எப்போதோ செய்த செயலை எண்ணி காலங்கழிந்து வருந்துவது டாட்டூ போட்டதற்காக மட்டுமே. பன்னிரண்டாம் வகுப்பு படித்தபோது எதை டாட்டூவாகக் குத்துவது எனத் தெரியாமல் என் பெயரையே போட்டுக்கொண்டேன். டாட்டூ கலாச்சாரம் நம்மூரில் பரவலாக நிகழ்ந்தபோது பிறரது பெயரையோ அல்லது சொந்த பெயரையோ டாட்டூவாக குத்துவது தேய்வழக்காக மாறியது. நான் வருந்துவது தேய்வழக்கு காரணத்தால் அல்ல. எனக்கு ஃபேஷன் மீது பெரிய நாட்டம் உண்டு. ஆனால் அதன் பொருட்டுகூட வாழ்வில் இனி ஒருபோதும் டாட்டூ குத்த மாட்டேன்.
டாட்டூ என்பது ஒருவரின் ஆழ்மனதின் வெளிப்பாடு என்பார்கள். நான் சிறுவயதிலிருந்து என்னைப் பற்றி மட்டுமே அதிகம் யோசிப்பவனாக இருந்திருக்கிறேன். என்னுள் ஒரு நாசீசிஸ்ட்தன்மை இருக்கிறது. எனது பலம், பலவீனம் இரண்டுமே எனக்கிருக்கும் நாசீசிஸ்ட் ஆளுமைப் பண்புதான். ஒருவேளை நான் பெண்ணாகப் பிறந்திருந்து எனக்கு அப்பண்பு இருந்திருந்தால் அதை எனது முழு பலவீனமாக, ஒழுங்கற்ற தன்மையாகக் கருதியிருக்கலாம். ஆனால் ஆணுக்கு இது அவசியம் என அவ்வப்போது தோன்றுவதுண்டு. எவ்வித பெருஞ்செயலையும் செய்யாதவனால் நாசீசிஸ்டாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது மிகப்பெரிய தர்க்கப்பிழை என அவனுக்கே தெரியும். ஆகவேதான் இதை எனது பலம் என்கிறேன். ஆனாலும் இதை வளர விடுவதன்மூலம் என்னைக் கற்றலிலிருந்து துண்டித்துக்கொள்ளும் வாய்ப்பு கொஞ்சம் இருக்கிறது.
சமீப ஆண்டுகளில் எனது ஆளுமையில் நிகழ்ந்த பெரும் மாற்றம் பற்றி என்னைப் பின்தொடர்பவர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியும். அவர்களிடம் நான் சொல்வது இதைத்தான், “நாத்திகம், பெரியாரியம், பெண் சுதந்திரம் எனப் பேசிக்கொண்டிருந்த எனக்கே இப்போது அவற்றிலிருந்து வேறு கருத்துகள் இருக்கின்றன. உறவில் அடிபணிபவனாக இருந்த நான், இப்போது ஆள்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். அங்கிருந்து எப்படி இந்த இடத்திற்கு வந்திருக்கிறேனோ, நாளை இங்கிருந்தும் வேறு ஒன்றை நோக்கிச் செல்வேன். மாற்றத்தின் மீது முழு நம்பிக்கை உடையவன் நான்”.
சமீபத்தில்கூட நண்பன் ஒருவன், “முன் இருந்த மென்மையுணர்வு இப்போது குறைந்துவிட்டதே” என்று வருத்தம் தெரிவித்தான். “அதற்கு நீ ஏன் வருந்துகிறாய்? நான் வேண்டுமென்றேதான் என்னுள் இருந்த அந்த மென்மையுணர்வைக் கொன்றேன்” என்றேன். மாற்றங்களின் மீது இப்படியான நேர்மறை எண்ணம்தான் எனக்கு எப்போதும் இருக்கிறது. அது தவிர்க்க முடியாதது. ஆனால் டாட்டூ இந்த மாற்றத்தை அனுமதிப்பதில்லை. உதாரணமாக, நீங்கள் கலையை மெச்சும் வகையில் டாட்டூ குத்திக்கொண்டால் ‘கலை அர்த்தமற்றது’ என்ற கோணத்தில் சிந்திக்கவே முடியாத அளவுக்கு உங்களது குறுகிய மனமோ அகங்காரமோ தடுத்துவிடும்.
