top of page
Search
Writer's pictureBalu

கால வெளியிடை - வார்த்தை இவன் அர்த்தம் இவள்

Updated: May 5


பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக, வானகரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் வேளை. வானமகள் பருவமழையை அள்ளி விசும்பக் காத்திருக்கும் மாலை. காலியாக பேருந்து வந்தாலே, ஏனோ மனதில் ஒரு பரவசம் ஏற்படுகிறது. கண்களை மூடி நுகர்ந்து இழுத்து மனச்சிறை செய்துகொள்ளும் அளவிற்குச் சில்லென்ற காற்று. ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கையில் சட்டென்று கன்னத்தில் விழும் பெரும் மழையின் முதற்சொட்டுத்தூறல். ஜன்னலோரமும் மழைத்தூறலும் சொர்க்கம் பிரபஞ்சத்திற்கு வெளியே இல்லை என்பதை உணர்த்தியது. இந்த மழைமீது ஏன் எனக்கு இவ்வளவு காதல்? மழையிலிருந்து கலை பிறப்பதினாலா காதல் பிறப்பதினாலா? கலைக்கும் காதலுக்கும் துளியும் சம்பந்தம் இல்லாத எனக்கு ஏன் இந்த மழை மோகம்? மழைப்பொழுதின்போது மட்டும் ஏன் என் செவி 'அன்னக்கொடி' பாடல்களை நாடுகிறது? மேகம் மூடியதும் மங்கையை முத்தமிட மனம் முட்டிக்கொள்வது எதனால்? மழைக்குப் பல முகங்கள் உண்டு. அதில் நான் காண்பது ஓர் ஓவியச் சுவடு. வானில் திக்குத்திசை தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும் காக்கைகள், குளிரில் கட்டித்தழுவிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சஞ்சரிக்கும் காதலர்கள், வீடுகளின் ஜன்னல்களில் வழியும் மழை நீர்த்துளிகள், மழைக்கு ஒதுங்கியிருக்கும் மற்ற பள்ளி மாணவிகள், குடைகளில் குடிபுகுந்த  குமரிகள், கூரைகளைப் போர்த்திக்கொள்ளும் தெரு வியாபாரிகள், தாயின் சேலையில் அடைக்கலம் புகுந்திருக்கும் குழந்தைகள். மழை பொழியும் மாலைப்பொழுது என்பதால் பேருந்தில் கூட்டம் கூடிக்கொண்டே போனது.

"இந்த  பேக கொஞ்சம் வெச்சிக்குறீங்களா?" என்று முன்பனிக்காற்று மனதைத்தொட்டு போதையேற்றிய அப்பொழுதில் பின்பக்கத்திலோர் கோதைக்குரல் காதைதொட் டழைத்தது!

