வணக்கம் பாலு,
உங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். Related ஆகவும், Insightful ஆகவும் இருக்கிறது. நானும் சில கடின காலங்களைக் கடந்து வந்திருக்கிறேன். உங்களைப் போலவே செகாவை விரும்பிப் படிப்பவன். ஜெமோ, எஸ்.ரா போன்றவர்களையும் வாசிப்பேன். ‘உடலைப் பேணுதல்’ கட்டுரையை வாசித்ததிலிருந்து தினமும் உடற்பயிற்சியும், தியானமும் செய்கிறேன். திரைப்படங்கள் மீதான உங்கள் பார்வை நன்றாக இருக்கிறது. ‘நட்சத்திரம் நகர்கிறது’ பார்த்தீர்களா?
என் நண்பன் காஃப்காவையும், காமுவையும் படித்துவிட்டு இருத்தலியல் சிக்கலில் தவிக்கிறான். உடற்பயிற்சியையும், தியானத்தையும் அவனுக்கு வலியுறுத்தினேன். ஆன்மீகப் பயிற்சிகள் தனக்கு ஒத்து வராது என்றான். அப்போது உளவியல் தெரபி செய்துகொள் என்றேன். அது பழைய நினைவுகளைக் கிளறக்கூடியதாக இருக்கிறது என்று சொல்லி மறுத்திவிட்டான்.
இருத்தலியல் குறித்தும், அபத்தவாதம் குறித்தும் படிக்கும்போது வாழ்வில் வெற்றிடம் வந்துவிடுகிறது. டால்ஸ்டாய் படித்ததால் இருத்தலியல் சிக்கல் ஏற்படவில்லை என்று எழுதியிருந்தீர்கள். ஆனால் நாங்கள் தஸ்தயேவ்ஸ்கியை வாசிக்கும்போது நிஹிலசமும், காஃப்கா & காமுவை வாசிக்கும்போது இருத்தலியல் & அபத்தவாதமும் அறிமுகமானது. அவர்களின் எழுத்து அழுத்தத்தையே அளித்தன. நமது இருப்பே அபத்தம் எனப் புரிந்துகொள்ளத் துவங்கும்போது வாழத் தொடங்கிவிடுகிறோம். டால்ஸ்டாய் ஒரு ஞானி; அறத்தைப் போதிப்பவர். அது சரிதான். ஆனால் நாத்திகவாதிகள் அவர் புனிதப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இந்தக் குழப்பங்களிலிருந்து வெளிவர ஜென், பௌத்தம் போன்றவற்றை ஆர்வமாகப் படித்தேன். அவை வாழ்வின் ஒவ்வொரு கணங்களையும் ரசித்து வாழக் கற்பிக்கின்றன. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இருத்தலியல் சிக்கலிலிருந்து நீங்கள் எப்படி வெளியேறினீர்கள்? காமு, காஃப்கா, டால்ஸ்டாய், ஓஷோ பற்றிய உங்கள் கருத்து என்ன?
Nofap குறித்து எழுதியிருந்தீர்கள். நானும் உடற்பயிற்சி செய்யும் நாட்களில் கட்டுப்பாட்டுடன் இருப்பேன். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் சிங்கிள்தான்; இருப்பினும் எப்படி இதிலிருந்து வெளியேறுவது?
ராம்
*
ராம்,
காஃப்காவும், காமுவும் எனக்குப் பிடிக்காத எழுத்தாளர்கள். இருவரின் ஒன்றிரண்டு புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அவர்கள் மிகவும் சலிப்பை ஏற்படுத்துகின்றனர். பொதுவாக இருத்தலியல் சிக்கல் கொண்ட மனிதர்களிடமே என்னால் நெருங்கிப் பழக முடியாது. அப்படி இருக்கையில், நேரம் செலவிட்டு அதுகுறித்த புத்தகங்களை எப்படிப் படிக்க முடியும்? ஜான் பால் சாத்ரே எழுதிய ‘நாசியா’ நாவலை முப்பது பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. அவ்வளவுதான் எனக்கும் இருத்தலியல் சிக்கலுக்குமான தொடர்பு. உண்மையில் எனக்கு இருத்தலியல் சிக்கல் என்ற ஒன்றே வந்ததில்லை. இனி வரவும் போவதில்லை என்பதை அடித்துக்கூற முடியும். அதற்குக் காரணம் வாழ்க்கைமுறை.
இதே சமயத்தில் சென்ற ஆண்டுதான் நீங்கள் குறிப்பிட்ட அந்த கடின காலத்தில் நான் இருந்தேன். அது மழைக்காலம் என்பதால் என் உளக்கொந்தளிப்பு, இருத்தலியல் குறித்த விசாரணைக்கு உட்படுத்தியது. ஒன்றிரண்டு மாதங்கள் அதற்கான தீர்வையும் எட்டிவிட்டேன். ஜனவரி 2022ல் சமூக வலைதள செயலிகளை நீக்கிவிட்டு அருகிலிருந்து மனிதர்களுடன் உரையாடினேன். அன்றிலிருந்து இருத்தலியல் விசாரணை அவசியமற்றுப் போயிருந்தது. ஜான் பால் சாத்ரே காலத்தில் எப்படியெனத் தெரியவில்லை; இன்று ஒருவன் இருத்தலியல் சிக்கலால் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டான் என்றால், தான் சமூக ஊடகத்தின் அடிமை என்பதை இலக்கிய மொழியில் சொல்லிக் கொள்கிறானன்றி வேறெதுவுமில்லை.