நான் ‘A Minor’ ஸ்ருதியையும், ரோலெக்ஸ் வாட்ச் லோகோவையும் டாட்டூவாக குத்தலாம் என நினைத்திருக்கிறேன். நாளைப்பின் இசையையே வெறுக்க நேரலாம். ஏற்கெனவே அதீத மென்கவித்துவ சோக இசை மீது நாட்டம் குறைந்துகொண்டே வருகிறது. அதேபோல் ரோலெக்ஸ் வாட்ச் மீதிருக்கும் மோகமும் இல்லாமல் போய்விடலாம். ஒருவேளை இவற்றை டாட்டூவாகக் குத்தியிருந்தால் எஞ்சுவது வெறும் குற்றவுணர்வு மட்டுமே. நல்லவேளையாக என் பெயரை டாட்டூ குத்திக்கொண்டது ஒருவகையில் நல்லதாகவே போனது. என் மரணம் வரை என்னுடன் வரப்போகும் ஒரே ஆள் நான் மட்டுமே. என்னை ஒருபோதும் கீழானவனாக நினைக்கவே மாட்டேன். ஆகவேதான் இந்த டாட்டூவை அழிக்கவில்லை. என் பெயரைத் தவிர வேறு எதை டாட்டூவாக குத்தியிருந்தாலும் இந்நேரம் அழித்திருப்பேன்.
அதேபோல் நீங்கள் வழங்கும் கல்வியிலோ கலையிலோ கவனத்தைக் குவிக்க முடியாத வகையில் டாட்டூ, மக்களின் கவனத்தைச் சிதறடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்தக் கட்டுரையை எத்தனை பேர் படிப்பார்கள் எனத் தெரியாது. ஆனால் நான் எதை டாட்டூவாக குத்தியிருக்கிறேன் என்பதைக் காண மக்கள் விரும்புவார்கள். அப்படிப்பட்ட அற்ப கவனத்தை எப்போதும் நிராகரிக்கவே செய்வேன். நரம்பியல் நிபுணர் ஆண்ட்ரிவ் ஹியூபர்மன் என்னைப் போலவே பள்ளிப் பருவத்திலேயே டாட்டூ குத்திக்கொண்டார். கைகள் மற்றும் மார்பகப் பகுதி முழுக்க டாட்டூ குத்தியிருப்பார். நரம்பியல் பற்றிப் பேசும்போது அவர் டாட்டூவை வெளிப்படுத்திக்கொண்டதே இல்லை. உண்மையில் அவர் அதை வெறுக்கிறார். ஆகவேதான் எப்போதும் முழுநீளச் சட்டை அணிகிறார். வாழ்வில் அவருக்கான நோக்கம் என்பது வேறு.
“நான் அறிவியலை இணையம் வழியாக மக்களுக்கும், கல்விக்கூடங்கள் வழியாக மாணவர்களுக்கும் கொண்டு செல்ல நினைக்கிறேன். ஒருவேளை நான் அரைக்கை சட்டை அணிந்தால் மாணவர்களுக்கு எனது டாட்டூ தெரியும். அவர்கள் நான் சொல்வதை கவனிக்காமல் என் டாட்டூவில் உள்ள ஓவியத்தைத்தான் பார்ப்பார்கள். இது யாருக்கும் எவ்வகையிலும் உதவப்போவதில்லை. என் டாட்டூவைவிட முக்கியமானது அறிவியல். இங்கு ‘நான்’ என்பது முக்கியமே அல்ல; என் வழி வரும் கல்விதான் முக்கியம். அதைச் சொல்பவன் என்னவோ நான்தான். நான் இல்லையெனினும் இப்பணியை யாரோ ஒருவர் செய்துகொண்டுதான் இருப்பார். அதேபோல் நான் எப்போதும் கறுப்பு சட்டையை மட்டும்தான் அணிகிறேன். ஒருவேளை நான் ஒரு மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்தால் அது மாணவர்களின் கண்களைக் கவரும் வகையில் இருக்கலாம். கறுப்பு, சாம்பல் போன்ற நிறங்களில் ஒரு கவர்ச்சியும் இல்லை என்பதால் கவனம் முழுதும் நான் சொல்லும் தகவலில் மட்டுமே இருக்கும்” என்கிறார் ஆண்ட்ரிவ் ஹியூபர்மன்.
நாம் குத்திக்கொள்ளும் டாட்டூ, நமது நிரந்தர ஆளுமையாக மாறிவிடுகிறது. பரந்துபட்ட சிந்தனையை போதிப்பவர்களேகூட கலாச்சார அழுத்தத்தால் தங்களுக்கு விருப்பமான அடையாளத்தை டாட்டூவாக குத்திக்கொண்டு குறுகிய சிந்தனை உடையவர்களாக மாறிவிடுகின்றனர். ஓர் அடையாளத்தை டாட்டூவாக குத்திக்கொள்வதன் மூலம் அதை மனதளவில் வாழ்நாள் முழுக்க சுமந்து திரிகிறோம். ஏனெனில் டாட்டூ நமக்கு வலியைக் கொடுக்கிறது. வலி கொடுக்கும் எதையும் நாம் மறப்பதில்லை. ஒன்றை உதறிவிடாதவரால், மறக்க இயலாதவரால் அடுத்ததை நோக்கி முன்னேறவே முடியாது.
Yorumlar