வருணுடைய சிறுகதையில் ஒரு பகுதியையும், இரண்டாம் கதை பெண்ணின் டைரிக் குறிப்பையும் படித்திருப்பீர்கள். இருவருடைய காதல்களின் முடிவிலும் முற்றுப்புள்ளி இருக்காது. ஏதோ சில காரணங்களால், அவர்கள் தங்கள் கதைகளைத் தொடர முடியாமல் போயிருக்கலாம். அதன்பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் என்ன நடந்ததென்று கதைசொல்லியான நான் எழுதுகிறேன்.
வருண் இப்பொழுது வைஷ்ணவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறான். இந்த இடைப்பட்ட காலத்தில், அவனுடைய வாழ்வில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. சங்கீதாவின் பிரிவுக்குப் பின், அதிகமாக திரைப்படங்கள் பார்க்கத் தொடங்கினான். பள்ளி, கல்லூரி கட் அடித்துப் படம் பார்க்கும் அளவுக்கு திரைத்துறை மீதான ஆர்வம் வளர்ந்திருந்தது. வாழ்வை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டிருந்தவனை பல நல்ல படங்கள் இவனை, அந்தத் துறை அழைத்தது. வருணை சிஏ படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையிலிருந்த தாயிடம், தன்னுடைய திரைத்துறை ஆர்வத்தைப் பற்றிக் கூறினான். அம்மா என்ன சொல்வாளோ என்ற தயக்கம் இவனுக்கு இருந்தது. சிறிது நேரம் யோசித்துவிட்டுச் சம்மதித்தார் அம்மா விமலா.
பன்னிரண்டாம் வகுப்பு முடிந்ததும் வைஷ்ணவ கல்லூரியில் விஸ்காம் சேர்ந்தான் வருண். கல்லூரி சேர்ந்த பிறகு இவனுக்கு திரைத்துறை சார்ந்து ஆர்வமுள்ள நண்பர்கள் பலர் கிடைத்தனர். நண்பர்களும் ஆசிரியர்களும் பரிந்துரை செய்த பல நல்ல உலகத் தரம் வாய்ந்த திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கிய காலம் அது. மணி ரத்னம், பாலு மகேந்திரா மற்றும் வாங் கார்வாய் ஆகியோர் இவனுக்கு குருவாக ஆனார்கள். எங்கிருந்தோ, எப்போதோ அவர்கள் எடுத்த படங்களைப் பார்த்து, இவன் அமர்ந்த இடத்திலிருந்தே அவர்களிடம் சினிமா கற்றுக்கொண்டிருந்தான்.
திருமணத்தைப் பற்றி வெறுப்பாகப் பேசி, அதனைச் செய்துகொள்ள விருப்பமில்லை என்று வருண் சொன்னபோது அதற்கும் சம்மதித்தார் விமலா. அவனுடையப் பெற்றோரின் இருட்டான இல்லற வாழ்க்கையைப் பார்த்து வளர்ந்ததால், அவன் திருமணம் மீதான நம்பிக்கையை இழந்தான். இதற்கு பிறகுதான் அவன் பெரியாரைப் படிக்கத் தொடங்கினான். திருமணம் என்பது ஆணும் பெண்ணும் வாழ்நாள் முழுவதும் ஒருவரையொருவர் கட்டிப்போட்டுக் கொள்ளும் ஒருநாள் கூத்து என்ற புரிதல் இவனுக்கு ஏற்பட்டது.
என்னதான் இவன் கல்யாணத்தை எதிர்த்தாலும், இவன் உதாசீனம் செய்வது திருமணம் எனும் சடங்கைத்தானே தவிரக் காதலை அல்ல. ‘தாலி என்ற ஒரு கயிற்றைக் கட்டி, கையெழுத்திட்டு ஒருவருடன் வாழ்நாள் முழுவதும் இருந்தே ஆக வேண்டுமா?’ என்ற ஒரு கேள்வியைச் சுமந்துகொண்டிருக்கும் இவன், எந்தவொரு யோசனையுமின்றி காதலுக்குத் தாயாராகவே இருந்தான். தனியாக இருந்தாலும் தனிமையிலிருந்தாலும் அதில் சுகமுணர்ந்த இவன், காதலைக் காதலித்துக் கொண்டும் எந்நேரமும் காதலைப் பற்றியே யோசித்து, அதன் அழகியலையும் சிக்கல்களையும் சிந்தித்துக்கொண்டுதான் இருந்தான். இதைச் சார்ந்த திரைப்படங்களையும் புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினான்.
ஒரு நாள் வகுப்பின் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். விஸ்காம் வகுப்பு ஜன்னல் வழியே பார்த்தால் பயோ கெமிஸ்ட்ரி வகுப்பின் ஜன்னல் தெரியும். அந்த வகுப்பின் ஜன்னலோரத்தில் அமர்ந்துகொண்டிருந்த ஒரு அழகிய திருமுகத்தைக் காண்கிறான். நாள்தோறும் எத்தனையோ அழகான முகங்களைக் கண்டாலும், அன்று அவன் கண்ட அம்முகம் ஏதோவொரு புதுவித உணர்வை உண்டாக்கியது. ஐம்பது அடி தொலைவிலிருந்த பிங்க் சுடிதார் அணிந்திருந்த அப்பெண், தன்னை யாரோ பார்க்கிறார் என்று யூகித்து இவனைக் கண்டதும், இவன் மோகத்தின் செம்பாகம் சென்றான். யாரவளென்ற வேட்கையிலிறங்குமாறு இவனுடைய மனம் கட்டளையிட்டது.
*
நித்யன் சென்று ஆறு மாதங்கள் ஆன நிலையில், வாசற்கதவை யாரேனும் தட்டினால் அது அவனாக இருக்காதா என்று பார்க்கத் தொடங்கினாள் அவள். பெயரில்லா எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் ‘அது நித்யனாக இருக்காதா!’ என்ற தாபத்திலிருந்தாள். ஆனால் அவனிடமிருந்து ஒரு மொட்டைக் கடுதாசிகூட வரவில்லை. இவள் நித்யனைப் பற்றியே யோசித்துக்கொண்டு அடுத்த இரண்டு செமஸ்டர்களில் அரியர் வைக்க ஆரம்பித்தாள். ‘அவன் சென்றதிலிருந்து நாம் வேறு ஒரு மனிதியாக மாறிவிட்டோமோ?’ என்று உணரத்தொடங்கினாள்.
இவள் செய்யும் சில காரியங்களைப் பார்த்து இவளது பெற்றோரே திகைத்தனர். இவள் ஒரு பெரிய மீன்தொட்டியை வாங்கி அதில் ஒரேயொரு மீனை மட்டும் வளர்த்து வந்தாள். அந்த மீனுடன் அதிக நேரம் செலவழித்தாள். நேரத்திற்கு உணவளித்து, அதைப் போலவே வாயசைத்து, அந்த மீன் மேல் அதிக பிரியம் வைத்தாள். ஒருநாள் பிளாஸ்டிக் கவரில் நீரை நிரப்பி, அந்த மீனை எடுத்து அதனுள் போட்டு, அதை ஒரு ஏரியில் ஊற்றி விட்டாள். பின்னொரு நாள், பக்கத்துத் தெரு ஆனந்த் அண்ணன் வீட்டுக்குச் சென்றிருந்தாள். அந்த வீட்டு நாய் 'பைரவி' ஒரு குட்டிப் போட்டிருந்தது. "இந்த நாய்க்குட்டி அழகா இருக்கு, நா கொண்டு போய் வளக்கவா அண்ணா?" என்று இவள் கேட்டதற்கு ஆனந்த் அண்ணனும் ஒப்புக்கொண்டார். இவள் அந்த நாய்க்குட்டியை எடுத்துக்கொண்டு 'கை இல் ஊமன்' போல் பார்க்கும் அதன் தாய் நாய் 'பைரவி'யை ஒரு பார்வையிட்டுச் சென்றாள். அந்த நாய்க்குட்டியையும் ஆசையாய் வளர்த்தாள். வேளா வேளைக்கு உணவளித்து அழகாகப் பார்த்துக்கொண்டாள். அந்த நாய்க்குட்டியும் இவளுடன் ஒட்டிக்கொண்டது. இவள் சொன்ன எல்லா வேலைகளையும் அந்த குட்டிநாய் செய்து வந்தது. இவள் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வரும்போது ஓடிச்சென்று அவளை நக்கும். அவளும் முத்தமிடுவாள். திடீரென்று ஒருநாள் அந்த நாயை அதன் தாய் 'பைரவி'யிடமே விட்டு வந்துவிட்டாள். ஒன்றின் மேல் அதிகமாக அன்பு செலுத்தி அதையிழக்கவும் பழிகியிருந்தாள். நித்யனின் துக்கத்தைச் சமன்செய்ய, அதற்கு ஈடான துக்கத்தைத் தானே தேடிக்கொண்டாள்; தேடிக் கொண்டுமிருக்கிறாள். நேசம் தொலைந்து துக்கப்படும் சிலருக்கு மத்தியில், இவள் துக்கத்தையே நேசித்த காரணத்தால் நேசத்தைத் தொலைக்கத் தொடங்கினாள்.
நித்யன் சென்றதிலிருந்து இவள் பாடுவதை நிறுத்தி விட்டாள். பாடல்களைக் கேட்பதையும் காதல் படங்களைப் பார்ப்பதையும் குறைத்துக்கொண்டாள். ஒரு நவம்பர் மாத மழை நாளில், இவள் தன் வண்டியை எடுத்துக்கொண்டு நித்யனிடம் பேசிய அதே பேருந்து நிறுத்தத்தில் மழை நிற்கும்வரை அமர்ந்துவிட்டு வந்தாள்.
நித்யன் மீது எவ்வளவு அன்பு இருந்ததோ இப்பொழுது அதே அளவில் கோபம் உள்ளது. 'என்னதான் எல்லாவற்றையும் விட்டு பயணம் சென்றாலும், தன்னைப் பற்றிய யோசனையே அவனுக்கு வரவில்லையா? ஒரு முறைகூட என்னிடம் பேச வேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லையா?' எங்களுக்குள் நேர்ந்தது பிரிவா இடைவெளியா?' என்ற சந்தேகமும் இவளுக்கு எழும். ஏனென்றால், நித்யன் சென்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இவள் இப்போது இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறாள்.
இப்போதெல்லாம் இவளை நித்யனின் நினைவுகள் போட்டு ஆட்டுவதில்லை. ஒரு மனிதர் நம் அருகில் இல்லாத போதும் நம் நினைவை ஆட்கொள்கிறாரெனில், இசையின் மூலமோ கதைகளின் மூலமோ அல்லது நிகழ்வின் மூலமோதான். அவற்றிலிருந்து நம்மைத் தூரம் வைத்துக்கொள்வதென்பதே விடுபடல். நித்யனைப் பற்றிய யோசனையில் மூழ்காமலிருப்பது, இவள் பாடல்களை பாடாததின், இசையைக் கேட்காததின், மழையில் பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று அமராததின் விளைவு என்றே வைத்துக் கொள்வோம். 'நமக்கு ஒரு குறுஞ்செய்திகூட அனுப்ப விருப்பமில்லாதவனை ஏன் எந்நேரமும் யோசிக்க வேண்டும்?' என்ற சிந்தையும் இவளை மீள வைத்திருக்கலாம்.
