ஆல்யா மெட்ரோ ரயிலில் உறங்கியபடி கனவு கண்டுகொண்டே வந்தாள். தானே சமைத்துக்கொள்ள வேண்டுமென்பதால் அதிகாலை சூரியனுக்கு முன்பே எழுந்துகொள்ள வேண்டியிருந்தது. பயணத்தில் சிறு தூக்கம் போட்டால் மட்டுமே அலுவலகத்தில் எட்டு மணி நேரம் விழிப்புடன் வேலை பார்க்க முடியும். சில சமயம் தெரிந்தவர்கள் யாரையாவது ரயிலில் பார்க்க நேரும். அல்லது அழகான நல்ல உடல்வாகுடைய ஆளை சைட் அடிக்க நேரும். தூக்கத்தையும் தியாகம் செய்து அச்செயல்களில் ஈடுபடுவாள். அதுபோன்ற நாட்களில் வழக்கத்திற்கு அதிகமாக காஃபி எடுத்துக்கொள்வாள்.
ஆல்யாவுக்குக் காஃபி என்றாள் அவ்வளவு பிடிக்கும். இரண்டு மணி நேரமே தூங்கியிருந்தாலும் காஃபியின் உதவியுடன் தெளிவாக விழிப்புடன் வேலை செய்ய முடியும். குறைந்த நேரம் உறங்கும் நாட்களில் தனது தூக்க நேரத்தைப் பெருமையுடன் நண்பர்களுடன் சொல்லிக்கொள்வாள். “எப்படிடீ நீ மட்டும் இவ்வளவு கம்மியா தூங்கி சுறுசுறுப்பா இருக்க?” என்று அவர்கள் கேட்பதில் ஓர் ஆனந்தம். தனது இயல்பே அதுதானென அவள் நினைத்துக்கொண்டிருக்கிறாள். வழக்கமாக ஒரு நாளைக்குக் குறைந்தது நான்கு காஃபி குடிப்பாள். நண்பர்கள் ஆச்சரியத்துடன் கேட்கும் கேள்விக்கு இப்படிப் பதிலளிப்பாள் :
“நம்ம என்ன ஒரு அறுவது எழுவது வயசு வரைக்கும் வாழுவோமா? ஒரு நாளைக்கு எட்டு பத்து மணி நேரம் தூங்கினா கிட்டத்தட்டப் பாதி வாழ்க்கை தூக்கத்திலேயே போச்சு. இருக்கிற கொஞ்ச நஞ்ச வாழ்க்கைய முழுசா வாழ்ந்துக்கணும். அப்புறம் தூங்கத்தானே போறோம்”
இதைச் சொன்னதும், ஒரு புத்தகம்கூடப் படித்திடாத சராசரி பெண்ணாக இருந்தும் மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவத்தைப் பேசிவிட்ட திருப்தி இருக்கும்.
ஆல்யா ஓரளவுக்கு அழகானவள். இளமையைக் காதலில் விழுந்து வீணாக்கிடக்கூடாது என்று நினைப்பவள். ஆண்களை டேட் செய்து வரும் அவள் ஒப்பந்தத்துடன் கூடிய காதலுறவில் இன்னும் அடியெடுத்து வைக்கவில்லை. இதில் பல நன்மைகளை உணர்ந்தாள். எதிர்பாலினத்தின்மீதான வேட்கையைத் தீர்த்துக்கொள்ளலாம். அதே சமயம் ‘சிங்கிள்’ என்று தம்பட்டம் அடித்துக்கொள்வதன்மூலம் கிடைக்கும் செக்ஷுவல் மார்க்கெட் மதிப்பைத் தக்கவைத்துக்கொள்ளலாம்.
