top of page
Search
Writer's pictureBalu

நன்றியுணர்வுக் குறிப்பு

The Importance and benefits of Gratitude Journaling

*

இதுகுறித்து விரிவாக எழுதச் சொல்லி சஞ்சய் கேட்டதால் எழுதுகிறேன்.

2023 தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு நாள் காலையிலும் தொடர்ந்து நான் நன்றியுணர்வை வெளிப்படுத்துவது பற்றி எழுதி வருகிறேன். மாதத்தின் இறுதி நாளில் அவற்றைப் பொதுவில் பதிவிடுகிறேன். இதைப் பின்பற்றுபவருக்கு சில நிபந்தனைகள் உண்டு. Gratitude Journaling குறிப்புகளை யாருக்கும் படிக்கக் கொடுக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை. பொதுவில் பதிவிடுவதும் பதிவிடாததும் எழுதுபவரின் தனிப்பட்ட விருப்பம். இது வாசகர்களுக்காக எழுதப்படுவது அல்ல; எழுதுபவரின் மனநிலை மேம்படும் நோக்கத்துடன் எழுதப்படுவதாகும்.

இவற்றைக் காலை எழுந்தவுடன் செய்வதற்கு என்னிடம் தனிப்பட்ட காரணம் இருக்கிறது. கண் விழித்த முதற்கணமே நன்றியுணர்வை வெளிப்படுத்தும்போது அது அந்நாளுக்கான புத்துணர்ச்சியை அளிக்கும். மனம் நிறைந்த தொடக்கம் இயல்பாக அமையும். அதன் தொடர்ச்சி நமது ஒவ்வொரு சொற்களிலும் செயல்களிலும் காணப்படும்.

“Gratitude Journaling குறிப்புகளைப் பகலில் எழுதினால் நாளின் நல்ல தொடக்கமாக அமையும். நிம்மதியான தூக்கத்தின் பொருட்டு இரவில் எழுதிப் பழகலாம். மதியம் உணவு இடைவேளைப் பொழுதில் எழுதுவதிலும் எந்தப் பிரச்சனையும் இல்லை. எப்போது எழுதுகிறோம் என்பதைவிட எழுதுகிறோமா என்பதே முக்கியம்” என்கிறார் நரம்பியல் நிபுணர் ஆண்ட்ரிவ் ஹியூபர்மன்.

என்னைப் போல் இதைத் தினமும் எழுதுபவர்கள் உண்டு; வாரத்திற்கு மூன்று நாட்கள் எழுதுபவர்களும் உண்டு. வாரத்திற்கு ஒருமுறை எழுதினாலும் தவறில்லை. ஆனால் தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பயின்றால் மட்டுமே இதன் தாக்கத்தை முழு அளவில் உணர முடியும். 2023 முழுவதும் இதை எழுத திட்டமிட்டிருக்கிறேன். அடுத்த ஆண்டு வேறு ஒரு புதிய முயற்சிக்குச் சென்றுவிடுவேன்.

Gratitude Journaling குறிப்புகளை எழுதுவதில் பலருக்கும் பலவிதமான சந்தேகங்களும் குழப்பங்களும் இருப்பதை அறிய முடிகிறது. என் அனுபவத்திலிருந்தும், இதுகுறித்து ஆராய்ந்ததையும் எழுதி நண்பர்களின் தயக்கத்தை உடைக்க முயல்கிறேன்.

என் அனுபவம்

ஒரு பழக்கம் ஏற்பட சுமார் 3 வாரங்கள் ஆகும் என்ற அடிப்படையில் நன்றியுணர்வை வெளிப்படுத்துவது எனது பழக்கமாகிப் போனது. காலை கண் விழித்த முதற்கணம் இன்றைய நன்றியுணர்வு யாருக்காக என்று யோசிக்கத் தொடங்கி, தூக்கத்தில்கூட இதன் சிந்தனை வரத் தொடங்கியது. சில சமயம் கனவிலும். பிரக்ஞையில் மட்டுமின்றி ஆழ்மனமும் நன்றியுணர்வுக்குப் பழக்கப்பட்டுவிட்டது.

இப்பழக்கத்தால் முந்தைய நாள் மொத்தத்தையும் மனதில் தொகுத்துக்கொள்ள முடிகிறது. ஒரு நாளினை எவ்வளவில் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறேன் என்பது கூடுதலாகக் கிட்டிய பலன். முந்தைய நாள் பாழாக்கப்பட்டிருந்தால் உடனடியாக அதுகுறித்த விழிப்பு மூளைக்கு எட்டும். அன்றாடத்தின் அனைத்துத் தகவல்களும் ஒவ்வொரு நாளும் மூளைக்குச் செல்வதால் தொடர்ச்சியான ஒரு காலத்தை வீணடிப்பதற்கான வாய்ப்பு துளியும் இல்லை. ஒருநாள் பாழாகியிருந்தாலும் அடுத்த நாளே அதிலிருந்து மீண்டு பயனுள்ள வகையில் மாற்றியமைக்கும் சாமர்த்தியத்தை அறிவேன்.