இன்று, இவள் வகுப்பில் எந்தவொரு குழப்பமுமின்றி பழைய இவளாக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில், வகுப்பின் ஜன்னல் வழி வரும் தென்றல் இவளைத் தொட்டுச் சென்ற கணத்தில், எங்கிருந்தோ இரு கண்கள் இவளை நோக்கிக்கொண்டிருப்பதை யூகித்தாள். அந்த கண்களின் முகமுடையானை பார்த்துவிட வேண்டுமென்று மெதுவாகத் திரும்பினாள். பயோ கெமிஸ்ட்ரி வகுப்பின் ஜன்னல் வழியிருந்து பார்த்தால் விஸ்காம் வகுப்பு ஜன்னல் தெரியும். ஆம்! அந்த இரு கண்களுக்குச் சொந்தக்காரன் வருணேதான்!
*
அன்று முதல் தினமும் சில நொடிகளுக்கு மட்டும் இருவரும் பரஸ்பரம் பார்வைப் பரிமாறிக்கொண்டிருந்தனர். வருணின் பார்வையில் வாஞ்சை, தாபம், குழப்பம், வியப்பு என தினமும் ஒவ்வொரு வகையான உணர்ச்சிகள் தளும்பின. ஆனால் அவளுடைய பார்வையில் எந்தவொரு உணர்வும் இருக்காது. அந்த விழிகள் நம்மை ரசிக்கிறதா, வெறுக்கிறதா, முறைக்கிறதா, யோசிக்கிறதா என்பதை யாராலும் யூகிக்க முடியாத பார்வைப் பார்ப்பதில் அவள் சிறந்தவள். இருந்தாலும் வருணுக்கு அந்த விழிமொழி பிடித்திருந்தது. அந்த ஏழு நொடி ஏதுமற்ற பார்வைக்காக ஏங்கித் தொடங்கினான். அந்த பார்வைதான் தன் நாளையே திருப்தி படுத்துகிறது என்பதை நம்பவும் தொடங்கினான். அவள் கல்லூரிக்கு வராத நாட்களில், எல்லாமிருந்தும் ஏதோவொன்று இல்லாததைப்போல் உணர்ந்தான்.
கவிதைகளின்மேல் பெரும் ஈடுபாடு இல்லாத, நாவல், கட்டுரைகளை மட்டுமே படித்துவந்த இவன், இவளைப் பார்த்ததும் நல்ல கவிதைத் தொகுப்புகளைத் தேடித் தேடிப் படித்தான். வள்ளுவனின் இன்பத்துப்பால் அதிகாரத்தை மீண்டும் மீண்டும் படித்துச் சிலிர்க்கும் பருவத்திலும் நிலையிலும்தான் இப்போது வருண் இருக்கிறான். சில சமயம் 'கவிதையால் பெண்மை அழகானதா, பெண்மையால் கவிதை அழகானதா?' என்ற கேள்விக்கு 'பதில் அறியா கேள்வி அழகானது' என்று நினைத்து நெகிழ்வான்.
ஒருமுறை அவனுடைய நண்பன் கோகுல் 'அவளுடைய பெயர் என்ன?' என்று கேட்டதற்கு வருணிடம் விடையில்லை. 'பெயர் தெரியவில்லை' என்று சொல்வதற்கு வருணுக்கு கூச்சமாக இருந்தது. கோகுல் கேட்டதற்கு யோசித்துக்கொண்டிருக்கும்போது, அவள் தன் வகுப்பிற்கு லேப் கோட் அணிந்து வந்திருந்தாள். அந்த அழகைப் பார்த்தவுடன் 'காற்று வெளியிடை' படத்திலிருந்து தாக்கத்தில் அவளுக்கு 'லீலா' என்று பெயர் சூட்டினான். இன்று வரை இவனுடைய நண்பர்களுக்கெல்லாம் அவளை லீலா என்றுதான் தெரியும். யாருக்கும் அவளுடைய உண்மையானப் பெயர் தெரியாது.
*
ஒரு ஜனவரி மாத விடுமுறை நாளில், ப்ரீத்தாவிடமிருந்து லீலாவுக்கு அழைப்பு வருகிறது. 'உடனே சந்திக்க வேண்டும்' என்றாள் ப்ரீத்தா. என்னவென்று லீலா கேட்டதற்கு, நேரில் சொல்வதாகச் சொன்னாள். 'அப்படியென்ன விஷயம்? நேரில்தான் சொல்வேன் என்னும் அளவிற்கு?’. அன்று மதியம் மூன்று மணியளவில் சென்னை புத்தகக் கண்காட்சியில் இருவரும் சந்திக்கின்றனர். புத்தகங்களைப் பார்த்துக் கொண்டேப் பேச்சைத் துவங்கினாள்.
“லீலா”
"ஹ்ம்ம்?"
"நா ஒருத்தன லவ் பண்றேன்" என்றாள் ப்ரீத்தா.
"இத சொல்லவா வரச் சொன்ன?"
"விக்னேஷ சொல்லல. வேற ஒருத்தன்"
"விக்னேஷ் கூட பிரேக்கப் ஆகிடிச்சா?" - லீலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தன்னிடம் எல்லாவற்றையும் பகிரும் ப்ரீத்தா, கடந்த சில நாட்களாக எதையோ மறைத்திருக்கிறாள் என்று புரிந்தது.
"பிரேக்கப்லாம் ஆகல"
"எதாவது ப்ராப்லமா விக்னேஷ்கூட? சண்டையா? அவன் ஏதாவது சொன்னானா?" என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள்.
"அப்புறம் என்னடி?" என்று லீலா கேட்டதற்கு மௌனம் காத்தாள் ப்ரீத்தா.
"சரி யாரு?" என்று கேட்டாள் லீலா.
"பேரு வசந்த். போன மாசம் இன்டெர்ன்ஷிப்லதான் மீட் பண்ணேன். ரொம்ப ஜென்டில்; இன்ட்ரெஸ்ட்டிங். யாரைப் பத்தியும் குறை பேச மாட்டான். நிறையப் பேசுவோம். எப்போமே நைட் பதினோரு மணிக்கு மேல ஃப்ரீ ஆகிட்டுத்தான் கால் பண்ணிப் பேசிப்போம். நான் அதுக்கு முன்னாடியே விக்னேஷுக்கு குட் நைட் சொல்லிடுவேன்" என்று ப்ரீத்தா அவனைப் பற்றி விவரிக்கும்போது அவளது முகம் அப்படி மின்னியது.
"சோ? இப்போ என்ன பண்ணலாம்னு இருக்க? விக்னேஷக் கழட்டிவிடப் போறியா?"
“நோ. நெவர். விக்னேஷ் மாதிரி ஒரு பையன விட்டு எப்படி விலகுறது? யூ நோ வாட்? ஒருநாள் வசந்த்கூட ஃபோன் பேசும்போது நைட் ஒரு மணிக்கு விக்னேஷ் கால் பண்ணான். நான் எடுக்கல. அடுத்த நாள் ஒரு வார்த்தைகூட என்கிட்ட சந்தேகமா கேட்கல"
"எனக்கென்னமோ உனக்கு விக்னேஷ் மேல லவ் இருக்கிற மாதிரியே தெரில. அப்டி இருந்திருந்தா வசந்த் மேல ஒரு இண்ட்ரஸ்டே உனக்கு வந்திருக்காது. சரி, அப்படியே வந்தாலும் விக்னேஷ ஏமாத்தணும்னு உனக்கு தோனிருக்காது"
"நீ சொல்லாம அவனுக்கே யார் மூலமாவோ இது தெரிய வந்தா அப்போ அவனுக்கு எவ்ளோ வலியா இருக்கும்னு கொஞ்சம் யோசி. அப்போ நீயும் ரொம்ப கஷ்டப்படுவ. அதுக்காகதான் சொல்றன்"
சிறிது நேரம் புத்தகங்கள் எதையும் பார்க்காமல் லீலா சொன்னவற்றை யோசித்துக்கொண்டே நடந்தாள் ப்ரீத்தா.
"வசந்த்கிட்ட உன் லவ்வ சொல்லிட்டியா?"
"இன்னும் இல்ல. சொல்லணும்னு தோனல. அதுக்கான அவசியமும் இருக்கான்னு தெரியல. லவ் பண்ணா அத சொல்லித்தான் ஆகணுமா என்ன? காதலிச்சிட்டு மட்டும் இருக்கப் போறேன். இதை யாருகிட்டயாவது சொல்லணும்னு தோனிச்சு. உன்னத் தவிர வேற யார் என்னப் புரிஞ்சிக்க முடியும்?"
"இந்த விஷயத்துல என்னாலேயே உன்னப் புரிஞ்சிக்க முடியல. ஒன்னு, நீ விக்னேஷ்கிட்ட உண்மைய சொல்லு. இல்ல, வசந்த் கிட்டயாவது. ரெண்டு பேர்கிட்டயும் மறச்சு உன்ன நீயே ஏமாத்திக்காத"
"என்னைக்காவது உனக்கும் இந்த சிச்சுவேஷன் வரலாம். அப்போ உன்னால என்ன புரிஞ்சிக்க முடியும்"
"தான் விருப்பத்துக்கு அணை போட்டுக்குற யாரும் அடுத்தவங்க விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்கப்போறதில்ல"
"நாளைக்கு விக்னேஷ் வேற ஒரு பொண்ண லவ் பண்ணுறான்னு தெரிய வந்தா அப்போ உனக்கு எப்படி இருக்கும்?"
"அப்போ அவனைப் புரிஞ்சிக்கப் போற ஒரே ஆள் நானாதான் இருப்பேன்”
அன்புக்கு அன்பு செய்யவும், அன்பு செய்ய அனுமதிக்கவும்தான் தெரியும். நாம் ஒருவரை வாழ்க்கை முழுவதும் ஆத்மார்த்தமாக நேசிக்கலாம். ஆனால் நம்மை சில அன்புள்ளம் கொண்டவர்கள் கடந்து சென்றுகொண்டுதான் இருப்பார்கள். அவர்களை நாம் தற்காலிகமாகக் காதலிக்கத்தான் செய்வோம். அந்த அன்பிற்குத் தடை போட நம் யாருக்கும் மனம் வராது. என்றேனும் அவர்களை விட்டுப் பிரிந்து விடுவோம் என்று தெரிந்தே காதலிப்போம். அந்தத் தற்காலிக காதல் பிரியும்போது அவர்களுக்காக சில சொட்டுக் கண்ணீரையும் பரிசளித்துவிட்டு, நம் ஆத்மார்த்தமான காதலுடன் முத்தங்களைப் பகிர்ந்துகொண்டிருப்போம்.
