top of page
Search
Writer's pictureBalu

கால வெளியிடை முன்னுரைகள்


எது குறுநாவல்?

எது நாவல், எது குறுநாவல் என்பதை எவ்விதம் தீர்மானிப்பது? தமிழ்ப் பத்திரிகைகள் இவற்றை எந்த அளவைக்கொண்டு தீர்மானிக்கின்றன? நீளமாக இருந்தால் நாவல், சிறியது என்றால் குறுநாவல், என்பது அவர்களது தீர்மானம். குறுநாவல் என்பதையே சில பத்திரிகைகள் ‘நெடுங்கதை என்றும் குறிப்பதுண்டு. அதாவது இது சிறுகதை அல்ல என்பது அதன் அர்த்தம். சற்று யோசித்துப் பார்க்கையில் குறுநாவல், நாவல் என்பவை அளவு சார்ந்தவை அல்ல, வடிவம் சார்ந்த பெயர்களாகும். கதை நடந்து செல்லும் அமைப்பு, பாத்திர வார்ப்பு, அவற்றின் வளர்ச்சி அல்லது தேய்வு, இவை ஒரு நாவலில் வலுவாக அமைந்து இருக்கும். சம்பவங்கள் இருக்கலாம். குறுநாவலோ பாத்திரப் படைப்பிற்கு இடம் அற்று கதைப் போக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வடிவம் 

மேற்கிலிருந்து இங்கு இறக்குமதியான இலக்கிய வடிவங்களுள் ஒன்று  இந்தக் குறுநாவல். இன்று  வெகுசன இதழ்களில் சிறுகதை என்பது மெல்லச் மெல்ல சுருங்கி  அரைபக்களவுக்கு கூடச்  சுருங்கிவிட்ட அவலச் சூழலில் சிற்றிதழ்கள், இடைநிலை இதழ்களின் தயவால்தான்  குறுநாவல்  வடிவம்  சற்றாவது மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது.
  
வளவளவென்று நீண்டு விட்ட சிறுகதையையும் குறைப்பிரசவமாக முடிந்து விட்ட நாவலையும் குறுநாவல் என்று நம்பிக் கொண்டிருக்கும்  வாசகர்களிடையே. அது அவ்வாறல்ல. குறுநாவலுக்கென்று ஒரு பிரத்யேகமான வடிவமும் துல்லியமான வரையறையும் இருப்பதாகச் சொல்லும் முயற்சியில் இளம் எழுத்தாளர்கள் இறங்கியிருப்பது ஒர் ஆறுதல் தரும் விஷயம் 

.குறுநாவல் என்பது தன் விரிவால் ஒரு முழு வாழ்க்கையைச் சொல்லக்கூடியது, தன் குறுக்கத்தால் கூர்மையாகத் தைக்கவும் கூடியது. அது கைப்பிடியளவு விதை, காட்டின் ஆகச்சிறிய வடிவம்’ என்று தனது குறுநாவல்கள் தொகுப்பின் முன்னுரையில் சொல்கிறார் ஜெயமோகன்

  பாலுவின் இந்தக் ‘கால வெளியிடை’ என்ற படைப்பில் ஒரு குறு நாவலுக்கான அத்தனை  லட்சணங்களூம் இல்லையென்றாலும் அதன் அடையாளங்கள் நிறையவே இருக்கிறது. கதை பள்ளி காதலில் தொடங்கிக் கல்லூரியில் திசைமாறிய பாத்திரங்களூடன் பயணிக்கிறது.  பாத்திரங்களின் படைப்புகளிலும் சூழலைக் காட்டுவதிலும் யதார்த்தமிருக்கிறது. ஒரு துணிவானப் பெண் கணவனை மறுத்து மகனை வளர்ப்பதில் தொடங்கி, அவன் கல்லூரிக் காலம் வரை கதை விரிந்து அந்தப்பெண்ணின் முழு வாழக்கையையும் மகனின் காதல் அனுபங்களையும்   சொல்லுகிறது. 

