பால்யத்துக்குத் திரும்ப வேண்டுமென்கிற ஆசையில்லாதவரே அநேகமாக இருக்க முடியாது. சரியாய்ப் பயன்படுத்தப்படாத இளமையை நேர்த்தியான முறையில் மீண்டுமொருமுறை வாழ்ந்துவிட மாட்டோமா என்கிற ஏக்கமே பலரிடம் மிஞ்சுகிறது. ஆனால் இப்போது ஐம்பதைக் கடந்த பலருக்கு அவர்களின் இளமை என்பது வெறும் எண்ணிச் சிலிர்க்கும் நாஸ்டால்ஜியா மட்டுமே. அவர்களுக்குத் தவறவிட்ட இளமைக்காலம் மீது எந்தக் குற்றவுணர்வுமே இருக்காதென நினைக்கிறேன்.
என் அப்பன் காலத்து ஆட்களின் ஒரு குணம் இருந்தது. அவர்கள் அடுத்தவர் செய்யும் தவறுகளைப் பார்த்துத் தங்களைத் திருத்திக்கொண்டார்கள். குடியால் கஞ்சாவால் சீரழிந்தவன் ஊருக்கு ஒருவன் இருப்பானானால் அவனை உதாரணமாகக் கொண்டு மொத்த பேருமே அதைக் குறைத்து, குடும்பத்தை கவனிக்கத் தொடங்கினார்கள். இந்த அடுத்தவர் தவற்றிலிருந்து பாடம் கற்கும் குணம் என் தலைமுறையிடம் இல்லை.
குடி, கஞ்சா என போதைத் தவறுகள் மட்டுமல்ல; மன அழுத்தம் (Depression) மகிமைப்படுத்தப்பட்ட இந்தக் காலத்தில் வீட்டுக்கு ஒருவன் அதனால் பாதிப்புக்குள்ளாகிறான். வான்கா, டாஸ்டயேவ்ஸ்கி, காஃப்கா, காம்யூ ஆகியோரின் ஒரு வரி வாசகங்களை இன்ஸ்டாகிராமில் மேய்ந்துவிட்டு தன் மன அழுத்தத்துக்கு மேலுமொரு அழகியல் சாயலை அளித்துக்கொள்கிறான்.
ஒருமுறை நண்பரும் வாசகருமான நவீன் எனக்கு இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். “நான் Medical billing துறையில வேலை செய்திருக்கிறேன். அப்போ எனக்கு 30 accounts assign பண்ணுவாங்க. 30 பேருமே depressionல drugs use பண்ணி visual or auditory hallucination-னால பாதிக்கப்பட்டிருப்பாங்க. இவங்க எல்லாருடைய பின்னணியையும் எடுத்துப் பார்த்தா ரிலேஷன்ஷிப் ப்ரேக் அப் ஆகி இந்த நிலைக்கு வந்தவங்களா இருந்தாங்க. எனக்கு இப்போ என்ன சந்தேகம்னா, நான் ஒரு ஆள் மட்டுமே தினசரி இப்படி 30 கேஸோட பில்லிங் டீல் பண்றேன், எங்க டீம்ப மொத்தம் 12 பேர் வேலை செஞ்சாங்க. ஓராண்டு முன்னவே அந்த வேலையில இருந்து நான் நின்னுட்டேன். ஆனா இன்னைவரை ப்ராஜெக்ட்ஸ் வந்துட்டேதான் இருக்கு. சும்மா ஒரு கணக்குப் போட்டுப் பாருங்க. வாரத்துக்கு சுமார் 2,500 பேரு. மாசம் 10,000 பேரு டிப்ரஷன்ல பாதிக்கப்பட்டதா என் கம்பெனியோட நிலவரம் மட்டுமே சொல்லுது” என்றார்.
