காதலே கதிமோட்சம் என்றிருந்த வருணுக்கு,
'கால வெளியிடை' வெளியான அன்றே வாங்கிவிட்டேன். ஆனால், படிக்க இத்தனை காலம் எடுத்துக்கொண்டது. தினமும் இரவில் புத்தகம் படிக்க எடுக்கும்போது 'கால வெளியிடை'யும் இருக்கும். கொஞ்ச நேரம் அதைப் பார்த்தபின்தான் வேறு புத்தகத்தை படிக்க செல்வேன்.உன்மேல் கொஞ்சம் பொறாமையுண்டு. எல்லாவற்றிலும் அடி முன்னிருப்பாய்.
நான் ‘பயோ கெமிஸ்ட்ரி’ டிப்பார்ட்மெண்ட் பிங்க் சுடிதாரை காதலிக்கும் முன்பே நீ ஒரு ‘பிங்க் சுடிதார்’ பெண்ணை காதலிக்கத் தொடங்கியிருந்தாய். நான் கவிதை எழுதத் தொடங்கும் முன்பே நீ எழுதித் தள்ளினாய். 'பிங்க் கூழ் உலகம்' முதல் இப்போதுவரை நான் எழுதித் தள்ள நீ உந்துதல்தான். கல்லூரி பிரியாவிடை நிகழ்ச்சியில் ‘வருணா’ பேசி சிரித்து விழாவை நடத்தியதை பார்த்து காதலிக்க ஆரம்பித்தேன். அவளிடம் "நீ நல்லா பேசுன வருணா" என்று சொல்லப் போகும்முன்னே நீ பேசிக்கொண்டிருந்தாய்.
அதன்பின் 'இந்திரா' சிறுகதையை நாவலாக்கும் முயற்சியில் எழுதும்போது, ஒருநாள் விவேக் அழைத்து "பாலுவோட நாவல் படிச்சேன். அருமையா இருக்கு. சீக்கிரம் நீயும் படி' என்றான். அப்பொழுதே 'இந்திரா' நாவல் எழுதும் வேலையை தற்காலிகமாக நிறுத்திவிட்டேன். அதனாலேயே 'கால வெளியிடை' காலம் எடுத்தது. புது வருடத்தில் ஒரு புது தொடக்கமாய் படிக்க வாய்ப்பு கிட்டியது. அதற்கு முன்வரை, மற்றவர்கள் பாராட்டி எழுதியதை படிக்காமல் தவிர்த்தேன். பெயர், சாரம், உணர்வை எல்லாம் அவர்கள் கொட்டி கொண்டாடியதை படித்துவிட்டு, நான் படிக்கத் தொடங்கினால் மிஞ்சியிருப்பவை சக்கைதான்.
உன்னுடன் சிறிது காலம் பயணித்ததால் எனக்கு லீலா, சங்கீதா , விமலா பற்றிய பரிச்சயம் கொஞ்சம் உண்டு. படிக்க தொடங்கிய முதலே வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கியது. பள்ளிக்காலத்தில் இளவயதில் காதலிக்காதவர்கள், தம் வாழ்க்கையில் பெரும்பகுதியை வீணாக்கிவிட்டதற்கு சமம். கூடாக் காதல், சேரா காதல், சொல்லா காதல் என்று முதுமையில் நினைத்து திளைக்க ஏதும் இராது. சங்கீதா - வருண் காதலை உணரும்போது என்னுடைய சேரா காதலை மனம் கிளற, வலித்தது. புத்தகம் சூழ்ந்திருக்க, மத்தியில் சங்கீதா - வருண் முத்தமிட்டுக் கொள்வது, என்னுடைய நெடுநாள் ஆசை தீர்ந்ததுபோல் இருந்தது.
சங்கீதா "ஐ லவ் யூ" சொல்ல, அதற்கு வருண் "ஹ்ம்ம், நானும்" என்று சொல்லி, "அதை எதுக்கு அசிங்கமா சொல்லிக்கிட்டு" எனும்போது என்னையே நான் அந்த இடத்தில நினைத்து சிரித்தேன். போலியாய் எனக்கு "ஐ லவ் யூ" சொல்ல வராது. கலவி கொண்ட சந்தோஷத்தின் உச்சத்தில் திளைத்திருக்கும்போதுதான் "ஐ லவ் யூ" சொல்ல வரும்.
