சமீபத்தில் ஃபேஸ்புக் பயனர் ஒருவரின் ஸ்டோரியைப் பார்த்தேன். முதல் ஸ்டோரியில் ‘என்னால் 115 கிலோ டெட்லிஃப்ட் செய்ய முடியுமா?’ என்று Poll போட்டிருந்தார். அதில் 85% பேர் முடியுமென்றும் 15% பேர் முடியாதென்றும் வாக்களித்திருந்தனர். அடுத்த ஸ்டோரியில் 115 கிலோ டெட்லிஃப்ட் பயிற்சியை 5 Rep எடுத்த காணொளியை 15% பேருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பதிவிட்டிருந்தார். மேலும், ‘உன்னால் முடியாது என்று சொல்வார்கள். அவர்கள் முன்பே மென்மேலும் உயர்ந்து செல்’ என ஆங்கிலத்தில் மோட்டிவேஷனல் கேப்ஷன் வைத்திருந்தார். சிரித்துக்கொண்டேன். உடலாற்றலைச் செலவிடுபவர்களுக்கு அன்றைய நாளின் தூக்கத்தையும், எடுத்துக்கொண்ட உணவையும் வைத்து பலத்தையும் பலவீனத்தையும் ஓரளவு கணிக்க முடியும். 115 கிலோ டெட்லிஃப்ட் தூக்க முடியாதவன் அப்படி ஒரு பதிவையே இட மாட்டான். ஆனால் மனிதர்களுக்கு யாரிடமாவது தங்களை நிரூபித்தே ஆக வேண்டும். குறிப்பாகத் தங்களை எதிர்ப்பவர்களிடம். இதுபோன்ற செயல் ஒருவகையில் குழந்தைத்தனமாக இருந்தாலும் மன உணர்வின் யதார்த்தத்தைக் கிண்டலுக்கு உள்ளாக்குவதால் ஒன்றுமே கிடைக்கப்போவதில்லை. அப்படியான ஓர் அக உணர்வைத்தான் பாரி 'எதிரி’யில் கதையாக மாற்றியிருக்கிறான்.
இந்தக் கதையை வாசித்தபோது யாருக்கு எந்த இரு நடிகர்கள் வேண்டுமானாலும் நினைவுக்கு வரலாம். நான் நினைத்துக்கொண்டது சிம்பு - தனுஷ். சிம்பு தன் மீட்சிக்குப் பிறகும் மேடைகளில் தனுஷை வம்பிழுப்பதற்குப் பின் இருப்பது காழ்ப்பு என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் என்னவாக இருக்க முடியும்? தனுஷே கால் மேல் கால் போட்டுக்கொண்டு அந்தப் பேச்சுகளை ஜாலியாக ரசித்துக்கொண்டிருந்தாலும் ஆச்சரியத்திற்கில்லை. சினிமாவில் அது ஒரு வியாபாரமும்கூட. சிம்பு இன்னும் எவ்வளவு ஞானமும் பெற்றாலும் நடிகனாக இருக்கும்வரை தனுஷை வம்பிழுக்காமல் இருக்கவே மாட்டார். சிம்பு நடிக்கவிருந்த ‘வட சென்னை’யில் தனுஷ் ராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணமும் அதுவாக இருக்க முடியும். எந்தக் காரணத்திற்காகவும் இருவருக்கிடையிலிருக்கும் So Called Rivalry அறுபட்டுவிடவே கூடாது.
எந்தளவுக்கு உண்மையெனத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு கதையைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ரஜினிக்கு ஒரு காலத்தில் சினிமா மீது ஆர்வமற்று போனார். அப்போது கமலிடம் சினிமாவிலிருந்து விலகப்போவதாகச் சொன்னபோது கமல், “நீ போயிட்டா என் பருப்பு வேகாது. போட்டி இருக்கிற வரைதான் சினிமால ஹீரோக்களுக்கு மௌசு’ என்றாராம். கமல் அப்படிச் சொல்லவில்லை என்றாலும் உண்மை அதுவே.
பிறந்தநாள் வாழ்த்துகள் பாரி. மிகச்சிறந்த ட்ரீட் கொடுத்தமைக்கு நன்றி.
Комментарии