top of page
Search
Writer's pictureBalu

I'm Grateful for April

April 1 - I’m Grateful that my brain is getting rewired

கெட்ட பழக்கம் எனச் சொல்லப்படும் எவற்றிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டதில்லை. எனக்கிருந்த ஒரே அடிமைத்தனம் ஆபாசப் படங்கள். ஒரே முடிவில் மிக எளிதாக அதிலிருந்து வெளிவந்துவிட முடிந்ததால் அது உண்மையில் அடிமைத்தனம்தானா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது? நினைத்தவுடனே கைவிட்டுவிட முடிகிறதெனில் அது என் கட்டுப்பாட்டில்தானே இருந்திருக்கிறது! நான் அதன் கட்டுப்பாட்டில் இல்லையே! அதன்பிறகு நான் அடிமையாகியிருப்பது ஆபாசங்களுக்கு அல்ல; சுய இன்பத்திற்கு என்பதாக நினைத்தேன். இரு மண்டலங்கள் அதிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டுமென்ற எனது இலக்கு தோல்வியடைந்துகொண்டே வந்தது. அரை ஆண்டு போராட்டங்களுக்குப் பிறகே அதை வெல்ல முடிந்தது. ஆனால் ஒருவர் சுய இன்பத்திற்கு அடிமையாக முடியுமா? அது வெறும் பசிதானே? 3 வேளை சோற்றுக்கு அடிமையாக இருக்கிறேன் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அப்படித்தானே இதுவும்? அடிப்படைகள் எப்படி அடிமைத்தனம் ஆகும் என்ற கேள்வியும் என்னை அலைக்கழித்தது.

நரம்பியல் நிபுணர் ஆண்ட்ரிவ் ஹியூபர்மன் பாட்கேஸ்ட் கேட்ட பிறகுதான் உண்மையில் நான் அடிமையாக இருந்தது தூண்டுதலுக்கு எனத் தெரிந்தது. பசி இயற்கையாக வந்ததால்தான் அது அடிப்படை. கட்டாயத்தின் பேரில் வந்தால் அடிமைத்தனம். காம எண்ணமே இல்லாத நாட்களிலும் தூண்டுதலுக்காகக் காத்திருந்ததே எனக்கிருந்த பிரச்சனை ஆகும். இப்போது எல்லாமே என் கட்டுப்பாட்டில் உள்ளன.

என் மனதில் சுற்றிக்கொண்டிருந்த பாம்புகளைப் பற்றி 2021 நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறேன். அந்தப் பாம்புகள் இப்போது பட்டாம்பூச்சியாக மாறி வருகின்றன. ஆபாசப் படங்களைக் கைவிட்ட ஓராண்டுக்குப் பிறகு அதன் தாக்கம் மட்டும் மூளையில் எஞ்சியிருந்தது. ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட இவ்வேளையில் பல மாற்றங்களைக் கவனிக்க முடிகிறது. நானே நினைத்தாலும் பழைய சாக்கடைக்குள் செல்ல முடியாது.

April 2 - I’m Grateful for Libinesh

ஜிம்மில் யாருடனாவது பழக்கம் ஏற்பட்டால், அவர்கள் அதிகம் சமூக வலைதளத்தை நுகர்வோராக இருந்தால் “ஆண்ட்ரிவ் டேட், ஹம்சாலாம் தெரியுமா?” என்று கேட்டிருக்கிறேன். பலருக்கு இவர்களைத் தெரியாததால் கேட்பதை நிறுத்தினேன். என்னிடம் இவர்களைத் தெரியுமா என்று கேட்ட முதல் ஜிம் மேட் லிபினேஷ். சுய முன்னேற்றத்தைப் பற்றி அவனுடன் நிறையப் பேசினேன்.

