top of page
Search
Writer's pictureBalu

மாடர்ன் லவ் சென்னை

Updated: May 20, 2023

ராஜுமுருகன் படத்தில் ஒரு பிரச்சனை. பொதுவாக உறவுகளில் காமத்தின் திரைகளை யார் அகற்றுவது என்பதைத் தீர்மானிப்பவர்கள் பெண்களாகத்தான் இருக்கின்றனர். அப்படி இருக்கையில் ஓர் ஆணால் பிரசவமானதையும், கருக்கலைப்பால் அவள் அனுபவித்த கஷ்டங்களுக்கும் முழுப் பொறுப்பையும் அப்பெண்ணே ஏற்றுக்கொள்ள வேண்டும். இது அவள் செய்த தவறு. முடிந்தவரையில் அதிக இனச்சேர்க்கை வாய்ப்புகளை நாடுவது ஆணின் இயற்கை குணம் எனில் அதில் சிறந்தவற்றை மட்டுமே தேர்ந்தெடுப்பது பெண்ணின் இயற்கை குணம். இத்தனை ஆண்டுகளாகப் பெண்கள் அதைத்தான் செய்து வருகின்றனர்; தேர்ந்தெடுத்தல். இதில் உயர் தரப் பெண்கள் (High value women) ஜெய்த்துவிடுகின்றனர். இப்படத்தின் நாயகியைப் போன்ற கவன ஈர்ப்பு விரும்பிகள் முற்றிலும் இதில் தோல்வியடைந்துவிட்டு ஆண்களை ஒட்டுமொத்தமாகக் குறை சொல்வதில் ஒரு பயனுமில்லை. அவள் பலாத்காரம் செய்யப்படவில்லை. பூரண சம்மதத்துடனே புணர்ச்சி நடந்திருப்பதால் அதனால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு அவளே பொறுப்பு.


எல்லா கஷ்டங்களையும் மீறி நாயகி ஒரு திருமண வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறாள். தனக்குக் கணவனாக வாய்த்தவன் முன்காலத்தில் ஒரு போலிச் சாமியாராக இருந்ததை அறிந்ததும் அவளுக்கு ஏமாற்றமும் கோபமும் தலைக்கேறுகிறது. அவன் செய்த தவற்றுக்காக ராஜுமுருகன் அவனை அப்பெண்ணின் காலில் விழ வைக்கிறார். உண்மையில் அவன் செய்தது என்ன? போலிச் சாமியாராக இருந்ததா அல்லது தன் முந்தைய அடையாளத்தை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ததா? அப்படி இரண்டாவது காரணம்தான் பிரதானம் எனில் இப்பெண்ணின் கடந்த காலம் முழுமையாக (முக்கியமாகக் கருக்கலைப்பு) மாப்பிள்ளையிடமும் அவர்களின் குடும்பத்திடமும் சொல்லப்பட்டிருக்கிறதா? ஒரு பெண் தான் வேறொருவனால் கர்ப்பமடைந்ததையும் கருக்கலைப்பு செய்ததையும்விட, அவன் போலிச் சாமியாராக இருந்து அதை மறைத்துத் திருமணம் செய்தது பெரிய குற்றமா? என்னைப் பொறுத்தவரை அப்பெண்ணுக்கு ஒரு புதிய வாழ்க்கையைக் கொடுக்க முன்வந்தது அந்த ஆணின் பெருந்தன்மை. இது நவீனக் காதல் பற்றிய படம் என்பதால் அவனின் பெருந்தன்மையை மையப்படுத்த வேண்டிய அவசியமே இல்லைதான். ஆனால் தனது சிறு பிழைக்காக மனைவியின் காலில் விழுந்து மண்டியிடுவதுதான் நவீனம் என்றால் அதை முற்றிலும் நிராகரிக்கிறேன்.

பெண்கள் செக்ஸுக்கு கேட்கீப்பராக (Gatekeeper) இருந்தே பல பிழைகள் செய்வதைப் பார்த்து வருகிறேன். அவர்களின் பல காமச் செயல்பாடுகள் குழப்பம் வாய்ந்ததாகவும், பூரண சம்மதமற்று இருப்பதையும் காண முடிகிறது. அதாவது அவர்கள் ஈடுபட்ட காமச் செயலை எண்ணி அவர்களே அடுத்த நாள் வருந்தும் அளவிற்கு இவ்விஷயத்தில் முட்டாள்தனமாக முடிவெடுக்கின்றனர். சிலர் சுய நினைவுடன் இதில் ஈடுபடுவதில்லை. நவீனக் காலத்தில், சாதாரண செக்ஸுக்கு கேட்கீப்பராக இருக்கும்போதே வீழ்ச்சியடையும் இவர்களிடம், கமிட்மென்டுக்கு கேட்கீப்பர் அங்கீகாரத்தைக் கொடுத்து தனது அரசியல் சரிநிலை ஆர்காசத்தை அடைந்துகொண்டார் ராஜுமுருகன்.