‘The World Happiness’ கடந்த ஏப்ரலில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் Gen Z இளைஞர்கள், வரலாற்றில் வாழ்ந்து முடிந்த பிற எந்தத் தலைமுறையைவிடவும் மகிழ்ச்சியற்று இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. முன்பெல்லாம் mid-life crisis என்றொரு சொல்லாடல் அதிகம் பிரயோகிக்கப்பட்டது. உலகளவில் அது தொடர்பான நாவல்கள் நிறைய வெளிவந்துள்ளன. திருமணமும், பிள்ளை பெறுதலுமே வாழ்வின் முக்கிய நோக்கமென நினைப்பவர் இரண்டையுமே செய்து முடித்த பிறகு எதிர்கொள்ளும் வெறுமையே mid-life crisis. இன்று இந்நிலையே சுத்தமாக அழிந்துவிட்டது. காரணம், ஒவ்வொரு மனிதனும் அந்த சிக்கலை இருபதுகளின் தொடக்கத்திலேயே எதிர்கொள்ளத் தொடங்கிவிடுகிறான். நானெழுதிய ‘சொனாட்டா’ நாவலே அதைப்பற்றித்தான் என்பதை இப்போது ஆச்சரியத்துடன் நினைவுகொள்கிறேன்.
ஃபின்லாந்தில் எடுக்கப்பட்ட இதுதொடர்பான மற்றொரு வேடிக்கையான ஆய்வையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. அதாவது, ‘Woke’ (தீவிர அரசியல் சரிநிலை) கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் மன அழுத்தம் (Depression) மற்றும் பதற்றத்தால் (Anxiety) பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.
ஓர் இளைஞன் முதலில் எதிர்கொள்வது உறவுகளைச் சார்ந்த சிக்கலைத்தான். சமூக வலைதளங்கள் அழகுக்கும் காதலுறவுக்கும் எல்லை மீறிய ஓர் எதிர்பார்ப்பைக் கடத்துவதைத் தவிர்க்கவே முடிவதில்லை. இந்த நீண்ட பாதாளத்தைத் தாண்டிக் கடப்பவனால் மட்டுமே காதல் வாழ்க்கையில் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. ‘The World Happiness’ ஆய்வில் இளைஞர்களின் மனச் சிதைவுக்கு சமூக வலைதளங்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் சராசரி இளைஞன் ஒன்பது மணி நேரம் மொபைல் பார்ப்பதாக ஒரு தரவைப் பார்த்தேன்.
எக்காலத்திலும் இளைஞர்கள் நிறைவான வாழ்க்கைக்கு வைக்கும் அளவீடு ஒன்றுதான். மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணை, குழந்தைகள், சொந்தமாக ஒரு வீடு, அவ்வப்போது ஒரு சுற்றுப்பயணம். என் தாத்தா காலத்தில் இவை மிகச்சாதாரணமாகப் பலருக்கும் கிடைத்தது. ஆனால் இன்று இவற்றைப் பூர்த்தி செய்வதற்குப் பெரும் பணக்காரனால் மட்டுமே சாத்தியம். திருமணச் சந்தை இன்று முற்றிலும் மாறியிருக்கிறது. பணமும் பொருளும் இல்லாதவனால் தான் விரும்பும் பெண்ணைக் கட்ட முடியுமா என்பதே சந்தேகம். கால் நூற்றாண்டு தவணைக்குக் கடன் வாங்காமல் பெருநகரத்தில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவனால் சொந்த வீடு கட்டவே முடியாது. என் தாத்தனைவிட நான் இருபது மடங்கு அதிகம் உழைத்தால்தான் அவர் அனுபவித்ததில் இருபது சதவீதமாவது என்னால் அனுபவிக்க முடியும். என்னை மகிழ்விக்கும் விஷயங்கள் கோரும் விலை என்றுமில்லாமல் இன்று மிக உயர்ந்ததாக இருக்கிறது. வாழ்வின் அடிப்படைகள்கூட இன்றைய இளைஞனுக்கு பாரம்தான்.
அடுத்த சிக்கல் பணி சார்ந்தது. ஐடி, ஊடகம் போன்ற எதிர்காலமற்ற துறைகள் காலாவதியானதும் தூக்கிப்போடும் குப்பைகளைப் போலவே நம்மைப் பயன்படுத்துகின்றன. அரசு வேலைகளுக்கும் முன்பிருந்த மதிப்பு இப்போதில்லை. நம் அப்பாக்கள் ஓர் நல்ல எதிர்காலத்தை அவர்கள் முன் கண்டார்கள். ஆகவே Millennials தலைமுறைக்கு அதுசார்ந்த நம்பிக்கை ஆழமாக இருந்தது. ஆனால் இவை அனைத்தும் நடைமுறையில் வெறும் பொய் என்பதையும், நிறுவனங்கள் நம்மைப் பொருட்படுத்துவதில்லை என்பதையும் உணர்ந்துகொண்ட நாம் எதிர்காலத்தை எண்ணித் துன்புறுகிறவர்களாக இருக்கிறோம்.