காதலை இன்றைய இளைஞர்கள் எப்படிப் புரிந்து கொண்டு அதற்கு  என்ன வரையறை நிர்ணயித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கதை மாந்தர்களின் வழியே சொல்லப்படுவதிலிருந்து இன்றைய தலைமுறையினரை நூலாசிரியர் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றார் என்பது தெளிவாகப் புரிகிறது. முதல் காதல் என்பது  வாழ்வின் நிர்பந்தம் இல்லை. ஒரு புதிய காதலும் புதிய கனவுகளும் தவறில்லை என்ற இன்றைய இளைஞர்களின் உலகை எந்த ஒப்பனைப் பூச்சுகளும், நியாயப்படுத்தலுமின்றிப்  பேசுகிறது இந்தக் குறுநாவல் 

நூலாசிரியர்  கவிஞராகவும் சினிமாவை நேசிப்பதாலும் கதை முழுவதும்  கவிதைகள். திரைப்படப் பாடல்கள். கொட்டிக்கிடக்கின்றன. கதையின் ஒரு நாயகன் ஒரு திரைப்பட இயக்கனரின் படத்தின் மேல் சத்தியம் செய்யும் அளவுக்குச் சினிமாவையும் காதலிப்பவராகயிருக்கிறார். 

குறுநாவலில் கதையோட்டம் சில இடங்களில் திரைக்கதையாகமாறுகிறது மீன்டும் கதையாகி நகர்கிறது.  உரையாடல்கள் யதார்த்தமாக இருப்பதும் “அதீதக் காதலால் என் மனம் கனமாக இருந்தது”. “சொர்க்கத்தை பூமியில் கண்ட நொடிகள்”   “நான் மறக்கமுடியாத ஆனால் மறக்க நினைக்கும் நொடி”  “சோகம் என்ற சுதந்திரத்திலிருந்து  காதல் என்ற சிறைக்கு” போன்ற சொல்லாடல்களால் காட்சிக்கு வலுசேர்ப்பதும். இந்தக் குறு நாவலின் பலம். நிறையக் கவிதைகள் கதையின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவது பலவீனம். 

நீங்கள் தமிழ் சினிமாவை, அதன் இசையை ரசிப்பராகயிருந்தால், இந்தக் குறுநாவல் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.    

ரமணன்,
கல்கி பொறுப்பாசிரியர்

*

இளமை – இன்பம் – இலக்கியம்

இளமை என்றாலே இன்பம். அதில் வாசிப்பும் எழுத்தும் கலந்தால் கிடைக்கும் இன்பத்துக்கு எல்லையே கிடையாது. மனதுக்குள் புதிதாக சிறகு முளைக்க வைப்பது வாசிப்பு. நமக்கான வானத்தைத் தேர்ந்தெடுத்துப் பறக்க வைப்பது எழுத்து. இளமையில் வாசிப்பின் மீதும் எழுத்தின் மீதும் ஆர்வம் கொள்ளும் இளைஞர்களுக்கு வாழ்க்கையே அத்தனை இன்பமயம். 

இத்தகு இளமை இன்பங்கள் கூடிப் பிறப்பதே இலக்கியங்கள். அக்கால இலக்கியங்கள் தொட்டு இப்போதிருக்கும் நவீன இலக்கியங்கள் வரை இளமையையே அடிநாதமாகக் கொண்ட இன்பரசங்கள். அந்த வரிசையில் வந்திருக்கிறான் நண்பன் பாலு. 

பாலகிருஷ்ணனை நாங்கள் அறிந்தது பாலுவாகத்தான். கல்லூரியில் நாங்கள் இருவருமே ஒருசாலை மாணாக்கர்கள். முன்னோர் எழுதிக் கொடுத்திருக்கும் முழுமையான இலக்கிய வனத்தில் நான் உலவிக் கொண்டிருந்த அதே சமயம், என் கல்லூரி நண்பர்களில் சிலர் தற்கால இலக்கியப் பூங்காக்களில் பூக்களை நுகர்ந்து கொண்டிருந்தனர். அதில் முதன்மையானவன் பாலு. 

’வெண்ணிற இரவுகள்’, ’தித்திக்காதே’, ’இன்னொரு தேசிய கீதம்’ என்று அவன் பேசும் எல்லா புத்தகங்களிலும் தற்காலம் இழையோடியிருக்கும். பாலு, சிறந்த ரசிகன். தேர்ந்த ரசிகனுக்கும் எழுத்தாளனுக்கும் சிறிய கோடுதான் இடைவெளி. அதில் பெரும்பாலானோர் அந்தப் பக்கம் ரசிகர்களாகவே நின்று வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர்தான் இந்தப் பக்கம் வந்து ரசனைகளை ரசிக்கக் கொடுக்கும் எழுத்தாளர்கள் ஆகிறார்கள். 