கவனத்தைக் கூர்மையாக்கும் தியானத்தின் பணியை, நன்றியுணர்வுக் குறிப்பும் செய்கிறது. நல்ல கணம் நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே, ‘இக்கணத்திற்கோ அந்நபருக்கோ கடமைப்பட்டிருக்கிறோம்’ என்ற எண்ணம் எழுகிறது. சுற்றியிருக்கும் மனிதர்களை அணுகும் விதம் மேன்மேலும் உயர்கிறது. கற்பனையில், சிந்தையில், சொற்களிலும் சுத்தம் கூடியுள்ளது.

2021 எனக்கு மோசமான ஆண்டு என்பதைப் பலமுறை பதிவு செய்திருக்கிறேன். அந்த ஆண்டின் ஒவ்வொரு நாளும் இல்லாதவற்றின் எதிர்மறை எண்ணங்கள் சார்ந்தே எனது மூளை செயல்பட்டது. என்னை நானே எண்ணி வெட்கிக் கூசிய காலம் அது. என்னிடம் இல்லாதவற்றை எண்ணிப் புலம்பியதைத் தவிர எதையும் உருப்படியாகச் செய்ததில்லை. நல்லவேளையாக அந்தப் புலம்பலைப் பொதுவெளியில் வைக்கவில்லை. நாட்குறிப்பில் அதற்கான சாயலைக் கண்டாலும் மொழிக்கு அதை மழுங்கடிக்கக்கூடிய திறன் உள்ளது. அதனால்தான் துயரில் வாடும் மனிதரைவிடத் துயரை எழுதும் எழுத்தாளன் நல்ல ஆளுமையாகத் தெரிகிறான். எனது புலம்பலால் முன்னாள் காதலி அதிகமாகவே பாதிக்கப்பட்டாள். எங்கள் காதல் முறிந்ததற்கு அதுவும் ஒரு காரணம் எனலாம்.

நன்றியுணர்வுக் குறிப்பு எழுதத் தொடங்கினால் புலம்பலுக்கு இடமில்லை. நேர்மறையான சிந்தனைகளுக்கு மட்டுமே மூளை பழகிவிடும் என்பதால் இது நமக்கு மட்டுமல்லாது நம்மைச் சுற்றியிருப்போருக்கும் பயனளிக்கும்.

மேலும் தேதியிட்டு வரிசையாக எழுதி வருவதன்மூலம், என்றேனும் ஒருநாள் வாழ்வில் நிகழ்ந்த நல்ல விஷயங்களைத் தொகுத்துக் காண வசதியாக இருக்கும். குறிப்பாகத் துன்பம் நேரும் நாட்களில் இக்குறிப்புகளைத் திறந்து படித்துப் பார்த்துக்கொள்வது அவசியம். அச்சமயத்தில் நமது சொற்கள் மட்டுமே தோளை இறுக்கிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விடக்கூடியதாக இருக்கும். அந்தப் பட்டியலுக்கு முன்பு, நேர்ந்த துயரங்கள் யாவும் பொருட்டே அல்ல.

நன்மைகள்

- மன அழுத்தத்தைக் குறைக்கும்.
- வாழ்க்கைப் பார்வை மாறக்கூடிய சாத்தியம் அதிகமாகவே உள்ளது. உண்மையில் நம் வாழ்க்கையில் எது முக்கியம் என்ற தெளிவு பிறக்கும்.
- சுயம், சுய விருப்பம், ரசனை ஆகியவற்றை அறிந்து தொகுத்துக்கொள்ள முடியும்.
- சிறிய இன்பங்களையும் உற்று நோக்கி மதிக்கக் கற்றுத் தரும்.
- மனிதர்களின் நன்மதிப்பைப் பெற்றுத் தரும்.

செய்யக்கூடியவை

- தொழில்நுட்ப சாதனங்களில் எழுதலாமா அல்லது காகிதத் தாளில் எழுதலாமா என்ற கேள்வி சிலருக்கு உண்டு. நான் தொழில்நுட்ப சாதனங்களில் எழுதினாலும் அழகியல் வடிவம் கொண்ட ஒரு டயரியில் எழுதவே பரிந்துரைப்பேன். பேனாவால் பொறுமையாக எழுதும்போது நீண்ட நேரம் நன்றியுணர்ச்சியில் திளைக்கலாம்.

- மேலோட்டமாக எழுதுவதைவிட ஆழமாகக் குறிப்பிட்டுச் சொல்லலாம். உதாரணம், I’m Grateful for Sam என்று எழுதுவதைவிட I’m Grateful that Sam cooked me a Breakfast என்று எழுதலாம்.