காதலிக்கத் தொடங்கியதும் குழந்தை, கல்யாணம், முதலிரவு, Sexual Fantasy என்று பேசாமல் பிரிவதைப்பற்றி நித்யன் பேசுவது அந்நியமாய்த் தெரியவில்லை எனக்கு. 'உன் பெற்றோர் ஒத்துக்கொள்ளாவிட்டால், என்மேல் உனக்கு சலிப்பு ஏற்பட்டால், வேறொருவனைப் பிடித்திருந்தால், என்னை தாராளமாய் விட்டுச் செல்லலாம். கடிவாளம் போட்டு உன்னை கட்டிவைக்கவில்லை' என்றேன் என் காதலியிடம். இன்றுவரை எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத காதல்தான் என்னுடையது. பார்க், பீச், சினிமா என்று மற்றவர்கள்போல் சுற்றி மணிக்கணக்காய் பேசித் தீர்க்காமல் அவ்வப்போது பேசி, பார்த்து, கலவி கொண்டு, சண்டையிட்டுதான் கொள்கிறோம். எனக்குத் தெரியும் இது அந்நியத்தன்மை, சராசரிக் காதல் இல்லையென்று; வருண் சொல்லும் வரை, நித்யன் பேசும் வரை.
"எனக்கு தோன்றத நா வெளிப்படுத்தாம அடுத்தவங்க வெளிப்படுத்தணும்னு நினைக்கிறது என்ன நியாயம்?" என்ற அவளின் கேள்விபோல்தான், நானும் ‘பிங்க் சுடிதார்’ பின்னால் சுற்றி கவிதை எழுதி காதல் கொண்டேன்.
'நீ இல்லாத இரவு இருட்டாய் இருக்கிறது' என்ற அவளின் மனபுலம்பல் வேதனை அளிக்கிறது. 'நான் உன்னிடம் காதலைச் சொல்லி, அதை நீ ஏற்ற அடுத்த கணம், உன்னை ஆசைத் தீரச் சத்தம் போட்டு 'நித்யா' என்று அழைக்க வேண்டுமென்று இருந்தேன். இப்போது அது சாத்தியம் பெற வேண்டுமானால், உன் பெயரிலேயே இன்னொருவனைதான் தேட வேண்டும் போலும்' என்று நினைக்கையில் உன் பெயரை ஏன் 'வருண்' என்று உன் பெற்றோர்கள் வைத்தார்கள் எனத் திட்டத் தோன்றியது.
‘நமக்கு ஒருவர் தேவையென்பது எவ்வளவு சுயநலம்’
‘தொலஞ்சி போகணும்’
'பதில் அறியா கேள்வி அழகானது'
ப்ரீத்தா விக்னேஷை காதலித்தும் வசந்த் மேல் காதல் வருவது லீலாவால் மட்டுமல்ல, எவராலும் புரிந்துக்கொள்ள முடியாததுதான். அது மனதளவிலோ, அறிவிலோ, உடலளவிலோ இருக்கலாம். எதுவாயிருந்தாலும் அதுஒரு அழகான உணர்வு. விக்னேஷ் புரிந்துக்கொண்டாள் சந்தோஷம்.
'கடல் - அலை - கரை' கவிதை எடுத்துக்காட்டு என்னை மொத்தமாய் துள்ளியெழ வைத்து கொஞ்ச நேரம் கடற்கரை சென்று வர வைத்துவிட்டது. அங்கு எங்கேனும் விமலாவும் கிருபாவும் தென்படுகிறார்களா என்று தேடிப்பார்த்தேன்.
லீலாவிற்கு உன்மீது காதல் வந்ததும், அதை ப்ரீத்தாவிடம் சொல்ல, அதற்கு ப்ரீத்தா சொன்னதில் மிகவும் பிடித்த ஒன்று "நித்யன் இருந்தாலும் தப்பில்ல. உன் எல்லா ஆசையும் ஒருத்தனால பூர்த்தி செய்யமுடியாது.” இதை Affair என்று சொல்லி கொச்சைப்படுத்த விரும்பவில்லை. அது உலக நியதி. எது தேவையோ அதுவே தர்மம். 'காதலித்தவரைத் தவிர துணையைத் தவிர எந்த ஆணிடமோ பெண்ணிடமோ உறவு வைத்துக்கொள்ளவில்லை' என்று எவராலும் சொல்ல இயலாது. அப்படி சொன்னார்களெனில் அவர்கள் மிகப்பெரிய துர்பாக்கியசாலிகள்.
'லைலாவைப் பார்க்க மஜ்னுவின் கண்கள் தேவை
லீலாவைப் பார்க்க வருணின் கண்கள் தேவை'
கொஞ்சம் உன் கண்ணையும் கடன் வாங்கிக்கொடேன்.
"அம்மாகிட்ட ஏதாவது சொல்லணுமாப்பா?" என்ற வருணின் கேள்விக்கு
"அப்பா கூடிய விட்டுட்டாருனு சொல்லுப்பா, போதும்" என்னும் கிருபாவின் பதில், மன்னிப்பு கேட்பதை விட பெரிது. ஆனால் அதற்கு விமலா, "நீங்க குடிக்கலனாலும் அப்படிதான் பேசியிருப்பீங்க" என்னும்போது ஆண்புத்தி பின்புத்தி என்பதுபோல் இருந்தது, உறுத்தியது.