அவள் டேட் செய்த ஓர் ஆண் செகாவின் ‘நாய்க்காரச் சீமாட்டி’ கதையைச் சொன்னபோது இவ்வாறு விளக்கினான் : “அவங்க காதல்ல ஏன் தெரியுமா பிரச்சனை? அந்தப் பெண் கதையோட தொடக்கத்துல தனியா நடந்து வந்தா. ஊரே அவளைப் பார்க்குது. ஹீரோவும் பார்க்கிறான். கல்யாணம் ஆன அந்தப் பெண் அன்னைக்குத் தனியா வராம கணவனோடு வந்திருந்தா யாருக்கும் எந்தப் பிரச்சனையுமில்லை” என்றான். ஆல்யாவுக்கு அந்தத் தனிமைதான் பிடித்திருந்தது. ஊரே அந்தக் கதாநாயகியைப் பார்ப்பதுதான் பிடித்திருந்தது. தனக்கும் அப்படியான பார்வைகள் கிடைக்க வேண்டுமெனத் துடித்தாள். அதற்கான தனிமையை, அதாவது ‘சிங்கிள்’ என்ற இந்த லேபிளைக் கையிலெடுத்தாள். அன்றிலிருந்து ஒப்பந்த உறவை ஒத்திப்போட்டுக்கொண்டே வந்தாள்.
பெண்கள் தனியாக இருக்கும் வரைதான் மார்க்கெட்; அதேபோல ஆண்கள் துணையுடன் இருந்தால் மட்டும்தான் மார்க்கெட். ஆல்யா டேட் செய்த பெரும்பாலானோர் இன்னொரு பெண்ணின் காதலர்கள். அவளுக்குத் துணையின்றி இருக்கும் ஆண்களைப் பிடிக்காது. இன்னொரு பெண்ணினை வென்றிருக்காதவனால் எப்படித் தன்னை வெல்ல முடியும்? அதேநேரம் மாற்றாளை மீறி அவனைத் தான் வசீகரித்துவிட்ட திருப்தி, அதில் ஒரு கிக்.
நீங்கள் நம்ப வேண்டும், ஆல்யா சராசரிதான். எந்தளவுக்கு எனில், கௌதம் வாசுதேவ் படமென்றால் பைத்தியமே பிடித்துவிடும். பதின்வயதில் அவர் படங்களைப் பார்க்கத் தொடங்கியதிலிருந்துதான் அதிகம் காஃபி பருகத் தொடங்கினாள்.
ஆல்யாவின் கனவு கலைந்தது. ஈக்காட்டுதாங்கல் நிறுத்தம் இன்னும் சர நேரத்தில் வர உள்ளதாக மெட்ரோ ரயிலில் அறிவிக்கப்பட்டது. பையை எடுத்துக்கொண்டு இறங்கினாள். மெட்ரோ நிறுத்தத்திலிருந்து ஷேர் ஆட்டோ பிடித்து அலுவலகத்தை அடைய வேண்டும். அந்தப் பத்து நிமிடங்களை வீணடிக்க விரும்பாத அவள் ஸ்பாடிஃபையில் பாடல்களை ஒலிக்கவிட்டாள். இரண்டு அனிருத் பாடல்களில் அலுவலகம் நெருங்கியது. இறங்குவதற்கு முன்பு பேகிலிருந்த சிறிய கண்ணாடியில் முகத்தைச் சரிபார்த்துக்கொண்டாள். பிறகு ஓட்டுநருக்குப் பதினைந்து ரூபாய் சில்லறையாகக் கொடுத்துவிட்டு அலுவலகத்திற்கு விரைந்தாள்.
“குட்மார்னிங் மேடம். ஆஃபிஸ்ல நீங்கதான் ட்ரெண்டிங்” என்று ஜூனியர் சிரித்துக்கொண்டே வரவேற்றான். சற்று திகைப்படைந்த அவள், கடந்த சில நாட்களில் அலுவலக வேலையில் ஏதாவது தவறு செய்திருக்கிறோமா என யோசித்தாள். நினைவுகூர முடியவில்லை. சக ஊழியர்கள் அவளை வித்தியாசமாகப் பார்ப்பது போன்ற உணர்வு. அதில் ஏளனம் இல்லை, வாழ்த்து இல்லை, ஜாக்கிரதையுணர்வுமில்லை. தான் எந்தத் தவறும் செய்திருக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டாள். தனக்கு ஏதேனும் ப்ரொபோசல்ஸ் வந்திருக்கிறதோ? ச்சை அற்பம்!