April 3 - I’m Grateful for the wealth I don’t see

‘The Psychology of Money’ புத்தகத்தை வாசித்து முடித்தேன். பணக்காரனாக இருப்பதற்கும் பணமுடையவனாக இருப்பதற்குமான வித்தியாசத்தைப் புரிந்துகொண்டேன். நம் உளவியல் பணத்துடன் எப்படித் தொடர்புப்பட்டிருக்கிறது என்பதை விளக்கும் நூல். மினிமலிசம் வாழ்க்கைமுறை இதில் மறைமுகமாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

April 4 - I’m grateful for my on & off work days
April 5 - I’m Grateful for my interest towards Literature

இம்மாதத்தில் மட்டும் 6 புத்தகங்கள் வாங்கினேன். மொத்த விலை ரூ.2,000. ஒரு காலத்தில் சென்னை புத்தகக் காட்சிக்கே ஒட்டுமொத்தமாக இவ்வளவுதான் செலவழித்துள்ளேன். இப்போது புத்தகக் காட்சிக்குச் செல்ல வேண்டுமானால் குறைந்தது ரூ.5000 இல்லாமல் அந்தப் பக்கமே செல்ல முடியாது. அதேபோல் முன்பெல்லாம் ரூ.2000க்கு 8 முதல் 10 புத்தகங்கள் வரை தோராயமாக வாங்கலாம். இப்போது அது சாத்தியமே இல்லை. தள்ளுபடி காலத்திற்குக் காத்திருந்து வாங்கினாலே 6 புத்தகங்கள்தான் வருகின்றன.

புத்தகங்களின் விலையும் கூடிவிட்டன. முன்பு ஒரு பக்கத்தின் சராசரி விலை ரு.1 என இருக்கும். இப்போது அது ஒன்றரை ரூபாயாக மாறியிருக்கிறது. அதாவது 500 பக்க புத்தகத்தின் விலை ரூ.500 ஆக இருந்தது இப்போது ரூ.650க்கும் மேல் ஏறிவிட்டது.
இதையெல்லாம் தாண்டி 10 புத்தகங்கள் வாங்கிப் படித்தால் அதில் 2 அல்லது 3 புத்தகங்கள் மட்டுமே பிடிக்கின்றன. மீதமுள்ள நூல்களை செகண்ட் ஹேண்டில் விற்றுவிடுகிறேன். எனக்கு இப்படி ஒரு வழி இருப்பதால் புத்தகங்களின் மீது பந்தயம் வைக்கிறேன். செகண்ட் ஹேண்ட் விற்பனைக்கான வழி தெரியாத பலருக்கு பிடிக்காத புத்தகத்தின் செலவு நட்டம்தான். இதனால்தான் பலர் இலக்கிய வாசிப்பிலிருந்து வெளியே செல்கின்றனர் என நினைக்கிறேன். சென்னை புத்தகக் காட்சியில் விற்பனை குறைந்ததற்கும் இதுவே காரணமாக இருக்க வேண்டும். அதாவது கடந்தாண்டு வாங்கிய புத்தகங்கள் (படித்தவர்களுக்கு மட்டும் பொருந்தும்) தங்களை கவராதபட்சத்தில் வாசகர்கள் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்கின்றனர். ஆனால் பல பதிப்பகர்கள், “தமிழ்நாடு முழுவதும் புத்தகக் காட்சிகள் வந்துவிட்டதால் சென்னை புத்தகக் காட்சியில் விற்பனை குறைவாகவே இருக்கிறது” என்று ஆறுதல் சொல்லிக் கொள்கின்றனர். விற்பனை குறைந்ததற்கு வெளியூர் வாசகர்களின் இன்மை மட்டும்தான் காரணமா என்ன? 2022 சென்னை புத்தகக் காட்சியில் நான் ரூ.8,000க்கு புத்தகங்கள் வாங்கினேன். வாங்கிய அனைத்துப் புத்தகங்களையும் வாசித்துவிட்டேன். இந்தாண்டு ரூ.4000க்கு மட்டுமே புத்தகங்கள் வாங்கினேன். இது எனது நிலவரம் மட்டுமல்ல; ஒவ்வோர் ஆண்டும் என்னுடன் புத்தகங்கள் வாங்க வரும் எல்லா நண்பர்களின் நிலவரமும் இதுவே. என்னைச் சுற்றியுள்ள அனைவருமே 50% குறைவாகவே புத்தகங்கள் வாங்கியுள்ளனர்.

