top of page
Search
Writer's pictureBalu

டெலூலு சொலூலுவா?

காதலுக்கும் காதலைப் பற்றிய கற்பிதத்துக்கும் நூலிழையே வித்தியாசம் என்றாலும் அது ஒருவரின் வாழ்நாளில் வீணடிக்கும் காலம் அதிகமானது. கல்லூரிக் காலத்தில் ஒரு பெண்ணை வெறுமனே தூரத்திலிருந்து பார்த்தே ஈராண்டுகளை வீணடித்திருக்கிறேன் என்ற முறையில் சொல்கிறேன். இப்போது அதே பெண்ணுடன் நட்புறவைப் பேணுகிறேன். அவளிடமே இதைச் சொல்லியிருக்கிறேன். 

“உன்னால என் லைஃப்ல கிட்டத்தட்ட ரெண்டு ரெண்டரை வருஷத்தை பாழாக்கிட்டேன். ஆனா இதுல உன் தப்பு எதுவுமே இல்ல. முழுக்க முழுக்க என் தப்புதான்” என்றேன்.

“ஏன் அப்படிச் சொல்றே?” எனக் கேட்டாள்.

“நீ என்ன பண்ண? உன் வேலையைத்தானே பார்த்துட்டு இருந்தே. மிஞ்சிப்போனா அதிகபட்சம் ஒரு பத்து பதினஞ்சு தடவ போறப்பவும் வரப்பவும் என்னைத் திரும்பிப் பார்த்திருப்பியா? ஆனா நீ வேற ஒருத்தனோட காதலன்னு தெரியாமலே உன்னோட ரெண்டு வருஷத்துக்குக் கற்பனைலயே வாழ்ந்திருக்கேன். சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே, அந்த ரெண்டு வருஷத்தைப் பிரயோஜனமா பயன்படுத்தி ஸ்டாக் மார்க்கெட் இல்ல பிசினஸ் படிச்சிருந்தா இந்நேரத்துக்கு ஒரு பெரிய பிசினஸ்மேனாவோ இல்ல இன்வெஸ்டராவோ ஆகியிருப்பேன்” என்று வேடிக்கையாகச் சொன்னேன். 

அவ்வளவு ஏன்? எனது ஆற்றலைச் சரியான இடத்தில் பயன்படுத்தியிருந்தால் கல்லூரி டேட்டிங் வாழ்க்கையிலும் பெரிய ப்ளேயராக திகழ்ந்திருப்பேன். இளமைக்கே உண்டான அந்தப் பருவத்தில் ஓடியாடி விளையாடாமலில்லை, ஊர் சுற்றாமலிலில்லை, படிக்காமலில்லை. சொல்லப்போனால் எனது புறச்செயல்பாடுகளில் எந்த மாற்றங்களுமில்லை. ஆனால் என் அக ஆளுமை பலவீனமடைந்ததற்கு அதுபோன்ற வெற்றுக் கற்பனைகள் என்பதை இப்போது தள்ளி நின்று பார்க்கையில் புரிந்துகொள்ள முடிகிறது. 

இவை அனைத்துமே நெருங்கிய நண்பனுடனான சமீபத்திய உரையாடல் ஒன்று நினைவுபடுத்தியது. அவனுடைய க்ரஷ் பெருநகரம் ஒன்றில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். பெருநகரத்துக்கே உரிய நல்ல வருமானமும்கூட. இவன் உதவி இயக்குநர் வேலை சகிக்காமல் சினிமாவை தலைமுழுகிவிட்டு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பக்கம் ஆரம்பநிலை ஊதியத்துடன் அடியெடுத்து வைத்திருக்கிறான். அந்தப் பெண் சென்னை வந்து ஒன்றிரண்டு நாள் இவனுடன் செலவிட்டதற்கே ‘வேட்டைக்காரன்’ விஜய் போல இவன் ஒரு எதிர்காலத்தை கற்பனை செய்யத் தொடங்கிவிட்டான். இவனுடைய ஒருதலைக் காதலுக்கு அந்தப் பெண்ணின் அக்காவும் உடந்தை. அக்கா தன் தங்கையிடம், ‘நீ இவனை டேட் செய்து பார்க்கலாமே’ என நேரடியாகவே கேட்க, அவள் தனக்கு ஆர்வமில்லையென மறுத்திருக்கிறாள். இது தெரிந்தும் என் நண்பன் என்னிடம் சொன்ன ஒரு விஷயம்தான் அதிர்ச்சிக்குள்ளாக்கி என்னை இதை எழுத வைக்கிறது. 