விமலாவும் கிருபாவும் சண்டையிடும்போதெல்லாம் கிருபா சுயஇன்பம் செய்துவிட்டு தூங்குகிறார் எனும்போது வலியை, கவலையை மறக்க செய்ய அது மருந்தாய்த்தான் தெரிகிறது.
வருண் பேசுவதை பார்த்து விமலா புரிந்துக்கொண்டு நடப்பது, பெரும் கொடுப்பினை. அதுவே மகளாய் இருந்தால் கல்யாணத்தின் Demerits பற்றி சொல்லியே வளர்த்திருப்பேன் எனும்போது விமலா கையை பற்றிக்கொள்ளத் தோன்றுகிறது. 'அவள் அப்படிதான்' மஞ்சு போல்தான் விமலா. என்ன.. கல்யாணம் செய்துக்கொண்டாள்; அவ்வளவுதான். நாற்பது வயதுக்குமேல் 'வாழ்வின் சுதந்திரம் பிடித்திருக்கிறது' என்கையில் ஒரு விடிவெள்ளியாய்த்தான் தெரிகிறாள்.
மீண்டும் சங்கீதா வரும்போது நிராகரித்து வருண் செல்வது லீலாவின்மேலுள்ள காதலினால் அல்ல. விமலா - கிருபை இருவரிடம் நீடித்த இடைவெளி - காலா வெளியிடையின் தக்கம் எனப் புரிகிறது.
உன் தற்போதைய காதல் எந்தளவுக்கு போகும் என்று தெரியவில்லை. ஒருவேளை கல்யாணத்தில் முடிந்ததால் அன்று மழை பெய்ய வேண்டிக்கொள்கிறேன். நீ நாத்திகவாதி என்பதால் ஆசைப்படுகிறேன் என்று வைத்துக்கொள்.
நீ இந்த கதையை இரவி மட்டுமே எழுதியதாகச் சொன்னாய். நானும் உனக்கு இந்த கடிதத்தை இரவில்தான் எழுதுகிறேன். உன்னை அழைத்தோ குறுஞ்செய்தியிலோ இதை சொல்லியிருக்கலாம். ஆனால் உணர்வற்ற பேச்சாய்த்தான் இருந்திருக்கும். அதனாலேயே எழுதத் தொடங்கினேன்; கிறுக்கித் தள்ளினேன். காலையிலே எழுதிக்கொள்ளலாம் என்று விட்டால் எங்கே எல்லாம் மறந்து, கடந்து ஒருசில பக்கத்திலேயே தேங்கிவிடுமோ என்றுதான். இன்னும் கொஞ்ச காலத்துக்கு என் இந்திரா நாவலை எழுதப் போவதில்லை. அதற்குள் நீ இன்னும் சில நாவல்கள், கவிதைகள் எழுதியிருப்பதை; படம் எடுத்திருக்கக்கூடும்.
'லீலா வருணிடம் காட்டிய மௌனமும் காதல்தான்.
நித்யனிடம் அழுததும் காதல்தான்'
இவ்வரியில் மொத்த 'கால வெளியிடை'யும் அடங்கிவிடும்.
நிறைய எழுதாதே. குறைவாய் எழுது. நிறைவாய் எழுது.
காதல் கொள்
காமம் பகிர்
விஜய் பிரகாஷ்
4.1.2020
காமத்தை முதன்மைபடுத்தும் விஜய் பிரகாஷுக்கு,
ஒரு காலைப்பொழுதில் "ஏதோ letter வந்துருக்கு பாரு" என்று அப்பா சொன்னார். என் வீடு தேடி வந்த முதல் கடிதம் உன்னுடையது என்பதே நினைவுப் பெட்டகத்தில் பூட்டிவைக்கப்படும். அன்று எனக்குத் தேநீர் தேவைப்படவில்லை. நீயெழுதிய நான்கு பக்கமே இன்றுவரை புத்துணர்ச்சி கொடுத்துக்கொண்டிருக்கிறது. உண்மை சொல்கிறேன்; வெறுக்காமலிரு. எனக்கு உன்மீது கோபம். நீ எதற்காக இன்னும் என் புத்தகத்தை வாங்காமலிருக்கிறாய்; ஒரு 'வாழ்த்துக்கள்' கூட சொல்லவில்லை என்று கோபம். உன்மீது கோபப்படக்கூடிய எல்லா உரிமையும் எனக்கு இருக்கிறது. ஆனால் உன் கடிதத்தின் முதல் பத்தியைப் படித்ததும் குற்றவுணர்வே மிஞ்சியது. உன்னை என்னவென்பது? வெளிப்படுத்தா நண்பனென்றா அல்ல மறைமுகமான ரசிகனென்றா?
