நான் நேற்று கல்லூரிக்கு வராதபோது, என்னை ஒருவன் தேடி வந்ததாக ப்ரீத்தா சொன்னாள். என்னைக் காதலிப்பதாகவும் அதை என்னிடம் தெரிவிக்க வந்ததாகவும் அவளிடம் கூறியுள்ளான். இன்று மீண்டும் வருவதாகக் கூறிச் சென்றிருக்கிறான். யாராக இருக்கும்? என்னை ஒருவன் காதலிக்கிறான் என்பதைக் கேட்க நன்றாக இருக்கிறது. அவன் யாரென்று தெரியாதது ஆர்வத்தைத் தூண்டுகிறது. அதே சமயம், என்மேல் உள்ள காதலை அடுத்தவரிடம் சொல்லித் தெரியப்படுத்துவது ஏமாற்றத்தை அளிக்கிறது.. யாரந்த மக்குக் காதலன்?
"அதோ இருக்கான் பாரு. அவன்தான் நேத்து உன்ன தேடி வந்தவன்" என்று ப்ரீத்தா கை காட்டிய திசையை நோக்கி நடந்தேன். திரும்பி நின்றுகொண்டிருந்ததால் அவனுடைய முகம் தெரியவில்லை. உருவத்தை வைத்துப் பார்க்கையில், கல்லூரி மாணவனைப் போலில்லை. அருகே செல்லச் செல்ல ஆர்வம் அதிகரித்தது. நான் அருகில் சென்றதும், நான் வந்த சத்தத்தைக் கேட்டோ அல்லது என் வாசத்தை வைத்தோ அவன் திரும்பியிருக்கக்கூடும். அழகாகப் புன்னகை புரிந்த அந்த முகத்தைக் கண்டதும், ஒரு கணம் உறைந்து விட்டேன்.
"ஏ.ஆர்.ரஹ்மான்!"
திடுக்கென்று முழிப்பு வந்து விட்டது. இது போன்ற அழகிய தருணமெல்லாம் கனவில்தான் நடக்க வேண்டுமா? தூக்கம் கலைந்தும், அப்படியே கைப்பேசியையும் ஹெட்செட்டையும் எடுத்து ‘பம்பாய்’ படத்திலிருந்து 'கண்ணாளனே' பாடலைக் கேட்டேன்.
"காலங்காத்தாலையே காதுல மாட்டிகிட்டியா? எழுந்திரிச்சி போய் குளிடி. காலேஜ் கல்ச்சுரல்ஸ் இருக்கு, சீக்கிரம் போகணும்னு சொன்னல" என்று அதட்டிக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள் அக்கா.
எழுந்து, முகம் கழுவி, பல்லை துலக்கியதும் தேநீர் கொண்டு வந்தாள் அம்மா. அந்த தேநீர் கோப்பையை என் கைகளால் கட்டியணைத்து முதலில் அதன் வாசத்தை நுகர்ந்து காற்றூதி குடிக்கும் இந்த ஐந்து நிமிடம்தான் என் ஒவ்வொரு நாளின் சிறந்த நிமிடங்கள். வியப்பளிக்கும் பகல் கனவு, அதட்டி எழுப்பும் செல்ல அக்கா, ரஹ்மான் இசை, அம்மாவின் தேநீர், சூரியனிடம் ஒரு காலை வணக்கம், கையிலொரு கவிதைப் புத்தகம் என்று ஒவ்வொரு பகலும் இப்படி அழகாக விடிவதால்தான், என் ஒவ்வொரு நாளும் அழகாக நகர்கிறது.
வேகமாகக் குளித்தபின், எனக்குப் பிடித்த சிகப்புச் சுடிதாரை உடுத்தினேன். சிகப்புச் சுடிதார் என்பதாலும் கல்ச்சுரல்ஸ் என்பதாலும் வழக்கத்தை விட அதிகமாக லிப்ஸ்டிக் பூசிக்கொண்டேன். கல்லூரிக்கு விரைவாகச் செல்ல வேண்டும் என்பதால் இன்று வெறும் பத்து நிமிடங்கள்தான் கண்ணாடியில் முகம் பார்த்தேன்.
