top of page
Search
Writer's pictureBalu

பாலியல் வறட்சி

Updated: Mar 31, 2023

கலவி கிட்டாத ஆண்களின் எண்ணிக்கை நம்மூரில் சரிந்துவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. என் தந்தையின் தலைமுறையில் காமுகர்களாக இருந்தவர்களே தங்களின் முதல் புணர்ச்சியைத் திருமணத்திற்குப் பிறகுதான் அனுபவித்திருக்கிறார்கள். திருமணம் என்பது கலவிக்கான உரிமமாகக் காலமற்று இருந்து வருகிறது. அதற்குப் பல நூற்றாண்டு வரலாறு இருப்பதால் இனி வரும் காலங்களிலும் அது தொடரும்.


கால வரையறை இல்லாமல் ஆண்களுக்குப் பெண்ணுடல் ஒரே வழியில்தான் கிடைக்கிறது என்றாலும் என் தலைமுறையினர் இருபதுகளின் தொடக்கத்தில் கிட்டாத காமத்தை எண்ணி வருந்துவது உண்மைதான். அதற்கான காரணங்களையும், அதனால் எழும் இயலாமையையும் வெல்லுவதற்கான வழிகளை தொகுக்கிறேன்.


ஆண்களின் தேவை காமம்; பெண்களின் தேவை கவன ஈர்ப்பு. பெண்ணுக்குத் தேவையான கவனத்தை (Attention) கொடுத்துவிட்ட அன்றிரவே அவளது உடலை எடுத்துக்கொள்வதை மேற்கத்தியச் செவ்வியல் இலக்கியத்தில் அல்லது படங்களில் கண்டிருப்போம். ஆனால் இக்கால இளம்பெண்கள் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதில் குறியாக இருந்துவிட்டு ஆணுக்குத் தேவையானதைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதைப் பற்றி யோசிப்பதே இல்லை. எனவேதான் ‘ஆணும் பெண்ணும் நண்பர்களாய் இருக்க முடியும்’ எனும் ஆழமற்ற நவீனப் பார்வை முன்வைப்பவர்கள் அதிகளவில் பெண்களாகவும், அதை ஏற்க மறுப்பவர்கள் ஆண்களாகவும் இருக்கின்றனர். இக்காலப் பெண்ணுக்குத் தனது தேவையைத் தீர்த்துக்கொள்ள ஒரு நண்பனே போதும் என்பதால் அவள் உறவுகளுக்கோ திருமணத்திற்கோ தீவிரம் காட்டுவதில்லை. ஆனால் ஆணால் தனது Sexually active நிலையைக் காதலின் பேரிலோ அல்லது திருமணத்திற்குப் பிறகோதான் எட்ட முடியும். அப்படி எட்டுவதுதான் ஆரோக்கியமானதும்கூட. கேஷுவல் செக்ஸை ஆதரிக்கும் முட்டாள்தனத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.


எனது அண்ணன் தலைமுறையிலிருந்து கல்விக்கூடங்களிலும் அலுவலகங்களிலும் ஆண்களும் பெண்களும் நட்புடன் பழகத் துவங்கினர். உலகமயமாக்கத்தின் துவக்கத்தில் எதிர்பாலினத்தவருடன் நட்பு பாராட்டிய சோதனை எலிகளின் முடிவு இரு தசாப்தங்களுக்குப் பிறகு தெரிந்துவிட்டது. ஆண்களின் பாலியல் தேவை குறைந்ததற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. எதிர்பாலின நட்புணர்வு பெண்களுக்குச் சாதகமாகவே அமைந்துவிட்டதால் அவர்கள் இதை மேலும் முன்னெடுத்துச் செல்வார்கள். இதற்கு இரையாகியிருக்கும் ஆண்களே பாவப்பட்டவர்கள். ‘ஆண்களும் பெண்களும் தோழமையாகப் பழக முடியும்’ என்று ஒரு தலைமுறையே தங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும்போது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அவர்கள் சந்தித்தே தீர வேண்டும். என் தந்தையின் தலைமுறை இத்தவற்றைச் செய்யவில்லை. Chads!


