‘லவ்வர்’ படத்தில் மணிகண்டன் காதலியை ‘ஏய் தெவுடியா’ என விளித்தது நம் பண்பாட்டில் நிகழ்வது என அபிலாஷ் எழுதியிருந்தது சர்ச்சையானதாகத் தெரிகிறது. அந்தக் காட்சியில் மட்டுமல்லாமல், மனமுடைந்து போயிருக்கும்போதும் மணிகண்டன் தன் காதலிக்குத் தொடர்புகொண்டு புலம்பி, “ஒத்த தெவுடியா பசங்க, ஒத்த வாழ்ந்து காமிக்கிறேன் பாரு’ என்பார். அபிலாஷ் தான் எழுதியதற்கு விளக்கமும் அளித்திருந்தார். பண்பாடு என்பது என்றைக்குமே சரியானதாக, நேர்மறையானதாக மட்டுமே இருக்காது. மனிதனின் இருண்மைக்கும் பண்பாடு இருக்கிறது. அவர் அதைச் சுட்டிக் காட்டியதும் நானுமே பள்ளிக் காலத்தில் என் அன்றைய காதலியை அப்படித் திட்டியதை நினைத்துக்கொண்டேன். அதனால் பிற்காலத்தில் எழுந்த குற்றவுணர்ச்சியில்தான் ‘உயிர்த்தெழுதல்’ கதையை எழுதிப் பார்த்தேன்.
அபிலாஷ் உயிர்மையில் எழுதிய ‘கெட்ட வார்த்தைகளின் மகத்துவம்’ கட்டுரையை வாசித்தேன். அதில், இருவருக்கு இடையில் கோபம் வெடிக்கும் போது அது கைகலப்பாக மாறாதிருக்கக் கெட்ட வார்த்தைப் பயன்பாடே உதவுகிறது, கெட்ட வார்த்தைகளே சொல்லத் தெரியாத ஒருவர் ஒரு கட்டையையோ கத்தியையோ எடுத்து பாவிக்கவே வாய்ப்பதிகம் என உளவியல் ஆய்வுகள் சொல்வதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மனிதன் அடிப்படையில் மிருகம் என்பதால் கெட்ட வார்த்தைகள் அவனுக்கு இன்றியமையாதது. நாய்கள்கூட கெட்ட வார்த்தைகள் பேசுவதாக அபிலாஷ் அக்கட்டுரையில் கூறியிருப்பது வேடிக்கையானது, சுவாரசியமானது. மனிதர்கள் ஆதங்கத்தில் வசைச் சொற்கள் பேசுவது போல நாய்கள் கோரப் பற்களைக் காட்டுகின்றன. ஒவ்வொரு விலங்கினத்துக்கும் இப்படி தனித்தனி மொழிகள் இருக்கின்றன. ‘குறைக்கிற நாய் கடிக்காது’ என்பதற்கேற்ப கெட்ட வார்த்தைகள் ஒருவனின் வன்முறைச் செயல்பாட்டிற்கு நல்ல மாற்றாக அமைகின்றன.
நேற்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டே விராட் கோலியின் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்னுடன் ஏழாம் வகுப்பு வரை படித்த பள்ளி நண்பன் ஒருவனும் என்னுடன் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தான். அவன் தீவிர சிஎஸ்கே (தோனி) ரசிகன். விராட் கோலி 99* ரன்களில் இருந்தபோது மொத்த உடற்பயிற்சிக்கூடமே தொலைக்காட்சி முன்பு வந்து நின்றிருந்தது. சதமடித்ததும் என் நண்பன், “இந்தத் தெவுடியா பையன் நல்லா ஆட்றான். நேத்து அந்தத் தோனி தெவுடியா பையன் கடைசி ரெண்டு பால் வந்து தடவினு இருக்கான். பத்தாததுக்கு அந்த ஜடேஜா தெவுடியா பையன் வேற...” என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாயகன் பிம்பம் தலைதூக்கியிருக்கும் இந்தக் காலத்தில் தனக்குப் பிடித்தமான ஒருவரை இவ்வளவு மரியாதையும் விளித்த ஒருவரை சமீப ஆண்டுகளில் பார்த்ததே இல்லை.