யோசனையுணர்வுடனே சீட்டுக்குச் சென்று கணினியை இயக்கினாள். “காலை வணக்கம் மகாராணியே” என்று பக்கத்துச் சீட்டிலிருக்கும் அவளது தோழி நக்கலாகச் சொன்னாள்.
“Can you stop this and tell me what’s happening?”
“ராத்திரியெல்லாம் ஃபோன் நோண்டிக்கொண்டிருக்கும் மகாராணி காலை ஃபேஸ்புக் பார்க்கவில்லையோ?”
“நேத்து ஈவ்னிங்ல இருந்து ஆன்லைன் வரல. மூவி டௌன்லோட் போடவும் டேட்டா தீர்ந்திருச்சு. ஏன், என்ன ஓடுது?” என்றாள் ஆல்யா.
“என்ன ஓடுதா? நீங்கதான் மேடம் ஓடுறீங்க”
“நானா?” என்று திடுக்கிட்ட அவள் உடனடியாக ஃபேஸ்புக்கைத் திறந்தாள். அதற்குள் தோழி தொடர்ந்தாள்.
“நீயா நானா ஷோல பேசிருப்பல்ல…”
“எது? ஏழு வருஷம் முன்னாடி பேசினதா?”
“அப்போ சோஷியல் மீடியா இந்தளவுக்கு பூம் ஆகலை, தப்பிச்சிக்கிட்ட; இப்போ மாட்டிக்கிட்ட” - தோழி பேசுவதைக் கேட்டுக்கொண்டே ஆல்யா ஃபேஸ்புக் பார்த்தாள். டைம்லைன் முழுவதும் அவள் பேசியது ட்ரெண்டாகிக்கொண்டிருந்தது.
‘ஆண்களுக்கு அழகு சிக்ஸ் பேக்தான். நேர்த்தியற்ற உடல் சோம்பலின் அறிகுறி. அப்படிப்பட்ட நேர்த்தியற்ற உடலையும், அந்த உடல் கொண்ட ஒருவனையும் தேர்ந்தெடுக்க மாட்டேன். நான் நெருங்கிப் பழகும், காதலிக்கும் அல்லது திருமணம் செய்யும் ஆணுக்கு நிச்சயம் சிக்ஸ் பேக் இருக்க வேண்டும். இது மிகை எதிர்பார்ப்பு அல்ல; ஆண்கள் எப்படி ஒரு பெண்ணுக்குப் பெரிய மார்பகம் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனரோ அதோ போன்றதுதான். பெரிய மார்பகம் வைத்திருக்கும் பெண்கள் உங்களுக்குப் பெண்களே இல்லையென்றால் தொப்பை வைத்திருக்கும் தடியர்களெல்லாம் ஆண்களே அல்ல. இதை என் பாலியல் தூண்டலாகவும் பார்க்கலாம் அல்லது உடல் அரசியலாகவும் பார்க்கலாம்’ - ஆல்யா பேசியது இதுதான்.
இந்தக் காணொளி அனைத்துச் சமூக வலைதளங்களிலும் பரவியது. பலரும் இதுகுறித்த கருத்துகளை முன்வைத்தனர். பெரும்பாலானோர் பகடி செய்தனர். அவளுக்கு ஏகப்பட்ட குறுஞ்செய்திகள் வந்திருந்தன. எதையுமே திறக்கவில்லை. திறந்த குறுஞ்செய்திகளுக்கும் பதிலளிக்கவில்லை. மனநிலையைப் பாதுகாக்கும் வகையில் இதையெல்லாம் தவிர்த்து வந்தாள். மனநிலை என்னவோ மோசமாகப் பாதித்திருந்தது. அலுவலகப் பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. எப்படியோ பிழைகளைச் சுட்டிக்காட்ட மேலதிகாரி ஒன்றிரண்டு நாட்களில் அழைத்து டோஸ் விடுவார். அவர் தொப்பை வைத்திருப்பவர் என்பதால் கொஞ்சம் கூடுதல் வன்மத்தைக்கூடக் கக்கக்கூடும். சரியான கக்!
