டேட்டிங் செயலியில் அதிக அனுபவங்கள் கொண்ட நண்பன் ஒருவனைச் சந்தித்தேன். பங்குச்சந்தை பற்றி வியாபாரிகள் தீவிரமாக உரையாடுவதைப் போல அவனைப் பார்க்கும்போதெல்லாம் ‘டேட்டிங் மார்க்கெட் எப்படி இருக்கிறது?’ என்று கேட்டுத் தெரிந்துகொள்வேன். Bumble-ல் கடைசியாக ஐந்து வெவ்வேறு பெண்களுடன் Hook up செய்ததாகவும் அவர்களைப் பற்றியும் சொன்னான். ஐவருமே 19-23 வயதுடையோர்.
ஐந்து பேரிடமும் சொல்லி வைத்தார்போல் சில விஷயங்கள் ஒத்திருக்கின்றன. எல்லோருமே இவனிடம், “நான் வேறொரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன். ஓபன் ரிலேஷன்ஷிப் என்பதால் உன்னுடன் Hook up செய்ய வந்திருப்பதுகூட என் பாய்ஃப்ரெண்டுக்கு தெரியும். நீ என்மேல் எமோஷனலாக attach ஆகிவிடக்கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறேன்” என்றிருக்கின்றனர். ஐந்து பேருமே therapy எடுப்பவர்கள். அவர்களின் கைகளில் தற்கொலை முயன்றதற்கான வெட்டுக்காயங்களும், உடல்களில் காதலன் சிகிரெட்டால் சூடு வைத்த காயமோ அல்லது நகக்கீறல்களோ இருந்திருக்கின்றன. என்றும் அழியாத அந்தத் தழும்புகள் பைசாசத்தைப் போல அவர்களைத் துரத்துகின்றன.
“என் உடம்புல நிறைய Scars இருக்கும். உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லைல்ல. மேட்டர் பண்ணும்போது உனக்கு அதுனால Turn off எதுவும் ஆகிடாதே” என நான்கு பெண்கள் இதுபற்றி முன்கூட்டியே எச்சரித்துள்ளனர்.
ஒரேயொரு பெண் மட்டும் முன்கூட்டி எதுவும் சொல்லாமல் எல்லாம் முடிந்ததும், “நீ என் Scars பத்தி எதுவுமே கேட்கலை” என வினவியிருக்கிறாள். பெண்ணுடல் என்றாலே தழும்பிருப்பது சகஜமெனும் அளவுக்கு அவனுக்கு அந்நேரம் பழகிவிட்டிருக்கின்றது. “நான் கவனிக்கலை. சொல்லப்போனா எனக்கது ஒரு விஷயமாவே படல” என்று சொல்லியிருக்கிறான்.
அவள் இவனைக் கட்டியணைத்து, “அச்சோ. நீ ஏன் இவ்ளோ ஸ்வீட்டா இருக்கே” என மெச்சியிருக்கிறாள்.
“அய்யோ நான் அவ்ளோ ஸ்வீட்டாலாம் இல்ல. அந்தளவுக்கு காஜுல இருக்கேன். நீ உடனே எமோஷன்ஸை வளர்த்துக்காதே” எனப் பத்தடி தள்ளி நின்றிருக்கிறான்.
அண்ணா நகரிலுள்ள ஒரு ஜூஸ் கடையில் இதை அவன் சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில், இன்ஸ்டாகிராமில் டேட்டிங் ஐடியாஸ் பதிவிடும் ஒரு பிரபல இளம்பெண் இன்ஃப்ளுயன்ஸர் தன் காதலனுடன் வந்திருந்தாள். அவளைப் பார்த்ததும் “இன்னைக்குத்தான் இவளை Swipe right பண்ணேன்” என்றான் நண்பன்.
”ஸ்வைப் ரைட் பண்ணியா? அது அவளோட பாய்ஃப்ரெண்ட் இல்லையா?”
“பாய்ஃப்ரெண்ட்தான் போல… என்ன பண்றது? Bumble-ல இருக்காளே” என்றான். ஒரு கணம் அவளுடைய கைகளில் வெட்டுக்காயங்கள் ஏதேனும் இருக்கின்றனவா எனக் கூர்ந்து பார்த்தேன்.