பாரதிராஜா படத்தில் மற்றொரு பிரச்சனை. முதலில் விவாகரத்து இவ்வளவு எளிதாக அணுகக்கூடிய விஷயம் அல்ல; குறிப்பாக ஆணுக்கு. படத்தின் துவக்கத்தில் ‘முதல் மரியாதை’ பாரதிராஜா இஸ் பேக் என்று ஒரு துள்ளல் இருந்தது. கதை சற்று நகர இருள் படிந்து ‘மறுபடியும்’ படம் நினைவுக்கு வந்தது. ‘மறுபடியும்’ படத்தில் ஓர் அற்புதமான காட்சி இருக்கும். “அவ என்கிட்ட கெஞ்சும்போது அவ முகத்தைப் பார்க்கணுமே. எந்தப் பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. நாளைக்கு நான் இன்னொருத்திகிட்ட போய் அப்படிக் கெஞ்சுனா…” (நினைவிலிருந்து எழுதியது) என்று ரோகிணி அதிர்ந்து போய் நிழல்கள் ரவியிடம் சொல்வார். இந்த மனநிலையை விஜயலட்சுமிக்குக் கடத்தித்தான் பாரதிராஜா கதை சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். யதார்த்தம் அவ்வாறே நிகழும். ஆனால் படத்தில் முட்டாள்தனமாக ஓர் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. ‘நினோக்கா ஒரு காதல் கதை’யில் செகாவ் அவரின் கதாபாத்திரங்களுக்குப் போட்டுவிட்ட ஒப்பந்தத்தைவிட மோசமான ஒப்பந்தத்தை பாரதிராஜா கையாண்டிருக்கிறார்.

ரம்யா நம்பீசன்தான் ஆண்கள் விரும்பும் லட்சிய மனைவி. எதையும் குற்றஞ்சொல்லாமல் தனது பிள்ளைகளுக்கு நல்ல தாயாக இருக்க விரும்பும் ஒரு பெண் கிடைப்பது இந்தக் காலத்தில் சிரமம். ஏனெனில், நவீனப் பெண்ணியம் பலரை மூளைச்சலவை செய்துகொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது ரம்யா நம்பீசன் மாதிரியான ஒரு பெண்ணின் அருமை தெரியாமல் கிஷோர், விஜயலட்சுமியை மனைவியாக்கிக்கொள்ள நினைப்பது முட்டாள்தனம். அது அவரது உணர்வு சார்ந்தது என்றாலும், இவர்களின் இந்த ஒப்பந்தம் வெறுக்கத்தக்கது. ஒரு குடும்பத்தை வெற்றிகரமாக நிர்வகித்து வரும் பெண்ணை, தங்களது மிட் லைஃப் க்ரைசிஸ் காதலால் மிக எளிதாக வெளியேறிவிடச் சொல்வது என்ன மாதிரியான மனநிலை? நவீன மனிதர்கள் அவ்வளவு narcissist ஆக மாறிவிட்டார்களா! உண்மையில் இந்தப் படத்திற்குப் பெண்ணியவாதிகள் கொதித்தெழுந்திருக்க வேண்டும். ஆனால் பாரதிராஜா சூசகமாக பாலு மகேந்திராவுக்கு சமர்ப்பணம் செய்து தப்பித்துவிட்டார். ஸ்மார்ட் மூவ். உயர் தரப் பெண்களுக்கு நவீனக் காலம் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான் என்பதைத் தவிர இதை வேறு எப்படிப் புரிந்துகொள்வது? TKவின் சாம், பாரதிராஜாவின் விஜயலட்சுமி போலக் காதலுறவில் கதைத்தன்மை சேர்க்கும் பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள் எனில் நாம் எங்கோ தவறிழைக்கிறோம்.

தியாகராஜ குமாரராஜாவின் படம் சலிப்பாக இருந்தது என்பதைத் தவிரப் பெரிதாக எந்த முரணும் இல்லை. நான் மிகவும் வெறுத்த ஒரு காட்சியையும் ரசித்த ஒரு காட்சியையும் எழுதுகிறேன். ‘நீங்கள் பிரிந்துவிடுவீர்கள்’ என ஜோசியர் சொன்னதும் அதைப் பரிசோதிப்பதற்காகத் தான் ஏற்கெனவே கருக்கலைத்ததாக சாம் கேவிடம் பொய் சொல்வாள். “ஆனால் அது உன்னுடையதா என்று தெரியவில்லை” என்பதையும் சேர்த்துக்கொள்வாள். “அதனால என்ன, அப்பயும் அது உன் குழந்தைதானே. நாம வளர்த்திருக்கலாம்” என்பான் கே. “ஃபக்” என பிரமித்துப் போய் அவனைக் கட்டியணைத்துக்கொள்வாள். கே ஒரு மிகச்சிறந்த காதலன் என்பதைக் காட்டுவதற்காகவே இந்தக் காட்சி அமைக்கப்பட்டதாகப் புரிந்துகொண்டேன். மிகச்சிறந்த காதலனாக இருப்பதற்குக் கக்காக இருக்க வேண்டுமென TK வெளிப்படையாகவே சொல்லியிருக்கலாம். அருவருப்பான காட்சி!

பார்ட்டியில் மனிதர்கள் துள்ளிக்குதித்து நடனமாடுவதை சாம் வியந்து பார்க்கும்போது, “மனுஷங்க ஏன் இதையெல்லாம் பண்றாங்க” எனக் கேட்பாள். எல்லாம் இனச்சேர்க்கை வாய்ப்புக்காகத்தான் என்பான் கே. “நீ எதுவுமே பண்ணலயே, உனக்கு மட்டும் ஃப்ரீ ஆக்‌ஷன் கிடைக்கிது” என சாம் சொல்ல, “நீகூடத்தான் எதுவுமே பண்ணல. நீ எனக்காக என்ன பண்ண?” என்பான் கே. அதற்கு சாம் மிக அற்புதமான ஒரு பதிலைச் சொல்வாள். “வேணும்னா உன்னைத் தவிர யாருக்கூடவும் எதுவும் பண்ணாம இருக்கேன்”. Men should do crazy things to get the mating opportunities; Women should not do any crazy things to get a high quality mate.



71 views0 comments

Recent Posts

See All

Commentaires


Post: Blog2_Post
bottom of page