- “ஆண்கள் அதிகம் பொருட்களில் கவனம் செலுத்துவார்கள். பெண்கள் அதிகம் மனிதர்களில் கவனம் செலுத்துவார்கள். எனவேதான் பொறியியல் துறையில் ஆண்கள் அதிகமாகவும், மருத்துவத்துறையில் பெண்கள் அதிகமாகவும் பணியாற்றுகின்றனர்” என்பார் பேராசிரியர் ஜோர்டன் பீட்டர்சன். ஆக, ஆண்கள் நன்றியுணர்வுக் குறிப்பு எழுதும்போது பொருட்களை அதிகம் குறிப்பிடுவதற்கு வாய்ப்புண்டு. அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு முடிந்தவரையில் மனிதர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். 3 நாட்கள் மனிதர்களுக்கும், ஒருநாள் பொருட்களுக்கும் நன்றியுணர்வைச் செலுத்திப் பழகலாம்.

- Hard Times create Strong Men. எனவே வாழ்வில் நிகழ்ந்த மோசமான தருணங்களுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்தத் தவறவே கூடாது. நான் 2021ம் ஆண்டை நினைக்காதே நாளே இல்லை. ஒவ்வொரு முறை உயரும்போது பின் திரும்பிப் பார்த்துக்கொள்வேன்.

செய்யக்கூடாதவை

- Gratitude Journaling எழுதும் முன் தனிப்பட்ட விருப்பங்களை அகற்றத் தெரிந்திருக்க வேண்டும். விருப்பத்தைத் தாண்டி நமக்கு நன்மை, தீமை அளிக்கக்கூடியவற்றைப் பற்றிய அடிப்படை அறிவு இருப்பது அவசியம். I’m Grateful for the Porn I watched last day, I’m Grateful for the chocolate Milkshake I had, I’m Grateful for my late nights, I’m Grateful for Biryani என்று எழுதும் முட்டாள்தனத்தைச் செய்யக்கூடாது.

- கட்டாயத்தின் பேரில் எழுதக்கூடாது. முந்தைய நாளினை, வாரத்தை அல்லது தற்போதைய மனநிலையைக் கூர்ந்து கவனித்து எழுத வேண்டும். நன்றியுணர்வுக்குக்கூட விசுவாசமாக இல்லாவிட்டால் எப்படி?

- அவசர அவசரமாக எழுதுதல் கூடாது. பொறுமையாக எழுத வேண்டும். முடிந்தால் அதுகுறித்த பத்தியைப் பொறுமையாக எழுதிப் பார்க்கலாம். மொழி வளரும்.

- கடமைக்காக எழுதக்கூடாது. எழுத்தில் வெளிப்படுத்தும் நன்றியுணர்வை முதலில் மனதில் உணர வேண்டும். எழுதிய விஷயத்தை மீண்டும் எழுதக்கூடாது.

ஆய்வுகள்

- 2012ம் ஆண்டில் நன்றியுணர்வுக் குறிப்பு எழுதிய விவாகரத்தான தம்பதிகளை வைத்து எடுக்கப்பட்ட ஆய்வில், அவர்கள் தங்கள் துணையை மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொண்டது தெரியவந்தது. இதன்மூலம் Single Parenting பிரச்சனைக்குத் தீர்வு காண முடிந்ததாகக் கூறப்படுகிறது.

- 2017ம் ஆண்டில் தொடர்ச்சியாக 3 மாதங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்துவோரை வைத்து எடுக்கப்பட்ட ஆய்வில், அவர்களது ஆளுமையில் முன்னேற்றம் காணப்பட்டதாகவும், மனச்சோர்வு (Depression) நீங்கியதாகவும் கூறப்படுகிறது.

- 2017ம் ஆண்டில் தொடர்ச்சியாக 3 வாரங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் துருக்கியைச் சேர்ந்த ஒருவரை வைத்து எடுக்கப்பட்ட ஆய்வில், அவரது கல்வியில் முன்னேற்றம் காணப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இறுதிக்குறிப்பு

நவீனக் காலத்தில் மகிழ்ச்சியின்மையைக் குறைகூறிப் புலம்புபவர்களைப் பார்க்க முடிகிறது. “மகிழ்ச்சிக்காக நீங்கள் என்ன முயற்சியை மேற்கொண்டீர்கள்?” என்று ஒவ்வொரு முறையும் அவர்களிடம் கேட்கத் தோன்றும். ஓஷோ போன்ற ஞானி சொல்வதும், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர் சொல்வதும், ஆண்ட்ரிவ் ஹியூபர்மன் போன்ற நரம்பியல் நிபுணர் சொல்வதும் ஒரே விஷயத்தைத்தான். மகிழ்ச்சி எளிதில் கிடைக்காது; அதற்கு நாம் சில பயிற்சிகள் எடுக்க வேண்டும். அதில் ஒரு வகைதான் Gratitude Journaling. மனிதர்கள், திறமைகள், பழக்கவழக்கங்கள், உடல் அங்கங்கள், நகரங்கள், பொருட்கள், இசை, இயற்கை, உணவு, கடிதங்கள் என இயல்பாகவே பலவற்றுக்கு நாம் கடமைப்பட்டவர்களாகவே இருக்கும்பட்சத்தில் அதைக் கண்டறிவது மட்டுமே விடுபட்ட பணியாக இருக்கிறது.



54 views0 comments

Recent Posts

See All

2022

Comments


Post: Blog2_Post
bottom of page