அடர்த்தியான புருவம், பூனைக் கண்கள், ஸ்ட்ராவ்பெர்ரி நிற உதடு, ஈர இரட்டை ஜடை, கொஞ்சும் கண்ஜாடை, பொங்கி எழப் பின்வாங்கும் அலை போன்ற இமை மயிர் என எழில் மாதுக்கு உண்டான அத்தனை அம்சமும் கொண்ட ஒருத்தி. என் ஹார்மோன் ஓவர்டைம் வேலை செய்யத் தொடங்கியது. மழையில் நனைந்திருந்த அவளுடைய பையை வருடும்போது அதன் ஈரம் எனக்குள்ளும் புகுந்தது. ஒரு வெயில் காலக் காலைப் பொழுதில் இவளைப் பார்த்திருந்தால், இவளுக்கு நான் செய்திருப்பது அவள் சுமையைப் பகிர்ந்திருக்கும் சமூக சேவை. ஆனால் விதி என்னையும் இவளையும் ஒரு மழைக்கால மாலையில் சந்திக்க வைத்துக் காதலை வரவழைத்து விட்டதோ? மழையும் மங்கையும் சேர்ந்து வந்தால் காதல் வருவதில் ஆச்சரியம் இல்லையே! அழகிய அந்நேரம் பேரழகானது அவளால். கண்ணெதிரே ஒரு அழகி இருந்தாலும் அவளை நினைத்துக்கொண்டே மீண்டும் மழையைக் கவனிக்கத் தொடங்கினேன். எனக்கு அருகிலிருந்தவர் நிறுத்துத்ததில் இறங்க, அவள் என்னருகில் வந்து அமர நேர்ந்தது. வலப்புறத்தில் மழையும் இடப்புறத்தில் மாதுவும். ஒரேயொரு நொடி, நான் அவள் கண்களைச் சந்திக்க நேர்ந்தது. அந்தச் சுழலும் விழிகளில் உழலும் சிறுவனாய் ஆனேன். பேருந்து இறுதி நிறுத்தத்தை அடைந்து விட்டதால் எல்லோரும் விரைவாக இறங்கினர். நான் கடைசியாக இறங்கலாம் எனப் பொறுமை காத்தேன். பின்பு பேருந்தில் அவளும் நானும் மட்டும் இருந்தோம். அவளுடைய பையை என்னிடமிருந்து அவள் வாங்கிக்கொள்ளாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஓவியம் போலவள் ஒன்றும் பேசாமல் ஒரு பார்வையால் வாவென்றழைத்தாள்.  முதலில் அவள் பேருந்தை விட்டு இறங்கினாள். பிறகு நான் அவள் பையைச் சுமந்துகொண்டு இறங்கினேன். நானும் அவளும் தூறலும் ஆளில்லா தெருவில் நடந்துகொண்டிருக்கையில் நானே முதலில் பேசத் தொடங்கினேன்.

"பேர் என்ன?"

 "சங்கீதா”

"நீ இங்கேயா இருக்க?"

"ஆமா.. அன்பு நகர்ல தான் வீடு" என்றாள். அவள் பேச்சில் எந்த தயக்கமும் நடுக்கமும் இல்லை. நெடுநாள் பழகிய நண்பனிடம் பேசுவது போல் பேசினாள்.

"அன்பு நகர்லயா இருக்க ! நா இதுக்கு முன்னாடி உன்ன இங்க பார்த்ததே இல்ல"

ஆனா நா உன்னப் பார்த்திருக்கேன்"

"என்னையா? எங்க?" என்றேன் ஆச்சரியத்துடன்.

"நீ எங்க ஸ்கூலுக்கு கிரிக்கெட் மேட்ச் விளையாட வந்தல்ல.. அப்போ"

"அப்போ பார்த்தத இன்னுமா ஞாபகம் வெச்சிருக்க?"

"என் ஃப்ரெண்ட்ஸ் உன்ன பத்தி பேசின பேச்சு அப்படி"

"என்னப் பத்தியா? என்ன பேசுனாங்க?" என்றேன்.

"ரொம்ப ஜொள்ளு விட்டாளுங்க. நீ அவ்ளோலாம் இல்லையே”

"ஓ! அப்போ பஸ்ல  பேக வாங்காம கண்லயே ஏதோ சொல்லிட்டுப் போனியே. அதுக்கு என்ன அர்த்தம்?” என்று நான் கேட்ட சமயத்தில் என் வீட்டை நெருங்கிவிட்டேன். என் வீடு இன்னும் கொஞ்சம் தூரமாக இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது. என் வீட்டைப் பார்த்தபடி "அதுக்கு என்ன அர்த்தம்னு நாளைக்கு சொல்றேன்" என்றாள். நல்ல வேளையாக நான் கேட்ட கேள்விக்கான பதிலை நாளை சொல்கிறேன் என்றாள். இன்றே சொல்லியிருந்தால் நாளை பேசக் காரணம் கிடைத்திருக்காது. என்னிடமிருந்து அவளுடைய பையைப் வாங்கிக்கொண்டு கிளம்பினாள். என் வீட்டு பால்கனியில் நின்று "சங்கீதா" என்று கத்தினேன். அவள் திரும்பிப் பார்த்தாள்.

"என் பேரு வருண்" என்றேன்.

