சில மாதங்களுக்குப் பிறகு பாலு மகேந்திரா நூலகத்திற்கு ‘அன்னா கரீனினா’ நாவலை எடுப்பதற்காகச் சென்றிருந்தேன். ’முதல் பாகம் எங்கிருக்கிறதெனத் தெரியவில்லை. வேறு புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நான் கண்டு பிடித்ததும் அழைக்கிறேன்’ என்றார் அங்கிருந்தவர். அப்படியாகத்தான் நான் படித்த முதல் ரஷ்ய நாவலான ‘குற்றமும் தண்டனையும்’ என்னைத் தேடி வந்தது.
பொதுவாக தஸ்தயேவ்ஸ்கியைப் பற்றிப் பேசினாலே உளைச்சல் என்ற வார்த்தையை உச்சரிக்காமல் உரையாடல் நிகழாது. இலகிய மனமும் கதைக்கான தகுந்த சூழலையும் (அதுவும் இப்படியான ஒரு தனிமைக்காலத்தில்) வாழ்வில் பெற்றவர்கள் இந்நாவலின் முதல் பக்கத்திலேயே உளைச்சல் அடைந்து விடுவார்கள். பெரிதாக ஆர்வமின்மையோடு படிக்கத் தொடங்கிய இந்நாவலை முதல் இரண்டு முக்கிய கதைகள்/அத்தியாயங்கள் எனது கவனத்தைப் பெற்றது. ஒன்று, மர்மெலதோவாவின்ன் கதை; மற்றும், பல்கேரியாவின் (கதாநாயகனான ரஸ்கல்னிகோவின் தாய்) கடிதம்.
பல்கேரியா தனது மகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். கதாநாயகனின் தங்கைக்கு நடக்கவிருக்கும் திருமணத்தைப் பற்றியும், மணந்து கொள்ளப்போகும் மாப்பிள்ளை பீட்டர் பெத்ரோவிச்சைப் பற்றிய கடிதம் அது. பீட்டர் பெத்ரோவிச் இவர்களிடம் எப்படி நடந்து கொண்டான் என்பதை பல்கேரியா அவள் புரிந்து கொண்ட விதத்தில் மகனுக்குக் கடிதம் மூலம் சொல்கிறாள். ஆனால் தன்னை அறிவாளியாகக் கருதிக் கொள்ளும் ரஸ்கோல்னிகோவுக்கு அது வேறு மாதிரியாகப் புரிய வந்து, கடிதத்திலுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றையும் தீவிரமாக ஆராய்ந்து, இதுவரை ஒருமுறைகூட நேரில் சந்தித்திடாத பீட்டர் பெத்ரோவிச்சை வெறுக்கத் தொடங்குகிறான். அந்த இடத்திலேயே சொற்களுக்கான முக்கியத்துவம் புரிய வருகிறது. இப்போதிருக்கும் டிஜிட்டல் உலகிலும் அப்போதிருந்த கடித உலகிலும் நாம் என்பது பிறருக்கு வெறும் வார்த்தைகளால் ஏற்படக்கூடிய முதல் அபிப்பிராயம் மட்டுமே.
Woody Allen இயக்கிய Match Point படத்தில் கதாநாயகன் Crime and Punishment நாவலைப் படிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அதற்கான காரணம் என்னவென்பது படித்த பிறகுதான் புரிகிறது. அந்தப் படத்தில் கொலை செய்யும் காட்சியை இயக்குநர் இந்தப் புத்தகத்திலிருந்துதான் எடுத்திருக்கிறார். கதாநாயகன் ரஸ்கோல்னிகோவ் ஒரு கிழவியைக் கொலை செய்துவிடுவான். இது சம்பந்தமான குறிப்பிட்ட சில அத்தியாயங்கள் மட்டும் த்ரில்லர் நாவல் படிப்பதைப் போலச் சற்று சலிப்பாக இருந்தாலும், பிற்பகுதிகளில் இச்சம்பவத்தை முன்வைத்து ஏற்படக்கூடிய உரையாடல்களெல்லாம் மிக முக்கியமானதாகப்பட்டது. Match Point மட்டுமின்றி, ‘கற்றது தமிழ்’ போன்ற பல்வேறு நவீன படங்களில் இப்புத்தகத்தின் தாக்கம் துளியாவது இருக்கும்.
ஓரிடத்தில் தனது அண்ணன் ரஸ்கோல்னிகோவைப் பற்றி துனியா இவ்வாறு சொல்கிறாள்:
“நெப்போலியன்மீது அவனுக்குப் பயங்கரமான ஈடுபாடு இருக்கிறது! அவனை அதிகமாகக் கவர்ந்திருக்கும் விஷயம் என்ன தெரியுமா? ஒரு தவறான விஷயத்தைச் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, மேதைகளாக இருக்கும் நிறையப் பேர், சற்றும் தயங்காமல் அதனை முடித்துவிட்டுப் பிறகு அதைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் எப்படி அதனை இலகுவாகக் கடந்து விடுகிறார்களென்பதுதான். தானும் அப்படிப்பட்ட மேதைகளில் ஒருவன் என்ற சிந்தனைதான் சிறிது காலமாக அவனுள் குடியிருந்து கொண்டு அவனுக்கு உளைச்சல் தந்து கொண்டிருக்க வேண்டும்.”