கல்லூரியில் தெரிந்த முகங்கள், தெரியாத முகங்கள், வெளி கல்லூரி மாணவர்கள் எனப் பலர் இருந்தனர். மாணவர்கள் அரங்கத்திற்கு வரத் தொடங்கினர். நானும் ப்ரீத்தாவும் அரங்கத்திற்குள் சென்று அமர்ந்தோம். நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. மற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது எனக்கு எப்பொழுது இசை நிகழ்ச்சி ஆரம்பமாகுமென இருந்தது. விசாரித்துப் பார்க்கையில், அது கடைசி நிகழ்ச்சி என்று தெரிய வந்தது. இசை நிகழ்ச்சி ஆரம்பமாக மாலை ஆகிவிட்டது. மொத்தம் ஆறு குழுக்கள் பங்கேற்றனர். முதல் ஐந்து குழுவில் மூன்று அணியின் செயலாக்கத்தை ரசித்தேன். கடைசி குழு மாணவர்கள் தங்கள் இசையைத் தொடங்கினர். கீபோர்ட் வாசிப்பவன்தான் முதலில் ஆரம்பித்தான். என்ன இசையென்று தெரியவில்லை. ஏதோ தட்டிக் கொண்டிருந்தான். ஆனால் கேட்க நன்றாக இருந்தது. அந்த மெல்லிசையை மெலிதாக முடித்து 'புன்னகை மன்னன்' இசையை வாசித்ததும் அரங்கமே நெகிழ்ந்து போனது. அந்த இசைக்குத் துணையாய் 'உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே...' என்று ஒருவன் கவி பாடிக்கொண்டு மேடைக்குள் வந்ததே அழகான ஆரம்பமாக இருந்தது. "அவனுடைய தமிழ் உச்சரிப்பு எவ்ளோ அழகா இருக்குல" என்றாள் ப்ரீத்தா. ‘புன்னகை மன்னன்’ இசையும், ‘இருவர்’ கவிதையும் ஒரே சமயத்தில் முடிந்ததும் 'எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது...' என்று ஆரம்பமானான் ஒரு பாடகன். அதைத் தொடர்ந்து 'ஆருயிரே மன்னிப்பாயா...' என்று பாட ஆரம்பித்தாள் அந்த அணியின் பாடகி. இறுதியாக அந்த அணியே சேர்ந்து பாடிய 'முஸ்தபா...' பாடலுக்கு மொத்த அரங்கமும் கை உயர்த்தி அசைத்தது. இந்த அணியின் செயலாக்கத்தால் எங்கள் கல்லூரி விழா ஒரு கொண்டாட்ட மன உணர்வோடு முடிந்தது.
அரங்கத்தைவிட்டு வெளியேறத் தொடங்கினோம். மணி பத்து ஆனது. எப்படி வீட்டிற்குச் செல்வதென யோசிக்கையில், ப்ரீத்தா வண்டியில் வந்ததாக ஞாபகத்திற்கு வந்தது. என்னை வீட்டில் விடுமாறு கேட்டேன்.
அரங்கத்தின் வெளியே நின்றுகொண்டு நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். எங்களுக்கு எதிரில் ஆங்காங்கே கும்பலாகச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். எனக்கு எதிரில் ஒருவன் என்னை எட்டி எட்டிப் பார்ப்பது போல் தெரிந்தது. ஆம்! அவன் என்னைத்தான் பார்க்கிறான். தயங்கிக்கொண்டே அவன் பார்க்கும் பார்வை எனக்கொரு கர்வத்தை உண்டாக்கியது. நான் பார்த்ததும், தலை குனிந்துகொள்கிறான். அவனுடைய நண்பர்கள் எல்லோரும் விடைபெற்று விட்டனர்.
"ப்ரீத்தா.. ஒருத்தன் என்ன அடிக்கடி பார்த்திட்டு இருக்கான். டக்குனு திரும்பாத. பொறுமையா அப்படியே வேற எதையோ பார்க்கிற மாதிரி திரும்பு. அதோ அந்த ப்ளாக் ஷர்ட். கடைசி டீம்ல கீபோர்ட் வாசிச்சவன் மாதிரி இருக்கான். அவனான்னு பார்த்து சொல்லு" என்றதும் ப்ரீத்தா பொறுமையாகத் திரும்பிப் பார்த்தாள்.
"ஹே! அவன் என் ஸ்கூல் ஃப்ரெண்ட். பேரு நித்யன். என் கிளாஸ்மேட்தான். நல்லா பாடுவான். உன்ன மாதிரியே. ஸ்கூல் டேஸ்ல எனக்கு அவன் மேல ஒரு க்ரஷ் இருந்திச்சு. அவனே வந்து எக்ஸ்பிரஸ் பண்ணட்டும்னு விட்டுட்டேன். ஆனா அவன் என்கிட்ட சாதாரணமாதான் பேசுனான்" என்று கூறிவிட்டு அவனை நோக்கி நகர்ந்தாள் ப்ரீத்தா. அவன் ப்ரீத்தாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போதும் பார்வை அடிக்கடி என்மீதுதான் வந்து போனது. ப்ரீத்தா பள்ளியில் செய்த தவற்றை இம்முறை நான் செய்ய விரும்பவில்லை. அவர்களை நோக்கி நடந்தேன்.
"ப்ரீத்தா.. மீனு மேம் உன்ன உடனே வர சொன்னாங்க" என்று சொன்னதும் எல்லாம் அறிந்தவாறு சிரித்துவிட்டுச் சென்றாள். அவனிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அவனும் அமைதியாக நின்றான். கைகளை பிசைத்துக் கொண்டும் இல்லாத நகங்களைப் பிய்த்துக் கொண்டும் நட்டை உடைத்துக் கொண்டும் இருந்தான். வெட்கப்படுகிறேன் போலும்.
"நான் சொல்லணும்னு நினைச்சேன். உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு. ஐ திங்க் வி ஷுட் ரெகார்ட் இட். நான் என்னைக்குனு உங்களுக்கு சொல்றேன்" என்றான்.
"எப்படி?"
"என்ன எப்படி?"
"எப்படி சொல்லுவீங்க?"
