எனக்கு பிரக்ஞானந்தாவை விடவே குகேஷும் விதித் குஜ்ராத்தியும் நல்ல வீரர்களாகத் தெரிகின்றனர். அதன் பிறகு பிரக், அப்புறம் அர்ஜுன் எரிகேசாய். ஆனால் பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்செனுடன் உலகக்கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடியதால் பரவலாக அறியப்படுகிறார்.
இன்று சென்னை செஸ் க்ளப் போயிருந்தேன். அப்போது ஓர் அம்மா, தன் மகனை என்னிடம் அழைத்து வந்து “இவன் உங்க கூட விளையாடலாமா?” என்றார். அவனுக்கு சுமார் மூன்றிலிருந்து ஐந்து வயது இருக்கும். எனக்குப் பொதுவாக இந்த வயதொத்த செஸ் வீரர்கள் என்றாலே ஒரு பயம். ஆர்வமாக என் எதிரில் வந்து அமர்ந்தான். “ரேபிட்” (10 நிமிட ஆட்டம்) என்றான். தொடக்க ஆட்டத்தை ஆடியதும், அடுத்தடுத்த ஒவ்வொரு நகர்வுகளுக்கும் என் கண்களையே உற்று நோக்கினான். பீதி இன்னமும் அதிகரித்தது. அவ்வப்போது “அட்ஜஸ்ட்” எனச் சொல்லி காய்களைக் கட்டங்களின் மய்யத்தில் சரி செய்தான். அவ்வளவுதான் பேச வருகிறது அவனுக்கு. அவனுடைய அம்மா டீ கப்பை குப்பையில் போடுவதற்காக எழுந்தபோது ஆக்ரோஷமாக அவரது கையைப் பிடித்துத் தடுத்தான். “எங்கேயும் போகல, இதை டஸ்ட்பின்ல போட்டுட்டு வந்துடுறேன்” என அவனிடம் அனுமதி கேட்டுவிட்டுப் போனார்.
நான் அவனின் எந்தக் காய்களைத் தாக்க முனைந்தேனோ அதை சுதாரித்துக்கொண்டு பாதுகாக்கும் வல்லமை இருக்கிறது அவனிடம். ஆனால் மிக வேகமாகக் காய்களை நகர்த்துவதே அவனுடைய பலவீனமாக இருந்தது. ஹைப்பர் ஆக்டிவ் குழந்தை! நான் அவனுடைய ரூக்கை வெட்டியபோது அவனுடைய அம்மா, “ஏன் இவ்ளோ வேகமா ஆடுற? அந்த அண்ணா எவ்வளவு யோசிச்சு விளையாடுறாரு. அப்படி ஆடு” என்றார். ஆட்டம் முடிந்தபோது என்னிடம் 3 நிமிடங்கள் மிச்சமிருந்தன; அவனிடம் 7 நிமிடங்கள். அவ்வளவு வேகமாக ஆடினான். என்னை நிறைய யோசிக்க விட்டான். எளிதாக வெல்ல அனுமதிக்கவில்லை.
இந்த நேர ஒப்பீட்டை அவன் அம்மாவிடம் காட்டினேன். “நானும் எவ்வளவோ சொல்லிட்டேன்ப்பா. பிரக்ஞானந்தா ஒவ்வொரு மூவ் வெக்குறதுக்கும் நிறைய டைம் எடுத்துப்பாரு. சில மூவ்ஸ்க்கு அரை மணி நேரம் கூட எடுப்பாரு. நீயும் அவரை மாதிரி ஆகணும்னா பொறுமை அவசியம்னு சொல்லிப் பார்த்தேன்” எனப் புலம்பினார். “விடுங்க. குழந்தைல்ல. வளர்ந்ததும் புரியும்” என்றேன்.
நம்மூரில் விஷ்வநாதன் ஆனந்த் பெயர் போய் இப்போது அடுத்தகட்ட வீரர்களின் பெயரை உச்சரிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களை இன்ஸ்பிரேஷனாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு மாபெரும் உலக மேடை, நாட்டின் வளரும் தலைமுறையையே செஸ்ஸை நோக்கி இழுக்கிறது. இதற்காகவாவது அடுத்த உலகக்கோப்பையில் அல்லது உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஓர் இந்தியர் வெல்ல வேண்டும்.
Comments