அதாவது, நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரஷ்ய இளைஞனுக்கு இருந்த அதே மனநிலைதான் இன்று நமது சூழலிலும் உள்ளது. நாட்டில் நடக்கக்கூடிய பல கலவரங்களுக்குப் பின்னால் ஏதோவொரு அரசியல் அல்லது அமைப்பின் தலைவரின் தாக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கல்லூரி படிக்கும் இளைஞனால் கத்தியைப் பிடித்தவாறு பொது இடத்தில் ஒருவனை (படங்களில் வருவதுபோல் மாஸான உடல்மொழியோடு) வெட்டுவதற்கு அவனுக்கு எந்தத் தயக்கமும் இல்லையெனில், அதற்குப் பின்னால் விஜய், அஜித், ரஜினி, தனுஷ் அல்லது வன்முறையை மேன்மைப்படுத்தும் ஏதோவொரு நடிகனின் அல்லது இயக்குநரின் தாக்கம் இருந்து கொண்டுதானிருக்கிறது. ரஸ்கோல்னிகோவுக்கு நெப்போலியன் என்றால் நமது இளைஞர்களுக்கு ஒரு விஜயோ அல்லது அஜித்தோ, அவ்வளவுதான். இந்த விஷயத்தில் நூற்றாண்டைக் கடந்தும் உலகம் எந்தவொரு மாற்றத்தையும் கண்டடையவில்லை.
துனியா வேலை செய்யும் வீட்டின் கணவானான ஸ்விட்ரிகைலோவ் Womanizer-ஆக இருப்பதால் அவனுடைய தொல்லை தாங்காமல் அங்கிருந்து வெளியேறுகிறாள். ஸ்விட்ரிகைலோவ் தன் மனைவியை இழந்ததும், ரஸ்கோல்னிகோவைச் சந்தித்து துனியாவிடம் தவறாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டபடி 10,000 ரூபிளை வாங்கிக் கொள்ளுமாறு கெஞ்சுகிறான். அடகு வைத்த 5 ரூபிள் மதிப்புள்ள கடிகாரத்தைக்கூட மீட்க முடியாத வறுமையிலிருக்கும் ரஸ்கோல்னிகோவ், கோபத்தில் ஸ்விட்ரிகைலோவைத் திட்டிவிட்டு அவன் கொடுத்த 10,000 ரூபிளை வாங்க மறுக்கிறான்.
நமது அன்றாட வாழ்வில், பணத்தின் பேராசையையே ஊட்டிக்கொண்டிருக்கும் திரைக்கலையைவிட (அயன், மங்காத்தா, சூது கவ்வும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், Money Heist மற்றும் ஏராளமானவை), பணத்தை இரண்டாம் பட்சமாக ஒதுக்கி சுயமரியாதையே முதன்மை என்பதைக் கற்பிக்கும் இலக்கியத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
Womanizer, Pedophile மற்றும் பொறுப்பற்ற கணவனான ஸ்விட்ரிகைலோவ், தவற்றை உணர்ந்தபின் தனது குற்றங்களுக்குத் தற்கொலை மூலமாகத் தானே தண்டனை அளித்துக் கொள்கிறான்.
இதேபோல ரஸ்கோல்னிகோவ் தனது தவற்றுக்குப் பாவ மன்னிப்பைக் கேட்பதற்காக மர்மெலதோவாவின் மகளான சோனியாவிடம், அதாவது சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு விலைமகளின் பாதங்களைத் தொட்டு வணங்கி முத்தமிட்டு மண்டியிடுகிறான். ரஸ்கோல்னிகோவ், ஆரம்பத்தில் யாரைப் ’பணத்திற்காக உடலை விற்கும் தொழில் செய்பவள்’ எனக் கேவலமாகக் குறைத்து மதிப்பிட்டானோ கடைசியில் அவளையே இயேசுவிற்கு நிகராகக் கருதுகிறான். அவளைக் காதலிக்கவும் செய்கிறான். ரஸ்கோல்னிகோவின் குற்றங்களை அவனிடமிருந்தே கேட்டறிந்த சோனியா, அவனைக் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடையச் சொல்கிறாள். தன்னை நெப்போலியனுக்கு நிகரான மேதையாகக் கருதும் ரஸ்கோல்னிகோவ் காவலர் நிலையத்தில் சரணடைவதற்கு முன்பு ஒரு விலைமகளின் அன்பிற்கும், காதலுக்கும், அவளது வார்த்தைகளுக்கும் சரணடைகிறான். அவள் பேச்சைக் கேட்டுக் காவல் நிலையத்திற்குச் செல்கிறான். இதற்கு முன்பு அவனைச் சந்தேகித்து விசாரணை செய்த காவல் ஆய்வாளர்கள் யாரும் அங்கே இல்லை. பாவ மன்னிப்பை நாடிச் சென்ற புனிதன், மீண்டும் தனது சாதாரணன் என்ற நிலைக்குத் திரும்பி அங்கிருந்து சரணடையாமல் வெளியேறுகிறான். வெளியே வந்து இவன் சோனியாவை எதிர்கொள்கிறான். ‘என்ன வந்துவிட்டாய்?’ என்ற சந்தேகத்துடன் குழப்பத்துடனும் கேட்கப்பட்ட ஒற்றை எளிய கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் இவன் மீண்டும் அங்குச் சென்று செய்த குற்றத்திற்கான ஒப்புதல் வாக்குமூலத்தை ஒளிவு மறைவும் பூசலுமின்றி அளிக்கிறான்.
‘குற்றமும் தண்டனையும்’ ஒரு Classic ஆவதற்குச் சோனியா என்பவள் மிக முக்கியமான காரணம்.
Comments