ரஷ்யச் செவ்வியல் இலக்கியங்களை வாசிப்பின் முதற்கட்டத்திலேயே வாசிக்கலாமா அல்லது பயிற்சி வேண்டுமா?
ரஷ்யச் செவ்வியல் உலகிற்குள் நுழைவதற்கான முதற்தேவை நேரம். ஏற்கெனவே சொல்லியிருப்பதுபோல், சொல்லப்பட்டிருப்பதுபோல் கேளிக்கைகளை அகற்றினாலே நம்ப முடியாத அளவில் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். அப்படிப்பட்ட ஒருவரால் எவ்வளவு பக்கங்கள் கொண்ட புத்தகங்களையும் ஒழுங்குடன் சில வாரங்களில் வாசித்துவிட முடியும். கேளிக்கைகளை கைவிடும்பொருட்டு ஒருவரை சமூக வலைதள செயலிகளை நீக்கச் சொன்னால் முதலில் அவருக்கு வரும் சந்தேகமும் தயக்கமும், ‘நாம் அறிவார்ந்த ஏதோவொன்றைத் தெரிந்துகொள்ள முடியாமல் போகக்கூடுமோ!’ என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அவர் தன்னைக் கடிந்துகொண்டு சில மாதங்கள் அவற்றிலிருந்து வெளியேறினால் மூளைக்குள் பல்வேறு மாயங்கள் நிகழ்வதை உணர முடியும். சமூக வலைதளத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அறிவுத்தளத்தில் முழுமை இருக்காது. சிறிது சிறிதாக ஆங்காங்கே பேண்டுவைக்கப்பட்டிருப்பது சிந்தனையாகவே இருந்தாலும் அது மலத்திற்குச் சமம். எனவே தற்காலத்திலிருந்துகொண்டே நூறு ஆண்டுகள் முன்னோக்கிச் சிந்திக்க வேண்டுமானால், பழக்க வழக்கங்களில் முந்நூறு ஆண்டுகளாவது பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
நான் இலக்கிய வாசிப்புப் பயிற்சியே இல்லாத காலகட்டத்தில்தான் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அன்னா கரீனினா’, ‘புத்துயிர்ப்பு’ படித்தேன். தமிழிலக்கியத்தில் எல்கேஜியாக இருந்தபோதும்கூட இந்நூல்களில் பேசப்பட்டிருந்த மனித விழுமியங்களை உணர முடிந்தது. கண்ணீர் சிந்த முடிந்தது. பாவ மன்னிப்பு கேட்க முடிந்தது. அதன்பொருட்டு எழுதப்பட்ட கதைதான் ‘உயிர்த்தெழுதல்’ (தொகுப்பு - ‘துயரங்கள் விற்பனைக்கல்ல’). இதுபோன்ற செவ்வியல் இலக்கியங்களை மொழிபெயர்ப்பின்மூலம் ஆரம்பத்திலேயே படித்துவிடுவதன் நன்மைகள் என்னவென்றால், அதன் மொழி நமக்கு அந்நியமாக இருக்காது. தமிழிலக்கியங்களை அதிகம் வாசிக்கும் எத்தனையோ பேர் ‘குற்றமும் தண்டனையும்’ சுசீலாவின் மொழிபெயர்ப்பைக் கண்டு சோர்வடைவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் என்னைக் கேட்டால் தமிழில் ‘முகமூடிகளின் பள்ளத்தாக்கு’ நூலுக்கு அடுத்தபடியாக சிறந்த மொழிபெயர்ப்பாக அதைத்தான் சுட்டிக்காட்ட முடிகிறது.
இந்நூல்கள் அனைத்துமே இலக்கிய உச்சங்களாகக் கருதப்படுபவை. ஆரம்பத்திலேயே இந்நூல்களை வாசித்துவிடுவதில் மற்றொரு நன்மை என்னவெனில், தொடக்கத்திலேயே வாசகனின் ரசனையும் தரம் பலமடங்கு மேம்பட்டிருக்கும். இந்த நாவல்கள் கொடுத்த அனுபவங்களை ஈடு செய்யும் வகையில் இன்னொருவர் எழுதினால் மட்டுமே அதை அவனால் நல்ல நாவலாக ஏற்றுக்கொள்ள முடியும். அந்தத் தரம் என்பது பிரம்மாண்டத்தைச் சார்ந்திருக்க வேண்டியதாக அல்லாமல், அடர்த்தியைச் சார்ந்திருந்தால்கூடப் போதும் என்பதே அவனது எதிர்பார்ப்பாக இருக்கும். இதனால்தான் தஸ்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘கரமசோவ் சகோதரர்கள்’ படித்த கையோடு பலரால் காஃப்காவையும், காம்யூவையும் ரசிக்க முடிகிறது. ஆனால் டால்ஸ்யாய், செகாவ், சிங்கிஸ் ஐத்மேத்திவ் எனக் கொஞ்சல் பரந்துபட்ட ரஷ்ய இலக்கிய வாசிப்பு இருந்த எனக்கு காஃப்கா, காம்யூவின் எழுத்துகள் எரிச்சலையே உண்டாக்கின.
சமீபத்தில் ‘போரும் வாழ்வும்’ நாவலை வாசிக்கத் தொடங்கி 800 பக்கங்கள் வரை வாசித்தேன். மேற்கொண்டு என்னால் அதைத் தொடர முடியவில்லை. தற்போதைக்கு அது எனக்கான நாவலாகத் தோன்றவில்லை. ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலை அடுத்தாண்டு வாசிக்கலாமெனத் திட்டமிட்டிருக்கிறேன். மற்றபடி, ஒருவர் இந்த நூல்களைப் பயிற்சிக்குப் பிறகுகூட வாசிக்கலாம்.
உடற்பயிற்சிக்கூடத்தில் நான் ஆசிரியராகப் பார்க்கும் ஒருவர், அந்நாளுக்கான மிகக் கடுமையான பயிற்சிகளை முதலிலேயே செய்ய வைத்துவிடுவார். மேலும் ஒரு பயிற்சியின் முதல் செட்டில் அதிக எடை தூக்கச் சொல்லிவிட்டு அடுத்தடுத்த செட்களில் எடையைக் குறைத்துக்கொள்ளச் சொல்வார். சராசரிகளின் வழிமுறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த முறையைச் செய்யும்போது, 3 செட்களுமே நமது பலத்தைச் சீண்டிப்பார்க்கக்கூடியதாக இருக்கும். அதேபோல் செவ்வியல் இலக்கியங்களை ஆரம்பத்திலிருந்தே வாசித்து வருவதால், புத்தகம் வாசித்தல் என்பது நம் உழைப்பைக் கோரக்கூடிய மகத்தான செயல், ஓர் ஒத்திசைவு என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
Yorumlar