"தெரியும்" என்று சிரித்துக்கொண்டே சொன்னாள். இந்தத் தெருவைத் தாண்டும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

*

வகுப்பில் பாடங்கள் எதையும் கவனிக்கவில்லை. வழக்கத்தைவிட அதிகமாகக் கடிகாரம் பார்த்தேன். பள்ளி முடிந்தபின் அரை மணி நேரம் அரட்டை அடித்துவிட்டுச் செல்லும் நான் இன்று, முதல் பேருந்திலேயே கிளம்பியதைக் கண்டு நண்பர்கள் ஆச்சரியமடைந்தனர். பேருந்தில் அவள் வரவில்லை.  நூற்றுக் கணக்கான பயணிகள் வந்திறங்கும் எங்கள் பேருந்து நிலையத்தில், அவ்வொரு திருமுகத்தைக் கண்டிட ஒரு மணி நேரம் ஆயிற்று. காத்திருந்த நேரத்தில் அவளிடம் என்னவெல்லாம் பேச வேண்டுமென்று யோசித்து வைத்திருந்தேன். அவளைப் பார்த்த அந்நொடியில் வியர்த்துப் போய் எல்லாவற்றையும் மறந்தேன். அத்தனை பேருக்கு நடுவில் நின்றுகொண்டிருந்த அவள், என்னைத் தேடியதைக் கண்டு நெகிழ்ந்தேன். என்னைப் பார்த்துப் புன்னகைத்து கையசைத்தாள். என் இரண்டாம் நாள் கதைத்தல் தொடங்கிற்று.
"என்னதான தேடின?" என்றேன்.

"எனக்காக தான வெயிட் பண்ற?” என்றாள்.

"ஆமா"

நேற்று பெய்த மழையினால் உண்டான சகதியில் கால் படாமல் தாண்டித் தாண்டி நடந்துகொண்டிருந்தோம். அப்பொழுது தான் அவள் கையை முதன்முறையாகப் பற்றிக் கொண்டேன். 

"ஸ்கூல் எப்படிப் போச்சி?" என்றாள்.

"வழக்கம் போலத்தான்"

"என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட உன்ன பத்தி சொன்னேன்"

"என்னனு?"

"நேத்து நடந்தத பத்தி. நா உன்னப் பார்த்தது, உன்கிட்ட பேசுனதுலாம் சொல்லும்போது அவளுங்க முகத்த பாக்கணுமே!”

"அடிப்பாவி! உன் ஃப்ரெண்ட்ஸ வெறுப்பேத்தி பார்க்கத்தானா? சரி, நீ அப்படிப் பண்ணதைப் பார்த்துட்டு இவளுக்கு நம்மளப் புடிச்சிருக்குப் போலனு நான் நினைச்சிருந்து, உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிருந்தா என்ன பண்ணிருப்ப?" என்று எப்படியோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு  கேட்டு விட்டேன்.

"உனக்கு அந்த அளவுக்குலாம் தைரியம் இல்ல"

"அதுவும் கரெக்ட்தான். நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா இது வரைக்கும்?

"இதுவரைக்கும் இல்ல. நீ?"

"நானும் இதுவரைக்கும் இல்ல"

"உன்ன யாரையாவது லவ் பண்ணிருக்கணுமே?”

"ப்ரொபோஸ் பண்ணிருக்காங்க. ரெண்டு பேர் மட்டும். ஒருத்தன் பேரு லோகேஷ். அவன் பாக்குற பார்வையே பயமா இருக்கும். சும்மா சும்மா அவன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட என்னப் பத்தி ஏதோ சொல்வான். அவனுங்க ஒரு மாதிரி சிரிப்பானுங்க. எனக்கு கடுப்பா வரும். லவ்வ சொன்னதையே ஒரு மாதிரி அதட்டித்தான் சொன்னான். இன்னொருத்தன் பேரு ஹரி. ரொம்ப இன்னொசென்ட். ரொம்ப நாளா பார்த்துகிட்டே இருந்தான். ஒரு நாள் திடீர்னு வந்து டீசெண்டா லவ்வ சொன்னான். ஆனா எனக்குத்தான் அவன் மேல ஃபீலிங்ஸ் ஏஹ் வரல"

"இவங்கள என்னன்னு சொல்லி ரிஜெக்ட் பண்ண?"