ஒருவர் எல்லா நேரங்களிலும் நிழலில் நிற்கக்கூடாது. எல்லா நேரங்களிலும் வெக்கையிலும் நடக்க முடியாது. விக்னேஷ், வசந்த் இருவரில் யார் நிழல் யார் வெயில் என்பதை ப்ரீத்தா இன்னும் முடிவு செய்யவில்லை.
'கடலானது அலையைக் காதலிக்கிறது
அலை கடலைக் காதலிக்கிறது
அலை கரையையும் காதலிக்கிறது
ஆனால் திரும்பக் கடலிடமே வந்துவிடுகிறது
மீண்டும் கரை! மீண்டும் கடல்!
கடலுக்குச் சந்தேகமுமில்லை
கரைக்குச் சுயநலமுமில்லை
அலைக்குக் குற்றவுணர்வுமில்லை'
*
ப்ரீத்தா ஆறு ஆங்கில நாவல்களையும் லீலா ஏழு மொழிபெயர்ப்பு கவிதைப் புத்தகங்களையும் எடுத்திருந்தனர். லீலா ரொம்ப நேரமாக ஒரு கவிதைப் புத்தகத்தைத் தேடிக்கொண்டிருந்தாள். அந்தப் புத்தகத்தைக் கண்டுபிடித்தபின் அது கிடைத்த உற்சாகத்தில் குறும்புத்தனமாகச் சத்தமிட்டாள். இவளுடையச் சத்தத்தைக் கேட்டு, அந்த பதிப்பகமே இவளைத் திரும்பிப் பார்த்தது. அங்கிருந்தவர்களிடம் 'சாரி' என்று சொல்லி, ஒரு போலிப்புன்னகை இட்டதும்தான் எல்லோரும் அவரவர் வேலைக்குத் திரும்பினார். ஒருவனைத் தவிர. அங்குப் புத்தகம் வாங்க வந்திருந்த வருண். அவனுடைய பார்வை மட்டும் லீலாவை விட்டு விலகவில்லை.
வருணும் அன்று புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தான். முகநூல் நண்பர்கள் பரிந்துரைத்த சில புத்தகங்களும், அவன் வாங்க நினைத்த சில ருஷ்ய நாவல்களும் வாங்கினான். கவிதைப் புத்தகங்கள் ஒன்றிரண்டு வாங்கலாமென முடிவெடுத்து அவன் வந்த அதே பதிப்பகத்தில்தான் லீலாவும் இருந்தாள். இத்தனை நாட்களாக ஐம்பதடி தொலைவில் பார்த்த அழகியை அருகில் கண்டதும் அவளுடைய உதடு, கண், நீண்ட மூக்கு, இதழின் கீழுள்ள மச்சம், கழுத்தெலும்பு, கம்மல், செதுக்கப்பட்ட விரல் நகங்கள் எனப் பிரித்துப் பிரித்து ரசித்தான். லீலாவும் இவனை அடையாளம் கண்டுகொண்டாள். ஆனால் அவளுடைய பார்வை பேசும் மொழி மாறவில்லை. ‘பிறமொழி இலக்கியங்களை மொழிபெயர்க்கும் எழுத்தாளர்களைப் போல் பார்வையையும் மௌனத்தையும் மொழிபெயர்க்கும் ஒருவர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று தான் கையில் வைத்திருந்த 'விதியின் தீர்ப்பு' நாவலைப் பார்த்துக்கொண்டே யோசித்தான் வருண்.
லீலா அங்கிருந்து கிளம்பிவிட்டாள். வருண் இருபது புத்தகங்களையும் லீலாவின் அழகான தருணத்தையும் அள்ளிக்கொண்டு புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியே வந்தான். ஒரு தேநீர் குடித்துவிட்டுப் போகலாமென கேன்டீனுக்குச் சென்றான். அங்கே அவனுடைய அப்பா கிருபா இருந்தார். சுற்றி நடப்பவை அனைத்தையும் மறந்து இருவரும் பார்த்துக்கொள்ளும்போது, இவருடைய கண்களிலும் சோகம் கலந்த சந்தோஷம் இருந்தது. அந்தப் பார்வைக்குப்பின், இந்தத் தற்செயலான சந்திப்பிற்குப்பின், விமலாவின் தனிமைக்குப்பின் ஒரு இருண்ட இல்லறக் கதை இருக்கிறது.
வருணின் அப்பா கிருபாவும் அம்மா விமலாவும் காதலித்துத்தான் திருமணம் செய்துகொண்டனர். விமலா இதழாளராகப் பணிபுரிபவள். இவர்களுக்கு வருண் ஒரே மகன். அப்போது வருண் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அன்றொரு நாள் அலுவலகத்தில் வேலை குறைவாக இருந்ததால் மூன்று மணிக்கே எல்லோரும் விடைபெறும்படி மேற்பார்வையாளர் அனுமதி கொடுத்துவிட்டார். பெரிதாக வேலை ஏதும் இல்லாத சமயத்தில் சீக்கிரம் விடைபெற பணியாளர்கள் கேட்டால், முகங்காட்டியபடி அனுமதி கொடுப்பார் மேற்பார்வையாளர். விமலா தன் வேலையை முடித்துவிட்டுக் கிளம்பும் முன் மேற்பார்வையாளர் அறைக்குச் சென்றாள்.
தன் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து விமலாவிடம் கொடுத்தபடி, "இன்டெர்வியூ கால் லெட்டர். நமக்குத் தெரிஞ்ச பையன் கம்பெனிதான். நா ஏற்கனவே அவன்கிட்ட பேசிட்டேன். இது சும்மா ஒரு பார்மாலிட்டிதான்"
"ரொம்ப நன்றி சார்"
"பரவால்லம்மா. இந்த கம்பெனிலையாவது அவனைக் கொஞ்சம் பொறுத்துட்டு போகச் சொல்லு"
விமலாவும் கிருபாவும் வீட்டைவிட்டு ஓடி வந்து திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதி. திருமணமான சில நாட்களில், விமலா ஒரு பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தாள். முன்கோபி கிருபாவுக்கும் வேலை கிடைத்தது. அதனால் அவர் இரண்டு மூன்று அலுவலகம் மாறி இப்பொழுது வேலையே இல்லாமல் இருக்கிறார். காதலிக்கும்போதும் மணமான புதிதிலும் உலகம் அழகாகத் தெரிந்தது. குழந்தை பிறந்த பின்புதான் வாழ்க்கை புரிய வந்தது. ஆறாம் வகுப்பு படிக்கும் வருணுக்கு, பெற்றோர்களான இவர்கள் இருவரும் வேலைக்குச் சென்றே ஆக வேண்டிய கட்டாயத்திலிருந்தனர். உறவுகளை இழந்து திருமணம் செய்திருக்க வேண்டாமோ என்று இவர்கள் நினைக்காத நாளில்லை.
இன்று, விமலா வீட்டிற்குச் செல்லும் வழியில், ரோட்டில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான் வருண்.
"என்னடா பண்ணிட்டு இருக்க? வீட்ல அப்பா இல்ல?"
“இருக்காரு மா. அப்பாதான் விளையாட சொன்னாரு"
"சீக்கிரம் வந்து சேரு. ஹோம்ஒர்க்லாம் இருக்குல?" என்று அதட்டிவிட்டு வீட்டை நோக்கிச் சென்றாள்.
எப்போதும் இல்லாமல் அன்று வீட்டின் கதவு, ஆளிருக்கும் சமயத்தில் மூடப்பட்டிருந்தது. கதவைத் தட்டினாள்; திறக்கப்படவில்லை. மீண்டும் தட்டினாள்; கதவின் உள்தாழ்ப்பாள் போடப்படவில்லை. விமலா கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தால், கிருபா போதையில் பிரக்ஞை இழந்துப் படுத்துக்கிடந்தான். அவரைச் சுற்றி பாட்டிலும் முறுக்கும் சிந்திக்கிடந்தது. மனைவியின் சம்பாத்தியத்தில் வாழும் தாழ்வு மனப்பான்மையே கிருபாவை அளவிற்கு மீறிக் குடிக்க வைத்தது. கிருபாவை அப்படிப் பார்த்ததும் விமலாவுக்கு கோபமாக வந்தது. வேலை விஷயத்தைப் பற்றிச் சொல்ல சந்தோஷமாக வந்த சமயத்தில், கிருபா இப்படி நடந்துகொண்டது அவளுக்கு ஏமாற்றத்தை அளித்தது. கிருபாவைத் தூக்கி கட்டிலில் படுக்க வைத்தாள்.
விமலா பாத்ரூமிற்குள் நுழைந்து, தாழிட்டு, தண்ணீர் திறந்து விட்டு, வெளியே சத்தம் வராமல் அழுதாள். உணர்வுகளில் மிகக் கொடுமையானது, சத்தம் வராமல் அழுவதே. யாருமில்லாத வீட்டில் கிருபா மட்டும் தூங்கிக்கொண்டிருந்தாலும், தன் கண்ணீரை வீட்டின் குளியலறையின் சுவர்களுக்கு மட்டுமே காண்பிக்க விரும்பினாள். இத்தனை வருடத்தில், கிருபா தொட்டுத் தழுவி முத்தமிட்ட இடங்களிலெல்லாம் அவளுக்குப் பற்றி எரிந்தது. கடந்த நான்கு மாதங்களாக, விமலா தன் கணவனை நிதானத்தில் கண்டதே இல்லை. காலை வேலைக்குக் கிளம்பும்வரை அவர் தூங்கிக்கொண்டிருப்பார். மாலை வீட்டிற்கு வரும் சமயத்தில் போதையில் நச்சரித்துக்கொண்டிருப்பார். இது விமலாவுக்குப் பண சிக்கலையும் மன எரிச்சலையும் ஏற்படுத்தியது.
அடுத்த நாள் போதை தெளிந்ததும், கிருபா சிகிரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார். வழக்கத்தைவிட அன்று அதிகமாகவே சிகிரெட் பிடித்தார். கிருபா சிகிரெட் பிடிப்பதும் மது குடிப்பதும் விமலாவுக்குப் பிடிக்காது. "சிகிரெட் பிடிச்சா அடுத்த ஒரு மணி நேரத்துக்கு எனக்கு முத்தம் கொடுக்காத, குடிச்சா அந்த நாள் முழுக்க கொடுக்காத. வாய் நாறுது" என்று திருமணமான புதிதில் விமலா சொன்னதை நினைத்துக்கொண்டே புகைத்தார் கிருபா. தன்னுடைய வழிதவறலுக்கு வேலை இல்லாததே முக்கியக் காரணம் என்பதை உணர்ந்துகொண்டார்.
அந்த மாலைப்பொழுதும் எல்லா மாலை வேளை போலத்தான் போனது. ஆனால் ஊர்க் கதையும் கலகலப்பும் காணாமல் போனது.
அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு கண்விழித்தார் கிருபா. வழக்கமாக ஏழு மணிக்கு எழுந்துகொள்ளும் விமலா, அன்று கிருபாவுக்கு பின்பும் தூங்கிக்கொண்டிருந்தாள். வருண் பள்ளிக்குச் சென்றுவிட்டதை அறிந்துகொண்டு, சமையலறைக்குள் நுழைந்த பின்தான் அவள் காலையிலேயே எழுந்து சமைத்து வருணைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டுத் தூங்குகிறாள் என்று கிருபாவுக்குத் தெரிய வந்தது. விமலாவின் கழுத்தைத் தொட்டுப் பார்த்தார்; உடல் கொதித்தது. இரண்டு நாட்களாக அழுத அழுகையின் விளைவு. மருந்து வாங்கப் பணம் எடுக்கையில், விமலா பையில் ஒரு காகிதத்தைக் கண்டார். அது அவருடைய இன்டெர்வியூ கால் லெட்டர்.
அடுத்த ஒரு வாரத்தில் கிருபாவுக்கு ஃபைனான்ஸ் கம்பெனியில் வேலை கிடைத்தது. இப்பொழுது குடும்பத்தில், பணம் கூடுதலாகவும் நிம்மதி குறைவாகவும் கொட்டியது. அப்பாவும் அம்மாவும் முகம் கொடுத்துப் பேசிக்கொள்ளாததைப் பார்த்துத்தான் வருண் வளர்ந்தான். வேலைக்குச் செல்லத் தொடங்கியதிலிருந்து கிருபா வருணுக்கு பாக்கெட் மணி கொடுக்கத் தொடங்கினார். ஆனால் அவனுக்கு அதை வாங்குவதில் விருப்பம் இல்லை. முன் போல் வார இறுதியில் குடும்பத்துடன் எங்கும் வெளியில் செல்லாததின் ஏக்கம் வருணுக்கு அதிகமாக இருந்தது. மீண்டும் சம்பாதிக்க ஆரம்பித்ததால் கிருபா அதிகமாக மது குடிக்கத் தொடங்கினார். விமலாவிடம் பேச நினைத்ததையெல்லாம் பேசுவதற்குக் குடிதான் கிருபாவுக்குத் தைரியம் கொடுத்தது. ஆனால் விமலாவுக்குக் கிருபா செய்யும் ஒவ்வொரு செயலும் வெறுப்பையே உண்டாக்கியது. வருணுக்கு அதிகமாகப் பாக்கெட் மணி கொடுப்பதுகூட விமலாவுக்கு பிடிக்கவில்லை.
பின்பொரு நாள், கிருபா வேலை முடித்து விரைவாகவே வந்து மது அருந்திக்கொண்டிருந்தார். விமலா வருவதற்கு மணி ஒன்பது ஆகிவிட்டது. வேலை அதிகமாக இருந்ததால், அன்று மிகவும் களைப்பாக வந்தாள் விமலா. கிருபா மிகவும் பசியாக இருந்தார். விமலா தாமதமாக வந்ததற்கும் உணவு வாங்காமல் வந்ததற்கும் சண்டை பிடித்தார். விமலா தோசை சுட்டுக் கொடுத்ததும் மூவரும் சாப்பிட்டுத் தூங்கச் சென்றனர். வருண் தனியறையிலும் இவர்கள் தனியறையிலும்தான் உறங்குவார்கள். அறை விளக்குகளையெல்லாம் அணைத்துவிட்டுப் படுத்தபின், கிருபாவின் விரல்கள் உடலுறவுக்கு அழைக்கும் வகையில் விமலாவைத் தீண்டின. களைப்பில் அவள் கைகளைத் தட்டிவிட்டாள். கிருபாவுக்குக் கோபம் சுர்ரென்று ஏறியது.
"எவன்கூடடி ஊர் மேஞ்சிட்டு வர தேவடியா முண்ட" என்று அடித்தான் கிருபா. பதிலுக்கு விமலாவும் அடித்துவிட்டு, தலையணையை எடுத்துக்கொண்டு வருண் அறைக்குச் சென்று உறங்கிக்கொண்டாள். கிருபா சுய மைதுனம் செய்துவிட்டு உறங்கினான். இதுபோன்ற சண்டை இவர்களுக்குப் புதிதல்ல. மாதம் ஒருமுறையாவது இப்படிப்பட்ட சண்டை நிகழும். ஆனால் கிருபா அடித்தது இதுதான் முதன்முறை. அவனுடைய அடியைவிடவும், அவன் கூறிய சொற்கள்தான் விமலாவுக்கு இன்னும் வேதனையை உண்டாக்கின. பல மாதங்களாக இதையெல்லாம் சகித்துக்கொண்ட விமலா, பொறுமையைக் கட்டுப்படுத்த முடியாமல் விவாகரத்துப் பத்திரிகையைக் கொண்டுவந்து நீட்டினாள்.
"நீ என்ன அடிச்சதுகூட விடு. போதைல செக்ஸ் கேட்டதுக்கு ஒத்துக்கலனதும் என்னடத் தேவிடியா முண்டனு சொல்ல உனக்கு என்னடா அருகதை இருக்கு?"
விமலாவின் வார்த்தைகள் கிருபாவைக் கோபத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றன. அந்தச் சூட்டிலேயே விவாகரத்தில் கையெழுத்திட்டார். சில நாட்களுக்குப் பிறகு, அவர்களுக்கு விவாகரத்து உறுதியானது.
கிருபா தன் துணிகளைப் பெட்டியில் மடித்து வைத்துக்கொண்டிருந்தார். அப்போது பள்ளியிலிருந்து வந்த வருண் "எங்கப்பா போறீங்க?" என்றான்.
"சீக்கிரமே வந்துடுறேன். நீ என்ன பத்தி கவலைப்படாத. நான் எப்போ வருவேன்னு கேட்டு அம்மாவ தொல்ல பண்ணக்கூடாது. அம்மா சொல்றபடி கேட்டு நடந்துக்கோ. ஹோம்வொர்க்லாம் கரெக்ட்டா பண்ணனும். எல்லா சப்ஜெக்ட்லயும் 90 மார்க்ஸ் மேலதான் வாங்கணும்"
கிருபா அழுகையை அடக்கிக்கொண்டு, வருணின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு, பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய காட்சியை வருணால் மறக்கவே முடியாது. அவன் வளர்ந்ததும், தன் குடும்பப் பிரச்சனைகளைப் பற்றி விவரமாக அறிந்துகொண்டான். தன் அப்பாவை பற்றி யோசிக்கும்போதெல்லாம், அவர்கள் வீட்டு வேப்பமரம் சரிந்து விழுந்து அன்று அவர் அதன்முன் அமர்ந்து அழுத தருணம் ஒரு சித்திரமாய் இவனுக்கு நினைவில் தோன்றும். அதற்குப்பின் வருண் அவனுடைய அம்மாவிடம்தான் வளர்ந்தான். வளர்ந்த பின் வருண், சில சமயங்களில் தன் தந்தையைச் சென்று சந்திப்பதுண்டு. அதற்கு விமலா எந்தத் தடையும் விதிக்கவில்லை.
இன்று தன் மகனைப் புத்தகக் கண்காட்சியில் பை நிறையப் புத்தகங்களுடன் பார்க்கும்போது கிருபாவுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. நாற்பது ஐந்து வயதான கிருபா, தன் குடும்பத்தைப் பிரிந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது.
வருண் தன் அப்பாவிடம் சென்று பேசினான். - "எப்படிப்பா இருக்கீங்க?"
"இருக்கேன்பா. நீ எப்படி இருக்க? அம்மா எப்படி இருக்கா?”
"நல்லாருக்கோம்"
"படிப்பெல்லாம் எப்படிப் போகுது? ஏன் முன்ன மாதிரி அடிக்கடி வீட்டுக்கு வரதில்ல?"
"ஷூட், காலேஜ் ப்ராஜெக்ட்னு நிறைய வேல ப்பா. லீவ் விட்டதும் வரேன்"
கடந்த மாதங்களில், அவரவர் வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டனர்.
"அம்மாகிட்ட ஏதாவது சொல்லனுமா?” எனக் கேட்டான் வருண்.
"அப்பா குடிய விட்டுட்டார்னு சொல்லுப்பா"
*
அடுத்தடுத்த நாட்களில் லீலா மீதான வேட்கை அதிகரித்தது வருணுக்கு. அவளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினான். ஆனால், அவளிடமே நேரில் சென்று பேசுவதற்கு அச்சம். இவன் லீலாவை ஒரு நாளுக்கு அதிகபட்சமாகவே ஐந்து நிமிடங்கள் காணும் வாய்ப்புதான் கிட்டியது.
சூரியனும் சந்திரனும் நாள் முழுவதும் இயங்கினாலும், நேரில் சந்தித்துக்கொள்ளும் கொஞ்ச நேரத்தைப்போல்தான் இவர்களது சந்திப்பும் நிகழும். கல்லூரி முடிந்து பேஸ்கெட்பால் கோர்ட் அருகில் வருண் காத்திருப்பான். அந்த வழியில் லீலா செல்வாள். அவனுடைய இருநூறு நொடி பார்வைக்கு, அவள் பதிலாக இரண்டு நொடி பார்வையை வீசிச் செல்வாள். இரு கண்கள் பேசிக்கொள்ளும் சம்பாஷணைகளைவிட உலகில் சிறந்த மொழி வேறென்ன இருக்கிறது? லீலாவால் இவனுடைய கை கவியில் நனையத் தொடங்கியது. புத்தகக் கண்காட்சியில் லீலாவைப் பார்த்தபின் தன் முதல் கவிதையைக் கிறுக்கினான்.
இவனது கவிதைகள் கல்லூரி இணைய இதழில் வெளியானது. இவன் புகைப்படத்துடன் வெளியான இக்கவிதைகளை லீலா படிக்க நேர்ந்ததொரு அபூர்வம்.
எவ்வளவு சுதந்திரமாகவும் தன்னம்பிக்கையாகவும் உணர்ந்தாயோ
அதேபோல் என்னுடன் இருக்கும்போதும் உணர்வாய்’
*
இந்தக் கவிதைகளின் எல்லா ‘அவள்’களிலும் தன்னை உணர்ந்தாள் லீலா. வருணின் மேலொரு ஈர்ப்பு ஏற்படத் தொடங்கியது. லீலாவின் பார்வையில் சிக்கித் தவிக்கும் வருணையும், வருணின் கவிமழையில் நனைந்துகொண்டிருக்கும் லீலாவையும், லீலாவைக் காணத் துடிக்கும் நித்யனையும் பார்த்துக்கொண்டே வானம் குளிரில் கருநிற கம்பிலியைப் போர்த்திக் கொண்டது.
*
அடுத்த நாள் லீலா ப்ரீத்தாவிடம் 'உடனே சந்திக்க வேண்டும்' என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்கு அண்ணா சதுக்கத்தில், மூன்றாம் தளத்தில் கண்ணாடிச் சுவர்களால் கட்டப்பட்ட ஒரு கஃபேயில் சந்தித்தனர். அந்தக் கஃபேயில், காதலர்கள் எக்சிலேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் நகர நபரைப் போல் மெட்ரோ ரயில் வேகத்தில் காதலித்துக்கொண்டிருந்தனர். அந்த அறையில் 'ராஜ ராஜ சோழன் நான்...' பாடல் கிட்டார் கருவியின் பதிவில் ஒலித்துக்கொண்டிருந்தது. மஞ்சள் வண்ண மாலை வெயில் முகத்தில் படாத ஒரு மூலையில் இருவரும் அமர்ந்தனர். கொஞ்ச நேரம் கழித்து லீலாவுக்கு ஒரு வெண்ணிலா பால்கலவையும் ப்ரீத்தாவுக்கு ஒரு பனித்தேனீரும் வந்திறங்கியது.