இணையத்தில் பாதிப் பேர் ஆல்யா அப்படிப் பேசியதற்காகப் பாராட்டவும் செய்தனர். அவளுக்கு அது தேவைப்படவில்லை. பொலிட்டிகல் கரெக்ட்னஸ் பேசுபவர்களின் கருத்துகள் அவளுக்கொரு பொருட்டே அல்ல. அவர்களின் பாராட்டுகளை வைத்து நாய்ப்பீயைக்கூட வாரிப்போட முடியாது. தொலைக்காட்சியில் முகம் தோன்றினாலே பெருமை என நினைக்கும் அவளின் சொந்தக்காரக் கோஷ்டிகளும் பாராட்டினர். அவளுக்குத் தான் ஒரு பேசுபொருளாய் மாறியது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை.
ஏழு ஆண்டுகளுக்கு முன் பேசிய வார்த்தைகள் எளிய முறையில் ஆவணமாக்கப்பட்டதற்காக இணையத்தையும், தொழில்நுட்பத்தையும் வெறுத்தாள் ஆல்யா. அப்போதிருந்த பல நிலைப்பாடுகளிலிருந்து வெளியேறியிருந்தாலும் அதே எதிர்பார்ப்பு இப்போதும் ஆல்யாவுக்கு இருந்தது. அப்போதிருந்த அதே இளமையின் ஊற்றுதானே இப்போதும்! தன் ஆசையையும், எதிர்பார்ப்பையும் இப்போதிருக்கும் பக்குவத்தைக் கொண்டு வேறு வார்த்தைகளில் முன்வைத்திருக்கலாம் என்பதே அவளது ஆதங்கம். இளமையின் வேகத்தில் வார்த்தைகளைச் சரமாரியாக வீசியதை எண்ணி நொந்துபோனாள்.
எதிர்பார்த்ததுபோல மேலதிகாரியிடம் திட்டு வாங்கினாள். மோசமான மனநிலையிலிருந்து மீட்டுக்கொள்ள எத்தனித்தாள். மதிய உணவைக்கூட முழுமையாகச் சாப்பிட்டு முடிக்க முடியவில்லை. “இதை நெனச்சா நேத்துல இருந்து உர்ருனு இருக்க? அதான் ரெண்டு நாள்ல ‘பொன்னியின் செல்வன்’ ரிலீஸ் ஆகுதே. விடு எல்லோரும் மறந்திடுவாங்க. அடுத்த வாரம் எல்லாருக்கும் வரலாற்றுப் பைத்தியம் பிடிச்சிருக்கும். நீயெல்லாம் பெருசா தெரியமாட்ட” என்றாள் தோழி. ஆல்யாவுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
வீடு திரும்பி முகம் அலம்பிவிட்டு ஆடையைக்கூட மாற்றாமல் நேராக சோஃபாவில் சாய்ந்தாள். அவ்வளவு களைப்பு! காஃபி பருகுவதைத் தவிர்த்து வேறு ஏதாவது செய்து புத்துணர்ச்சியூட்டிக்கொள்ள வேண்டுமென இருந்தது. தவறிக்கூடச் சமூக வலைதளங்களுக்குச் செல்லக்கூடாதென முடிவெடுத்தாள். எதையாவது சாப்பிட வேண்டும் போல் இருந்தது. ஃப்ரிட்ஜைத் திறந்தால் சர்க்கரைப் பொருட்கள் எதுவுமே தின்னக் கிடைக்கவில்லை.
வேறு வழியில்லாமல் டிண்டரைத் திறந்து நான்கைந்து ஸ்வைப் செய்தாள். அதில் ஒருவன் சிக்ஸ் பேக்குடன் இருக்கும் சில புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தான். அவன் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லாததை உறுதிப்படுத்திக்கொண்டாள். இருப்பினும் அவளால் ஒரு தீர்மானத்திற்கு வர முடியவில்லை. இருவருக்கும் மேட்ச் ஆனது. குறுஞ்செய்திப் பெட்டியில் ஒருவரையொருவர் விசாரித்துக்கொண்டனர். டிண்டர் பயன்படுத்துவதன் நோக்கத்தைக் கேட்டறிந்துகொண்டனர். சந்திக்கும் தேதி மற்றும் இடத்தை உறுதி செய்துகொண்டனர். அவனே அழைத்துப் பேசினான்.