"ஸ்டடீஸ்ல கான்செண்ட்ரேட் பண்ணனும்னு சொல்லிட்டேன்; உனக்கு ப்ரோபோசல்ஸ் வந்துருக்கா டா?"

சலித்துக்கொண்டேன்.

"ஏன் வருண்? உனக்கு என்னடா குறை? நீயும் அழகாதான இருக்க?

"ஏய் ! முந்தா நேத்துதான அவ்ளோ வொர்த் இல்லனு சொன்ன?"

“பேசுனதும் அழகாயிட்ட!" என்று அவள் சொன்னதும் அவளைக் கண்கொட்டாமல் பார்த்தேன். எங்கிருந்தோ வந்து தொற்றிக் கொண்டது ஒரு தைரியம்.

"சங்கீதா. எனக்கு உன்னப் புடிச்சிருக்கு.. உன்ன லவ் பண்றேன். நீ லவ் பண்ணலைனாகூடப் பரவாயில்ல. ஒரு மூனு நாளா நம்ம என்ன பண்ணிட்டு இருக்கோமோ அது தெனமும் கிடைச்சா நல்லா இருக்கும்னு தோனிச்சு. அதான் சொல்லிட்டேன். உன்னோட நாள்ல டெய்லி எனக்காக கொஞ்ச நேரம்  செலவு பண்ணு போதும்." 

நான் காதலைச் சொன்னதும் மௌனமாக இருந்தாள். நானும் அவளுடைய மௌனத்திற்கு ஆறுதலாக நடந்து வந்தேன். இந்நேரத்தில் நான் எதுவும் பேசக்கூடாது என்று பட்டது. அவள் யோசிக்க அவகாசம் கொடுக்க வேண்டும். இன்று கேள்வியேதும் நான் கேட்கவில்லையெனினும் நாளை அவள் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது.

"சரி பார்த்து போ சங்கீதா. மண்டே பார்க்கலாம்" என்றேன்.

"வருண்" என்று அவள் அழைத்ததும் ஆர்வம் எட்டியது. 

"என்ன உங்க வீட்டுக்குலாம் கூப்பிட மாட்டியா?" என்றாள்.

"அப்படிலாம் இல்ல. வீட்ல யாரும் இல்ல, அதான். உனக்கு ஒன்னும் இல்லனா இப்பவே உள்ள வா" என்றழைத்தேன். திருமகளின் தரிசனத்தைப் பெற்றதெனதில்லம்.

"டீ, காஃபி ஏதாவது போடவா சங்கீதா? என்று கேட்டேன்.

"இருக்கட்டும் பரவால்ல" என்றாள்.

அவள் என் வீட்டின் ஒவ்வொரு அங்கங்களையும் பார்த்துக்கொண்டிருந்தாள். ஹாலிலிருந்து அடுத்த அறைக்குள் நுழைந்தாள். அது எங்கள் இல்ல நூலகம். அந்த அறை என் அம்மாவால் சேர்த்து வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களால் நிறைந்திருக்கும். அத்தனை புத்தகங்களையும் அவள் ஆச்சரியமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தது ஒரு சித்திரம் போல இருந்தது. ஒன்றிரண்டு புத்தகங்களில் தூசி படிந்திருந்தது. அதை எடுத்துப் பார்த்துத் தட்டிச் சுத்தம் செய்தாள்; என்னையும் சேர்த்து.  அவள் அருகில் மெதுவாகச் சென்றதும்தான் தெரிந்தது, அவள் ஏதோ யோசனையில் இருக்கிறாளென்று. சட்டென்று என்னைப் பார்த்து "வருண். நா ஒன்னு கேக்கவா?" என்றாள்.

"ஹ்ம்ம். கேளு"

"என்ன நெஜமாவே லவ் பண்ற தான?"

அவள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல வார்த்தைகள் முன்வரவில்லை. மாறாகக் கண்களால் அவளதுக் கண்ணிரண்டைத் தீண்டினேன். கரங்களால் அவளதுக் கன்னத்தைத் தீண்டினேன். இதழால் அவளது உதட்டையும் தீண்டினேன்.