ஆனால் இதை நியாயப்படுத்தவும் மாட்டேன். ஒரு நடிகரின் படத்திற்கு முதல் காட்சி பார்க்க ரூ.1,500 செலவழிக்கின்றனர். வெறும் 3 மணி நேரம் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு ரூ.5,000 செலவழிக்கின்றனர். நான் இன்றைய ஐபிஎல் போட்டியை நேரில் கண்டிருக்கிறேன் என்பதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டால் அவனது கௌரவம் கூடுவதாக நம்புகிறான். இதே கௌரவம், ‘நான் சாருவின் ‘அன்பு’ நாவலைப் படித்துவிட்டேன்’ என்று சொல்லிக் கொள்வதில் வராது. ஆனால் முரகாமி என்றால் மட்டும் விழுந்து விழுந்து படிப்பார்கள். அதுவும் குறைந்த சதவீத ஆட்கள் என்பதால் அவர்களையும் குறை சொல்ல விரும்பவில்லை.

உண்மையில் தமிழிலக்கியம் மோசமாகிக்கொண்டிருக்கிறதா என்றால் அது உண்மையில்லை. தமிழ் எழுத்தாளர்கள் சிலரே தங்களுக்கு உள்ள ரீல்ஸ் மோகத்தைப் பெருமையுடன் சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அப்படியிருக்கும் பட்சத்தில் சாமானியனின் நிலை என்ன? இந்தியர்களின் சராசரி ஸ்க்ரீன் டைம் 9 மணி நேரம் என்கிறது தரவு. இவர்களில் பலர் ஒரு நிமிடம் கூட புத்தக வாசிப்புக்கு நேரம் ஒதுக்குவதில்லை. சில எழுத்தாளர்கள் பெருமையுடன் பகிர்ந்த அந்த ரீல்ஸ் மோகம்தான், அவர்களின் புத்தகங்கள் கண்டுகொள்ளப்படாமல் போவதற்கே காரணமாகி வருகிறது. மக்கள் காணொளி வடிவத்திற்கு முற்றிலும் மாறிவிட்டதால் எழுத்து வடிவம் வீழ்ச்சியடைகிறது.

இவ்வளவுக்குப் பிறகும் புத்தகங்கள் வாங்கிப் படிப்பதற்காகப் பணம் செலவிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். இதுவரை ஒரு வாழும் தமிழ் எழுத்தாளனைக்கூட PDFல் படித்ததில்லை. தொடர்ந்து புத்தகங்கள் வாங்கப் பணம் செலவிடுவதைத் தொடர்வேன். இப்படியான நூதன நவீனக் காலத்திலும் இலக்கிய ஆர்வத்தைப் பற்றிக்கொண்டிருப்பதற்கு நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்துகிறேன்.

April 7 - I'm Grateful for the film 'Kaatru Veliyidai'

இப்படத்தைப் பற்றி கல்லூரியில் சபரி சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. அவனுடைய மாமா ஏர்ஃபோர்ஸ் ராணுவ அதிகாரி. மற்ற ராணுவ அதிகாரிகளைவிட ஏர்ஃபோர்ஸ் அதிகாரிகளுக்கு ஒரு கூடுதல் அகங்காரம் இருக்கும். வானில் மேகங்களுக்கு இடையில் எதிரியை வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது அவன் தன்னைக் கடவுளாகவே உணர்வான். வானில் கடவுள் போரிட்டுக்கொண்டிருப்பதால்தான் தேசமே நிம்மதியாக இருப்பதாக நினைப்பான். VCயின் கர்வம் அவனது காதல் வாழ்க்கையைப் பாதிக்கிறது. இப்படம் சபரியின் மாமா மற்றும் அவரது நண்பர்களுக்கு மிகவும் பிடித்திருந்ததாகச் சொன்னான். எந்த இந்தியப் படங்களிலும் ராணுவ வீரர்களை இவ்வளவு அப்பட்டமாகக் காட்டியதில்லை என அவர் புகழ்ந்தாராம்.