“ஹலோ, ஹம்ஸா பேசுறேன். சண்டே எனக்கு பாடி பில்டிங் காம்படீஷன் இருக்கு…” என்றான்.
“ஓ, சாட்டர்டே பிஸியா நீங்க?” என்றாள் ஆல்யா.
“ஃப்ரீதான். சண்டேதான் காம்படீஷன். உங்களுக்கு சாட்டர்டே மீட் ஓகேதானே?”
“ஓகேதான், இதுல என்ன இருக்கு? முந்தைய நாள்தானே மீட் பண்றோம்?”
“சரிதான். இருந்தாலும் கேட்டுக்கிட்டேன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான். சரியான லூசாக இருப்பான் போல. கடந்த இரண்டு நாட்களில் ‘நீயா நானா’ காணொளி குறித்துக் கேட்காத முதல் நபரிடம் உரையாடியதை எண்ணி ஆல்யா மகிழ்ச்சியடைந்தாள். சிக்ஸ் பேக் இருக்கும் ஒருவனைச் சந்திக்க இருப்பதை எண்ணி ஆர்வத்தில் பூரிப்படைந்தாள்.
சனிக்கிழமை மாலை எக்ஸ்பிரஸ் எவன்யூவில் சந்தித்துக்கொண்டனர். வானிலை மிதமாகக் காற்று வீசியபடி இருந்தது. அதுவே ஆர்வத்தைச் சற்று அதிகப்படுத்தியது. அவள் மாலின் வாசலில் காத்துக்கொண்டிருந்தாள். கறுப்பு நிற கார் உள்ளே நுழைந்ததைக் கண்டாள். அதை ஓட்டிக்கொண்டிருப்பது ஹம்ஸாதான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டாள். அவன் இவளைப் பார்க்கவில்லை. காரைப் பார்க்கிங்கில் விட்டு வாசலுக்கு வந்தான்.
அவள் எதிர்பார்த்தது போலவே அரைக் கை டீ-ஷர்ட் அணிந்திருந்தான். கழுத்தில் ஒரு செயின்; ப்ளாட்டினமாக இருக்க வேண்டும். காதில் கடுக்கன் தோடு; வெள்ளியாக இருக்க வேண்டும். கையில் ஒரு ப்ரேஸ்லெட்டும் கடாவும். சிறிய வயதாக இருந்தாலும் ஆள் பார்க்க மேஸ்குலினாக இருந்தான். ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ சரத்குமார் மாதிரி. கையில் ட்ரைசெப்ஸ் தெரிந்தது. பலம் வாய்ந்த கைகளைக் கோர்த்துக்கொள்ள எந்தச் சராசரி பெண்ணுக்குத்தான் ஆசை இருக்காது. ஆல்யாவும் அவ்வாறே செய்தாள். அந்தத் தொடுதல் ஹம்ஸாவைத் தடுமாறச் செய்யவில்லை. அவனுடைய தன்னம்பிக்கையில் சற்றும் சலனம் நிகழாதது ஆல்யாவுக்குப் பிடித்திருந்தது. இருவரும் சேர்ந்த பிரம்மாண்டமான மாலுக்குள் நுழைந்தனர். எந்தக் கேளிக்கையைத் தேர்ந்தெடுப்பதெனக் குழப்பத்திலேயே நடந்துகொண்டிருந்தனர்.
“How about a movie?” என்றாள் ஆல்யா.
“இன்னைக்கு வேண்டாம். நைட் லேட் ஆகிடும். மார்னிங் சீக்கிரம் எழுந்துக்கணும். I need to have some good sleep tonight to stay alert at the stage tomorrow”
“சரி, காஃபி ஷாப்?” என்ற ஆல்யா கேட்க ஹம்ஸா மீண்டும் யோசித்தான். இதுக்கும் எதுவும் சொல்லித் தொலையாத, இந்த மால்ல உட்கார்ந்து பேசுறதுக்கு மூவி, ஃபுட் கோர்ட், காஃபி ஷாப்பைவிட்டா வேற வழியில்ல” - ஹம்ஸா சிரித்தபடி ஒப்புக்கொண்டான்.