தனது முதல் நாவல் மூலம் என் நண்பன் பாலு அந்த எழுத்தாளன் என்னும் நிலையை அடைந்திருப்பதில் எனக்கு நெஞ்சார்ந்த மகிழ்ச்சி. பாலு, சினிமா தீவிரன். ரசிகன், வெறியன் என்கிற சொல்லை எல்லாம் தாண்டிய நிலை. உலக சினிமாக்களில் தொடங்கி உள்ளூர் சினிமா வரைக்கும் உற்று நோக்கி நயம் பாராட்டும் இயல்பு உடையவன். அவனுடைய இன்னொரு ரசனை இசை. ரகுமான், ராஜா என்று இரு துருவங்களையும் சமன்கோட்டில் வைத்துப் பயணிக்கும் நையண்டீஸ் கிட்ஸின் எச்சம், பாலு. 

இப்போது கூட ஞாபகம் இருக்கிறது. பாலு, தான் சுடச்சுட எழுதிய கவிதையை ஆர்வமாய் என்னிடம் கொண்டு வந்து படித்துக் காட்டிப் பரவசப்பட்ட நிமிடம். அவன் கண்ணில் கண்ட ஆர்வக் கனல். ஆம்! பாலு அடிப்படையில் ஒரு கவிஞன். சின்னச் சின்ன பதங்களில் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் எம்.எஸ்.வி இசை போன்ற எளியன். அவனுடைய கவிதைக்கு வித்து, அவனுக்குள் ஒளிந்திருக்கும் கதைசொல்லித்தனம். 

அதிகம் பேசுபவன் பாலு, ஆனால் எல்லாப் பேச்சுகளையும் ரசனையாக மாற்றத் தெரிந்தவன். இதோ இந்த நாவலில் கூட ரசிக்கவைக்க நிறையபேசியிருக்கிறான். இந்த நாவலைப் படித்த முதல் வாசகன் நான். கிட்டத்தட்ட பதினான்கு முறை இந்தக் கால வெளியின் இடை என்னை உலவ விட்டிருக்கிறேன். இது பாலுவின் நட்பின் மூலம் பராசக்தி எனக்குக் கொடுத்த பேறு என்றுதான் நான் நினைக்கிறேன். 

பாலுவுடன் நெருக்கத்தில் பழகியவர்கள் இந்தக் கதையின் கதாபாத்திரங்களை மிக அண்மையில் உணர முடியும். சொல்ல முடியாது, நீங்களோ உங்களது குணாதிசயமோ கூட இந்தக் கதையில் இடம்பெற்றிருக்கலாம். பாலுவை நான் வாழ்த்துகிறேன். இது போல் இன்னும் பல படைப்புகளைப் படைக்க வேண்டும் என்று ஆசீர்வதிக்கிறேன். பாலுவின் கதைகள், காலம் கடந்து நிற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். 

ஓர் இளம் தமிழ் எழுத்தாளன் பேனாவை எடுத்திருக்கிறான். அவனை இந்தக் கால வெளியின் இடை நீங்கள் பார்த்து ரசித்துப் பகிர்ந்தால் சந்தோஷப்படும் முதல் ஆன்மா நானே!

அன்புடன் 
விவேக்பாரதி
29.10.2019

*

உள்ளம் காதல் வசம்


பள்ளிப்பருவத்தில் காதலித்ததுண்டா? இரண்டாவது, மூன்றாவது காதலையும் முதல் காதலைப் போல் சிலாகித்ததுண்டா? அழைப்பு துண்டிக்கப்பட்டவுடன் குறுஞ்செய்திகள் பகிர்ந்து கொள்வது போல் காதல் துண்டிக்கப்பட்டவுடன் சகஜமாக நட்பைப் பகிர்ந்ததுண்டா? கலைமங்கை மேலிருந்த காதலைக் கடக்க முடியாமல் அவளைக் கலையிலோ கவியிலோ அடக்கிவிட முயன்றதுண்டா? அதைத்தான் 'கால வெளியிடை'யில் செய்துள்ளேன்.