இது காதல் - தீவிரவாத படம் என்பதைத் தாண்டி, சில உயிரியல் விஷயங்களையும் மணி ரத்னம் தொட்டிருப்பதாக இப்போது தோன்றுகிறது. நாயகன் ராணுவ அதிகாரியாக இருப்பதற்கும், நாயகி லீலா மருத்துவராக இருப்பதற்கும் அது காரணமாய் இருந்திருக்கலாம். ஏனெனில், ஆண்கள் மட்டுமே அதிகளவில் பங்களிக்கும் துறை ராணுவம். பெண்கள் அதிகளவில் பங்களிக்கும் துறை மருத்துவம். இரு Masculine - Feminine ஆற்றல் நவீனக் காலத்தில் சேரும்போது உண்டாகும் குழப்பங்களே இப்படம். ஆனால் என்ன ஆயினும் அவள் அவனிடம் சரணடையவே செய்வாள்.

April 9 - I’m grateful for my resurrection

ஹம்சா சமீபத்தில் போர்ன் அடிக்‌ஷன் பற்றி ஒரு காணொளி பதிவிட்டிருக்கிறான். ஆபாச அடிமைத்தனத்தால் அவன் கஷ்டப்பட்ட காலத்தை நினைத்துப் பார்த்து அழவே செய்திருக்கிறான். நான் என் முன்னாள் காதலியிடம் என் அடிமைத்தனத்தைப் பற்றிக் கூறியபோது அழுதிருக்கிறேன். அவ்வளவு கடினமான காலம் அது.
ஈஸ்டர் என் மனதுக்கு நெருக்கமான நாளாகப் பதிந்துவிட்டது. கடந்தாண்டு இதே ஈஸ்டர் நாளில் நான் எனது அடிமைத்தனங்களிலிருந்து மீண்டேன். 2022 கோடைக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுணர்வை செலுத்துகிறேன்.

April 10 - I’m Grateful for my Mom’s birthday gift
April 11 - I’m Grateful for the Orange Floral Shirt
April 12 - I’m Grateful for Subha
April 13 - I’m Grateful for Karthik Kamal
April 14 - I’m Grateful for Rajkumar
April 16 - I’m Grateful for my accident

2 நாட்களுக்கு முன்பு ஒரு ஆக்சிடென்ட் ஆனது. சிக்னலில் நிற்கும்போது காரைக் கொண்டு ஒரு லாரி மீது மோதிவிட்டேன். கவனக்குறைவால் ஏற்பட்ட பிழை. முழுக்க என் தவறுதான். நல்லவேளையாக எதிரிலிருந்தது லாரியாக இருந்தது. இதே வேறு ஒரு சாதாரண காரோ அல்லது லக்சரி காரோ இருந்திருந்தால் என் மாத ஊதியத்திலிருந்து 25% பணத்தைச் செலுத்த வேண்டிய நிலை வந்திருக்கும்.

April 17 - I’m Grateful for Vivek Bharathi

இன்று ஹைக்கூ கவிதைகள் தினம் என்றதும் நினைவுக்கு வந்தது. ஹைக்கூ என்றால் என்ன, அதற்கான இலக்கணம் எப்படி இருக்க வேண்டும் என்று முதன்முதலில் எனக்குக் கற்பித்தவன் விவேக். இதுமட்டுமின்றி, மரபுக் கவிதைகளின் பல இலக்கணங்களை எனக்குக் கற்பித்திருக்கிறான். ‘கல்கி’யில் பணியாற்றியபோது தமிழின் தொன்மங்கள் குறித்துப் பல சுவாரசியங்களைச் சொல்லியிருக்கிறான்.

April 18 - I’m Grateful for Deepakumar
April 19 - I’m Grateful for Sivanesakumaran

நேற்று ஒரு ஆர்ட் கேலரிக்கு சென்றிருந்தேன். இதுவே நான் சென்ற முதல் ஆர்ட் கேலரி எனினும், ‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ நூலின் ‘பட்டாம்பூச்சியைப் போல’ எனும் எனது சிறுகதையில் கதாநாயகன் ஆர்ட் கேலரிக்குச் சென்றிருக்கிறான். ஆகவே ஆர்ட் கேலரியின் அனுபவம் எப்படி இருக்கும் என நேரடியாக அதை அனுபவிக்கும் முன்பே எழுத்தில் அனுபவித்திருக்கிறேன். எழுதுபவரின் நுண்ணுணர்வு!

