பாலு,
கால வெளியிடை படித்தேன். முதலில் உன்னை நேரில் சந்தித்து கட்டி அனைத்து, இந்த காவியத்தை எழுதியதற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். 2020-இன் முதல் இரவு; இப்படிப்பட்ட இன்னொரு இரவு இந்த ஆண்டு எனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை…!
முதலில் வருணின் பள்ளிக் காதல் உன்னைதான் நான் வருணாக நினைத்து படிக்கத் துவங்கினேன். 10 ஆம் வகுப்பில் நீ எப்படி இருந்திருப்பாய் என்று எண்ணியபோது, நீ விஜய் சேதுபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் நினைவிற்கு வந்தது.
என்ன ஒரு அருமையான காதல் கதை…! இந்தப் புத்தகத்தை படிக்கும் முன்பு "நீதானே என் பொன்வசந்தம்" திரைப்படத்தில் வரும் ‘வானம் மெல்ல’ பாடலைக் கேட்டேன். நீ எழுதிய ஒவ்வொரு கவிதையையும் மனதிற்குள் காட்சிப் பட்டுத்திக்கொண்டிருக்கையில் இளையராஜா பின்னணி இசை வசித்துக் கொண்டிருந்தார். பள்ளிப் பருவக்காதல்தான் எத்தனை அழகானது …!
நித்யனின் கதைக்கு வருவோம். நான் ஜன்னலோரம் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். மழைத் தூறத் துவங்கியது. சென்ற கதையில் வருணுக்கும் நமக்கும் பிடித்த மழை இப்போது நித்யனின் கதை படிக்கும்பொழுதும் பொழிகிறது, 'ச்ச.. என்ன timing டா' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே மேலும் படிக்கத்துவங்கினேன். நித்யன் அவளை கல்லூரிக்கு அழைத்துச் செல்லும்வரை காதல் கடலில் வெகுநேரம் நீந்திக் கொண்டிருந்தேன். பாதங்கள், கைகள் எல்லாம் ஜில்லென்று இருந்தன. அவ்வபோது மெய் சிலிர்த்துக் கொண்டும் இருந்தேன். நித்யன், அந்த கருப்பு சுடிதார் அணிந்த பெண்ணை அவளிடமும் என்னிடமும் காண்பிக்கும் வரை... ‘அவளை காதலிக்கிறேன்’ என்று நித்யன் சொன்னவுடன் என்னை எரிமலை குழம்பில் தூக்கி வீசியதுபோல் ஆனது. கண்களிலிருந்து கண்ணீர் வெளிவரப் பிடிக்காமல் தேங்கி நின்றது. மேலும் படிக்க கண் சிமிட்டியபொழுது வலது கண்ணிலிருந்து ஒருதுளி நீர் 35 ஆம் பக்கத்தில்
‘நேற்று எந்தன் கைவலையல் இசைத்த
தெல்லாம் உன் இசையே’
என்ற பாடல் வரியின் அருகில் விழுந்தது...!
பிராப்தம் ஆரம்பமாகும் முன்பே வருணும் பெயர் குறிப்பிடாத அந்த பெண்ணும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி பார்த்தேன்; அது போலவே நடந்தது. அதன்பின் இந்த நாவலை மேலும் படிக்க எனது ஆர்வம் பன்மடங்கு கூடியது. இந்தப் பகுதியில் வருணின் கண்களுக்கு லீலா தேவதையாகத் தெரிகிறாள் என்பதைக் கூற அவன் நண்பனை பயன்படுத்திய விதம், அடடா! மூன்று இதயங்கள்… நீ எழுதிய ஒவ்வொரு கவிதையை படிக்கும்பொழுதும் வெறும் வார்த்தைகளாக என்னால் வெளிப்படுத்த முடியவில்லை; அவ்வளவு அழகாக இருந்தது. கடைசியில் வருண் சங்கீதா சந்திப்பு, விமலா கிருபா சந்திப்பு ரொம்ப அருமையா இருந்தது.