ஆயிரம் புத்தகங்களின் சாட்சியாக என் வாழ்க்கையின் முதல் முத்தம் அரங்கேறியது. அவள் கீழுதடு என் வசத்திலும் என் மேலுதடு அவள் வசத்திலும் உள்ளம் காதல் வசத்திலும் உடல் காம வசத்திலும் இருந்தது. என் இச்சை பசியாற்றிய இக்கணத்தை போலொரு இன்பத்தை இனிவாழ்வில்  உணர்ந்து விடவா போகிறேன். 

அவள் காத்திருப்பில் தொடங்கிய இந்நாள் அவள் கேள்வியுடனும் என் முத்தத்துடனும் முடிந்தது. அவள் கிளம்பும் முன்பு எனக்குப் பிடித்த காதல் நாவலைப் படிக்கத் தருமாறு கேட்டாள். நான் 'பால்ய கால சகி' புத்தகத்தைக் கொடுத்தேன். என்னிடமிருந்து வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு கிளம்பினாள்.

*
சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் அவளைப் பார்க்க முடியாதக் கவலையுடன் இருந்தேன். காலை கிரிக்கெட் விளையாடிய பின் மதியம் உண்று உறங்கி விட்டேன். 6 மணிக்குத் தூக்கம் கலைந்ததும் முகம் கழுவிவிட்டு பால்கனிக்கு வந்து நின்றேன். வெளியில் சங்கீதா நின்றுகொண்டிருந்தாள். அவள் வருகையைத் துளியும் எதிர்பாராத எனக்கு வியப்பாக இருந்தது. என்னைப் பார்த்தவுடன் கையசைத்தாள்.

"இங்க என்ன பண்ற?" என்றேன்.

"வா அப்டியே ஒரு வாக் போலாம்"

நானும் அவளும் தினமும் வரும் வழியில் தான் இன்றும் நடந்தோம். வழக்கத்தைவிட அழகாக இருக்கிறாள். இவள் என்னுடன் இருக்கிறாள் என்பதைத் தவிர்த்து, இந்த மழைத் தூவா மழைக்கால மாலை அற்புதமாகவே இருந்தது.

இருவரும் ஒரு சாட் ரெஸ்டாரண்ட் சென்று ஆளுக்கு ஒரு பிளேட் பானிப்பூரி வாங்கி சாப்பிட தொடங்கினோம்.

"உங்க ஃபேமிலி பத்தி சொல்லு" என்றேன்.

  "அப்பா வெளியூர்ல வேலை செய்றாரு. அண்ணன் கேப் ட்ரைவரா இருக்கான். அம்மா வீட்லதான் இருக்காங்க. கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டான குடும்பம். நம்ம இங்க வந்தது தெரிஞ்சாலே அவ்ளோ தான். உங்க வீட்ல எப்படி?"

"நான் வீட்டுக்கு ஒரே பையன். அம்மா ஜர்னலிஸ்ட்டா இருக்காங்க. செம ஜாலி டைப்"

 "அப்பா?"

மௌனமாய் இருந்தேன்.

"சாரி வருண்"

"நீ ஏன் சாரி சொல்ற? அதைப்பத்தி உனக்கு இன்னொரு நாள் சொல்றேனே"

 அங்கிருந்து கிளம்பி அமைதியாக நடந்தோம்.

"வருண்.. நேத்து ஒரு கனவு டா. நான் உன் கையப் பிடிச்சிக்க ட்ரை பண்றேன். அது நழுவிட்டே இருக்கு. கடைசி வரைக்கும் உன் கையப் பிடிக்கவே முடியல. பயந்து எழுந்திட்டேன்"

"உன் கைய கொடு" என்றதும் கையை நீட்டினாள். அவள் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டேன்.

