பாலியல் தொழிலாளிகளைக் குறித்தும் காமத்தைக் குறித்தும் எழுதப்பட்ட மிகச்சிறந்த நூல்களில் ஒன்று ‘நளினி ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை’. இந்த நூலை வாசித்து முடித்ததும் சாரு நிவேதிதாவின் ‘இச்சைகளின் இருள்வெளி’ என்ற நூலைக் கண்டடைந்தேன். அது சாருவுக்கும் நளினி ஜமீலாவுக்கு இடையே நடந்த நேர்காணல் தொகுப்பு. இரண்டுமே அவசியம் வாசிக்கப்பட வேண்டியவை. ‘இச்சைகளின் இருள்வெளி’ நூலின் ஒரு பகுதியில் நளினி ஜமீலா, பள்ளியில் பாலியல் கல்வியின் தேவை குறித்த முக்கியத்துவத்தைப் பேசிக்கொண்டிருக்கும்போது சாரு அதற்கு முரண்படுவார். ‘அந்தக் காலத்து மனிதர்கள் இதையெல்லாம் கல்வியின் மூலமாகவா கற்றுக்கொண்டார்கள்? மற்ற விலங்கினங்கள் இதைப் பாடமாகப் படித்தா இனவிருத்தி செய்கின்றன?’ என்ற கேள்வியை எழுப்பியிருப்பார். இருவருக்குமிடையே ஏற்படும் அந்த விவாதம் படிக்க சுவாரசியமாக இருக்கும். புதிய பிரதியில் வெளியாகியுள்ள புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில், பாலியல் கல்வியின் அவசியம் குறித்து நளினி ஜமீலாவிடம் தான் வைத்த வாதங்களைத் திரும்பப் பெற்றிருப்பார் சாரு. அதாவது ‘எனது கருத்தை நான் மாற்றிக்கொள்கிறேன். பள்ளி மாணவர்கள் பாலியல் கல்வி அவசியமானது’ என்று எழுதியிருப்பார்.
சமீபத்தில் வாசித்த ‘சாண்ட்விச்’ நாவலில்கூட கதாநாயகனுக்குக் கலவி சார்ந்த கேள்வி ஒன்று எழும். அதற்கான விடை கிடைத்தபின் ‘இதெல்லம் ஸ்கூல்லகூட சொல்லித் தரலையே’ என்ற வசனம் இடம்பெற்றிருக்கும். அந்தக் கதையோடு அதைப் படித்ததும் சுத்த அபத்தமாக இருந்தது. க்ரைம் பக்கங்களில் பலாத்காரச் செய்தி வைரலாகும்போதெல்லாம் பாலியல் கல்வியின் அவசியம் குறித்துப் பேச முகநூலில் ஒரு கும்பலே படையெடுக்கும். இன்ஸ்டாகிராமில் இது சார்ந்த பதிவுகளைப் பார்த்துச் சலித்தேவிட்டது.
அவற்றைப் பார்க்கும்போது பலவித கேள்விகள் எழும். பள்ளி மாணவர்களுக்கு ஏன் பாலியல் கல்வி? பள்ளியில் நாம் கற்கும் பாலியல் கல்வி எந்த விதத்திலாவது வாழ்வில் பயன்படுகிறதா? அது நமது உளவியல் சார்ந்த சந்தேகங்களைத் தீர்க்கிறதா? காமம் சார்ந்த சிக்கல்களிலிருந்து ஒருவனை விடுவித்து மன நிம்மதி அளிக்கிறதா? இல்லை எனும்பட்சத்தில் அதை இவ்வளவு விடாப்பிடியாக வலியுறுத்த வேண்டிய அவசியம் என்ன?