"சொல்லு. என்ன விஷயம்?" என்று ஆரம்பித்தாள் ப்ரீத்தா.
"அன்னைக்கு புக் ஃபேர்ல நீ சொன்னல. உனக்கு ரெண்டாவதா ஒருத்தன் மேல லவ் வந்துருக்குனு"
"ஆமா. அதுக்கென்ன?"
"என்னால உன்னப் புரிஞ்சிக்க முடியுது" என்ற லீலா, ப்ரீத்தாவிடமிருந்து வரும் பதிலுக்காகக் காத்திருப்பது போல் முகத்தை வைத்துக்கொண்டாள். ப்ரீத்தா வியப்பிலும் லீலா வெட்கத்திலும் சிரித்துக்கொண்டனர். லீலாவின் பற்களால் கடிக்கப்பட்ட உதட்டோரத்தையும், கன்னக்குழியழைகையும், காதிற்குப் பின் தஞ்சம் கொண்ட கூந்தலழகையும், மைப்பூசிய கண்ணழகையும் ரசிக்காத ஆண்மகன்களே அந்தக் கஃபேயில் இல்லை. முன்பைவிட இப்பொழுது லீலாவின் அழகு பிரகாசிக்கிறது. வீட்டில் கண்ணாடியைப் பார்க்கும்போது கூட லீலா தன்னை ஒரு கலைப் பதிப்பாகத்தான் காண்கிறாள்.
"யாரு?" என்று ப்ரீத்தா கேட்டதும், லீலா தன் கைப்பேசியை எடுத்து வருணின் கவிதைகளையும் அவனுடைய புகைப்படத்தையும் காண்பித்தாள். அவளுடையப் பனித்தேநீர் கரைந்துகொண்டிருக்க, லீலாவின் கோப்பையிலிருக்கும் வெண்ணிலா பால்கலவை உருகிக்கொண்டிருந்தது. லீலாவுக்கு ஏற்பட்டிருக்கும் உணர்வைக் காணும் ப்ரீத்தாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. லீலாவைப் பார்க்கும்போது கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்ப்பதுபோல் உணர்ந்தாள்.
"எப்போ போய் பேசப் போற? என்றாள் ப்ரீத்தா.
"இல்ல. அவனே வந்து பேசுனா பேசலாம்னு இருக்கேன்"
"குட்"
"பட் குழப்பமா இருக்கு. இது உன் விஷயம் மாதிரி இல்ல. நித்யன் இல்லாததால எனக்கு இது தப்பா தெரில"
"நித்யன் இருந்தாலுமே இதுல தப்பில்ல. உன் எல்லா ஆசை, தேவைகளையும் ஒருத்தனால பூர்த்தி பண்ணிட முடியாது”
"இது லவ்தானா? எனக்குக் குழப்பமா இருக்கு"
"உனக்கு நித்யன் மேல இருக்கறதுதான் லவ்னு தோணுது. அவனுக்காக நீ இந்த ரெண்டு வருஷத்துல யாரையும் டேட்கூடப் பண்ணல. சும்மா அவனை மறந்துட்டேனு உனக்கு நீயே ஆறுதல் சொல்லிக்காத"
"அப்போ இவன்..."
"உனக்கு இருக்குற ஆசையும் அவனுக்கு இருக்குற திறமையும் ஒன்னு சேர்ந்ததால வந்த ஈர்ப்பு இது. இதுக்கு லைஃப் இல்ல"
"அப்புறம் ஏன் தப்பில்லன்னு சொன்ன?"
"இப்பயும் அதான் சொல்றன். தப்பில்லதான். உனக்கு ஒரு டிஸ்ட்ராக்க்ஷன் தேவ"
"ஏற்கனவே குழப்பமா இருக்குன்னு உங்கிட்ட பேசுனா நீ இன்னும் கொழப்பிடுவ போல. நித்யனாவது வரதாவது"
இருவரும் அவரவர் குழம்பியைக் குடித்து முடித்தனர். கண்ணாடி வழியே மெரினா கடற்கரையின் அழகை ரசித்துக்கொண்டிருந்தனர்.
"இப்போ ஒரு சாக்லேட் மில்க்ஷேக் சொல்லலாமா?" என்று ப்ரீத்தாவிடம் கேட்டாள் லீலா. வேண்டாமென்றா சொல்லப்போகிறாள்!
*
“இன் தி மூட் ஃபார் லவ் படம் பார்த்திருக்கல! இப்படியே அவளைப் பார்த்துட்டு கவிதை எழுதிட்டு அவகிட்ட பேசாமலே இருந்தா அந்த படத்துல வர முடிவுதான் உனக்கும். தெரிஞ்சிக்க" என்றான் பாரி.
வருணுக்கு லீலாவிடம் பேசியே ஆக வேண்டும் என்றிருந்தது. அதைத் தவிர தான் பார்ப்பது, காத்திருப்பது, பின்தொடர்வதெல்லாம் அவளுக்கு விருப்பா வெறுப்பா என்பதைத் தெரிந்துகொள்ளவாவது பேச வேண்டும் என்று முடிவெடுத்தான். அன்று மாலை பேஸ்கெட்பால் கோர்ட்டில் நின்றுகொண்டிருக்கையில் லீலா மெதுவாக நடந்து வந்தாள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை, வருணுக்கு நேரெதிரில் ஒரு இருபது அடியளவில் தள்ளிநின்று அவனைப் பார்த்தாள். அரை நிமிடங்கள் நின்றுவிட்டு லீலா புறப்பட்டாள்.
"இப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல. அவ பஸ் ஸ்டாப்தான் போயிருப்பா. வா போலாம்" என்று வருணை அழைத்து லீலாவின் பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றான் கோகுல். அங்கே லீலாவைக் காணவில்லை. அரை மணி நேரம் காத்திருந்துவிட்டு, கோகுல் கிளம்பினான். மஞ்சள் கதிர் மறைந்த பின்னும் மாலை வெளிச்சம் காத்திருக்கும் நேரத்தில், இன்னும் சிறிது நேரம் லீலாவிற்காகக் காத்திருந்தான் வருண். ஆனால், அவளுடைய வருகையை எதிர்பார்த்து நின்றுகொண்டிருந்த இவனுக்கு ஏமாற்றமே மிச்சம். லீலாவுக்குச் சொந்தமான வார்த்தைகளையும் வரிகளையும் பெறுவதற்காகவாவது அவள் வந்திருக்கலாம்.
அடுத்த நாள்
மாலை வருண் லீலாவிடம் பேசப்போகிறான் என்ற செய்தி அவனுடைய நண்பர்களுக்கு மத்தியில் காட்டுத்தீ போலப் பரவியிருந்தது. ஏதோ பரீட்சையில் தேர்வு எழுதும் மாணவனிடம் சொல்வது போல் ஒவ்வொருவராக வந்து ‘ஆல் தி பெஸ்ட்' சொல்லிக்கொண்டிருந்தனர்.
லீலா வந்தாள். அவள் வர வர இவனுக்குப் பதற்றம் கூடியது. லீலா இவனைக் கடந்து சென்றதும் 'டேய்! போடா' என்று ஹஸ்கி குரலில் தள்ளினான் கோகுல். அவள் அருகில் செல்ல, அவன் தென்றலுடன் யுத்தம் புரிய வேண்டியிருந்ததே தவிர வேறெந்தத் தடையும் அவனுக்கில்லை. எங்கிருந்தோ ஒரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒருவழியாக லீலாவை நெருங்கினான். 'என்னடா இவன்! ஒரு பேச்சுக்கு சொன்னா போய் பேசிட்டான்!" என்று கோகுலுக்குத் திகைப்பாக இருந்தது.
"உன்கிட்ட பேசணும்னு தோனுச்சு. அதுவும் நீ பண்ணதெல்லாம் பார்த்த 'என்கிட்ட வந்து பேசு'னு சொன்ன மாதிரி இருந்திச்சி"
"என்ன சொல்ற?"
"நேத்து என் எதிர்ல வந்து ஏன் நின்ன? நான் வந்து உன்கிட்ட பேசணும்னுதான?"
"நேத்து நான் காலேஜுக்கே வரல"
"ஏன் பொய் சொல்ற? நம்ம எவ்ளோ நாள்தான் பார்த்துட்டே இருக்கிறது? ஒரு கட்டத்துல யாராவது வந்து பேசித்தான ஆகணும்"
"நான் இதுக்கு முன்னாடி உன்ன பார்த்ததுகூட இல்ல"
"உனக்கு உண்மையிலேயே என்ன தெரியலையா இல்ல தெரியாத மாதிரி நடிக்குறியா?
"உண்மையாவே எனக்கு தெரில. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எனக்காக வெயிட் பண்ணுறாங்க. நீ வேற யாரோன்னு நினைச்சிட்டு என்கிட்டே பேசிட்டு இருக்க போல. போ" என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள்.
"ஹே ஒரு நிமிஷம். லீலா...!" என்று இவன் சத்தமிட்டதும் அவள் ஆச்சரியமாகப் பார்த்துவிட்டுச் சென்றாள்.
அடுத்த ஒரு மாத காலத்திற்கு வருணும் லீலாவும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படவில்லை. இன்னொரு முறை பேச வேண்டும் என்ற வாஞ்சை இருவருக்கும் இருந்தது. ஒரு நாள் கல்லூரி கேன்டீனில் இருவரும் சந்திக்க நேர்ந்தது. வருணே அவளிடம் சென்று பேசினான்.
"அன்னைக்கி கொஞ்சம் பயந்துட்டல?"
"அப்படிலாம் இல்ல. அது..நான்..என்.."
"பொய் சொல்ல வரலைனா விட்று லீலா"
”ம்ம். ஆமா கொஞ்சம் பயந்துட்டேன்"
"வெட்கப்பட்ட"
"ஹே அப்படிலாம் ஒன்னும் இல்ல"
"எனக்குத் தெரிஞ்சிது"
"கவிதைலாம் படிச்சேன். உன்னோட தமிழ் நல்லா இருக்கு"
"ஓ! ஆனா என்ன யாருன்னே தெரியாது. அப்படிதான?" என்றதும் சிரித்தாள்.
"எனக்கு இப்போ ஒரு கவிதை எழுதிக் கொடு"
"இப்படி திடீர்னு கேட்டா எப்படி? எனக்கு எதுவும் தோனல!"