பொதுவாக எனக்கு அப்ஸ்ட்ராக் கலைகள் மீது நாட்டமுண்டு. எனது ‘உயிர்த்தெழுதல்’ சிறுகதையைக்கூட அப்படியான ஒரு வடிவம்தான். முதலில் சில ஃபார்முலாவுடன் அதைப் படைத்துவிட்டு அது எப்படியாக தனக்குப் புலப்படுகிறது என்பதைத் தாமே ரசிப்பது. மேலும் தீர்மானமாக எதையும் சொல்லாமல் ரசிப்பவர்களின் கண்களுக்கே விட்டுவிடுவது.

சிவநேசகுமாரனும் நானும் அவரது அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் பற்றி நீண்ட நேரம் விவாதித்தோம். ஓவியங்களை எப்படி அணுக வேண்டும் என்பதில் ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. நிறைவான நாள்!

April 20 - I’m Grateful for Krishna Thatha
April 21 - I’m Grateful for Arjun
April 22 - I’m Grateful for Kalai
April 23 - I'm Grateful for Books
April 24 - I’m Grateful for Gayathri
April 25 - I’m Grateful for my childhood tv shows
April 26 - I’m Grateful for my Progress

பிப்ரவரி மாத நன்றியுணர்வுக் குறிப்பில் பிறந்தநாளின்போது சிக்ஸ் பேக் வைப்பதாக எழுதியிருந்தேன். ஒரு Body builder Physique இல்லையென்றாலும் Athletic Physique மூலம் ஓரளவு அதை சாத்தியப்படுத்திவிட்டேன். சொன்ன சொல் தவற மாட்டான் இந்தக் கோட்டைச்சாமி!

April 27 - I’m Grateful for Balu

பிறந்தநாள் துவங்கும் நிமிடத்தில் மொட்டை மாடியில் இயற்கைக் காற்றை வாங்கியபடி நடந்துகொண்டிருந்தேன். நிலவைத் தேடிப் பார்த்தேன் காணவில்லை. ஸ்பாடிஃபையில் ‘ஆப் கி நஸ்ரோனே…’ பாடலை ஒலிக்க விட்டேன். நான் எப்படிப்பட்ட பாதைகளைக் கடந்து வந்தேன் என்பதைத் திரும்பிப் பார்த்தேன். கண்ணீர் விடாத குறை! பிறந்தநாள் முடியும் வேளையில் அடுத்த ஆண்டுக்கான இலக்குகளை நிர்ணயிக்கத் துவங்கிவிட்டேன்!

April 28 - I’m Grateful for Arun Gokul
April 29 - I’m Grateful for Every Single Fathers

‘நீயா நானா’ நிகழ்ச்சியின் கடந்த வார எபிசோடைப் பார்த்தேன். தந்தைகள் எவ்வளவு அற்புதமான பிறவிகள் என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி அது. ஓரிடத்தில் “வாழ்க்கையில் தைரியமாக செகண்ட் இன்னிங்ஸ் ஆடலாம். நான் இருக்கேன்” என்று மகன் உற்சாகமாகச் சொல்கிறான். அவரது தந்தை அவனைக் கடவுளைத் தரிசிப்பது போலக் கையெடுத்துக் கும்பிடுகிறார். இதைவிட ஒரு தகப்பனுக்கு வேறு என்ன வேண்டும்? அவரது வாழ்க்கை அங்கேயே முழுமை பெற்றிருக்கும். அவர் தலைத் தாழ்த்திக் கும்பிட்டபோது தேம்பித் தேம்பி அழுதுவிட்டேன்!




107 views0 comments

Recent Posts

See All

Comments


Post: Blog2_Post
bottom of page