திருமணம் ஓர் ஆடம்பரமான வியாபாரமாக மாறியதும் இளம் ஆண்களின் பாலியல் வறட்சிக்குக் காரணமாய் அமைந்திருக்கிறது. 70களில் 23 வயது ஆண் ஒரு குடும்பத்தை வழிநடத்துவதற்கான சாமர்த்தியத்தை அடைந்திருந்தான். இன்று அதே வயதிலிருக்கும் ஆண்கள் தங்களைச் சிறுவர்களாகவே நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அதேபோல் அவர்கள் காலத்து உணவும் வாழ்க்கைமுறையும் ஆரோக்கியமாக இருந்ததால் நீண்ட காலம் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையைப் பேண முடிந்தது. இன்று 30 வயதில் ஆண்களுக்கு நீரிழிவு உட்படப் பிற நோய்களுக்கான அறிகுறிகள் ஆரம்பித்துவிடுவதால் அவர்களது தீவிரப் பாலியல் வாழ்க்கை அங்கு முடிந்துவிடுகிறது. ஆனால் அந்த வயதில்தான் பல ஆண்கள் திருமணமே செய்துகொள்கின்றனர் என்பது நகைமுரண். இது ஆண்களுக்கு உள்ளூர தெரியவே செய்திருக்கிறது என்பதால், 30 வயதுக்குள் பாலியல் வாழ்க்கையை முழுமையாக அனுபவித்துவிட வேண்டும் என்ற கட்டாய விரக்திக்குத் தள்ளப்படுகின்றனர். காமம் மீதான பார்வையிலும், பெண்களை எதிர்கொள்வதிலும் அவர்களுக்கு வறட்சி மனநிலையே எஞ்சுகிறது. இதுவே அவர்களின் தன்னம்பிக்கையைச் சிதைக்கிறது. நம் நிலைமையே இவ்வளவு கீழானதாக இருக்கும்போது இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்ட நம் பெற்றோரின் முடிவுகளை விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்? என் கணிப்பின் படி, அடுத்த இரு தசாப்தங்களில் ஆண்கள் மீண்டும் விரைவுத் திருமண நடைமுறைக்குத் திரும்புவார்கள். இதற்கான சோதனை எலிகள் நாமே!


உலகமயமாக்கலுக்கு பிறகான எதிர்பாலின தோழமை பிரச்சனையாகத் தலைதூக்கியது போல், தொழில்நுட்ப காலம் ஸ்மார்ட்போனை அளித்து அடுத்த சிக்கலை ஏற்படுத்தியது. இணையம் வழங்கிய 24*7 காமத் தூண்டுதலுக்கான அணுகல், ஆண்களின் வேட்டை மனநிலையை சிதைத்துவிட்டது. தனக்குத் தொடர்பே இல்லாத, தான் இதுவரை ஒருமுறைகூட நேரில் கண்டிராத பெண்ணின் நிர்வாணத்தைப் பார்த்துக் கர மைதுனம் செய்து முடித்த பிறகு, இவை அனைத்தும் மாயை என்பது அவனுக்கு விளங்குகிறது. ஆபாசங்களிலிருந்து முழு திருப்தியை அடையவே முடியாது என்பதை அறியாத அப்பிராணிகள், மீண்டும் அக்கற்பனை உலகிலேயே சிக்குகின்றனர். வேட்டை மனநிலை சிதைந்து, தன்னம்பிக்கை குறைந்திருப்பதால், ஆண்தன்மை வீழ்ச்சி சொகுசுகளை மட்டுமே நாடச் செய்யும். உழைப்பே இல்லாமல் பெறக்கூடிய இச்சைக்கு அடிமையாவார்கள். காமத் தூண்டுதல் உண்டானால் துணை தேடத் தொடங்கும் உயிரியல் கூறை நவீன ஆண்கள் மறந்து நீண்ட காலம் ஆகிறது. தூண்டுதல் வந்தால் மட்டுமல்ல; இச்சை உணர்வே இல்லாதபோதிலும் கட்டாயத்தின் பேரில் ஆபாசத் தளங்களைத் திறந்துவிடுகின்றனர். இன்று ஒருவருடன் புணர்ந்ததை எண்ணி அடுத்த நாள் வருந்தினால் அந்தக் கலவி சம்மதத்துடன் நடக்கவில்லை எனக் கருதலாம். அது பெரும் பிரச்சனை அல்ல; ஆனால் பலர் சுய இன்பத்தை தங்களின் முழு சம்மதத்துடன் செய்வதில்லை என்பதே வருந்தத்தக்கது. Lust has become a compulsion.


இளம் ஆண்கள் பாலியல் வறட்சியை வெல்லும் ஒரே வழி சுய முன்னேற்றம். பெண்கள் அவர்களாகவே இருக்கலாம்; ஆனால் ஆண்கள் தங்களை உருவாக்கிக்கொண்டால் மட்டுமே உலகின் வெளிச்சம் விழும். இந்த சுய முன்னேற்றத்தின் வழியாகப் பெண்களையும், காமத்தையும் Devalue செய்ய வேண்டும். கோகுல் பிரசாத் தனது கட்டுரையில் மறைமுகமாக பிரம்மச்சரியம் (Celibacy) ஒருவனது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பதை நிறுவியிருக்கிறார். அதை ராணுவ கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை எனினும், ஒழுக்கத்தை சுயமாக வகுத்துக்கொள்ளும் மனோதிடம் அவசியம். ஏனெனில், விருப்பமில்லாத பிரம்மச்சரியம் ஒருவனை விரக்திக்கு மட்டுமே இட்டுச் செல்லும். அதனால் எவ்வகையிலும் முன்னேற முடியாது.





203 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page