"ஓ! என்ன நினைச்சு உருகி உருகிக் கவிதை எழுதுவ. நா கேட்டா எதுவும் தோனாது"
"அது...! நான் உன்கிட்ட பேசணும்னு நினைச்சதெல்லாம் வார்த்தையா எழுதினேன். அது கவிதையாகிடிச்சு. இப்போதான் ஒரு கவிதையே என்கிட்டே பேசிட்டு இருக்கே. அதான் வார்த்தை வரல"
"ம்ம். எனக்கு கிளாஸுக்கு டைம் ஆச்சு. நா கிளம்புறேன். பாய்"
"ஹான். அப்புறம்? எப்போ பார்க்கலாம்?"
"காலேஜ் முடிஞ்சதும் கிளம்பாத. வெயிட் பண்ணு" என்று வெட்கப் புன்னகையை விட்டுச் சென்றாள் லீலா.
"வதுவை மறுக்கும் இளைஞன் வாழ்வில்
கதவைத் திறந்து வருகை தந்து
செழுமையாக்கி கவிதைக் கேட்டு
இதமாய் உணரும் செதுக்கிய சிலையே
எப்படி இருக்கு?"
மாலை லீலா வந்தவுடன் அவளிடம் இதைப் படித்துக் காண்பித்தான் வருண்.
"இந்த யோசிச்சு எழுதுற கதையெல்லாம் இங்க வேணாம். நா கேட்ட உடனே சொல்லணும்"
"கேட்ட உடனே கவிதை சொல்ல நா ஒன்னும் இன்ஸ்டன்ட் கவிஞன் இல்ல"
"ஆனா பார்த்த உடனே லவ் பண்ற இன்ஸ்டன்ட் காதலன்ல வருண்"
"ப்பா ! இப்போ தான் நீ என் பேரச் சொல்லிக் கேக்குறேன்" என்று சிலிர்த்தான்.
"கேட்கணும்னு இருந்தேன். யார் அந்த லீலா? என்கிட்டே பேச வந்தப்போ என்ன அந்த பேர் சொல்லித்தான் கூப்பிட்ட, இன்னைக்கி கேன்டீன்லயும் லீலானுதான் கூப்பிட்ட"
"தெரிஞ்சிக்க விரும்பல. எனக்கு நீ லீலாவாவே இருந்திட்டுப் போ"
*
கல்லூரி முடிந்து எல்லோரும் சென்றவுடன் பேஸ்கெட்பால் கோர்ட்டில் காத்துக் கொண்டிருந்தான். லீலா தனியாக வந்தாள். அவளுடைய முகத்தில் மகிழ்வோ ஆர்வமோ புன்னகையோ எதுவுமில்லை. "உன்கிட்ட ஒன்னு சொல்லணும். நான் நித்யன்னு ஒருத்தன லவ் பண்ணிட்டு இருக்கேன். நீ எனக்காக கவிதை எழுதுறதெல்லாம் எனக்கு சந்தோஷமாதான் இருக்கு. ஆனா அதுக்காக எல்லாம் நம்ம ….”
"மறுபடியும் பொய் சொல்லாத லீலா"
"பொய் இல்ல வருண்"
"யாரு நித்யன்? இத ஏன் நீ முன்னாடியே என்கிட்ட சொல்லல?"
"ஏன்னா எனக்கு உன்னப் புடிச்சிருக்கு. நித்யன் என் யோசனைக்கே வரல. உன்மேல இருக்கிற... அது அதிகமாக அதிகமாக எனக்குப் பயமா இருக்கு. நா பண்றதெல்லாம் சரியா தப்பான்னு குழப்பமா இருக்கு"
"என்ன சொல்ற லீலா? எனக்கு ஒன்னும் புரியல"
"நா நித்யன்னு ஒருத்தன லவ் பண்ணேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவன் ட்ரிப் போறேன்னு போனான். இன்னும் திரும்ப வரல. அவன் எங்க இருக்கான் எப்படி இருக்கான்னு ஒன்னும் தெரில. அவனை ரீச் பண்ணவும் முடில. ஆனா நிச்சயம் திரும்ப வருவேன்னு என்கிட்டே சத்தியம் பண்ணிட்டுப் போயிருக்கான். நானும் அவனுக்காகக் காத்திட்டு இருப்பேன்னு சொல்லி வாக்கு கொடுத்திருக்கேன்"
"அது முடிஞ்சி ரெண்டு வருஷம்..."
"எனக்குப் புரிது வருண். ஆனா அது முடிஞ்சிடுச்சான்னுதான் குழப்பமா இருக்கு. நம்ம பேசிப் பழகி எனக்கு உன்னப் பிடிச்சு ஒருவேளை உன்மேல லவ் வந்து நாளைக்கு நித்யன் திரும்ப வந்தா நா என்ன பண்ணுவேன்"
"யு நீட் டைம் டு திங்க் லீலா. நம்ம இதப்பத்தி அப்புறம் பேசி ஒரு டெசிஷன் எடுக்கலாம்"
வருணிடம் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டு ஒரு இறுக்கத்துடன் வீட்டிற்கு வந்தாள் லீலா. அவளுடைய வீட்டில் யாருமில்லை. நடந்ததை யோசித்துக் கொண்டே தன் மடிக்கணினியை எடுத்து வைத்து நெடுநாட்கள் கழித்து மின்னஞ்சலைப் பார்த்தாள். நித்யனிடம் ஒரு மின்னஞ்சல் சில மாதங்களுக்கு முன்பு வந்திருந்தது.
'சேர மாட்டோம் என்று தெரிந்தே காதலிக்கிறேன்'
என்றேனும் ஒரு நாள்,
உன்னிடம் வார்த்தைகளால் என் காதலைத் தெரிவித்தால்
என்னை நிராகரித்து விடு
அதற்குத் தயாராக உள்ளேன்
அந்த வலியை மீண்டும் ருசிக்க ஏங்கிக்கொண்டிருக்கிறேன்
ஒருவேளை, என் காதலை நீ ஏற்றுக்கொண்டால்
நான் செய்வதறியாது திளைத்துக்கொண்டிருப்பேன்
அதற்கு நீதான் பொறுப்பு. சொல்லிவிட்டேன் !'
ஆயிரம் நட்சத்திரங்களையும் முழுத் திங்களையும் காணும் சமயத்தில், என்னிடம் நீ கதைத்த அரைத் திங்களுக்கு முன் நான் உன்னை நினைத்து எழுதிய கவிதை இது! 'காதலை வார்த்தைகளால் தெரிவிப்பதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை'. இவ்வாறு போலி வாக்கியம் சொல்லி நான் சமாளிக்க முயன்றாலும் உண்மையான காரணம் ஒரு தயக்கமும், நீ என்னை நண்பனிலிருந்து அடுத்த கட்டத்திற்கு மனதளவில் கொண்டு சென்றிருப்பாயா என்ற சந்தேகமும்தான். அந்தச் சந்தேகம் உனக்கும் இருந்தது என்று அந்தக் கருநிற முன்னிரவில் என்னிடம் கூறி, உன்னுடைய உலகிற்குக் கரம் பற்றாமல் குரல் பற்றிக் கூட்டிச் சென்றாய். நான் உன்னிடம் காதலை வெளிப்படுத்திய தருணத்தைக் காற்றுள்ள வரை மறவாமல் சுவாசித்துக் கொண்டிருப்பேன்.
நாம் கதைகள் பேசவும், காதல் பகிரவும், காமம் கொள்ளவும் இவ்வொரு வாழ்வு போதாது. உன்னோடு சேர்ந்து மலைகள்தனில் மறையும் சூரியன், மூன்றாம் பிறை, மின்னும் நட்சத்திரங்கள், மஞ்சள் நிற மாலை எனப் பலவற்றை ரசிக்கக் காத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கானக் கடமைகளை முடித்துவிட்டு விரைவில் வந்துவிடுகிறேன். உலகை ரசிக்கும் ஆகப்பெரும் கடமை நமக்குள்ளது.
உன்னை எழுத்துக்களாலும் நினைவுகளாலும் தொட்டுக்கொண்டிருக்கிறேன். என் விரல்களைக் கொண்டு உன் அங்கங்களைத் தீண்டவும் தழுவவும் தொடவும் வருடவும் விரும்புகிறேன். சக மனிதத் தொடுதல்தான் அன்பின் அழகிய உருவம். உன் சந்தோஷத் தருணங்களில் கன்னத்தைத் தொடுவதை விடவும் சோகத் தருணங்களில் தோளைத் தொடுவதை விடவும் வேறென்ன உன்னை ஆசுவாசப்படுத்திவிடப் போகிறது.
"நீ எங்க தொலஞ்சு போனாலும் சீக்கிரமே என்னத் தேடி வந்திடு" என்ற உன் குரலில் அவ்வளவு தாபம் தென்பட்டது. கூடிய விரைவில் உன்னைத் தேடி வருவேன். அன்று என்னைக் கண்டவுடன் 'என்னை எடுத்துக்கொள். நான் இனி உனக்கு மட்டும்தான்' என்று மட்டும் சொல்லி விடாதே. ஒரு மனிதருக்கு முழுப் பொறுப்பாகும் பக்குவம் இன்னும் எனக்கு உண்டாகவில்லை. உண்டாகவும் போவதில்லை. ஒரு மனிதன் மனிதிக்கோ மனிதி மனிதனுக்கோ சொந்தமாக முடியுமா? சொல்! அவரவர் வாழ்வை அவரவர் வாழ்ந்து பரஸ்பரம் காதலை மட்டும் பகிர்ந்துகொள்வோம்.. ஒன்றை நினைவு கொள்! நான் காதலிப்பது எனக்காக ஏங்கும் உன்னை அல்ல. நீயாக இருக்கும் உன்னை.
நாம் இப்பொழுது காதலைக் காதலித்துக் கொண்டும் கொண்டாடிக் கொண்டும் இருக்கிறோம். இந்தக் காவிய காலம் முடியும் கட்டத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நாம் காதலைக் கொண்டாடித் தீர்த்த அந்நொடிதான் நாம் இருவரும் ஒருவரையொருவர் முழுதாகப் புரிந்துகொள்வதற்கான ஆரம்பப் புள்ளியாக இருக்கும். நான் உன்னிடமும் நீ என்னிடமும் பல குறைகளைக் காணும் பருவமாக அது இருக்கலாம். அதற்குப் பின்னும் நாம் காட்டிக்கொள்ளும் சின்ன சின்ன அக்கறையில்தான் காதல் என்ற சொல் அர்த்தப்படும்.
என் உணர்வு உன்னுடையதைச் சார்ந்துதான் இருந்தது. உன் சந்தோஷங்கள் என்னை மகிழ்விக்கவும் சோகங்கள் என்னைச் சிதைக்கவும் செய்தது. உன் தனிமை எனக்குச் சலிப்பை ஏற்படுத்தியது. இதைக் கேட்க உனக்குப் பெருமையாக இருக்கலாம். ஆனால் நான் இதை ஆபத்தாகக் கருதினேன். என்னுடைய பிரக்ஞை பிறரைச் சார்ந்திருப்பதை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. ஆனால் காதல் எனக்கு அதைத்தான் பரிசளித்தது. பயணத்தின்மீது எனக்கிருக்கும் பிரியத்தைத் தாண்டி என்னை நான் உணர வேண்டிய அவசியம் அப்போது எனக்கு இருந்தது.