"எப்படி சொல்லுவீங்கன்னா? புரில"
"என் நம்பர் எடுத்துக்கோங்க". அதற்குள் அவன் அக்கா வீட்டிற்கு வந்துவிட்டோம். அவன் உள்ளே சென்று, அவனுடைய மாமாவிடமிருந்து வண்டி சாவியை வாங்கிக்கொண்டு வந்தான். இருவரும் வண்டியில் சென்றோம்.
"வீடு எங்க உங்களுக்கு?" என்றேன்.
"நான் அண்ணா சாலைல இருக்கேன்" என்றான். நான் என் வீட்டிற்கான வழியைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
"சரி கேட்கணும்னு இருந்தேன். என்ன ரொம்ப நேரமா பார்த்துட்டு இருந்தீங்கதான?" என்றேன்.
"இன்னைக்கி கல்ச்சுரல்ஸ்னால அதிகமா போட்டேன். ஏன் கேட்டீங்க?"
"உங்களுக்கு அழகா இருக்கு. முடிஞ்ச அளவுக்கு அதிகமாவே போடுங்க"
"ஓ தேங்க்ஸ்!". அதன்பிறகு இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இந்த முன்பனி இரவில் ஒரு புதிய நண்பனுடன் வண்டியில் அமைதியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டு வருவது இதமாக இருந்தது.
என் வீட்டின் தெருவை அடைந்தோம்.
"நிறுத்திக்கோங்க. நான் இங்கேயே இறங்கிக்குறேன். அதோ அதான் என் வீடு" என்று காண்பித்தேன்.
"போயிட்டு மெசேஜ் பண்ணுங்க"
"கண்டிப்பா. ரொம்ப தேங்க்ஸ் கொண்டு வந்து விட்டதுக்கு"
"வெல்கம்" என்று சொல்லிவிட்டு கிளம்பினான். நான் வீட்டிற்கு சென்றவுடன் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிறேன்.
"Reached Home. Thanks for the wonderful time"
"Fine. It's Pleasure to talk with a Music Lover. Will be in touch" என்று அவனிடமிருந்து பதில் வந்ததும் தூங்கச் சென்றேன். இனி ரஹ்மானுக்கு என் கனவில் எந்த வேலையும் இல்லை!
*
அடுத்து நாள் கல்லூரியில் ப்ரீத்தாவிடம், நேற்று நடந்ததைப் பற்றி ஒன்று விடாமல் சொன்னேன். நான் சொன்னதை ஆர்வமாகக் கேட்டாள். சில நிகழ்வுகளை விவரிக்கும்போதெல்லாம் அவள் ஏன் அவ்வளவு வெட்கப்பட்டாள் என்று தெரியவில்லை. முக்கியமாக நானும் நித்யானும் சேர்ந்து பாடியதைச் சொல்லும்போது.
"லவ் பண்றேன்னுலாம் அவன் சொன்ன உடனே ஒத்துக்காத. கொஞ்சம் அலைய விடு. என்ன ஸ்கூல்ல எவ்ளோ அலையவிட்டான் தெரியுமா?"
"ஏன் அலையவிடணும்? ஸ்கூல் டேஸ்ல உனக்கு அவனை பிடிச்சிருந்துதுன்னா நீ அவன்கிட்ட பேசியிருக்கணும். அவனே வந்து பேசட்டும்னு கெத்து காமிச்சா இப்படித்தான்"
"ஓய்! அப்போ உனக்கு அவனை புடிச்சா நீயே போய் லவ் பண்றேன்னு சொல்லுவியா?"
"ஒருவேளை எனக்கு புடிச்சா நானே சொல்ல போறேன். இதுல என்ன இருக்கு? அன்ப வெச்சிக்கிட்டு அடக்கி வைக்கிறதுல என்ன பிரயோஜனம்? ஒருவேளை அவன் என்கிட்டே லவ்வ சொன்னா, அலைய விட்டு நான் என்னத்த சாதிக்க போறேன்?"
"சும்மா. உனக்காக எவ்ளோ நாள் வெயிட் பண்ணுறான்னு ஒரு டெஸ்ட்தான். உடனே ஒத்துக்கிட்டா உன்ன சாதாரணமா நினைச்சிடுவான்"
"நா அதான? ஒரு சாதாரண பொண்ண சாதாரணமா நினைக்கிறதுல என்ன இருக்கு? அது என்ன டெஸ்ட் அசிங்கமா? ஒருவேளை நாளைக்கு நாங்க பிரியுற நிலைமை வந்தா 'லவ் பண்ண ஆரம்பத்துல என்ன எவ்ளோ அலைய விட்ட, இப்போ என்னடி என்ன விட்டுட்டு போற'னு என்மேல இருக்கிற மொத்த அன்பும் வெறுப்பா மாறும்”
"நீ என்னடி அதுக்குள்ள பிரியுறத பத்தி பேசுற? இன்னும் சேரவே இல்ல. இப்போதான பேச ஆரம்பிச்சிருக்க"
"ஒரு எக்ஸாம்பிள்க்கு சொன்னேன். எல்லா சந்தர்ப்பத்துக்கும் ரெடியா இருக்கணும்ல. ஒருத்தர பிடிக்கிறது எவ்ளோ இயல்போ அதே போல பிடிக்காம போறதும் இயல்புதான! நீ இதுக்கு முன்னாடி ராஜேஷ லவ் பண்ண. நீதான் வாழ்க்கைன்னு நினைச்சிதான அவன் உன்ன லவ் பண்ணான். அப்புறம் எப்படி அவனுக்கு உன்னப் புடிக்காம போச்சி?"