"நம்ம கை நழுவல. போதுமா? கனவுல வந்ததெல்லாம் போட்டுக் குழப்பிக்காத"

"இருந்தாலும் ஒரு மாதிரி இருக்குடா"

"இப்போ நா உன் பக்கத்துல இருக்கனான்னு மட்டும் யோசி சங்கீதா"

"லவ் யு வருண்"

"ஹ்ம்ம் நானும்"
                                                                                 *

என் வார இறுதி, அவள் நினைவில் கழிந்தது. கடந்த நான்கு மாலைகளில் நடந்த எல்லாவற்றையும் என் அம்மாவிடம் கூறினேன். அந்த முத்தத்தைத் தவிர! சங்கீதா மேலிருந்த அதீதக் காதலால் என் மனம் கனமாக இருந்தது. எப்பொழுது திங்கள் மாலை வரும், அவளைப் பார்த்து என் காதல் கனத்தை அவளிடம் இறக்கிவிடலாம் என்றிருந்தேன்.

தினமும் காலை ஏழு மணிக்கு விழித்துக்கொள்ளும் நான், திங்கட்கிழமை காலை ஆறு மணிக்கே எழுந்து விட்டேன். அநேகமாக இன்றுதான் என் வாழ்வில், நான் விரும்பி ஏற்ற முதல் திங்கட்கிழமையாக இருக்கும். என்றும் இல்லாத அளவில் ஒரு புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் உணர முடிந்தது.

அந்தப் புத்துணர்ச்சி, மாலை வரை சிறிதளவும் குறையாமல் இருந்தது. அவளுக்காக மாலை ஆறரை மணி வரை காத்திருந்தேன். கடந்த இரண்டு நாளைவிட இந்த இரண்டு மணி நேரம் நீண்டதாக இருந்தது. பள்ளிக்கே சென்றிருக்க மாட்டாள் என்று நினைத்து என் வீட்டிற்குக் கிளம்பினேன்.
அந்த வாரம் முழுவதும் அவள் வரவில்லை. நான் தினமும் மாலை ஆறரை மணிக்குத்தான் வீட்டிற்குச் செல்கிறேன். அம்மாவிடம் தினமும் ஸ்பெஷல் கிளாஸ் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எனவே முடிவெடுத்தேன்; அவள் பள்ளி வாசலில் நின்று பார்த்து விடலாம் என்று.

  அவள் பள்ளியிலிருந்து மாணவர்கள் வரத் தொடங்கினர். அடர்த்தியான மூங்கில் காட்டில் தன் புல்லாங்குழலைத் தேடும் இசைக் கலைஞனைப் போல, நான் தேடியது அந்த ஒரே ஒரு முகத்தைத்தான். என் தேடலும் வீண் போகவில்லை. சரியாகப் பத்து நாட்களுக்குப் பிறகு அவளைப் பார்க்கிறேன். யாரோ ஒருவருடன் வண்டியில் சென்றாள். என்னைப் பார்த்தவுடன் அவள் முகத்தில் அதிர்ச்சி இருந்ததேத் தவிர மகிழ்ச்சி காணப்படவில்லை. எனக்கு எதுவும் விளங்கவில்லை. அவளுடைய அந்த முகபாவனையின் அர்த்தம் எனக்குப் புதிராகவே இருந்தது. இருந்த இடத்தை விட்டு நகராமல் அங்கே திகைத்து நின்று யோசித்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து ஒரு பெண் என்னை நோக்கி விரைவாக வந்தாள்.

"நானே வரலாம்னு இருந்தேன். சங்கீதா உன்கிட்ட இதைக் கொடுக்க சொன்னா" என்று கடிதத்தை நீட்டினாள். நான் வெடுக்கென்று அதை வாங்கி பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.

அன்புள்ள வருண்,
                               நான் என்னைக்கு உன்ன முதன்முதலா பார்த்தேனோ அப்பவே எனக்கு உன்னப் புடிச்சிப் போச்சு. பஸ்ல அவ்ளோ பேர் இருந்தும் நான் உன்கிட்ட பேக கொடுத்ததுக்கும் இறங்கும்போது அத உன்கிட்ட இருந்து வாங்காம போனதுக்குக் காரணமும் அதான். உனக்கு முன்னாடியே எனக்கு உன்மேல காதல் வந்துடிச்சு. 