“மச்சி, அவங்க அக்காவுக்கே இன்னும் கல்யாணம் ஆகல. இவளுக்குலாம் கல்யாணம் ஆக இன்னும் 3 வருஷமாவது ஆகும். இந்த 3 வருஷம் நான் அவளோட பேசிட்டு இருக்கப்போறேன். வீக்கெண்டானா அவளோட சிட்டிக்குப் போய் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு இருக்கேன். லவ், லஸ்ட், ரிலேஷன்ஷிப் எதுவும் வேண்டாம். ஜஸ்ட் ஹேங் அவுட். அவ கல்யாணத்துக்காக பார்ட்னர் தேடும்போது நான் ஒரு ஆப்ஷனா அவ ஞாபகத்துக்கு வந்து எல்லாம் கைகூடினா சந்தோஷம். ‘திருச்சிற்றம்பலம்’ படத்துல வர தனுஷ் எப்படி தன் துணையை ஊரெல்லாம் தேடித் தேடி அலைஞ்சி, கடைசில பக்கத்துலயே இருந்த நித்யா மேனனை கட்டுவான். இங்க அவ தனுஷ், நான் நித்யா மேனன்” என அவன் சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவன் தான் சொல்ல வந்ததை முழுமையாக முடிக்கும் முன்பே குறுக்கிட்டேன். 

“டேய், எக்காரணம் கொண்டும் யாருக்கும் ஆப்ஷனா மட்டும் இருந்திடாதே. 3 வருஷம்ங்கிறது ஒன்னும் சும்மா கிடையாது. உன்மேல இன்ட்ரஸ்ட்டே இல்லைன்னு சொல்ற பொண்ணுக்காக ஒவ்வொரு வாரமும் நானூறு கிலோமீட்டர் ட்ராவல் பண்ணப்போறதெல்லாம் எவ்ளோ பெரிய விஷயம். இதை இவ்ளோ சிம்பிளா லவ், லஸ்ட், ரிலேஷன்ஷிப் எதுவும் வேண்டாம்னு சொல்றே. ஒருவேளை நீ எதிர்பார்க்கிற மாதிரி அவ உன்னைக் கல்யாணம் பண்ணலைன்னா அதையும் இப்படியே கடந்து போவியா? நீ போட்ட எஃபோர்ட்ஸை நினைச்சு நொறுங்கிடுவே. இன்னொரு விஷயம் புரிஞ்சுக்கோ, ‘திருச்சிற்றம்பலம்’ படத்துல தனுஷ் யாரு? டிகிரியே முடிக்காம சரியான வேலை இல்லாம ஃபுட் டெலிவரி பண்ணிட்டு இருப்பான். அவனும், ஐடில எழுபதாயிரம் சம்பாதிக்கிற பொண்ணும் ஒன்னு கிடையாது. அந்தப் படத்துல தனுஷ் ஒரு வெல் க்ரூம்ட் மேன் கிடையாது. அதுனால அவன் பார்த்த ரெண்டு பொண்ணுங்களுமே அவனுக்கு செட் ஆகலை. ஆனா நீ சொல்ற பெண்ணு அப்படி கிடையாது. அவளுக்கு ஒரு பையனைப் புடிச்சுட்டா அது தப்பாப் போறதுக்கு வாய்ப்பே இல்ல. இன்னோன்னு, உங்க ரெண்டு பேரோட சம்பாத்தியத்தையும் கன்சிடர் பண்ணு” என்றேன். 

“மச்சி, காதலுக்கு காசுலாம் ஒரு விஷயமாடா?”

“இல்லாம இருக்கலாம். ஆனா கல்யாணத்துக்கு அது ஒரு விஷயம்தானே”

“டேய் ‘பிரேமலு’ படத்துலகூட அந்த ஹீரோயின் இவளை மாதிரிதான். அந்தப் படத்துல அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலயா?”

“முதல்ல இந்த முட்டாள்தனமான Rom-Com படங்களைப் பார்த்துட்டு அதுதான் வாழ்க்கைன்னு நினைக்கிறதை நிறுத்துடா. அந்தப் படத்துல வர ஹீரோ ஒரு சுத்த அரைவேக்காடு. நாலு கௌன்ட்டர் அடிச்சுக் கலாய்க்கிறதை தவிர மமிதா மாதிரி ஒரு பெண்ணை அடைய அவனுக்கு என்ன தகுதி இருக்கு சொல்லு? வாழ்க்கைல நல்ல நிலையில இருக்கிற பெண்ணும் அடிபட்டுப் போயிருக்கிற ஆணும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி படம் எடுத்தா நூறு கோடி சம்பாதிக்கும். அதுக்குன்னு அதெல்லாம் யதார்த்தம் ஆகிடாது. இந்த மாதிரியான படங்களையெல்லாம் பார்த்து அதுல வர ஹீரோக்களை இன்ஸ்பிரேஷனா எடுத்து உன் தகுதியைக் குறைச்சிக்காதே”

திரைப்படங்களில் காட்டப்படும் பலவீனமான ஆண்களுக்கு எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கிறது. அது கண்ணாடிப் பாத்திரம் போல தங்களைப் பிரதிபலிப்பதாகப் பெரும்பாலானோர் நினைப்பதால் அப்படியான பாத்திரங்கள் வெல்கின்றன, மனதில் தங்குகின்றன. இதேபோல் நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்தபோது என்னை ஆட்கொண்ட பாத்திரம் ‘500 Days of Summer’ படத்தில் வரும் டாம். ஒவ்வொரு ஆணும் தன்னை டாமாக உணராத இளம்பருவமே அவனுக்கில்லை. அவர்களின் காதல் வாழ்க்கையில் அந்தப் படம் ஒரு பெரும் பங்களிக்கிறது. மனுஷ்ய புத்திரன் கவிதைகள் எப்படி எல்லோருடைய அந்தரங்க அகவுணர்ச்சிகளையும் பதிவு செய்கிறதோ அப்படித்தான் இப்படம் இளைஞர்களுக்கு. 