ப்ரீத்தாவின் முகமே மாறிவிட்டது. மௌனமாக இருந்தாள். இதை சொல்லியிருக்கக்கூடாதோ என்று தோன்றியது.
"ஹே சாரி. இன்டென்ஷ்னலா அப்படி சொல்லல. ஒருத்தவங்க நம்மள ரிஜெக்ட் பண்றாங்கன்னா, நம்ம தப்பானவங்கன்னு ஆகிடாது. நம்ம அவங்களுக்கு ஏத்த மனுஷங்களா இல்லாம இருக்கலாம்; அவ்வளவுதான். இதுல யார் மேலயும் தப்பு இல்ல. நீ அவனை விடாம கட்டிப் போட்டு வெச்சிருந்தா, உங்க ரிலேஷன்ஷிப் எவ்வளவு டாக்ஸிக் ஆகியிருக்கும்னு யோசிச்சுப்பாரு" என்று சொல்லி அவளுடைய கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கைகளைத் தேய்த்துக் கொண்டேன்.
நித்யனிடமிருந்து அழைப்பு வந்தது. 'சந்திக்கலாமா?' என்றான். எங்கே என்று வாட்ஸாப்பில் இடம் அனுப்புவதாகச் சொன்னான். கல்லூரி முடிந்ததும், அவன் அனுப்பிய இடத்திற்குச் சென்றேன். ஒரு தேநீர் குடித்துவிட்டு, எங்கேயோ அழைத்துச் செல்வதாகச் சொன்னான். ஒரு ரெகார்டிங் ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றான்.
"உள்ள வா. நேத்து சொன்னேன்ல உன் குரலை ரெகார்ட் பண்ணனும்னு. அதான். 'எங்க போன ராசா...' கவர் சாங் பண்ணலாம்னு இருக்கேன். கரோகி மிக்ஸ் பண்ணிட்டேன். நீ தான் பாடணும்'' என்றான். எப்படிப் பாட வேண்டும் என்று சொன்ன சில நுணுக்கங்களைக் கேட்டுக்கொண்டேன். மைக் முன்பு பெரிய ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு நின்றேன். நித்யன் கண்ணாடிக்கு அந்த பக்கத்திலிருந்து Dm கார்டில் பாடுமாறு சொன்னான். நானும் அவன் சொன்ன ஸ்ருதியைப் பிடித்துக்கொண்டேன். பாடலை மென்மையாக ஆரம்பித்தேன்.
பாடும்போது எல்லாவற்றையும் மறந்துவிட்டு வேறு உலகத்திற்குச் சென்றது போல் உணர்ந்தேன். சொர்கத்தைப் பூமியில் கண்ட நொடிகள் அவை. ஹெட்செட்டைக் கழட்டிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியேறினேன். அவனைப் பார்த்துக்கொண்டே அவனிடம் சென்றேன். அவனும் என்னை முத்தப் பார்வை பார்த்துக்கொண்டிருந்தான். எனக்கு இன்னும் அவன் அமைத்த அந்த கரோகி மிக்ஸ் கேட்கிறது.
ஒருவன் மேல் காதலை வைத்துக்கொண்டு அவனிடம் நண்பனைப் போல் நடிப்பதுதான் எவ்வளவு கடினமாக உள்ளது. இப்பொழுதே இந்த அழகான வேளையிலேயே அவனைக் கட்டியணைத்துக் காதல் பேச வேண்டுமென்று தோன்றுகிறது. இருந்தாலும் ஒரு நாணம் வந்து என்முன் வெட்கிக்கொண்டிருக்கிறது. என் கன்னத்தில் உரசிய சிறு கூந்தலை என் காதோரம் கோதிவிட்டு அவன் பார்த்தபோதே தெரிந்துகொண்டேன் அது காதல் தானென்று.
"ரொம்ப அழகா பாடின" என்றான்.
"நல்ல இருந்திச்சி நீ பண்ண கரோகி மிக்ஸ்"
"ஃபைனல் அவுட்புட் முடிச்சிட்டு அனுப்புறேன்"
அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். என்னை வீட்டில் இறக்கிவிட்டான். அவன் கன்னத்தில் ஒரு முத்தமிட ஆசையாக இருந்தது. அந்தப் பாடலைக் கேட்கக் காத்திருப்பதாகச் சொன்னேன்.
அன்றிரவு முழுவதும் உறங்கவில்லை. விடியும்வரை நித்யனுடன் கைப்பேசியில் உரையாடினேன். இசையைத் தாண்டி எங்களுக்கு என்னென்ன பிடிக்கும் பிடிக்காது என்பதையெல்லாம் பகிர்ந்தோம். அடுத்த நாள் ப்ரீத்தாவிடம், இரவு பேசியதில் தேர்ந்தெடுத்து சிலவற்றை மட்டும் கூறினேன்.
"எனக்கு தோன்றத நான் வெளிப்படுத்தாம அடுத்தவங்க வெளிப்படுத்தணும்னு நினைக்கிறது என்ன நியாயம்?"