ஆல்யா மெனுவைப் பார்த்துத் தனக்கொரு கோல்ட் காஃபி ஆர்டர் செய்துகொண்டாள். ஹம்ஸா மெனுவைப் பார்த்துக்கொண்டு மட்டும் இருந்தான். அவனால் எதையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதற்குள் ஆல்யாவின் கோல்ட் காஃபி வந்திருந்தது.
“எனக்கு எதுவும் வேண்டாம்” என்றான் ஹம்ஸா.
“C’mon Man, Don’t create awkward situations in our first date”
“நான்தான் நேத்தே சொன்னேன்ல, நாளைக்கு காம்படீஷன்னு”
“அதுக்கும் இதுக்கும் என்னவாம்?”
“இங்க எல்லாமே காஃபியாத்தான் இருக்கு”
“காஃபி பிடிக்காதுன்னூ மட்டும் சொல்லிடாத”
“பிடிக்காதுன்னு இல்ல. குடிக்க மாட்டேன். அதுவும் சம்மர்லயும், ஈவ்னிங்லயும் தொடவே மாட்டேன்”
“அது என்ன சம்மர்லயும் ஈவ்னிங்லயும்? ஏன் நாங்கல்லாம் குடிக்கல”
“ஒரு கப் கெஃபீன் எடுத்துக்கிட்டாலே ஆறேழு மணி நேரத்திற்கு மெலட்டோனின் சுரக்காது. தூக்கம் வரதுக்கான ஹார்மோன். இப்போ காஃபி குடிச்சா கண்டிப்பா நைட் சீக்கிரம் தூங்க முடியாது. அதேபோல coffee makes you dehydrated. சம்மர்ல தொடவேகூடாது”
ஆல்யாவுக்குத் தூக்கி வாரிப்போட்டது. தன் வாழ்க்கைமுறையை சுயபரிசோதனைக்கு உட்படுத்தினாள். தூக்கங்களைக் கெடுத்ததே தான் மிகவும் நேசிக்கும் காஃபிதான் என்பதைப் புரிந்துகொண்டாள். இருப்பினும், ஹம்ஸாவின் வார்த்தைகளை முழுமையாக நம்ப மனம் ஏற்கவில்லை. எப்படி அவன் காஃபியைக் குறை சொல்லலாம்? அவன் சொன்னால் காஃபியை விட்டுவிட வேண்டுமா? குடிச்சா குடி குடிக்கலைன்னா போடா!
“இத நீ முன்னாடியே சொல்லிருந்தா நம்ம வேற ஏதாவது கடைக்குப் போயிருக்கலாம்ல” என்றாள்.
“மால்ல கிடைக்கிறது எல்லாமே ஜங்க் ஃபுட்தான். அதையெல்லாம் பேசி ஃபர்ஸ்ட் டேட்டை ஏன் ஸ்பாயில் பண்ணனும்னுதான் இங்கேயே வந்துட்டேன்”
“சரி அப்போ உனக்கு எது ஹெல்த்தி ஃபுட்?”
“முட்டை, ப்ரொக்கோலி, குக்ட் சிக்கன், மீன், பன்னீர், கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பச்சைப்பயிறு… சரி அதெல்லாம் விடு, என் ஸ்போர்ட்காக நான் இதெல்லாம் சாப்பிட்றேன். எல்லாருக்கும் இதுதான் ஹெல்த்தின்னுலாம் கிடையாது. நான் கறி நிறைய சாப்பிடுவேன். அதைவிட அன்ஹெல்த்தி ஃபுட் எதுவுமே கிடையாது. இந்த ப்ரொஃபெஷன்ல இல்லைன்னா நிம்மதியா வெஜிட்டேரியனா இருந்திருப்பேன். என்ன பண்றது, கறிலதான் ப்ரோட்டீன் அதிகம் இருக்கு”
“ஏன் கறி நல்லதில்லன்னு சொல்ற. எல்லாரையும்விட நீங்கதானே அதிகமா கறி சாப்பிடுவீங்க”
“எந்த Living Species-க்கு Trauma ஏற்பட்டாலும் அதோட ரத்தத்துல நிறைய கெட்ட அமிலங்கள் உண்டாகும். அதை நம்ம சாப்பிடும்போது நமக்கும் Trauma, Anxiety, Anger Issues, Moodswings வரும். Animal Farms-ல விலங்குகளுக்கு Trauma உண்டாக்கித்தானே சாகடிக்கிறாங்க. ஸ்போர்ட்மேன், அத்லீட்ஸ்-க்கு ஓகே. கறி சாப்பிடுற சாதாரண மனுஷங்கதான் பாவம்”
“உன்கூட டின்னர் சாப்பிடலாம்னு ஆசைய இருந்தே. மூடையே கெடுத்துட்ட”
“தப்பா எடுத்துக்காத, நான் டின்னர் சாப்ட்டுதான் உன்னப் பார்க்கவே வந்திருக்கேன்”
“வாட் தி ஃபக்?”