இருத்தலியல் சிக்கல் மீது இவ்வளவு முரண் இருக்கும் எனக்குத் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்து பிடிக்காமலில்லை. அவரது கதைகளை ஒரு குறிப்பிட்ட தத்துவத்திற்கு அடியில் மட்டும் வைக்க முடியாது. காமுவின் ‘அந்நியன்’-ல் அம்மா மறைந்ததை மிகச்சாதாரணமாகக் கடந்துபோகும் அபத்தவாதத்தைத் தவிர வேறு எதுவும் எனக்கு Appeal ஆகவில்லை. தஸ்தயேவ்ஸியின் கதைகள் அப்படியல்ல. பெரும்பாலும் அவரது நாவலில் ‘கதை’ என்பது வெறும் சாக்குப்போக்கு. ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் சிவில் திருமணம் குறித்த உரையாடலை மறக்கவே முடியாது. ஒரு தமிழ் சினிமா ரசிகனிடம் அதைக் கொடுத்துப் படிக்கச் சொன்னால் அது அந்தக் கதைக்குத் தேவையில்லாத ஆணி என்று கடந்துவிடுவான். அதுபோன்ற உரையாடலை முன்வைக்கத்தான் தஸ்தயேவ்ஸ்கி புனைவையே தேர்ந்தெடுக்கிறார்.
அதேபோல் டால்ஸ்டாயை அறத்தைப் போதிப்பதாகச் சொல்லி நவீன வாசகனால் நிராகரிக்க முடியாது. அறத்தைப் போதித்தல் என்றால் சரி, தவறு என்று வகைப்படுத்துவது ஆகும். ‘திருமணத்தை மீறிய உறவு தவறு’ என்று கடுமையாகச் சொல்வது. டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனினா’ படித்த எத்தனையோ வாசகர்கள் அன்னாவை நேசித்திருக்கிறார்கள். டால்ஸ்டாய் அன்னாவை நேசித்தாரா என்பது இங்குப் பொருட்டே அல்ல. ‘அன்னா கரீனினா’ அல்லது ‘புத்துயிர்ப்பு’ படிக்கும் ஒருவன் உறவு குறித்து பல்வேறு விசாரணைகளுக்கு ஆளாவன். அப்படிப்பட்ட இலக்கியத்தை எழுதியிருக்கும் ஒருவரை எப்படி அறத்தைப் போதிப்பவர் என ஒதுக்க முடியும்? எனது ‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ நூலில் ‘உயிர்த்தெழுதல்’ சிறுகதை இடம்பெற்றிருக்கும். இப்போது யோசித்துப் பார்த்தால் டால்ஸ்டாய் அறத்தைப் போதிக்கும் எழுத்தாளர் அல்ல என்பதை நான் ஒரு சிறுகதையாகவே எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது.
தனிப்பட்ட முறையில் ஒன்றைச் சொல்கிறேன். கலையிலிருந்தும், இலக்கியத்திலிருந்தும் வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தேடாதீர்கள். உங்களுக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். அதைக் கலையும், இலக்கியமும் பேசுகிறதா என்பதை உற்றுநோக்குங்கள். அப்படித்தான் ‘முகமூடிகளின் பள்ளத்தாக்கு’ எனக்குப் பிடித்த நாவலானது. கலையில் வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருப்பவர்களும், கதாபாத்திரங்களில் தங்களைத் தேடிக்கொண்டிருப்பவர்களும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ரெனே போல நெருங்கிவிடவே கூடாத Red Flag-ஆக முடிவடைவார்கள்.
ஓஷோவை ஓரளவு படித்திருக்கிறேன். அவர் தற்போது இன்ஸ்டாகிராம் தத்துவஞானி ஆக்கப்பட்டுவிட்டார். ஓஷோவின் புத்தகத்தைப் படித்திருந்தால் தெரியும், ஒட்டுமொத்த புத்தகத்திலும் ஒரே விஷயத்தை வெவ்வேறு விதமாக எழுதி வைத்திருப்பார். அத்தனைக்குமான ஓர் ஆதர்ச வரியை மேற்கோள் காட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட ஒரே குழுவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தத்துவத்தைப் பயில்வதற்கு இதைவிட ஒரு முட்டாள்தனமான முறை இருக்க முடியாது. இணையத்தின் வாயிலாக மட்டுமே ஒருவன் தத்துவம் பயின்றாலோ அல்லது தத்துவப் பிரியனாக வெளிப்படுத்திக்கொண்டாலோ அவனைவிட Attention Seeker-ஆக யாராலும் இருக்க முடியாது.
Nofap குறித்து ஏற்கெனவே நிறைய எழுதியும் பேசியும் விட்டேன். இன்ஸ்டாகிராமில் pari_tamilselvan என்ற ஐடியில் சென்று பாருங்கள். சில காணொளிகள் கிடைக்கும். விரிவாக உரையாடியிருப்போம்.
‘நட்சத்திரம் நகர்கிறது’ பார்த்தேன். ‘அட்டக்கத்தி’க்குப் பிறகு ஜாலியான ரஞ்சித் படம். எனக்குப் பிடித்திருந்தது. ரஞ்சித் படங்கள் குறித்து இணையத்தில் நிகழும் உரையாடலில் பெரிதும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ பிடிக்கவில்லை; ஆனால் இணைய உலகமே புகழ்ந்து தள்ளியது. ‘கபாலி’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ படங்களை மிகவும் ரசித்தேன்; ஊரே திட்டித் தீர்க்கிறது. எனவேதான் இந்த முடிவு. ரஞ்சித் படங்களுக்கு மட்டுமல்ல; எந்தத் தமிழ்ப் படங்களுக்கும் Good/Bad ஆகியவற்றைத் தாண்டி பேசுவதற்கு ஒன்றுமில்லை என நினைக்கிறேன்.
Comentarios