"என்னவோ பண்ணித் தொல"
அடுத்த நாள் நித்யன் அழைத்து வெளியில் கூட்டிச்செல்வதாகச் சொன்னான். நானும் அவனுக்காகக் கல்லூரியில் விடுமுறை எடுத்துக்கொண்டேன். வழக்கத்தைவிட அதிகமாகவே லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டேன். என்னை அழைத்துச் செல்ல அவன் வந்திருந்தான். எப்போதுமில்லாமல் இன்று அவனைப் பார்க்கையில் ஒரு சிறிய தயக்கம் தொற்றிக்கொண்டது. காதலை எப்படி எங்கே சொல்வதென்ற யோசனையும் பதற்றமும் பரவிக்கிடந்தது. வண்டியில் செல்லும்போது அவன் பேசிய எதுவும் என் செவிக்கெட்டவில்லை. நான் ஏதோவொரு யோசனையில் மூழ்கிக்கிடந்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக வண்டியில் சென்றுகொண்டிருக்கிறோம் என்பது மட்டும் நேரம் பார்த்து அறிந்துகொண்டேன். நானும் 'எங்கே செல்கிறோம்' எனக் கேட்காமல் காற்றைப் பாடவிட்டு அவன் தோளில் ப்யானோ வாசித்தவாறு மௌனமாக இருந்தேன். இவன் என்னுடன் இருக்கிறான் என்றால் எங்கே வேண்டுமானாலும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லத் தயார் என்பதன் உவமையாகத்தான் அந்த அமைதியை உரக்க வெளிப்படுத்தினேன்.
கடைசியில் நாங்கள் சென்று சேர வேண்டிய இடத்தை அடைந்தோம். அவன் படிக்கும் கல்லூரிக்கு அழைத்துச் சென்றான். அவனுடைய வகுப்பறை வாசல் வரை சென்றோம்.
அந்த வராண்டாவில் நின்றுகொண்டு, எங்களுக்குக் கொஞ்சம் தொலைவிலிருந்த ஒரு கருப்புச் சுடிதார் அணிந்த பெண்ணைக் காண்பித்து அவளைத்தான் காதலிப்பதாகச் சொன்னான். அவன் அவளைப்பற்றிச் சொல்லச் சொல்ல, நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள்மேல் சிறிது பொறாமையாக இருந்தது. என் வாழ்வில் நான் மறக்க முடியாத ஆனால் மறக்க நினைக்கும் நொடி அது. என்னதான் சந்தோஷங்கள் மறைந்தாலும் சோகங்களுக்கென்றே நினைவுகளில் ஒரு தனி இடம் இருக்கத்தான் செய்கிறது.
"அவ எங்க க்ளாஸ்தான். இதுவரை சரியா பேசினதுகூட கிடையாது. ஃபார்மல்லா சப்ஜெக்ட்ஸ் பத்தி நாலஞ்சி தடவ பேசியிருப்போம். ஒரு ஆறு மாசமா எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. ஏன்னு தெரில. எனக்கு அவகூட பேசணும் பழகணும் தோணுது. ஆனா ஒரு பயங்கரமான பயம். ஒவ்வொரு தடவையும் அப்படியே திரும்ப வந்திடுவேன். நீ சொல்லு. இப்போ நா என்ன செய்ய?”
"எனக்கு எதுவும் தோணல. நீ என்ன பண்ணலாம்னு இருக்க?"
"நான் சொன்னா ஏதாவது தப்பா எடுத்துப்பாளோன்னு இருக்கு. அவளே வந்து பேசட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்"
"அப்போ நீ காலம் பூரா வெயிட் பண்ணிட்டுத்தான் இருக்கணும். உனக்காக ஒருத்தி வெயிட் பண்ண மாதிரி"
"எனக்காகவா? யாரது?"
"அத விடு. நீயே போய் லவ் சொல்றதுல எந்தத் தப்பும் இல்ல. உனக்குத் தோன்றத நீ வெளிப்படுத்தாம அடுத்தவங்க வெளிப்படுத்தணும்னு நினைக்கிறது என்ன நியாயம்?”
"நீ சொல்றது சரிதான். நான் என்னனு போய் இப்போ சொல்றது அவகிட்ட?"
"எடுத்த உடனே சொல்லாத. முதல்ல பேசு, அவளைப் பத்தித் தெரிஞ்சிக்கோ, ஏதாவது ஒரு அழகான நேரத்துல ரொம்ப சாதாரணமா சொன்னாலே போதும்"
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை காதலிக்கும் எந்தப் பெண்ணிற்கும் நேரக்கூடாது. அன்று முழுவதும் நித்யன் மகிழ்ச்சியாக இருந்தான். நான் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடித்தேன்.
சோகம் என்னும் சுதந்திரத்திலிருந்து காதல் என்னும் சிறைக்கு விடுபடுவதையெண்ணி இனி எந்தப் பயனும் இல்லை. நித்யன் என்னை விட்டுச்சென்றுவிட்டான் என்று நான் ஒருபோதும் நினைக்க மாட்டேன். என்மீது நித்யனுக்குக் காதலிருந்தது என்று நானாகவே கற்பனை செய்துகொண்டது, இப்போது இல்லாமல் போய்விட்டது என்பதைவிடக் காணாமல் போய்விட்டது என்று எடுத்துக்கொள்கிறேன்.
