வயதும் அனுபவமும் சார்ந்து இந்தக் கேள்விக்கான பதில் பலரிடையே மாறுபடலாம். என்னைப் பொறுத்தவரை முதல் டேட்டுக்கு ஆண்கள்தான் பணம் கொடுக்க வேண்டும். அடுத்தடுத்த டேட்களுக்கு பெண்கள் கொடுக்கலாமா அல்லது கட்டணத்தைப் பிரித்துக்கொள்ளலாமா எனக் கேட்டால், அதற்கும் இல்லை என்றே சொல்வேன். எத்தனை முறை வெளியே சென்று சுற்றினாலும் ஆண்கள்தான் பணம் செலுத்த வேண்டும்.
ஆண்கள் பணம் செலுத்துவதால் அவர்களுக்கு மிகப்பெரிய நன்மை ஒன்றுள்ளது. இதன்மூலம் கேஷுவல் செக்ஸ் மற்றும் கேஷுவல் உறவுகள் தவிர்க்கப்படும். நான் ஒருநாள் வெட்டியாக இருந்ததால் ஊர் சுற்றுவதற்கு ஒரு பெண்ணை அழைத்தேன். அவள் மீது எனக்குக் கொஞ்சமும் ஈர்ப்பு இல்லை என்ற போதும் நாங்கள் ஒன்றிரண்டு இடத்திற்குச் சென்றோம். அந்நாளின் மொத்த செலவுக்கும் நானேதான் பொறுப்பேற்றுக்கொண்டேன். வழக்கமாக செலவு செய்வதைவிட அன்று கொஞ்சம் கூடவே செலவழித்தேன். எனக்கு ஈர்ப்பே இல்லாத பெண்ணுக்காக செலவிட்டதுதான் இங்கு இழப்பு. அப்பெண்ணுடன் இனி உலாவவே கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.
நான் வழக்கமாக நண்பர்களுடன் மட்டும்தான் கட்டணத்தைப் பிரித்துக்கொள்வேன். பெண்களுடன் வெளியில் செல்லும்போது முழுச் செலவையும் நானே ஏற்றுக்கொள்ளப் பார்ப்பேன். வங்கிக்கணக்கில் பணம் இல்லாத சமயங்களில் பெண்களுடன் வெளியில் செல்வதையே தவிர்த்துவிடுவேன். இவ்வாறு முழுச் செலவையும் ஓர் ஆண் ஏற்றுக்கொண்டு டேட் செய்யும்போது அவன் சரியான பெண்ணைத் தேர்ந்தெடுப்பான். உதாரணமாக, என் மொத்த மாத ஊதியத்திலிருந்து 10% ஒருநாள் டேட்டுக்கு மட்டுமே செலவாகிறது எனும்பட்சத்தில் என் முதலீட்டை முடிந்தமட்டில் ஓர் உயர்தரப் பெண்ணின் மீதுதான் போடப் பார்ப்பேன். என்னுடனான டேட்டை முடித்துவிட்டு மறுநாளே அடுத்த டேட்டுக்குத் தயாராகும் பெண்ணுக்கு நான் ஏன் அவ்வளவு பணத்தைக் கொட்ட வேண்டும்?
ஒரேயொரு சூழ்நிலையில் மட்டும் டேட்டுக்குப் பெண்கள் பணம் செலுத்தலாம், அல்லது பிரித்துக்கொள்ளலாம். நீங்கள் டேட் செய்யும் பெண் ஒரு பெண்ணியவாதி எனும்பட்சத்தில் இது சாத்தியம். எந்தக் கொள்கை உடையவராய் இருந்தாலும், முதல் டேட்டில் பணம் செலுத்த முன்வராத ஆண், பெண்ணிடம் மதிப்பை இழப்பார். ஒரு பெண்ணியவாதியிடம் மதிப்பிழப்பதில் தவறில்லை என்பதால்தான் இங்கு சற்று பின்வாங்கலாம். அதுமட்டுமின்றி, பாலியல் சமத்துவம் பேசுபவர்களிடம் இதுபோல் விளையாடிப் பார்ப்பது டேட் செய்வதைவிடக் கேளிக்கையானது. மேலும் ஒரு பெண்ணியவாதியுடனான டேட் சொதப்பலில் முடிவதால் ஆண்களுக்கு ஒரு இழப்புமில்லை.