  முதன்முதலா உன் கையப் பிடிச்சப்போ ஒரு வெப்பத்தை உணர்ந்தேன். அந்த குளிருக்கு அது இதமா இருந்திச்சி. இப்பவும் அந்த வெப்பம் அப்படியே இருக்கு. எப்பவும் இருக்கும். அப்புறம் நீ என்னதான் என் கைய அழுத்தி பிடிச்சிக்கிட்டாலும் நான் கண்ட கனவு நெஜமாய்டிச்சி பார்த்தியா!
 நீ அன்னைக்கு காதல சொல்வேன்னு எதிர்பார்த்ததுதான், ஆனா அவ்ளோ அழகா சொல்லுவன்னு சத்தியமா எதிர்பார்க்கவே இல்ல. நீ கொடுத்த முத்தம் காலத்துக்கும் மறக்காது.

  இந்த அழகான நிமிஷங்கலாம் இனிமே கிடைக்குமானு தெரிலடா. நம்ம லவ் பண்றது, நம்ம வெளிய போனது,

நா உங்க வீட்டுக்கு வந்ததுலாம் எங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சிடிச்சு. அம்மா அடிச்சாங்க. தினமும் அண்ணன்தான் ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போய் வீட்டுக்குத் திரும்ப கூட்டிட்டு வரான். நம்ம பார்க்குறது பேசுறது இனிமே கஷ்டம். 10th பப்ளிக் எக்ஸாம் அடுத்த மாசம் முடிஞ்சதும் ஊருக்கு அனுப்பிடுவாங்க. +1,+2 எப்படின்னு தெரில. என்ன மறந்திடு வருண். நீ எதைப்பத்தியும் யோசிக்காம படிப்புல கவனம் செலுத்து. எக்ஸாம் நல்லா எழுது. ஆல் தி பெஸ்ட். உன்கூட மறுபடியும் எப்போ போசுவன்னு தெரில. அந்த நாள் வருமா வராதான்னு கூட தெரில. லவ் யூ சோ மச் டா.
                                                                                                                    
                                                                                                                      அன்புடன்.
                                                                                                                         சங்கீதா
 
கடிதத்தைப் படித்து முடித்ததும் கண்களின் விளிம்பில் ஒரு சொட்டுக் கண்ணீர் தேங்கி இருந்தது. வானும் கண்ணும் செக்கச் சிவந்திருந்தது. இந்த காலத்தில் காதல் கடிதம் பெறுவதென்பது எவ்வளவு பெரிய வரம். அந்தக் கடிதத்தை எப்படியும் ஒரு நூறு முறையேனும் வாசித்திருப்பேன். அது வெறும் கடிதமா? வார்த்தைகளால் கோர்த்து காதல் மாலையை அல்லவா சூட்டிவிட்டுச் சென்றிருக்கிறாள் !
அந்த மூன்று நாட்கள் என்பது என் வாழ்க்கையில் நடந்த ஒரு சொப்பனம். நான் ஏன் அவளுக்கு ஒரு பதில் கடிதம் எழுதக் கூடாது? பெறுநர் முகவரி தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. என் கடிதத்தை அவளிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதல்ல என் நோக்கம். என்னைப் போலவே சங்கீதா எழுதிய கடிதமும் தாபத்துடன் உள்ளது. அதற்கு ஒரு காதலன் இருந்தால் நன்றாக இருக்கும்தானே!  எனவே எழுதுகிறேன்.

அன்புள்ள சங்கீதா…



19 views0 comments

Recent Posts

See All

‘கால வெளியிடை’ - தவசியின் உரை

சென்ற ஆண்டு வெளியாகி அனைவருக்கும் பிடித்து மிகவும் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் 96. படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் காதல் மட்டும்...

பாரியின் குரல்செய்தி - கால வெளியிடை

பாலு, கால வெளியிடை படித்தேன்; சந்தோஷம். உன்னுடன் பழகிய நான்கு வருடங்களில் நான் உன்னிடம் கண்ட கருத்தியல், ரசனை, உணர்வுகள் எல்லாம் சேர்த்து...

Comments


Post: Blog2_Post
bottom of page