நித்யன்! உன்னை நித்தமும் நினைத்துக்கொண்டுதான் இருக்கிறேன். என்னைப்பற்றிய அபிப்பிராயம் உன்னிடம் என்னவாக இருந்திருக்குமென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். நீ என் காதோர குழலைக் கோதும்போது என்ன யோசித்திருப்பாய் என்று அனுதினமும் எண்ணிச் சாகிறேன். இணையதளத்தில் உன் புகைப்படங்களைப் பார்க்கும்போது கேல்லன் கலீலா ஓவியங்களை அணுகியதைப் போல் உணர்கிறேன். நீ அனுப்பிய குறுஞ்செய்திகளைப் படித்துப் பார்க்கும்போது கலீல் ஜிப்ரானின் கவிதைகளைப் படிப்பது போல இருக்கிறது. எல்லாவற்றிலும் ஒரு சோகம் படிந்திருக்கிறது. பகற்பொழுதில் ஒளியறிய இயலா நேரத்தில், உன் வருகை என்பது எதிர்பாராத ஒன்று. அந்த முன்னிரவில் நாம் பேசியதைப் பற்றி யோசிக்காத பின்னிரவுகளே இல்லை. நீயென் அருகில் இருப்பதைப் போல் கற்பனை செய்த ஒவ்வொரு இரவிலும் ஒளியைக் கண்டறிந்தேன். இன்று உன் இல்லாமையைப் பற்றி யோசிக்கும்பொழுது, முதன்முறையாக இரவு இருட்டாக இருந்தது.
நான் உன்னிடம் காதலைச் சொல்லி அதை நீ ஏற்ற அடுத்த கணம், உன்னை ஆசை தீரச் சத்தம் போட்டு 'நித்யா' என்று அழைக்க வேண்டுமென்று இருந்தேன். நீ காதலிப்பவளின் பெயர்கூட எனக்குத் தெரியாது. எனக்கும் பள்ளியில் ஒரு காதல் இருந்தது. அதன் முடிவும் சோகம்தான். ஆனால் அதிலிருந்து மீள எனக்கு இசை உதவி செய்தது. உன்னைக் காதலிக்கும் முன்பே நம் பிரிவைப் பற்றிக் கற்பனை செய்தேன். அந்தப் பள்ளிக் காதலைப் போலவே, இந்தப் பிரிவிலும் நான் மீள்வது சாத்தியம் என்று எண்ணினேன். ஆனால் அதன்பிறகு எனக்கு ஏற்பட்ட மாற்றமே வேறு.
‘The Hottest Love Story has a Coolest End’
இதில் Socrates ‘Hottest Love’ என்று அர்த்தப்படுவது மெய் தீண்டலையோ முத்தப் பகிர்தலையோ அல்ல. அது ஒரு முரட்டுத்தனமான காதல் நிலை. நான் இப்போது அந்த நிலையை அடைந்துவிட்டேன். உன்னை எளிதில் கடந்து விடுவேன் என்ற எண்ணம் மறைந்து நீ இல்லாமல் இருப்பது கடினம் என்ற நிலைக்கு வந்தவுடன்தான் நம் காதல் காணாமல் போகவேண்டுமா? உன்னை இழந்துவிட்டேன். இனி இழக்க உன் மீதான நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அதையும் இழந்தாக வேண்டுமா என்ற யோசனையும், இழந்துதான் ஆக வேண்டுமென்ற கட்டாயமும் போட்டியிட்டுக் கொள்கின்றன. உன் நினைவுகளில் சிக்கித் தவிப்பதும் உன்னைக் கடந்து செல்வதும் இசை வசம்தான் உள்ளது.
இந்த இரவை ரஹ்மானுடன் சேர்ந்து, உன் நினைவுகளும் ஆட்கொள்கின்றன நித்யா.
*
அதன்பிறகு நித்யனைப் பார்க்கவுமில்லை, அழைக்கவுமில்லை. அவனும் எனக்கு எந்தக் குறுஞ்செய்திகளையும் அனுப்பவில்லை. அன்றிலிருந்து என்னை எதனுடனாவது அதிகமாக ஈடுபடுத்திக்கொள்ள விரும்பினேன். நண்பர்களுடன் அதிகமாக நேரம் செலவழிக்கத் தொடங்கினேன். அதிகமாக சினிமா பார்த்தேன். என்னைச் சுற்றியிருந்த மனிதர்களிடம் அதிகம் உரையாடினேன். தனிமை, இசை, புத்தகங்களைத் தவிர்க்கத் தொடங்கினேன். ஒரு நல்ல பாடலுக்கு இடையிலும், ஒரு நல்ல கவிதைக்கு நடுவிலும் நித்யனின் ஞாபகம் என்னை வாட்டியெடுத்ததால் அவற்றையெல்லாம் தவிர்க்க ஆயத்தமானேன்.