டாம் தன் அன்றாடங்களின் சிக்கல்களை வெற்றுக் கற்பனைகள் கொண்டு மறைக்கிறான். தனக்குப் பிடித்த கட்டிடக்கலை வேலையைச் செய்ய முடியாமல் விருப்பமில்லாமல் வழக்கமான அலுவலக வாழ்க்கையில் சிக்கிக்கொள்வான். சுய சந்தேகங்களைக் கொண்ட பலவீனன், வாழ்க்கை பற்றிய காதலைப் பற்றிய யதார்த்தத்தை மீறிய கற்பிதங்களைக் கொண்டிருப்பவன் டாம். 

சம்மர் இதற்கு நேரெதிரானவள். பெற்றோரின் விவாகரத்தைப் பார்த்து வளர்வதாலேயே அவளுக்கு எல்லாவற்றின்மீதும் எதிர்பார்ப்பு குறைவு. காதல் வாழ்க்கையில் தனக்கு என்ன வேண்டுமென்றே அறியாதபோதிலும் டாம் போல அவள் குழப்பவாதியல்லள். 

சம்மர் பற்றி எதுவும் தெரியாமலே டாம் அவள்மீது காதலில் விழுகிறான். அது ஒருவகையில் ஆணின் உயிரியல் பண்பு எனினும் அக்காதலை அவன் உருவகித்துக்கொள்ளும் விதம் சற்று மிகையானது. இந்த அதீதப்படியான காதல்வாதத்தால் சம்மர் பேசும் ஒவ்வொரு சொல்லும் அவனுக்கு தேவ வாக்காக அமைகிறது. அவளுடனான பொழுது அனைத்தும் தன் வாழ்க்கையே மாற்றுவதாக பொய்க்கற்பனை காண்கிறான். இதனால் டாம், சம்மருடனான உரையாடல்கள் அனைத்தையும் மூளையைக் கசக்கிப் பிழிந்து ஆராய்கிறான். இந்தக் கற்பனாவாதத்தால் சம்மர் தன் எதிர்பார்ப்புக்கு இசையாமல் இருக்கும்போது டாமை ஏமாற்றம் கொள்ளச் செய்கிறது. இது எதற்குமே சம்மர் பொறுப்பல்ல.

“உன் வீக்கெண்ட் எப்படி இருந்தது?” எனக் கேட்பான் டாம்.

“இட் வாஸ் குட்” எனப் பதிலளிப்பாள் சம்மர்.

“அவள் ’இட் வாஸ் குட்’ என்றாள். ஒருவேளை கடந்த வார இறுதியில் அவள் யாருடனாவது டேட் போய் செக்ஸ் வைத்திருப்பாளோ?” என டாம் தன் நண்பர்களுடன் முட்டாள்தனமாக உரையாடிக்கொண்டிருப்பான். 

சம்மருடன் வெளியே சென்ற பிறகுதான் அவள் தனித்திருப்பதும், உறவுகள் மீது நாட்டமற்றிருப்பதும் அவனுக்குத் தெரிய வருகிறது. இந்த சிட்டுவேஷன்ஷிப் நீடித்தால் அது படுகுழிக்குள் விழுமென்பதற்கான அறிகுறிகள் ஆரம்பத்திலேயே தெரிய வந்தும் சம்மருடன் நெருங்குவதில் டெஸ்பரேட்டாக இருக்கிறான் டாம். மனமுடைந்த ஆணின் கண்களின் வழியே நாம் சம்மரை காண நேர்வதால் அவளுக்கு வில்லி பிம்பம் கிடைத்துவிடுகிறது. டாம் போல நான், என் நண்பன் உட்படப் பல இளைஞர்கள் ஒரு பருவத்தில் கற்பனாவாதத்தில், காதல்வாதத்தில் சிக்கி மீண்டிருக்கின்றனர். ஒருவனின் காதல் எப்படியெல்லாம் இருக்கக்கூடாதென்பதற்குச் சிறந்த உதாரணம் ‘500 Days of Summer’. அதேபோல் காதல் வாழ்க்கைக்குத் தயாரான ஆணொருவன் எப்படியெல்லாம் இருக்கக்கூடாதென்பதற்கு ‘பிரேமலு’ கதாநாயகன் பாத்திரம்  மற்றொரு உதாரணம். 

யதார்த்தத்தை நேருக்கு நேர் சந்திக்கத் துணிச்சலில்லாமல் ‘Delulu is the Solulu’ என வாழ்பவனின் கண்களின் வழி பார்த்தால் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் பெண் வில்லியாகத்தான் தெரிவாள். யதார்த்தத்தை எதிர்கொள்ளாதவனுக்கு எதுவுமே கைகூடாது!


95 views0 comments

Recent Posts

See All

Bình luận


Post: Blog2_Post
bottom of page