புறக் காரணிகளைத் தவிர்த்துவிட்டு நம்மிடம் உள்ள சிக்கல்களையே அலசுவோம். இன்பம் தருகிற விஷயங்களைப் பின்தொடர்வதே மகிழ்ச்சி என நம்மிடம் ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை உள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வது போல லட்சியத்தை அடையும்பொருட்டு மேற்கொள்ளப்படும் செயலே மெய்யான நிறைவைத் தரக்கூடியது. செயலின்மை கொண்ட ஒரு தலைமுறையால் எப்படி மெய் மகிழ்ச்சியைக் கண்டடைய முடியும்?
இன்ஸ்டா தோழி ஒருவர், ‘நாம் எதற்காக வாழ்கிறோம்?’ எனக் கேட்டிருந்தார். ‘முதற்காரணம், நான் பிறந்துவிட்டேன் என்பதால். இரண்டாவது, நான் இன்னும் இறக்கவில்லை என்பதால்’ என்றேன். ஆனால் உண்மையில் நாம் எதற்கு வாழ்கிறோம், அதற்கான நோக்கம் என்ன? எல்லா உயிரினங்களும் இன்றைய நிலையிலிருந்து முன்னேறுவதற்காக மட்டுமே வாழ்ந்து அழிவதாக ஆழ்ந்து யோசிக்கையில் புரிகிறது. ஒரு மொட்டின் வாழ்நாள் லட்சியம், மலர்வதைக் காட்டிலும் வேறென்னாக இருக்க முடியும்?
லட்சியம் பற்றிய தவறான புரிதலும் Gen Z தலைமுறையிடம் காண்கிறேன். அவர்கள் லட்சியத்தைப் பணி சார்ந்து மட்டுமே உருவாக்கிக்கொள்கிறார்கள். லட்சியம் என்பது தேடல் மனநிலை. தினமும் மேற்கொள்வதற்கு சுவாரசியமான செயல்கள் இருக்கும் வரை மட்டுமே ஒருவன் மகிழ்ச்சியாக வாழ முடியும். செய்வதற்கு ஒன்றுமில்லாதபோது அவன் சலிப்பால் சீரழிவான். Eudaimonism எனும் இந்தத் தத்துவம்தான் ஹெடோனிசம் என்கிற நோக்கமற்ற வாழ்க்கைமுறைக்குச் சிறந்த மாற்று. ஹெடோனிசம் உலகளவில் என்றோ காலாவதியாகிவிட்டது. இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் ஹெடோனிசத்தை தங்கள் இறுக்கமான யதார்த்தத்திலிருந்து தப்பிக்கும்பொருட்டு கையிலெடுக்கின்றனர்.
ஒவ்வொரு இளைஞனுக்கும் இன்றியமையாதது கர்வம். ஆனால் அதை அகங்காரத்தோடு குழப்பிக்கொண்டால் அதுவே வீழ்ச்சியின் திறவுகோல். நவீன மனிதனுக்கு கர்வம் என ஒன்றே இல்லை. தன்னை எண்ணிப் பெருமிதம் கொள்ளும் எந்தச் செயலையும் அவன் செய்யவில்லை. அவனிடம் உள்ளதெல்லாம் கர்வமற்ற வெற்று அகங்காரம் மட்டுமே. அது பாசாங்கு என்பதை உணரும் தருணத்தில் உடைவதென்னவோ அவனுடைய அந்த வெற்று அகங்காரம்தான்.