எனக்குத் தெரியும்! என்னைவிட முக்கியமான நபர்கள் சிலர் உனக்கு இருக்கிறார்கள். எனக்கும் அப்படிதான். ஆனால் நம் இருவருக்கு இடையில் ஒரு அழகான உறவு உலாவிக் கொண்டிருக்கிறது. 'நீயே ஆதி, நீயே அந்தம்' வகையான காதலை நாம் இருவருமே விரும்புவதில்லை.
எனக்குத் தெரியும்! உனக்கு இன்னமும் உன் பள்ளிக் காதலன் மீதான காதல் அப்படியேதான் உள்ளதுதென்று. நானும் அதைத்தான் விரும்புகிறேன். நாளை நாம் பிரிய நேர்ந்தால் அதற்குப் பின்னும் நீ என்னைக் காதலித்துக் கொண்டிருப்பாய் என்பதற்கு இப்பொழுது உனக்கு அவன் மேலிருக்கும் காதல்தானே சாட்சி.
அன்பே! ஒவ்வொரு முறையும் நான் என் டைரியைக் கடக்கும்பொழுது, அதன் இடுக்கில் இருக்கும் உனக்கானக் கடிதத்தை எடுக்காமல் அதை மூடி வைப்பதே இல்லை.
தொலைதூரக் காதலியே! கண்காணாக் கண்மணியுன்
அலைவந்து அடிக்கிறதே, என்மூச்சுத் திணர்கிறதே!
இலைகளில் பயணிக்கும் எறும்பைப்போல் என்நெஞ்சு
கலைமகளின் நினைவுகளால் கவியில்கை நனைகிறது
கைப்பேசி கைதுசெய்து கரம்கோர்க்கக் காத்திருக்கும்
மெய்ப்பேசும் உன்நித்யன் மனமார மொழிகின்றேன்
மெய்த்தழுவல் வேண்டாமுன் மனம்தழுவல் போதுமெனப்
பொய்யுரைத்தால் நம்பாதே, அதுதானே கவிக்கழகு!
*
ஒரு பாடல் வெளியான புதிதில் அதை ரசித்திருப்போம். சில காரணங்களால் அப்பாடலைக் கேட்காமல், சில நாட்கள் கழித்து மீண்டும் கேட்கும்பொழுதும் அப்பாடல் புதிதாகவே இருக்கும். கேட்கத் தவறிய நாட்களை மன்னித்து அப்பாடலே என்னை அரவணைக்கும்போது, இருக்கத் தவறிய நாட்களை மன்னித்து காதலே என்னை உறவணைத்தால் என்ன?
இதைப் படித்தவுடன் அவளுக்கு சற்று மூச்சு வாங்கியது. அவள் வீட்டு காலிங் பெல் ஒலித்தது. கடிகாரத்தைப் பார்த்து, அக்கா வரும் நேரம் என்று அறிந்து கதவைத் திறக்க விரைந்தாள். ஒரு பெரிய பையைத் தோளில் சுமந்துகொண்டு வந்திருந்தான் நித்யன்.
"எப்படி இருக்க? என்ன ஞாபகம் இருக்கா?" என்று நித்யன் கேட்டதும் அவனைக் கட்டிப்பிடித்து அழுவதைத் தவிர அவளுக்கு வேறெதுவும் தோன்றவில்லை.
"அழுறியா? ஏன் அழுற? உன்ன விட்டுட்டு போனப்போ எனக்கு வராத அழுகை உனக்கு ஏன் வருது?" என்றான் நித்யன்.
"எதையோ ஜெயிச்சிட்ட மாதிரி இருக்கு"
"எனக்கும்"
லீலா அன்பை பாரமாகச் சுமந்திருந்தாள். அதைப் பெறுவதற்கு நித்யன் இல்லாததால் அது அவளுக்குச் சுமையாக இருந்தது. அதனால் அதைச் சிறு துகள்களாக உடைத்து, தன்னை சுற்றியிருந்தவர்களிடம் அளித்திருந்தாள். அதிலொரு பெருந்துகளை எதிர்பார்த்து வந்தவன்தான் வருண். இப்பொழுது கிட்டத்தட்ட லீலாவும் அவள் வளர்த்த நாய்க்குட்டியும் ஒன்றுதான்.
அடைந்ததை இழப்பதும் பிரிந்ததைச் சேர்வதும்தானே காதல். லீலா வருணிடம் காட்டிய மௌனமும் காதல்தான், நித்யனிடம் வெளிப்படுத்திய அழுகையும் காதல்தான். ஆனால் ஏதேனும் ஒரு காதலுக்கு அணை போட்டே ஆக வேண்டும் என்பதுதான் அவளுக்குச் சரியாகப்பட்டது.
அடுத்த நாள் வருணும் லீலாவும் கல்லூரி ஆடிட்டோரியத்தில் சந்தித்துக்கொண்டனர்.
"என்னாச்சு? ஏன் எதுவும் பேசாம ஒரு மாரி இருக்க?"
"நித்யன் வந்துட்டான்"
வருணுடைய உதடுகள் துடிக்கத் தொடங்கின. ஏதோ சொல்ல வந்தவன் நடுக்கத்தில் சொல்ல மறுத்துவிட்டான். லீலா அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானபோது "லீலா" என்றழைத்தான் வருண்.
"நா ஒன்னு கேட்கவா? நீ என்ன பதில் சொன்னாலும் இது முடியத்தான் போது. ஆனா எனக்கு உண்மையான பதில் வேணும். நீ என்ன லவ் பண்ணியா? நித்யன், மத்தவங்கள்லாம் மறந்திடு. மனச தொட்டு சொல்லு. உனக்கு என்மேல காதல் இருந்துதா?"
லீலா பதிலேதும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டாள். லீலா ஆடிட்டோரிய வாசல் தாண்டும்வரை அவளையே பார்த்தான் வருண். அவனுடைய கால்கள் தரையை விட்டு விலகவில்லை.
வருண் தனியாக நின்றுகொண்டு சோகத்தின் வெளிப்பாட்டில் இந்தக் கவிதையை எழுதுவதற்கு நித்யனின் வருகையே காரணம். எந்தவொரு வருத்தமுமின்றி சஞ்சாரத்தைத் தொடர்ந்தாள் லீலா எனும் வெள்ளைப் புறா. அதன் ஒற்றை இறகாய் காற்றிலாடியபடி உதிர்ந்தான் வருண்.
லீலாவை இவனால் மறக்க இயலாது. வழியில் யாரேனும் லேப் கோட் அணிந்திருந்தால் இவனுக்கு நினைவில் வருவது லீலாதான். இவன் கவிதையிலுள்ள ஒவ்வொரு எழுத்துக்களிலும், கடந்த ஐந்து மாத காலத்தில் இவன் கேட்ட ஒவ்வொரு பாடல்களிலும் லீலா நிறைந்திருப்பாள்.
வீடு திரும்பியபோது அவன் இறங்கும் பேருந்து நிறுத்தத்தில் மீண்டும் பள்ளி மாணவனானான் வருண். நான்கு ஆண்டுகளுக்கு முன் எழில்மாதுவிடம் எந்த இடத்தில் முதன்முதலாகப் பேசினானோ இன்று அதே இடத்தில் சங்கீதாவைக் காண்கிறான். வருணுக்கு அவளிடம் பேசவேண்டும் போலிருந்தது. அவளை நோக்கி நடந்தான். அவன் முன்னெடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் அவன் ஞாபகங்கள் பின்னோக்கிப் பள்ளிப் பருவத்திற்குச் சென்றது. அவளிடம் பேசத் துவங்கியதும் பள்ளிச் சீராடை அணிந்திருப்பதைப் போல் உணர்ந்தான்.
"எப்படி இருக்க சங்கீதா?"
"நல்ல இருக்கேன். நீ எப்படி இருக்க வருண்?" என்ற அவளுடைய வார்த்தைகளும் பார்வையும் வியப்பில் நீந்திக் கொண்டிருந்தது.
"நல்லா இருக்கேன்"
“எங்க?"
"காலேஜ் போயிட்டு வரேன்டா”
"லைஃப் எப்படி போகுது?"
"எனக்கென்ன? நல்லா போகுது"
"முடிச்சிட்டு என்ன பண்றதா இருக்க?"
"அம்மா பேங்கிங் பண்ண சொல்றாங்க. எனக்கு ஏர் ஹோஸ்டஸ் ஆகணும்னு ஆசை"
"அதையே பண்ணலாம்ல?"
"பாப்போம். எனக்கு முதல்ல வேலைக்கெல்லாம் போகணுமான்னு இருக்கு. கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து ஃபேமிலி வுமனா இருக்கணும்"
"அப்படி ஒரு தாட் வேற இருக்கா உனக்கு?
சங்கீதாவின் இந்த மாற்றத்தைக் கண்டு வருணுக்குக் காலத்தின்மீது புதிராக இருந்தது. கொஞ்ச நேரம் மெளனமாக நடந்தார்கள். அவர்கள் பள்ளிக் காலத்தில் நடந்து சென்ற வழிகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை, தங்களுக்குள் ஏற்பட்ட மாற்றத்தின் உவமையாகக் கண்டுகொண்டே நடந்தார்கள். வருணின் வீடு வந்திருந்தது. அங்கே இருந்த மரத்தின்கீழ் இருவரும் வந்து நின்றனர்.
"லீலா. உனக்கு அப்படியே ஆப்போசிட். கொஞ்சமா பேசுவா, அதுல கண்டிப்பா ஒரு அழகான பொய் இருக்கும். புக் ஃபேர்ல புக்க கண்டு புடிச்சதுக்குலாம் எக்ஸைட் ஆவா. நா பேசுனா மட்டும் கொஞ்சம் பயப்புடுவா, அதிகமா வெட்கப்படுவா"
"நம்ம பிரிஞ்சதுக்கு அப்புறம் யாராவது உன்கிட்ட இந்தக் கேள்வியைக் கேட்டிருக்காங்களா? ஏன்னா நீ அவங்ககிட்ட என்னப் பத்தி இந்த மாதிரி அழகா ஏதாவது சொல்லியிருப்பல!"
வருண் புன்னகைத்தான்.
"சரி நீ சொல்லு.. உனக்கு யார்மேலயாவது லவ் வந்துதா?"
"எனக்கு லவ் பண்ணவே தோணல. சொல்ல போனா பயமா இருந்துது. தேவையில்லாம ரெண்டு பேருக்கும் கஷ்டம்"
"ஏதோ ஒரு விஷயத்துக்காகக் கஷ்டப்படத்தான் போறோம். அதக் காதலுக்காக படுறதுல தப்பில்ல சங்கீதா"
சங்கீதா யோசித்தாள்.
"என்ன பிரச்சனை?"
"ஹ்ம்ம்?"