ஆணைக் காட்டிலும் பெண் அதிகம் சம்பாதிக்கும் பட்சத்தில் பெண் கட்டணம் செலுத்தலாமா? இந்த விவகாரத்தில் இது எல்லோருக்கும் எழக்கூடிய ஒரு பொதுவான கேள்விதான். அப்போதும் வேண்டாம் என்றுதான் சொல்வேன். ‘Triangle of Sadness’ படத்தில் நாயகன் கார்லைவிட நாயகி யாயா அதிகம் சம்பாதிக்கக்கூடியவள். ஆனால் அவர்கள் செல்லும் மூன்று டேட்டிலும் கார்ல்தான் பணம் கொடுப்பான். அவன் பாலியல் சமத்துவம் பேசும் ஆண் பெண்ணியவாதி என்பதால் யாயாவையும் கட்டணம் செலுத்தக் கோருவான். “இதைப் பெரிய விவாதம் ஆக்க வேண்டாம்” என்பாள் யாயா. அவர்களுக்கிடையே பெரும் வாக்குவாதம் முடிந்தபிறகு, “நீ ஏன் டேட்டுக்குப் பணம் கொடுக்க மறுக்கிறாய்?” என கார்ல் கேட்பான். “நான் கர்ப்பமாகிவிட்டால் என்ன செய்வது?” என்பாள் யாயா. ஒன்றும் புரியாமல் விழிப்பான் கார்ல். “எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. நாம் காதலித்துக் கல்யாணம் செய்துகொள்கிறோம் என்று வைத்துக்கொள். நாளை நான் உன்னால் கர்ப்பமாகிறேன். குழந்தையின் பொருட்டு மாடலிங் துறையிலிருந்து விலகும் நிலை ஏற்படுகிறது. என்னால் இப்போது போல் பணம் ஈட்ட முடியாமல் போகிறது. எனது அப்போதைய நிலையில் பணம் சார்ந்த விவாதங்களையே என்னிடம் கொண்டு வராத கணவனைத்தானே நான் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்பாள் யாயா. ஒட்டுமொத்த பாலியல் சமத்துவ பெண்ணியம் பேசும் போலிகளையும் சுக்கு நூறாக்கிய வசனம் இது.
சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் அவரது காதல் வாழ்க்கை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவர் தன்னைவிட ஐந்து மடங்கு அதிகம் சம்பாதிக்கும் ஒரு பெண்ணுடன் காதலுறவில் இருந்திருக்கிறார். இப்போது அந்த உறவு வேறு சில காரணங்களால் முறிந்துவிட்டது. இவரோ வெறுந்தரையில் படுத்துறங்கும் அளவுக்கு ஒழுக்கமான ஆள். அப்பெண்ணோ, “ஹாலில் ஒரு டிவி. படுக்கையறையில் ஒரு டிவி” என்று பல்வேறு உலகியல் ஆசை கொண்டவர். அவரிடம் நான் சொன்னது இதுதான், “நல்லவேளை உங்கள் உறவு முடிந்துவிட்டது. இதுபோல் உலகியல் ஆசை கொண்ட பெண்களை மணப்பதில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது. அவர் கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொள்ளும்போது சில ஆண்டுகள் பணம் சம்பாதிக்க முடியாமல் போகலாம். அப்போது உங்கள் பணம் அவருக்கு சில்லறையாக தெரியும். இப்பேர்ப்பட்ட உலகியல் ஆசைக்குப் பழகியவர்களால் நீங்கள் எவ்வளவு கொண்டு வந்து கொட்டினாலும் திருப்தியடையவே முடியாது” என்றேன்.
ஹாலில் ஒரு தொலைக்காட்சியும் படுக்கையறையில் ஒரு தொலைக்காட்சியும் வைத்துக்கொள்வதில் தவறில்லை. அது தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதற்கான பணத்தைச் செலுத்தும் நிலையில் ஆண் இருக்க வேண்டும். அதற்கு மனைவிதான் பணம் கொடுக்கப்போகிறார் எனும் பட்சத்திலும் அதைச் செலுத்தும் அளவுக்குப் பொருள் ஈட்டக்கூடியவனாக கனவான்கள் இருக்க வேண்டும். அப்படியில்லாதபட்சத்தில் பெரும் உலகியல் ஆசைகள் கொண்ட பெண்களைச் சிகப்பு கோட்டில் வைத்திருப்பதே ஆண்களுக்கு நன்று.
Comments