அன்றொரு நாள் வெற்றிடத்தை உணர்ந்தபோது, நித்யனைப் பற்றிய ஞாபகம் என்னைத் துரத்திக்கொண்டே இருந்தபோது செய்வதறியாமல் திளைத்துக்கொண்டிருந்தேன். அந்த முன் மழை மாலையைக் காதலின் யோசனையில்லாமல் கடந்துவிட முடியுமா என்ன! அவனைப் பற்றிச் சிந்திக்கக்கூடாது என்பதற்காகவே தனியாகக் கிளம்பி சினிமாவிற்குச் சென்றேன். நான் தனியாகப் பார்த்த முதல் படம் அதுதான்.
'காதலும் கடந்து போகும்' படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது இரவு பத்து மணியாகியிருந்தது. பேருந்து, ஆட்டோ ஏறுவதற்கு இரண்டு தெருக்கள் கடக்க வேண்டியிருந்தது. மழை நேர இரவென்பதால் தெருக்களில் ஆட்கள், வாகனங்கள் அவ்வளவாகக் காணவில்லை. நான் ஏறவிருக்கும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தேன். சாலையில் மஞ்சள் வண்ண விளக்குகளில் மழை வந்திறங்கும் அழகைக் கண்டுகொண்டிருக்கும்போது, ஒரு கணம் கீழே கண்டால் பேருந்து நிறுத்தத்தில் நித்யன் அமர்ந்துகொண்டிருந்தான். அவனும் மழையில் நனைந்திருந்தான். என்னைப் பார்த்ததும் ஒரு போலிப் புன்னகைகூடக் காட்ட முடியாத அளவிற்கு சோகத்திலிருந்தான். அவனருகில் சென்று அமர்ந்தேன்.
"என்ன நித்யன்? இங்க உட்கார்ந்திட்டிருக்க?"
"நீ சொன்ன மாதிரியே அவகிட்ட பேச ஆரம்பிச்சேன். அவளும் நல்லா பேசினா. நாங்க ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். நேத்து லவ் சொல்லலாம்னு இருந்தேன். ஆனா அவ காலேஜுக்கு வரல. என்னனு விசாரிச்சப்பதான் தெரிஞ்சிது; அவ காலேஜ் டிஸ்கன்டின்யூ பண்ணிட்டுப் போய்ட்டா. என்ன காரணம்னுலாம் தெரில. அவ இந்த ஊர்லயே இல்லையாம்" என்று நொறுங்கிய குரலில் சொன்னான். அவன் முகத்தில் மழையின் ஈரம் படித்திருந்தாலும் அவன் சிந்திய கண்ணீர் மட்டும் தனியாகத் தெரிந்தது.
"அழுறியா நித்யன்? ஏன் அழுற? உன்ன இழந்தப்போ எனக்கு வராத அழுகை ஏன் அவளை இழந்தப்போ உனக்கு வருது? நம்ம ரெண்டு பேருக்குள்ள இருந்தது என்னனு உன்னால கொஞ்சம்கூடப் புரிஞ்சிக்க முடியலையா?"
"எனக்கு தெரிஞ்சிது. அது வளர்ந்திடக் கூடாதுனுதான் காலேஜுக்குக் கூட்டிட்டு போய் அவளைக் காட்டினேன்"
"ஓ! உனக்கு வேற ஒருத்திய புடிச்சிருக்குனு தெரிஞ்சா எனக்கு உன்மேல இருக்குற காதல் குறைஞ்சிடும்னு நினைச்சியா?" என்று சொல்லும்போதே எனக்கும் அடைமழைக்கிடையில் அழுகை தூற ஆரம்பித்தது.
நித்யனுக்காக அழவே கூடாது என்றிருந்த நான், அன்று நித்யனிடமே அழுது தீர்த்தேன். எதற்காக அழுகிறோம் என்பதைவிட யாருக்காக அழுகிறோம் என்பதுதானே முக்கியம். ஒரு நபருக்குச் சொந்தமான அழுகையை, அவருக்கே தெரியப்படுத்துவதென்பது எவ்வளவு பெரிய வரம். அவன் என் விரல்களைப் பிடித்துக்கொண்டான். நான் அழுததற்குக் காரணம், நித்யனை இழந்ததை எண்ணியோ என் காதலை எண்ணியோ அல்ல. அவன் சிந்திய கண்ணீர்தான் என்னையும் அழவைத்தது. அந்த நாளில் சோகத்தின் சாம்பல் படிந்திருந்தாலும் அது என் வாழ்வின் மிகச் சிறந்த இரவு. அழுதல் என்பதொரு தியான நிலையென்பதை உணர்த்திய ஓர் அற்புத இரவு. ஆயிரமாயிரம் மழைத்துளிகளுடன் சேர்ந்து எங்கள் ஆறேழு கண்ணீர்த் துளிகளும் இந்த நிலத்தின்மீது விழுந்தது.
