க வேண்டும்” என்று ஒரு நிருபர் கேட்கிறார். அதற்கு ஜோர்டன், “So that they can know what they want. They can be much more precise in their preferences” என்கிறார். ‘நவீனக் காதல்’ நூலின் முன்னுரையில் ‘இது ஆண்களின் தரப்பையே அதிகமாக முன்னெடுக்கிறது’ என்று அபிலாஷ் எழுதியிருந்தாலும், அவர் இருபாலினரின் preferences பற்றிய நூலின் பல இடங்களில் மறைமுகமாக உரையாடியிருப்பதாகவே பார்க்கிறான். ஆகவே இதை ஆண்களுக்கான புத்தகம் என்ற வட்டத்திற்குள் மட்டுமே அடைக்க அனுமதிக்க முடியாது.
நூலின் முதல் அத்தியாயமே அசமத்துவம் பற்றி எழுதி ஒரு மீறலை நிகழ்த்தியிருக்கிறார். ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்ற அரசியல் சரிநிலை ஓங்கியிருக்கும் இக்காலத்தில், ‘உறவில் சமத்துவம் சாத்தியமே இல்லை’ என்று பகிரங்கமாக ஒரு தமிழ் எழுத்தாளன் சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும். ஆனால் முதல் அத்தியாயத்தின் முதல் பத்தியையே Disclaimer உடன் துவங்குவது ஏமாற்றத்தையே தந்தது. தான் அர்த்தப்படும் அசமத்துவம் சரியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற தீவிரத்தன்மை இருந்திருக்க வேண்டாமோ எனத் தோன்றியது.
‘காற்று வெளியிடை’, ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ போன்ற டார்க் லவ் படங்களுக்கு நான் தீவிர ரசிகன். இது மாதிரியான படங்களில் மட்டுமே காதல் ரொமான்டிக்காக அல்லாமல் மூர்க்கமாகவும் வெளிப்படையாகவும் இருக்கும். காதலுக்கு மூர்க்கத்தனம் எவ்வளவு முக்கியம் என இந்நூலின் பல இடங்களில் அபிலாஷ் நிறுவியிருக்கிறார். ‘சமத்துவம் ஏன் இதயங்களைக் கல்லாக்குகிறது?’ என்ற முதல் அத்தியாயத்தின் முடிவில் என்னைக் கவர்ந்த சில வரிகள்:
‘ஒரு காதலன் எப்போதும் அன்பானவனாக, இனிமையானவனாக இருக்கையில் ஒரு பெண்ணுக்கு அலுத்துவிடுகிறது. இவன் பொய் சொல்கிறானோ என சந்தேகம் வருகிறது. முக்கியமாக இவன் தகுதியில் குறைந்தவனோ என்ற சந்தேகம் துளிர்கிறது.
சமத்துவம் எனும் லட்சியத்திற்கு இலக்கியத்திலும் அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளிலும் மட்டுமே இடமுண்டு. வாழ்தலும் இருத்தலும் சமத்துவத்திற்கு எதிரானது. முக்கியமாக உறவின் கூடாரத்திற்குள் சமத்துவம் எனும் ஒட்டகத்தின் முகம் நுழைய அனுமதித்தால் காதலை அது வெளியே தள்ளிவிடும்.’
‘பல பெண்களை ஒரே சமயம் காதலிப்பது’ அத்தியாயத்தின் இறுதியிலும் சில வரிகள் பிடித்தன:
‘எந்த பிரத்யேக முக்கியத்துமும் அளிக்காமல் ஒரு பெண்ணை நடத்தும் போதே அவளுக்கு மரியாதை அளிக்கவும், சமத்துவமாக அவளை நடத்தவும் முடியும்.
ஆண்கள் பலவீனமாக உணரும் போதெல்லாம் ஓர் ஊன்றுகோல் போல பெண்ணை பயன்படுத்துகிறார்கள். அதற்காக காதலிக்க தொடங்குகிறார்கள். அப்போது இன்னும் பதற்றமாகி தன்னை நியாயப்படுத்த, தம் ஈகோவைக் காப்பாற்ற நிறைய பொய்களை கட்டமைக்கிறார்கள். ஒரு பெண் அவனை ஏற்கும் போது அவன் நிதானமாகிறான். தன்னம்பிக்கை பெறுகிறான்.
அதனால் தான் காதல் பலவீனத்தின் வெளிப்பாடாக, அநீதியின், ஏற்றத்தாழ்வின் நிகழ்த்து களமாக இருக்கிறது. அதனாலே வலுவான ஆண்கள் காதலிப்பதில்லை என புக்காவஸ்கி சொல்கிறார்.’