தோனியை சொந்த ரசிகரே இவ்வளவு ஆபாசமாகத் திட்டிய நானறிந்த மற்றொருவர் என் தந்தை. 2015 வாக்கில் தோனி களமிறங்கினாலே பந்துகளைத் தின்பதில் வல்லவராக திகழ்ந்தபோது தொலைக்காட்சி முன்பு அமர்ந்துகொண்டு என் அப்பா கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டிருப்பார். கடைசி ஓவர்களில் தோனி Accelerate செய்ததுமே உற்சாகமாகிவிட்டு தோனியைப் புகழத் தொடங்கிவிடுவார். என்னால் இந்த மனநிலையை அப்போது புரிந்துகொள்ளவே முடியவில்லை.
என் நண்பன் சிறிது நேரம் கழித்து மீண்டும் என்னிடம் வந்து, “ஓத்த அந்த தெவுடியா புள்ள எவ்ளோ நேரம்தான் செட் போடுவானோ. பட்டர்ஃப்ளைஸும் ஃபுல்லா இருக்கு, கேபிளும் ஃபுல்லா இருக்கு. வொர்க் அவுட் பண்ண மாதிரியே இல்லடா இன்னைக்கு” என்று புலம்பிக்கொண்டிருந்தான். ஆனால் அவன் திட்டிய அந்நபர் பயிற்சியை முடித்துவிட்டு அகலும் வரை மிகப் பொறுமையாகக் காத்திருந்து செட் போட்டான். அவரை ஒரு வார்த்தைகூட இவன் எதுவும் கேட்கவில்லை. அவனைப் பார்த்தபோது நானுமே பள்ளிக்காலத்தில் அப்படியிருந்ததை ஞாபகப்படுத்திக்கொண்டேன்.
என் சிறு வயதில் மூத்தவர் ஒருவர் என்னை கேரம் போர்ட் விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மறுத்ததால் அவரை “போடா மயிறு” எனத் திட்டி ஓடிவிட்டேன். கேரம் விளையாடாத இறுக்கத்திலிருந்து என்னை அந்தக் கெட்ட வார்த்தை பிரயோகம் தளர்த்தியது. நான்கு பேர் முன் ஒரு பொடியனிடம் பேச்சு வாங்கிய அகங்காரத்தால் சீண்டப்பட்ட அவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு துரத்தி வந்து அறைந்தார். அன்றிலிருந்து கெட்ட வார்த்தைகளின் பிரயோகத்தைக் குறைத்தேன். நாளடைவில் கெட்ட வார்த்தை பிரயோகம் ஒருவனின் தகுதியைக் குறைப்பதாக, அதனால் அவனுக்குக் கீழானவன் என்ற பிம்பம் கிடைப்பதாக நம்பினேன். ஆனால் அதுவுமே மேட்டிமை மனோபாவம் என இப்போது புரிகிறது.
அசல் மேட்டிமையான விராட் கோலியே மைதானத்தில் வார்த்தைக்கு வார்த்தை “மாதார்சோத், பென்சோத்” என திட்டிக்கொண்டிருக்கிறார். கேப்டன் ஆனதிலிருந்து ரோகித் சர்மாவும்கூட அடிக்கடி இளைஞர்களைக் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார். அவரிடம் எனக்குப் பிடித்த பண்புகளில் ஒன்று அவர் சக வீரர்களைத் திட்டுவது. சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில்கூட அதைப் பற்றிப் பேசியிருப்பார். “நான் கெட்ட வார்த்தைகள் பேசுவதெல்லாம் ஸ்டம்ப் மைக்கில் கேட்டுவிடுகிறது. என்ன செய்வது, டெஸ்ட் போட்டிகளில் நான் ஸ்லிப் நிற்கிறேன். அணி வீரர்கள் சில நேரம் சோம்பேறிகளாகிவிடுகின்றனர். எனவே நான் திட்ட வேண்டியிருக்கிறது. வேறு வழியில்லை” என்றார் ரோகித். ஆகவே கெட்ட வார்த்தை பிரயோகத்துக்கு அடித்தட்டு, மேல்தட்டு என எதுவுமே இல்லை. அபிலாஷ் சொல்லியிருப்பது போல் அது நம் பண்பாடு.