 இது இரவு நேரங்களில் மட்டுமே எழுதப்பட்ட இரு மாதக் கனவுலகம். நான் முதுமைப் பருவத்தை எட்டியதும் என் இளமைப் பருவத்தைத் திரும்பிப் பார்த்து பிரமிக்கவே,  நான் நேசித்தவர்களையும் நேசித்தவற்றையும் மையமாக வைத்து இந்தக் குறுநாவலை எழுதியுள்ளேன்.

நான் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்றைப் பற்றிக்கொள்பவன். பத்தாம் வகுப்பில் இசைமீது கொண்ட ஆசையால் ப்யானோ கற்றுக்கொண்டேன். பன்னிரண்டாம் வகுப்பில் சினிமாமீது கொண்ட சரஞ்சர மோகத்தால் குறும்படம் ஒன்றை இயக்கினேன். கல்லூரியில் எழுத்துக்கள்மீது கொண்ட அழுத்தமான அன்பால், இதோ! என் முதல் புத்தகத்திற்கு என்னுரை எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்பொழுது, சின்மணி எனும் கண்மணி மீது சில்லென்ற காதல்.

திரையைப் பார்க்கத் தொடங்கியதும் இசைக் காதல் அழியவில்லை.
பேனாவைத் தொடத் தொடங்கியதும் திரைக் காதல் தொலையவில்லை.
சின்மணி வாழ்வில் வந்ததும் கவிக் காதல் குறையவில்லை.
நாளை, எதை நேசிக்க நேர்ந்தாலும் சின்மணியை மறக்கப் போவதில்லை.

'கால வெளியிடை' இதைப் பற்றியே பேசுகிறது. காலம், எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினாலும் காதலின்றி கலைப் பிறக்காது.

அறிந்தவரையில், ஆண், பெண் உறவை உற்று நோக்கிச் சொல்லப்படுவது, அது எப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பத்தில் சொல்லப்படுவது என இருவகைக் கதைசொல்லல் உண்டு. நான் இரண்டிற்கும் இடைப்பட்ட கோட்டில் கதை சொல்ல முயன்றுள்ளேன். இதில் நிகழ்வுகளையும் உரையாடல்களையும் கழித்தால் கணப்பொழுதில் தோன்றி மறைந்து யுகங்களாக நிலைக்கும் என் உணர்வுகளே மிஞ்சும். தவற்றை உணரும் மனிதர்களும் தவற்றை மன்னிக்கும் மனிதர்களும் சங்கமிக்கும் ஓரிடத்தில் அற்புதங்களால் நிரம்பியிருக்கும் இவ்வுலகு.

 இக்குறுநாவலை பதினான்கு முறை படித்து மூழ்கி முத்தெடுத்து உரையெழுதிய நண்பன் கவிஞர் விவேக் பாரதிக்கும், தன் நேரத்தை ஒதுக்கி இக்கதையின் பலத்தையும் பலவீனத்தையும் எடுத்துச் சொன்ன கல்கி பொறுப்பாசிரியர் ரமணன் அய்யாவுக்கும், இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்துக் கொடுத்த கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகத்திற்கும், அட்டைப்படம் வடிவமைத்துக் கொடுத்த ஓவியன் அர்ஜூனுக்கும், இந்தக் கதையைக் குறுநாவலாக எழுதத் தூண்டிய நண்பன் ஸ்ரீனிவாசனுக்கும், என் வாழ்வை என் போக்கில் வாழவிடும் என் குடும்பத்தாருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

என்னை நேசித்தவர்களுக்கும் என்னால் நேசிக்கப்பட்டவர்களும் இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்.

பாலுவும் பிரியமும்.


28 views0 comments

Recent Posts

See All

ஆண்டின் முதல் வாசிப்பு - கால வெளியிடை

பாலு, கால வெளியிடை படித்தேன். முதலில் உன்னை நேரில் சந்தித்து கட்டி அனைத்து, இந்த காவியத்தை எழுதியதற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்....

முதல் பாராட்டு - கால வெளியிடை

(கால வெளியிடை படித்த முதல் வாசகனாக நண்பன் கவிஞர் விவேக் பாரதி அன்றிரவு சூட்டிய கவிமாலை) கொள்ளை கொண்டது நீயேதான் கொடுத்துச் சென்றதும்...

Comments


Post: Blog2_Post
bottom of page