உனக்கு எப்படியும் 21-22 வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த வயதில் காதல் மீதுள்ள உன்னுடைய பார்வை மிக பக்குவமாகவும் அழகாகவும் இருந்தது. ‘உன்னைப்போல் நான் காதலிக்கவில்லை’ என்று வருத்தம் எனக்கு. உன்னுடன் நானும் கல்லூரி பயின்றிருந்தால் நாட்கள் எவ்வளவு அழகாய் இருந்திருக்குமென்று யோசித்துப் பார்க்கிறேன். நாம் ஒருநாள் கண்டிப்பாக சந்திப்போம் பாலு. நீ இயக்குநரானால் மணிரத்னம், கெளதம் மேனன் வரிசையில் ‘பாலு’ என்ற உன் பெயர் கண்டிப்பா க இருக்கும். உன்னுடைய திரைப்படத்தை என் காதலியுடன் கைகோர்த்துக் கொண்டு திரையரங்கில் பார்க்க ஆசைப்படுகிறேன். ‘வெண்ணிற இரவுகள்’ படிக்கும்பொழுது வந்த தாக்கம் ‘கால வெளியிடை’ படிக்கும்பொழுது ம் இருந்தது. விட்டால் இதைப்பற்றி எழுதிக்கொண்டே இருப்பேன்; எனவே, இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
நிறைய எழுது; உன்னுடைய எழுத்தில் ஏதோவொரு மாயம் உள்ளது.
- அவினாஷ் முரளி
அன்பான அவினாஷ்,
என்னுடைய புத்தகத்தை ஒரு வாசகன் எவ்வாறு படிக்கவேண்டும் என்று நினைத்தேனோ அப்படித்தான் நீ வாசித்துள்ளாய்; இரவில், மழையில் ரசித்து, சிலிர்த்து, அழுது, யூகித்துக்கொண்டே! பெரும்பாலும் எல்லோரும் வருண் கதாப்பாத்திரத்தை என்னை நினைத்துக்கொண்டு வாசித்ததாகக் கேள்விப்பட்டேன்; ஆனால், அதற்கு என் பத்தாம் வகுப்பு புகைப்படத்தை கற்பனைக்காக எடுத்துக்கொண்டவன் நீயாகத்தான் இருக்கக்கூடும். நான் எழுதியதற்கு நீ வாசித்ததற்கும் ஓர் ஒற்றுமையுள்ளது; நான் இந்த நாவலை எழுதியபோது, ஒவ்வொரு காட்சிகள் எழுதும்போதும் அந்தக் காட்சியின் சூழ்நிலைக்கேற்ப ஒரு பாடலை கேட்பேன். பெரும்பாலும், இளையராஜாவின் பாடல்கள்தான். 'வார்த்தை இவன் அர்த்தம் இவள்' பகுதி எழுதும்முன்பு 'வானம் மெல்ல' பாடலைக் கேட்டுவிட்டுதான் எழுதினேன்.
நீ அழுததை கேட்டப்பின் இதை எழுதும்போது நான் அழுதது ஞாபகம் வருகிறது. முதலில், இதை 'ப்ராப்தம்' என்ற சிறுகதையாகத்தான் எழுதினேன். என் உண்மையான கதை அது. அச்சிறுகதையை, ஆசிரியனாக இருந்துக்கொண்டு மூன்றாம் நபருக்கு நடக்கும் கதைபோல் சொல்லலாமென்று முடிவெடுத்தேன். 'இவனுக்கு, இவன் சென்றான், இவன் காதலித்தான்' இதுபோல். ஆனால், என்னை அறியாமலேயே சில இடங்களில் 'நான், எனக்கு' என்று எழுதிவிட்டேன். அதை மறுவாசிப்பு செய்தபோது அதைப்படித்து அழுதேன்.
இந்த நாவலை எழுதத் தொடங்கியபோது எனக்கு 19 வயது; வெளியானபோது 20. 18 வயதில் 'எனக்கு காதலைப்பற்றின பக்குவம் நிறையவே உள்ளது' என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், இப்போது இந்த பக்குவம் போதாது என்றே தோன்றுகிறது. நீ குறிப்பிட்ட வருண் - சங்கீதா சந்திப்பையும் கிருபா - விமலா சந்திப்பையும் முக்கியமாகப் பார்க்கிறேன். அதேபோல்தான் நம் சந்திப்பையும்; விரைவில் பார்ப்போம்.
பாலுவும்
பிரியமும்
Comments