“ஆறு மணிக்கெல்லாம் டின்னர் முடிஞ்சிரும். ஹார்ஷா எடுத்துக்காத, மனுஷங்க சன்செட்டுக்குப் பிறகு எது சாப்பிட்டாலும் விஷம்தான்”
ஆல்யா இன்னும் அந்தக் காஃபி ஆச்சரியத்திலிருந்தே வெளிவரவில்லை. முதற்சந்திப்பில் வெறும் திகைப்பை மட்டுமே வெளிப்படுத்திப் பாழாக்கிவிட வேண்டாமென நினைத்தாள். முடிந்தவரையில் அந்த மாலையை அவனுடன் சேர்ந்து கொண்டாட நினைத்தாள். ஒன்று மட்டும் அவளுக்கு உறுதியாகத் தெரிந்தது. இவனைக் கல்யாணமெல்லாம் செய்துகொண்டு சமைத்துப் போடும் கொடுமையை அனுபவிக்க முடியாது.
“நீயே சொல்லு. உன் ஒழுக்க விதிப்படி இந்த ஈவ்னிங்கை எப்படி ஸ்பெண்ட் பண்ணலாம்?”
மாலிலிருந்த கேம்ஸ் செக்ஷனில் கிரிக்கெட் நெட்ஸில் ஆளு ஆறு பந்துகளைச் சந்தித்தனர். வெர்ச்சுவலாக பைக் ஓட்டி ஒருவரையொருவர் முட்டிக்கொண்டனர். நின்ற இடத்திலிருந்தே கூடைப்பந்து விளையாடி பரிசு பெற்றனர். இதுபோன்ற குழந்தைத்தனமான முதல் டேட்டை அவள் எதிர்கொண்டதில்லை. ஆல்யா அவ்வளவு சந்தோஷமாகவும் குதூகலமாகவும் இருந்தாள். நீண்ட நாட்களாக இல்லாமல் போன ஏதோவொன்று திருப்பிக் கிடைத்ததுபோல் இருந்தது. தன்னை அவ்வாறு உணர வைத்த ஹம்ஸாவை அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அவன் அறிவுள்ளவன்; அதைக்கொண்டு அவன் தன்னை வீழ்த்த முயலவில்லை, ஏளனப்படுத்தவில்லை. மிகுந்த மரியாதையுடனே நடத்தியிருக்கிறான். அவன் சொன்னதுபோல மாலை நான்கு மணிக்கு மேல் காஃபி குடிப்பதை நிறுத்திப் பார்க்க வேண்டும். முடிந்தால் கறி சாப்பிடுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். கறி மீது ஆசை இருந்தால் அதைக் கரைக்கும் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
அவனுடன் இன்னும் கொஞ்ச நேரம் இருக்க வேண்டும் போல் இருந்தது. இந்த மாலைப்பொழுதில் அது சாத்தியமில்லை. நேரம் ஆனது. அவன் தங்குமிடத்தைக் கேட்டறிந்துகொண்டாள்.
“வீடு காட்டாங்குளத்தூர்ல. அவ்வளவு தூரம் போய் வந்திட்டு இருக்க முடியாதுன்னு என் ஜிம்லயே தங்கிட்டு இருக்கேன். வீக்கெண்ட் மட்டும் வீட்டுக்குப் போவேன். ஜிம் வந்து பார்க்கிறீயா?” - அவனாக அழைக்க வேண்டுமென்றுதான் காத்திருந்தாள்.