*
இன்று யாருமில்லா அவனுடைய தனியறையில் அவனைக் கட்டியணைத்துப் படுத்துக்கொண்டிருக்கிறேன். அந்த அடைமழை இரவின் கைப்பற்றுதலுக்கும் இந்த பொன்மாலைப் பொழுதின் மெய்ப்பற்றுதலுக்கும் இடையில் மனம் பற்ற, நித்யனுக்கு சில கால இடைவெளி தேவைப்பட்டது. நான் சொன்னது போலவே ஒரு அழகான நேரத்தில் மிகச் சாதாரணமாக என் மேலிருந்த காதலைச் சொன்னான். இந்தக் கணம், அவன் விரலை வருடிக்கொண்டு எந்த யோசனைகளுமில்லாமல் அறையின் மேற்சுவரை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
"உன்கிட்ட ஒன்னு சொல்லணும். எனக்கு அப்பா அம்மா யாருமில்ல. நா சின்ன வயசா இருக்கும்போதே அப்பா இறந்துட்டாரு. 10th படிக்கும்போது அம்மா இறந்துட்டாங்க. கூட பிறந்தவங்களாம் யாருமில்ல. தாத்தாதான் என்ன வளர்த்தார்"
எனக்கு நித்யனின் அன்பு தேவைப்படுகிறது என்ற எண்ணமெல்லாம் மறைந்து, இப்பொழுது நித்யனுக்கு என்னுடைய அன்பு அவசியமென்ற எண்ணம் உண்டானது. நமக்கு ஒருவர் தேவையென்பது எவ்வளவு சுயநலம் என்றும் அந்த ஒருவருக்கு நாம் தேவையென்பதுதான் காதலின் தூய வடிவமென்பதையும் உணர்த்திய நிகழ்விது.
"உனக்கு வாழ்க்கைல ஏதாவது ஆம்பிஷன் இருக்கா?" என்றான்.
"எனக்கு என்ன புடிக்கும்னுதான் உனக்கு தெரியுமே. அது சம்மந்தமா ஏதாவது ஒரு வேலை செய்யணும். உனக்கு என்ன ஆம்பிஷன்?"
"தொலஞ்சு போகணும்"
"என்ன?"
"ஆமா. எங்கேயாவது தனியா தொலஞ்சு போகணும்"
"நீ எங்க தொலஞ்சு போனாலும் சீக்கிரமே என்னத் தேடி வந்திடு"
"ஒருவேளை நீ தொட முடியாத தூரத்துக்கு நான் போய்ட்டா, உன்னால எனக்கு ஒரு ஃபோன் கால்கூடப் பண்ண முடியாத நிலைமை வந்தா என்ன பண்ணுவ?"
"இப்போ எதுக்கு இதை கேக்கிற?"
“நான் தனியா ஒரு ட்ராவல் பண்ணலாம்னு இருக்கேன். எங்க எத்தனை நாளுன்னுலாம் எந்தத் திட்டமும் இல்லாம ஒரு பயணம். எனக்கு எப்போ தோணுதோ அப்போ திரும்பி வரலாம்னு இருக்கேன். அது, நாள் கணக்கிலும் ஆகலாம் மாசக் கணக்கிலும் ஆகலாம். இந்த ட்ராவல் என்னோட பல நாள் கனவு. நிறைய கான்சர்ட் பண்ணி கொஞ்சம் பணம் சேர்த்தேன். இப்போ தாத்தா அவரோட பென்ஷன் காசுல இருந்து பணம் கொடுத்திருக்கார். காலேஜ் முடியட்டும்னுதான் இவ்ளோ நாளா வெயிட் பண்ணிட்டிருந்தேன். சோ ஐயம் லீவிங். எப்போ எங்கேன்னுலாம் கேட்காத. நான் ஃபோன், இன்டர்நெட் எதுவும் யூஸ் பண்ண போறதில்ல. நீ எல்லா நேரமும் என்ன பத்தியே யோசிச்சிட்டு இருக்காத"
"நித்யா. நீ வேற ஒரு வாழ்க்கையை வாழ்ந்திட்டு வர போற. உன்னப் போகாதன்னு சொல்ற எந்த உரிமையும் எனக்கில்ல. நீ சந்தோஷமா போய்ட்டு வா. கொஞ்ச நாள் கழிச்சி நீ என்ன மறக்கலாம். உனக்கு அப்போ என்ன பிடிக்குதோ இல்லையோ! நம்ம சேருவோமோ இல்லையோ! உனக்காக எப்பவும் என் அன்பு இருந்திட்டிருக்கும். மறந்திடாத" என்று சொல்லிவிட்டுத் திகட்டத் திகட்ட முத்தங்களைப் பகிர்ந்துகொண்டோம். இதற்குப்பின் இவனை எப்போது காண்போம் என எண்ணி அழுதேன். அந்தக் கண்ணீரையும் முத்தத்தால்தான் துடைத்தான். செல்வதற்கு முன், அவன் இசையும் என் குரலும் சேர்ந்த 'எங்க போன ராசா' பாடலைப் பரிசளித்துவிட்டுச் சென்றான். அவன் இல்லாத நாட்களில் இந்தப் பாடலை கேட்பதைவிட வேறெந்த வழியேக? அந்த இரவு அவனிடம் பிரியாவிடை பேசிவிட்டு நகர்ந்தேன். அவனுடைய புன்னகை கொண்ட அந்த கடைசி சித்திரம் இன்னும் என் கண்களைவிட்டு அகலவில்லை. இப்படியொரு சிறந்த குணமுடையானைக் காதலிப்பதற்கு சாட்சியாகவும், அதை நான் என் வாழ்வில் எந்தக் கட்டத்திலும் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் என் காதல் கதையை இந்த டைரிக் குறிப்பில் எழுதுகிறேன்...
Comentarios