"லெட்டர்ல எழுதியிருந்தியே. அதான் என்ன பிரச்சனைன்னு கேட்டேன்"
"10th பப்ளிக் எக்ஸாம் ஓட என் படிப்ப நிறுத்திடலாம்னு வீட்ல பேசிட்டு இருந்தாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. எங்க எச்.எம் லீனாதாசன் ஆஃபீஸ் ரூம் போஸ்ட் பாக்ஸ்ல லெட்டர் எழுதிப் போட்டேன். ஒரு பேப்பர் முழுக்க 'நான் படிக்கணும்..நான் படிக்கணும்'னு மட்டுமே எழுதி போட்டேன். எனக்கு வேற என்ன எழுதுறதுன்னு தெரில. அவங்க அந்த லெட்டரை பார்த்திட்டு எங்க அம்மாவ கூப்பிட்டு ஒன்னு சொன்னாங்க.
'உங்க பொண்ணு எப்படிப் படிப்பா தெரியுமா? ஒரு தடவகூடக் கம்மி மார்க் எடுத்ததில்லை. இந்த வயசுல கொஞ்சம் அப்படி இப்படினு இருக்கதான் செய்யும். அதுக்குன்னு படிப்பை நிறுத்திடுவீங்களா? உங்களால படிக்க வைக்க முடியலைன்னா சொல்லுங்க, உங்க பொண்ண நா படிக்க வைக்கிறேன்'
அவங்க பேச்ச கேட்டுதான் என்ன +1 , +2 ஊர்ல படிக்க வெச்சாங்க. இன்னைக்கி நான் காலேஜ் படிக்குறதுக்கு காரணமே அவங்கதான்"
"நான் ஒன்னு சொல்லவா? உனக்காக இல்லைனாலும் உங்க எச்.எம் லீனாதாசனுக்காகவாவது நீ ஏர் ஹோஸ்டஸ் ஆகணும். குடும்பம், குழந்தை, புருஷன்னு வாழ்க்கைய சுருக்கிக்காத. நீ சுயமா உழைச்சு சம்பாதிக்கிறத என்னைக்காவது அவங்க பார்த்தாங்கன்னா சந்தோஷப்படுவாங்க"
வருண் சொன்னதைக் கேட்டுக்கொண்டு, தன் பையிலிருந்து ஏதோவொன்றை எடுக்கிறாள். அது, அவனிடம் வாங்கிய 'வெண்ணிற இரவுகள்' புத்தகம். 'இத்தனை ஆண்டுகளாக நான் ஏதோவொரு புத்தகத்தின் வடிவிலாவது அவள் ஞாபகத்தில் இருக்கிறேன்' என்பது வருணுக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது. பதிலுக்கு வருணும் அவளிடம் ஒன்றைக் கொடுக்க பையைத் திறக்கிறான். அது, அவளுக்கு எழுதிய பதில் கடிதம்.
அன்புள்ள சங்கீதா,
இந்த ஒரு வாரம் என் லைஃப்ல மறக்கவே முடியாது. நீ என்கிட்டே பஸ்ல பேக கொடுத்தது இன்னும் என் கண்ணுக்குள்ளயே இருக்கு. என்கிட்டே சகஜமா பேசுன முதல் பொண்ணு நீதான். அதனாலதான் எனக்கு உன்னப் புடிச்சுது. வீட்ல புக்ஸ் எடுக்க போனாலே உனக்குக் கொடுத்த முத்தம்தான் ஞாபகம் வருது. நீ கடைசியா பார்த்துட்டுப் போன பார்வை.. அதுல இருந்த மீள முடியாமதான் இந்த லெட்டரை எழுதுறேன். என்னைக்காவது நான் உன்ன மறுபடியும் பார்த்தா இந்த லெட்டர் உன் கைல இருக்கும். ஐ லவ் யு சங்கீதா. நீ கேட்ட உடனே நா இதச் சொல்லாதது எவ்வளவு தப்புனு எனக்கு இப்போ புரியுது. ஐ லவ் யு.
அழுகையுடன்,
வருண்
இதைப் படித்தவுடன் சங்கீதா வருணைப் பார்த்து வலி நிறைந்த புன்முறுவலிட்டு, அந்தக் கடிதத்தை தன் பைக்குள் வைத்துக்கொண்டாள்.
"எனக்காக இன்னொரு தடவக் கஷ்டப்படவும் அழவும் தயாரா?"
சங்கீதாவிடம் பதில் கூற வருணுக்கு வார்த்தை வசப்படவில்லை. அவளுடன் மீண்டும் முதலிலிருந்து உறவைத் தொடங்குவது சரியாகவும் லீலாவை மறக்க சங்கீதாவுடன் சேர்வது தவறாகவும் பட்டது. சங்கீதா கேட்டதை போல் ஒரு வலிமையான வினாவை அவன் எதிர்கொண்டதே இல்லை. கால வெளியிடையால் எழுந்த வினாவிற்குக் கால அவகாசம் வாங்கி விட்டு விடைபெற்றான்.
இந்தத் தற்செயலான சந்திப்பு இவனுக்கு வாழ்க்கை ஏதோவொன்றைக் கற்பித்தது போல் தோன்றியது. கல்லூரி காதல் முடிந்து போன அதே நாளில், இவனுடைய பள்ளி காதல் ஒரு தென்றலைப் போல் தொட்டுச் சென்றதுதான் ப்ராப்தமோ? சங்கீதாவுடன் பேசிய இந்த ஐந்து நிமிடங்கள் இவனுடைய ஐந்து மாத காதல் வலியிலிருந்து இவனை மீட்டெடுத்தது.
*
ஒருநாள் மாலை ஐந்து மணிக்கு, விமலா தனியாக மெரினா கடற்கரைக்கு வந்திருந்தார். எப்போதாவது மன அமைதி தேவைப்பட்டால் கடற்கரைக்குத் தனியாக வந்து அமர்வது விமலாவின் வழக்கம். குதிரையில் செல்லும் சிறுவன், இராட்டினத்தில் சுற்ற அடம்பிடிக்கும் சிறுமி, பஞ்சு மிட்டாய் சாப்பிடும் குழந்தை, ஆண்களிடம் மட்டும் காசு கேட்கும் திருநங்கைகள், கரையில் விளையாடிக் கொண்டிருப்பவர்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதும் பலூன் சுடும் சப்தம், பனிக்கூழ் விற்பவனின் மணியோசை, அலைகளின் ஒலி, மக்களின் உற்சாகக் குரல் ஆகியவற்றைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதும் கிருபாவைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. கண் எட்டும் தூரத்தில் கிருபா பார்த்துக்கொண்டிருப்பதை விமலாவும் கவனித்து விட்டார். ஆனால், கிருபா விமலாவிடம் வந்து பேசவில்லை. அவர் தன் பார்வையைத் திசை மாற்றிக்கொள்வதைக் கவனித்த விமலா, தானாகவே சென்று கிருபாவிடம் பேசினார்.
"கண்டுக்க மாட்டிங்க போல?"
"அப்படியெல்லாம் இல்லை. தயக்கம்"
"அப்படிப் போய் பேசலாம்"
இருவரும் கடற்கரையின் மையப்பகுதியில் அமைதியான ஓரிடத்தில் அமர்ந்து பேசினார்கள்.
"வாழ்க்கை எப்படி போகுது கிருபா?"
"பிரச்சனை ஒன்னும் இல்ல. ஆனா தனிமைதான் பயமுறுத்துது. நீ ஏன் இன்னொரு கல்யாணம் செஞ்சிக்கல?"
"நான்தான் பொம்பளையாச்சே"
"சொசைட்டிய விடு. உனக்குத் தோனலையா?"
"உண்மைய சொல்லனும்னா தோனிச்சு. ஆனா பண்ணாததுக்குக் காரணம் சொன்னா சிரிப்பீங்க. ஒருநாள் வருண் 'மறுபடியும்' படம் பார்த்திட்டு இருக்கும்போது நானும் கூட சேர்ந்து பார்த்தேன். அந்தப் படம் பார்த்து முடிச்சதும் இன்னொரு கல்யாணம் செஞ்சிக்கவே கூடாதுனு முடிவு பண்ணேன்"
"இதுல சிரிக்க என்ன இருக்கு?"
"ஹ்ம்ம். குடியவிட்டுட்டீங்கன்னு வருண் சொன்னான். அன்னைக்கி உங்கள அப்படி நடந்துக்க வெச்சது குடி இல்ல கிருபா. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க குடிக்கலைனாலும் அப்படிதான் பிஹேவ் பண்ணியிருப்பீங்க"
"சாரி விமலா. இதை சொல்லதான் பத்து வருஷமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். உங்களப் பத்தி நான் யோசிக்காத நாளே இல்ல. நீ டைவர்ஸ் கேட்டதும் ஒரு விதத்துல நல்லதுதான். இல்லைனா நான் அப்படியே இருந்திருப்பேன்"
"நீயே வந்து பேசுவன்னு நினைச்சுக்கூடப் பார்க்கல" என்றார் கிருபா.
"இதுல என்ன இருக்கு?"
"நீ ஏன் என்கிட்ட 'குடிக்காத'னு ஒரு வார்த்தைகூடச் சொன்னதில்ல விமலா? 'குடிச்சா முத்தம் கொடுக்காத'னுதான் சொல்லிருக்கியே தவற 'குடிக்காத'னு நீ சொன்னதே கிடையாது"
"அது அபத்தம் கிருபா. உங்களுக்குப் புடிச்சத நா செய்யணும்னு நீங்க எதிர்பார்க்கிறதும் எனக்குப் புடிக்காதத நீங்க செய்யக்கூடாதுனு நா எதிர்பார்க்கிறதும் ரொம்ப அபத்தம். விருப்பம் இல்லாத எடத்துல சலிச்சிக்கிட்டு வாழுறது அதவிட அபத்தம். நீங்க விருப்பப்பட்டுத் தேர்ந்தெடுத்த குடில இருந்து உங்கள மீட்டு கொண்டு வந்து வெச்சிக்கிட்டு நா என்னத்த சாதிக்க போறேன்?"
"விமலா. நான் ஒன்னு கேட்கலாமா?"
"கேளுங்க"
"நம்ம ஏன் புதுசா வாழ்க்கைய ஆரம்பிக்கக்கூடாது?"
"நம்ம ரெண்டு பேரும் பேசலாம், வெளிய போகலாம். ஆனா சேர்ந்து வாழ முடியாது. எனக்கு ஒரு சுதந்திரம் தேவைப்படுது. வருண் இப்போ அவனைப் பார்த்துக்கிற அளவுக்கு பக்குவமாகிட்டான். சமைக்கக்கூடக் கத்துக்கிட்டான். நான் மூனு நாள் தனியா எங்கேயாவது போனா கூட 'எப்போ வருவ'னு யாரும் கேட்காத சுதந்திரம் எனக்கு இப்போதான் கிடைச்சிருக்கு. அந்த வாழ்க்கைய நான் வாழணும்னு ஆசைப்படுறேன். எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்ல. என்மேல எனக்கொரு அளவுகடந்த அக்கறை அவ்ளோதான். நீங்க எப்போ வேணாலும் வீட்டுக்கு வரலாம். எனக்கு உங்களைப் பார்க்கணும்னு தோனிச்சுன்னா நான் கண்டிப்பா உங்க வீட்டுக்கு வறேன்"
Comments