ஜிம்முக்குச் சென்றிருந்தபோது மணி பத்தரை. கடைசி ஆள் உடற்பயிற்சியை முடித்துவிட்டு கிளம்பினான் ட்ரெயினரும் புறப்படத் தயாரானான். பத்து நிமிடங்களில் ஜிம்மே காலியாகிவிட்டது. ஆல்யா அங்கிருந்து ஒவ்வொரு மிஷினையும் முயன்று பார்த்தாள். ஜிம்மில் மாட்டப்பட்டிருந்த ஹம்ஸாவின் புகைப்படங்களை நோட்டமிட்டாள்.
“ஹம்ஸா, உன் சிக்ஸ் பேக்கைக் காட்றீயா?” என்று ஆல்யா கேட்டதும், அவன் வேறொரு அறைக்குச் சென்றான். பத்து நிமிடங்கள் கழித்து மேலாடையின்றி வந்தான். வயிற்றில் ஆறு கூழாங்கற்கள் வைத்திருப்பது போல் துல்லியமாக இருந்தது. ஒவ்வொன்றையும் தனது கைகளால் வருடிப்பார்த்தாள். தடவிக்கொண்டே பிரம்மாண்ட தேகம் கொண்ட ஹம்ஸாவை நிமிர்ந்து ஆசைப் பார்வை பார்த்தாள். இருவரும் முத்திக்கொண்டனர். அதே ஆசையில் அவள் அவனது ட்ராக்ஸை அவிழ்க முற்பட்டாள். ஹம்ஸா தடுத்துவிட்டுச் சொன்னான், “இப்போ வேண்டாம்”
“ஏன்னா நாளைக்கு பாடி பில்டிங் காம்படீஷன் இருக்கு” என்று சொல்லி அவனைக் கிண்டல் செய்தாள்.
“அதுனால ஒன்னும் இல்ல. I’m Weak right now”
“நீ வீக்கா? என்ன சார், தன்னடக்கமா?”
“உண்மையாத்தான் சொல்றேன். This is my weakest Phase. ஸ்டெராயிட்ஸ் எடுத்திருக்கேன்ல. நாளைக்கு ஸ்டேஜ்ல இதைவிட வீக்கா இருப்பேன். மயக்கம் போட்டு விழாம இருந்தா சரி. அதனால இன்னைக்கு வேண்டாம். அப்படியே பண்ணாலும் அது உனக்கு நல்லதில்ல”
“அப்போ எப்போ?”
“Next week for sure”
*
அடுத்த வாரம் மதியப்பொழுதில் உணவுத் திருவிழாவில் சந்தித்தனர். பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டுமென்று ஹம்ஸாவை வற்புறுத்தினாள் ஆல்யா. அவனோ ஒன்றிரண்டு முறை மறுத்துவிட்டுச் சாப்பிட்டான். இதுபோன்ற விஷயங்களில் அவர்களுக்குள் ஊடல்கள் உண்டாயின. பிரியாணி காரமாக இருந்ததால் ஒரு பாட்டில் தண்ணீர் குடித்தான். அந்த மாலைப்பொழுதில் அவர்கள் ஓயோவில் அறை புக் செய்தனர். எல்லாம் அவசர அவசரமாக நடந்தன. ஹம்ஸாவின் ஆடைகளைக் களைத்துவிட்டு அவன்மீது ஏறிப் புணரும்போது ஆல்யா திகைப்படைந்தாள்.
“டேய், என்னடா தொப்பை இருக்கு? சிக்ஸ் பேக் எங்க?” என்றாள்.
“பல்கிங் டயட்ல இருக்கேன்ல”
“என்ன எழவோ, அதுல இருந்தா சிக்ஸ் பேக் இருக்காதா”
“காலைல இருந்தது. நீதானே பிரியாணி சாப்டுன்னு தொல்ல பண்ண”
கண்றாவி! அதோடு ஆல்யாவுக்கு சிக்ஸ் பேக் ஆசையே போயிருந்தது. அவனிலிருந்து கீழிறங்கி அவனைப் புணர அனுமதித்தாள். எப்படித் திருப்தியடையாமல் இருந்திருப்பாள்!
Komentarze