‘கேரளப் பெண்களை நோக்கி ஏன் ஈர்க்கப்படுகிறோம்’ அத்தியாயத்தில் பெண்களின் ஆண்தன்மை பற்றி விவரிக்கப்படுகிறது. கற்றறிந்த, சொந்தக் காலில் நிற்கும் பெண்களை உதாரணமாகச் சொல்லலாம். இதுபோன்ற பெண்கள் தமிழ் சினிமாவில் குறிப்பாக பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் படங்களில் விமர்சிக்கப்பட்டிருக்கின்றனர். கதாநாயகன் அவர்களைத் திருத்தும் வேலையைச் செய்வான். இப்படங்கள் வெளியான புதிதில் அதுபோன்ற காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பதையும், ஃபேஸ்புக் தலைதூக்கிய காலத்தில் நவீன மனிதர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன என்பதையும் வெறும் தகவலுக்காகவே சொல்கிறேன். ஆனால் யதார்த்த வாழ்வில் இதுபோன்ற பெண்கள் உண்மையில் ‘சுதந்திரமாக’ உணர்வதில்லை. ‘அவள் அப்படித்தான்’ அருண் (கமல்ஹாசன்) போன்ற ஒருவன் வாழ்வில் வருகை தந்திருந்தாலுமே மஞ்சுவின் முடிவே அவர்களுக்கு இன்றளவும் தொடர்கிறது. ‘The strongest women die alone’ என்று புக்கோவ்ஸ்கி தன் கவிதையில் எழுதுகிறார். சுதந்திர பெண்கள் கைவிடப்படுதலுக்குப் பழக்கப்பட்டிருக்கின்றனர். அல்லது தொடர்ந்து வேறு சில காரணங்களுக்காக கைவிடப்பட்டதினாலோ அவர்கள் சுதந்திரத்தின் முகமூடிகளை அணிந்திருக்கலாம். இதில் சரி, தவறு என வகைமைப்படுத்துவதற்குப் பதிலாக ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்று யோசித்தேன். ஆண்கள் எப்படித் தங்கள் பலவீனத்திற்காகத் தண்டிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்களோ அதேபோல் பெண்கள் தங்கள் பலத்திற்காகத் தண்டிக்கப்படுவார்கள்; கைவிடப்படுவார்கள்.
‘காதலில் தோல்வியுற்ற பெண்களின் உளவியல்’ குறித்து ‘நீயா நானா’ நிகழ்ச்சியின் பெண்களிலிருந்து எழுதியிருக்கிறார். உலகளவில் காதல் தோல்விக்குப் பிறகு ஆண்கள் ‘தேவதாஸ்’களாகவும், பெண்கள் கேளிக்கையும் கொண்டாட்டமும் கொண்டவர்களாகவும் ஆகின்றனர் என்பது எல்லோரும் அறிந்ததே. இதன்மூலம் தன் அகங்காரம் சீண்டப்படுவதால்தான், காதல் தோல்வி பெண்களைவிட ஆண்களையே அதிகம் தொந்தரவு செய்கிறது. எது எப்படியாகினும் பிரிவுக்குப் பிறகு ஆண்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எல்லோருக்கும் எழுவது இயல்பானதே. பழிதீர்க்கப்படும் வரையில் வடுக்கள் ஆறாதிருக்கும்போது, ‘ஆண்கள் அதை எவ்வகையில் நிகழ்த்தலாம்’ என்கிற உரையாடல் நிகழ்ந்திருந்தால் இருண்ட வழிப்பாதையை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்காது. “அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்” என்ற வசனம் போல, காதல் தோல்விக்குப் பிறகு ஆண்களுக்கும் பெண்களைப் போல கொண்டாடலாம். கைவிட்டவளை அழுக்காய் நினைத்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும். இதற்கு சுய முன்னேற்றம் ஒன்றே தீர்வாகும். உடலளவிலும் மனதளவிலும் இதுவரையில் இருந்திடாத புதிய வெர்ஷனை நோக்கிச் செல்கையில், இலக்கு எட்டப்படுவதற்குச் சற்று தாமதமாகலாம். ஆனால் பயணிப்பதில் உள்ள நிறைவை அவர்கள் உணர்ந்தாக வேண்டும். ஏனெனில் பெண்கள் மீது வெளிச்சம் விழ அவர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை; ஆண்கள் தங்களை உருவாக்கிக்கொள்வதால் மட்டுமே தன்னிறைவை அடைய முடியும்.
‘ஆண்களுக்கு பாய் பெஸ்டி உறவில் உள்ள பயன் அவன் காதலனாக, கணவனாக இருக்க வேண்டியதில்லை. சுதந்திரமாக ஒரு பெண்ணுடன் உறவாடலாம் என்பதே. ஒரு அசலான பாய் பெஸ்டி தனக்கு ஒரு தகுந்த சந்தர்ப்பமும் வாய்ப்பும் அமைந்தால் கூட தன் தோழியுடன் படுக்கையைப் பகிர மாட்டான். ஆனால் இதில் விதிவிலக்குகளும் உண்டு என்பதே இந்த உறவைச் சிக்கலான சுவாரஸ்யமாக மாற்றுகிறது.’