பெண்களைப் பாரேன். எதுவுமே செய்யாமல் வெறும் பிங்க் சுடிதாரை அணிந்தபடியே நண்பர்களுக்கிடையில் போட்டியையும் மனப்பான்மையும் உருவாக்குகிறார்கள். ஆனால் அவர்களுக்காகத்தான் நாம் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறோம். நீ இன்னும் எத்தனை கவிதை எழுதினாலும் 'பிங்க் சூழ் உலகம்' கவிதைதான் சிறந்ததாக நான் கருதுவேன். அதனை தோற்கடிக்கும் அளவிற்கு இன்னொரு கவிதையை எழுத ஒரு 'மெரூன் சுடிதார்' உன் வாழ்க்கையில் வர ஆசைப்படுகிறேன்.
ஒரு படத்தை பார்த்தே தீரவேண்டும் என்று முடிவு செய்திவிட்டால் அதன் டீசரை முடிந்தவரைப் பார்க்கத் தவிர்ப்பேன். அதுபோல்தான் நீ 'கால வெளியிடை'யின் விமர்சனங்களைத் தவிர்த்துள்ளாய் போலும்.
நீ என்றாவது உன் சேரா காதலை மீண்டும் சந்தித்தால் அன்று அவளுக்கு என் புத்தகத்தை உன் கையெழுத்திட்டு பரிசளி.
காதலித்து Sexual Fantasy-க்கு செல்லவே மாதங்கள் ஆகும். இதில் எப்படி திருமணம், குழந்தையைப்பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. மாறாக, பிரிவைப்பற்றி பேசுவதும் அதிலிருந்து மீள்வதற்கான வழியை காதலிக்கும்போதே தெரிந்துவைத்துக்கொள்வதையே ஒரு ஆரோக்கியமான உறவாகப் பார்க்கிறேன். உன் காதலைப்பற்றி கேட்க்கும்போது என் கதையின் நித்யனாகத்தான் நீ தெரிகிறாய். ஆனால் அவனை எழுதிய நான், அவனுக்கும் உனக்கும் நேரெதிராகக் காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
நீ சொன்னதை சென்ற ஆண்டு சொல்லியிருந்தால் மறுக்காமல் ஏற்றிருப்பேன். ஆனால் 2019 எல்லா வகையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. துணையைத்தவிர மற்றவரிடம் செல்லாதவர்கள் துர்பாக்யசாலிகள்தான்; ஆனால், காதலியைத்தவிர மற்றவர்களிடம் செல்லாதவர்களை பொக்கிஷக்காரர்கள் என்று சொல்லத்தோன்றுகிறது.
விமலாவை நீ விவரிக்கும் விதத்தை வைத்துப்பார்த்தால் மஞ்சுவும் துளசியும் நண்பர்களாகவோ அல்லது அக்கா தங்கைகளாக இருப்பார்களோ என்று தோன்றுகிறது.
என் தற்போதையக் காதலுக்கு முடிவல்ல என்பதை நிச்சயமாக சொல்ல முடிந்த எனக்கு, அது திருமணத்தில் முடியுமா என்ற சந்தேகம் இருந்துக்கொண்டே வருகிறது.
முன்பெல்லாம் இரவும் அந்தியும் மட்டும்தான் சிறந்து பொழுதுகள் என்ற மூடநம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போது மதியம் 12 வெயிலிலும் காதலுக்கு முத்தமளிக்கத் தோன்றுகிறது. 2019 கொடுத்த மாற்றங்களில் இதுவும் ஒன்று.
இதுவரை நிறைய எழுது என்று சொல்பவரைத்தான் கேட்டிருக்கிறேன். சமீபத்தில் மனுஷ்ய புத்திரன் கூட விகடன் பேட்டியில் 'குறைவாக எழுதுவது ஒரு மனநோய்' என்றார். ஆனால் நீ சொன்னதை நிச்சையமாகக் கருத்தில் கொள்கிறேன். இந்த ஆண்டு 'சூல்' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற 'சோ.தர்மன்' அவர்களை 'விவேக் பாரதி' பேட்டி எடுத்திருந்தான். அவர் ஒவ்வொரு தசாப்தத்திற்கும் ஒரு புத்தகம் வெளியிடுகிறாராம். தன்னை ஆர்வப்படுத்தும் விஷயங்களைப்பற்றி மட்டுமே எழுதி வருகிறார். தன் '60 ஆண்டு வாழ்க்கையில் வெறும் 85 சிறுகதைகளே எழுதியுள்ளேன்' என்கிறார். எனவே, அதிகம் எழுதுவதும் குறைவாக எழுதுவதும் இங்கு விஷயம் இல்லை. நான் உனக்கு சொல்வது ஒன்றுமட்டும்தான்; 'எழுது'.
பாலுவும்
பிரியமும்
Comments