அதன் பின் வேறொரு பெண்ணைத் தீவிரமாக டேட் செய்த அனுபவத்தைப் பகிர்ந்தான். அவளுக்கும் முன்னாள் காதலர்களுடன் அடி வாங்கிய, மிதி வாங்கிய அனுபவங்கள் ஏராளம். அப்பெண்ணின் அறையில் ஒரு நாள் முழுக்க இவன் தங்கியிருக்கிறான். அப்போது அவள் “வீட்டைக் கொஞ்சம் பெருக்கிடுடா. எனக்கு டயர்டா இருக்கு” எனக் கோரினாளாம். வீட்டைக் கூட்டும்போது, “அங்கே விட்டுட்டே பாரு” என ஒன்றிரண்டு பிழைகளைச் சுட்டிக்காட்டி, பிறகு பொறுமையிழந்து அவளே துடைப்பத்தை வாங்கி சுத்தமாகக் கூட்டினாள்.
“இந்த விஷயத்துல ஆம்பளைங்கதான் கடைசில ஜெய்க்கிறீங்கல்ல. வாழ்க்கை முழுக்க நீங்கெல்லாம் வீட்டைக் கூட்ட, துணி துவைக்க, சமைக்கல்லாம் கத்துக்கவே மாட்டிங்க. அப்படிக் கத்துக்கிட்டாலும் அரைகுறையாத்தான் கத்துப்பீங்க. உங்களைப் பார்த்துக் கடுப்பாகி பொண்ணுங்க நாங்கத்தான் கடைசீல அந்த வேலையைச் செய்ய வேண்டியிருக்கு. இதெல்லாம் எப்போ மாறித் தொலையுமோ” எனப் புலம்பியிருக்கிறாள்.
”இங்கே பார். நீ பெருக்கச் சொன்ன உடனே மறுபேச்சு பேசாம தொடப்பத்தை எடுத்துக் கூட்ட ஆரம்பிச்சேன். Human error-ங்கிறது சகஜம்தான். அதுவும் பெருக்கிற விஷயத்துல ஆம்பளைங்களுக்கு அதிகமாவே நடக்கிறதுதான். ஏன்னா நீ இத்தனை வருஷமா வீட்டைக் கூட்டிப் பழகிட்டே. நான் இப்போதான் பழகுறேன். தப்புப் பண்ணா சொல்லிக் கொடு. திருத்திக்கிறேன். எங்கிட்டே பேசுனதையெல்லாம் உன் எக்ஸ் பாய்ஃப்ரெண்ட்கிட்ட பேச முடியுமா உன்னாலே? பளார்னு செவுல்லயே ஒன்னு வைக்க மாட்டான்? ஏன்னா அவன் Bad boy. அப்படிப்பட்டவனுங்களுக்கு மட்டும் வாய் பேசாம விழுந்து விழுந்து நீங்க வேலை செய்வீங்க. என்னை மாதிரி ஒரு ஃபெமினிஸ்ட் பையன் கிடைச்சா தலமேல ஏறி மொளகா அரைப்பீங்க. ஏன்னா நாங்கதானே பதிலுக்கு எதுவும் பேசாம வாய மூடி கேட்டுட்டு இருப்போம். உனக்கு ஆண் சமூகத்து மேல, Patriarchy மேல இருக்கிற கோபம்லாம் எனக்குப் புரியுது. நியாயமும்கூட. அதையெல்லாம் ஏன் என்னை மாதிரி ஒரு தனி மனுஷன்கிட்ட கொண்டு வந்து காட்டிக்கிட்டு இருக்கே. உனக்கு அவ்ளோ தைரியம் இருந்தா உன் உடம்பையெல்லாம் கீறி வெச்சிருக்கான் பாரு. அவன்கிட்ட காட்டு” எனப் பேசிவிட்டு வந்திருக்கிறான்.
இவற்றையெல்லாம் அவன் சொல்லும்போது ஒரு வாலிபன் தான் சுகித்த யுவதிகளைப் பற்றிச் சொல்லும்போது உண்டாகும் கிளர்ச்சி கேட்பவனாகிய எனக்குத் துளியுமில்லை. மனநல மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளின் கேஸ் ஹிஸ்டரியைச் சொல்வது போல இருந்தது. எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் உயிரோடு இருந்திருந்தால் இவர்களையெல்லாம் நிச்சயம் எழுதியிருப்பார். போகன் சங்கர் அண்மையில் எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது.
‘பணம் இருந்தாலும்
சோகமாகத்தான்
இருக்கப்போகிறோம்.
இருந்தாலும்
ஒரு உயர்தர விஸ்கிப்பாட்டிலுடன்
சோகமாய் இருப்பது பற்றி
உனக்குத் தெரியாது’
அந்த ஆறு பெண்களுமே இரவு கனவில் வந்து ‘காதலன் தந்த காயத்தைத் தாபத்துடன் வருடிக்கொண்டிருக்கும் சுகம் பற்றி உனக்குத் தெரியாது’ என்றார்கள். அவர்களிடம் நேச மித்ரனின் ஒரு கவிதையைக் கேள்வியாய்க் கேட்டேன்.
Comments