‘பாய் பெஸ்டிகளின் சங்கடம்’ அத்தியாயத்தின் கடைசியில் எழுதப்பட்ட இக்கருத்தில் எனக்கு முரண் உள்ளது. முதலில் ஓர் ஆணால் பெண்ணுடன் தோழமை பாராட்டுவதன் மூலம் ஒரு பயனும் பெற முடியாது. எதிர்பாலினத்துடன் நட்பு பாராட்டுவது பெண்மைப் பண்பு என்பதால் பெண்ணால் ஆணுடன் காதலோ காமமோ இன்றி சாதாரணமாகப் பழக முடியும். அவளுக்குத் தேவையான attention முழுமையாகவே கிடைத்துவிடும். நட்பு பாராட்டும் ஆணுக்குத்தான் நேர விரயம். ஒரு பாய் பெஸ்டிக்கு தேவையான முதல் தகுதி பொறுமை எனும்பட்சத்தில், தகுந்த வாய்ப்பு கிட்டும்போது எப்படி அவனால் படுக்கையை நிராகரிக்க முடியும்? நிபந்தனையுடனான உறவுகளை ஆண்கள் வெறுப்பதனாலேயே பாய் பெஸ்டி உறவில் அவனுக்குச் சுதந்திரம் கிடைப்பது போல் சித்தரிக்கப்பட்டிருப்பதில் நான் உடன்படவில்லை. ஒருவேளை பெண் தோழி காமத்திற்கான ரகசிய கதவுகளைத் திறக்கத் தயாராய் இருந்து, அதை ஆண் மறுக்கத் துணிகிறான் எனில், போதுமான அளவு அவன் அப்பெண்ணால் வசீகரிக்கப்படவில்லை என்பதே அன்றி, அவனது நேர்மையைப் புகழ ஒன்றுமில்லை. தோழியுடனான படுக்கையை மறுக்கும் பெஸ்டிதான் விதிவிலக்கு.
அதேபோல் ‘ஒரு பிரேக் அப்பின் போது’ அத்தியாயத்தில் அபிலாஷ் இன்னொரு வாதத்தையும் முன்வைக்கிறார். அதாவது ஆண்கள் தங்கள் உறவைச் சுமுகமாக அமைத்துக்கொள்ள அழகற்ற, ஆளுமையற்ற பெண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார். இது பெரும்பாலும் பயனளிக்கக்கூடியதாகவே இருக்கும். ஆனால் பொதுவாகவே ஆண்கள் தங்களின் விருப்பத் தேர்வுகளில் தளர்வுகளை ஏற்படுத்திக்கொள்ளும்படி பலரால் அறிவுறுத்தப்படுகிறது. அதிகளவிலான ஆண்கள் சமூக அந்தஸ்தில் சராசரிக்கும் கீழ் நிலையில் இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆண்களுடைய விருப்பத் தேர்வுகளில் தளர்வுகளை ஏற்படுத்துவதற்கு மாறாக அவர்கள் தங்களை நிலைகளை உயர்த்திக்கொண்டு, துல்லியமான விருப்பங்களை முன்வைக்கக் கற்பிக்கலாம்.
இத்தொகுதியின் பெரும்பாலான கட்டுரைகளை ஆழமான வாதங்களையும் முக்கியமான மேற்கோள்களையும் காட்டுகின்றன. சில அத்தியாயங்கள் வெறும் ஃபேஸ்புக் பதிவுகளாகவே எஞ்சுகின்றன. இருப்பினும், நவீனக் காதலில் உள்ள சிக்கல்களை சமூக வலைதளங்களில் ஆங்காங்கே பதிவுகளாகக் கடந்து செல்வதற்குப் பதில், ஒரு புத்தகமாக முழு தொகுதியாகப் படிக்கும்போது அச்சிக்கல்களின் தீவிரத்தன்மை முழு அளவில் விளங்குகின்றன. “ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்” என்று சுற்றி வளைக்காமல் நவீனக் காதலை நேரடியாக நிராகரித்திருப்பதே இந்நூலின் பலம். காதலும், உணர்ச்சிவசப்படுதலும் ஆண்களை எவ்வளவு பலவீனமாக்குகின்றன என்பதை இந்தத் தொகுப்பு பேசுகிறது. ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் முரண் இருந்தாலும், அபிலாஷின் ‘நவீனக் காதல்’ கட்டுரை தொகுப்பு, ஒரு Chad Stuff.
Comentarios