top of page
Search
Writer's pictureBalu

லப்பர் பந்து

Updated: Sep 23

மோசமான படத்தொகுப்பு. நல்ல இசை.

தினேஷைத் தவிர அனைவருமே நன்றாக நடித்திருந்தனர். இது தினேஷின் Weakest performance. ஹரிஷ் கல்யாணை ஈகோவில் முறைக்கும் காட்சிகளில் கண்களைப் பிதுக்கும் பழைய பாணி நடிப்பைக் கையிலெடுத்திருக்கிறார். முந்தைய படங்களில் நன்றாகவே நடித்து வந்தவரிடம் இம்முறை சிறிய சறுக்கல்.

நடிகர்கள் எவருமே பாலா படம் போல் அதீத நாடகீயமாய் நடிக்கவில்லையெனினும் படத்தில் ஒரு சீரியல் மணம் வீசுகிறது. குறையாகச் சொல்லவில்லை. ஒரு நல்ல சீரியல் பார்த்த அனுபவம் கிடைத்தது. திரைப்படமாக முழுமை பெறவில்லை.

அண்மையில் வந்த கிரிக்கெட் படங்களில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் அஷோக் செல்வன் ஸ்டம்பை வைத்து சிக்ஸர் அடிக்கிறார். இப்படத்தில் தினேஷ் Pad போடாமல் Cork ball-ஐ எதிர்கொண்டு ஒரு பந்தைக்கூட காலில் வாங்காமல் 94 ரன்கள் அடிக்கிறார். இவற்றைக் காணும் டிவிஷன் அளவிலான கிரிக்கெட் வீரன்கூட, தலையிலடித்துக்கொண்டு நமட்டுச்சிரிப்புடன் கடந்துவிடுவான். விளையாட்டு வீரர்களுக்குக்கூட இப்படங்கள் எவ்வகையிலும் முக்கியத்துவம் பெறாது. கமெர்ஷியலுக்காக செய்யப்படும் இதுபோன்ற சமரசங்களே நல்ல ஸ்போர்ட்ஸ் சினிமா உருவாவதற்குத் தடையாக அமைகின்றன. சினிமாவுக்கு லாஜிக் அவசியமில்லைதான். ஆனால் தேர்ந்தெடுத்திருக்கும் களத்துக்கான அடிப்படை நம்பகத்தன்மையைக்கூடத் தவறவிட்டால் எப்படி? இதனால்தான் தமிழ் சினிமாவில் Authentic-ஆன ஸ்போர்ட்ஸ் படங்கள் மிகக்குறைவு. மைதானம் நமக்கு ஈகோவை எப்படிக் கைவிடக் கற்றுத் தருகிறது என்பதைத் தாண்டி உணர்வுப்பூர்வமாக எடுத்துக்கொள்ள இப்படத்தில் ஒன்றுமேயில்லை.

இறுதிக்காட்சியில் வழக்கமாக எல்லாப் படங்களைப் போலவும் கதாநாயகர்களின் அணியே வெல்லுமென ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தபோது, மாற்று முடிவு வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. விளையாட்டிலிருந்து சாதிய வேற்றுமைகள் கலைவதாகக் காட்டப்பட்டிருந்தது நன்று. அங்கேயே படத்தை முடித்திருந்தால் சுபம். ஆனால் இந்த சாதிய வேற்றுமைகளைக் கலைப்பதற்காகக் கதாநாயகர்களின் அணி விட்டுக்கொடுக்கும்போது அது பிரச்சினைக்குரியதாக மாறுகிறது. எதிரணியில் விளையாடிய தலித் வீரர்களைக் குறைத்து மதிப்பிடுவதாகப்பட்டது. நாயகர்களின் அணி விட்டுக்கொடுத்து ஏன் எதிரணி வெல்ல வேண்டும்? போராடி வெல்லும்போதோ அல்லது வீழும்போதோ, ‘End of the day, Sport wins’ என்று வீரர்கள் உணரும் தருணம்தானே ஒரு விளையாட்டுத் திரைப்படத்துக்கு உச்சமாகத் திகழ முடியும்! அதை எப்படி இயக்குநர் தவறவிட்டாரெனப் புரியவில்லை. நம்முடைய விட்டுக்கொடுத்தலால் மட்டுமே எதிரணி ஜெயிக்க முடியுமென ஒரு அணியின் தலைவன் கருதுவானென்றால் அது அந்தத் திரைக்கதையின் பலவீனத்தைக் காட்டுவதன்றி வேறென்ன? நான் விட்டுக்கொடுத்துத்தான் மற்றொருவன் வெல்ல வேண்டுமென நினைக்கும் கணத்திலேயே என்னை மேலானவனாகவும், எதிராளியைக் கீழானவனாகவும் கருதத் தொடங்குகிறேன்.

இப்படம் குறித்து ஏதோவொரு பக்கத்தில் பதிவொன்றைப் பார்த்தேன். “பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் படங்களைவிட ‘லப்பர் பந்து’ ஏன் தனித்துத் தெரிகிறதென்றால் அவ்விருவரும் ஒருதலைபட்சமாகப் படமெடுப்பார்கள். இப்படத்தில் அந்த ஒருதலைபட்சம் இல்லை” என்பது போன்ற முட்டாள்தனமான பதிவு. பா.இரஞ்சித் நிச்சயம் எதிரணிக்கு விட்டுக்கொடுப்பது போன்ற கிறுக்குத்தனத்தைச் செய்திருக்கவே மாட்டார். ‘சார்பட்டா பரம்பரை’யில் வேம்புலி தோல்வியடைந்த பிறகு அவன் டான்ஸிங் ரோஸின் பாராட்டுப் பெறும் இடம்தான் ஸ்போர்ட்ஸ் படங்களுக்கே உரிய உச்சம். அப்படி ஒரு இடம்கூட இப்படத்தில் இல்லை.


88 views0 comments

Recent Posts

See All

Comments


Post: Blog2_Post
bottom of page