எழுத்தாளன் தன் எழுத்தில் அகங்காரத்தைப் புகுத்துகிறான். ஆகவே விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது அவன் நிலைதடுமாற நேர்கிறது. ஒரு பாடிபில்டரின் அகங்காரம் அவனுடைய தசைகளில் இருப்பதனாலேயே நாற்பது வயதுக்குப் பிறகு மனச்சோர்வுக்குள்ளாகாத பாடிபில்டரே இல்லை. நான் கல்லி கிரிக்கெட்டில் ஒரு நல்ல வேகப்பந்து வீச்சாளன். என் பந்துகளை ஒருவன் தொடர் பவுண்டரி அடித்துவிட்டால் என் அகங்காரம் சீண்டப்படும். இதேபோன்ற ஆளுமைப் பண்பை ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத்கானிடம் கண்டிருக்கிறேன். எனதிந்த அகங்காரம் பேட்டிங் ஆடும்போது எழாது. நான் நல்ல பேட்டர் அல்ல என்பதை அறிவேன். ஆகவேதான் பந்துவீசும்போது மட்டுமே என் அகங்காரம் முளைக்கிறது. சமீபத்தில் நண்பன் ஒருவன் தனக்கு டெஸ்டாஸ்டிரோன் குறைவது போல் இருப்பதாக சந்தேகத்துடன் கூறினான். அவனிடம் “பெட்ல எப்படி பெர்ஃபார்ம் பண்றே?” எனக் கேட்டதற்கு நாக்கை மடித்துக் கடித்து கைகளை வெற்றிச் சின்னத்தில் உயர்த்தி, ‘அதுலலாம் கிங்கு’ என்பது போல சைகை செய்தான். எல்லா ஆணின் அகங்காரமும் அவன் குறியில் இருக்கிறது.
இந்த அகங்காரத்தை உடைப்பதற்காகவே 2022ல் முதல் நான்கு மாதங்கள் முழுவதும் எவ்வித காமச் செயல்களிலிருந்தும் என்னை ஒதுக்கிவைத்துக்கொண்டேன். மனிதனின் ஆகச்சிறந்த இன்பத்திலிருந்து ஒருவன் ஏன் ஒதுங்கியிருக்க வேண்டும்? நாம் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறோம் என்பதை உணரும்போது உண்டாகிற கர்வத்துக்காக! கட்டுப்பாடு ஏற்படுத்தித் தருகிற மகிழ்ச்சியை ஒருபோதும் இச்சையால் ஏற்படுத்தித் தர இயலாது. செயல்களிலும் எண்ணங்களிலும் கட்டுப்பாடு இல்லாதவன், வழிதவறிப்போனதை எண்ணி வருந்திப் பயனில்லை.
Gen Z சருக்கும் மற்றொரு இடம் முடிவெடுத்தல் (Decision Making). பெரும்பாலானோர் தர்க்கங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதாக நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் ஏற்கெனவே முன் முடிவெடுத்து அதற்கான தர்க்கங்களைத் தேடி சமாதானமாகிறார்கள். இது பகுத்தறிவு - உள்ளுணர்வு என இரு வெவ்வேறு துருவங்களுக்கும் தீங்களிக்கக்கூடியது. கூழையும் குடிக்காமல் மீசையையும் பேணாமல் விட்ட கதை ஆகிவிடும். இப்படியான குழப்பங்கள் கலந்த முன்முடிவுகள் நம்மை சுய சந்தேகத்துக்கு இட்டுச் செல்லும். நவீன இளைஞர்கள் ஏற்கெனவே உணரப்பட்ட இச்சையின் அடிப்படையில் பல முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால் இச்சைக்குப் பின் எஞ்சுவதென்னவோ வெறுமைதான். இச்சை நிலைக்கக்கூடியதோ நீடிக்கக்கூடியதோ அல்ல; மட்டுமின்றி, இச்சை தரும் மகிழ்ச்சியின் அளவு பற்றிய நமது கணிப்பு எப்போதும் தவறான கணக்கீடுதான்.
என்ன செய்ய வேண்டுமென்பதற்கும் என்ன செய்கிறோமென்பதற்கும் இடையிலிருப்பதுதான் துயரத்துக்கான ஊற்று. இவ்விரண்டுக்குமான இடைவெளி குறையக் குறைய இன்பம் தானாய்க் கிட்டும்!
Comments