விளையாட்டு, செக்ஸ் போல உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும் களங்களில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும்போதுதான் அதன் மகத்துவத்தை முழுமையாக உணரலாம். இவ்விரு சமயங்களில் மட்டுமே நம்மால் முகமூடிகளைக் கழட்டிவிட்டு முழு மிருகங்களாகச் செயல்பட முடியும். எவ்வித ஒழுக்க தர்க்கங்களும் அங்கு இடமில்லை. ‘லவ்வர்’ படத்தில் மணிகண்டன் தன் காதலியைக் கெட்ட வார்த்தையால் திட்டுவதும் இதனால்தான். காதலின் இருண்மை காலம் என்பது செக்ஸுக்கு இணையான உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் கொண்டது. அந்தப் பருவத்தில் ஒருவன் தன் காதலியைக் கெட்ட வார்த்தைகளால் திட்டக்கூடாதென எதிர்பார்ப்பது தர்க்கத்துக்கு எதிரானது. ‘லவ்வர்’ மணிகண்டன் நாயகியைத் திட்டியதைவிட மிக மோசமான வார்த்தைகளை என் முன்னாள் காதலி என்னிடம் பயன்படுத்தியிருக்கிறார். ஆகவே சமூக வலைதள Woke பெண்கள் விக்டிம் கார்ட் தூக்குவதில் எந்தப் பயனுமில்லை. நீங்கள் இந்தப் போலி ஊடக உலகில் கோட் சூட் அணிந்து திரியும் இதே வேளையில் ஏராளமான நிஜ மனிதர்கள் மிக நிர்வாணமாக, சந்தீப் ரெட்டி வங்கா படப் பாணியில் வெளிப்படைத்தன்மையுடன் காதலித்து வருகின்றனர்.
கெட்ட வார்த்தை மீதான இந்த எதிர் மனோபாவத்தை அபிலாஷ் ‘அரசியல் பிரக்ஞை’, ‘முற்போக்கு ஒழுக்கவாதம்’, ‘பிராமணியம்’ என்று குறிப்பிடுகிறார். அவரின் மற்றொரு அவதானிப்பும் சுவாரசியமாக இருந்தது. இலக்கியத்திலும், சினிமாவிலும் கெட்ட வார்த்தைகளே பயன்படுத்தாத காலத்தில் மக்கள் அதிகமாக வசைச் சொற்கள் பேசி வந்தனர். எப்போது முற்போக்கு முகமூடி அணிந்து நுனிநாக்கில் கெட்ட வார்த்தைகளைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நவீனக் காலத்தில் வெற்றிமாறன் தன் படங்களில் கண்ணிவெடிகளாக வீசி வருகிறார், பின்நவீன இலக்கியங்களில் கெட்ட வார்த்தைகள் எழுதுவது ’Cool’ ஆகிவிட்டிருக்கின்றன.
கெட்ட வார்த்தை பேசுவதில்தான் அரசியல் சரிநிலைக்காரர்களுக்கு கூச்சம் இருக்கிறதே தவிர அதை எதிர்கொள்வதில் எந்த சிக்கல்களுமில்லை. இதே அரசியல் சரிநிலைக்காரர்களால்தான் ‘வட சென்னை’ படம் திரும்பத் திரும்பப் பார்க்கப்பட்டது. “SRH ah HRS ah?” என்ற இன்ஸ்டாகிராம் ரீல் பகிரப்பட்டுக் கிளுகிளுக்கப்பட்டது. திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனல் ஆனார். பூமர்களை தவிர சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் அந்த ஆபாசமான பேச்சை இளம் தலைமுறையினர் ரசிக்கவே செய்தனர். காரணம், அது போலி வெற்று அரசியல் உரைகளாக இல்லாமல் உணர்ச்சிப்பூர்வமாக மனதிலிருந்து பேசப்பட்டது. பாஜக தலைவர்களை ‘லவடெகபால்’ எனத் திட்டியதிலேயே அது தெரியும்.
கெட்ட வார்த்தைகளின் பிரயோகத்தில் ஓர் இசைத்தன்மை உள்ளதென்றால் மறுக்க முடியுமா! உண்மையில் அதுதான் நம் ‘மான் கி பாத்’ (மனதின் குரல்).
Comments