பள்ளிக் காலத்தில் நமது பாலியல் கல்விப் பாடங்களை எடுக்காமல் தவிர்த்த ஆசிரியர்கள் நமக்கு ஒருவகையிலும் தீங்கிழைக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஒருவேளை ஆசிரியர்கள் தவிர்க்காமல் கற்பித்தே இருந்தாலும் நம்மால் ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவுகொள்ள முடியுமா? அதே கல்வியாண்டில் கணக்குப் பாடங்களிலிருந்து கொடுக்கப்பட்ட 4 அல்ஜிப்ரா ஃபார்முலாவாவது இப்போது நினைவிருக்கிறதா? ஆனால் அப்படி வலிந்து நினைவுகொள்ளும் அளவுக்குப் பள்ளியில் அவ்வளவு கடினமான பாலியல் கல்விப் பாடங்கள் இடம்பெறவில்லை. அதே Penis, Vagina, Sperm, eggs, testicles, ovaries தான். பள்ளியில் தவிர்க்கப்பட்டாலும் இந்த அடிப்படை ஒருவனுக்கு எதன்மூலமாகவோ வந்து சேர்ந்துவிடும்.
பல வழக்கமான தமிழ்த் திரைப்படங்களில் அல்லது இலக்கியக் கதைகளில், ஆசிரியர்கள் பாலியல் கல்விப் பாடங்களைத் தவிர்ப்பதால் பிள்ளைகள் டிவிடி மூலமாக அதைத் தெரிந்துகொள்ளத் துடிப்பது போலச் சித்தரிக்கப்படுகின்றன. அந்தப் பாடங்கள் எடுக்கப்பட்டாலுமே ஒருவன் ஆபாசங்களின் குழியில் விழப்போகிறான் என்பதுதான் யதார்த்தம். அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருகிறான் என்பது அவனவன் சாமர்த்தியம். பாலியல் கல்வியை முறையாகக் கற்பிக்கப்படும் நாடுகளில் மனிதர்கள் ஆபாசங்களைப் பார்ப்பதே இல்லையா என்ன? அதுபோன்ற வளர்ந்த நாடுகளிடமிருந்துதான் காமம் சார்ந்த கிறுக்குத்தனங்கள் நமக்கு அறிமுகமாகின்றன என்பதை மறந்துவிடவும் வேண்டாம்.
நான் முதன்முதலில் புணர்ந்தபோது எனக்கு அதிலிருந்து கிடைத்த இன்பத்தைத் தாண்டி, அந்தக் கலவி எனக்கு என் உடல் சார்ந்த மிகப்பெரிய கேள்வியை எழுப்பியது. அந்தக் கலவி இருபாலருக்கும் திருப்தியாகவே நிறைவடைந்தாலும், என் உடல் சார்ந்து அறிந்துகொள்ளும் வேட்கையை, பெரும் கடமையை அக்கலவி எனக்களித்தது. எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கான விடை நிச்சயம் எட்டாம் வகுப்பு பாலியல் கல்விப் பாடங்களில் கிடைக்கப்போவதில்லை. அதற்கான பதில், Sexology அல்லது Urology பாடங்களின் மூலமாகக் கிடைக்கக்கூடியது எனும்பட்சத்தில் அவைதானே உண்மையான பாலியல் கல்வி! எத்தனை பேர் அதைப் படித்திருப்பார்கள்? அல்லது எல்லோரும் அந்தத் துறையையே தேர்ந்தெடுத்துவிட்டால் மற்ற துறைகளின் நிலை? உண்மையான பாலியல் கல்வி அவசியமெனில் அது, மேல்நிலைப்பள்ளியை முடித்ததும் Sexology அல்லது Urology படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதன் மூலமே சாத்தியம் ஆகும்.
நான் படித்த பள்ளியில் எனக்குப் பாலியல் கல்விப் பாடங்கள் தவிர்க்கப்படாமல் எடுக்கப்பட்டது. அவை எனக்கு ஒருவகையிலும் தற்போது உதவாததால்தான் பள்ளியில் எடுக்கப்படும் பாலியல் கல்வியை எதிர்க்கிறேன். வழக்கமான பள்ளிகளைப் போல அந்தப் பாடங்கள் ஒரு வகுப்பில் கடந்துவிடவில்லை. நாங்கள் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது இதற்காகவே இரண்டு சிறப்பு நாட்களை ஒதுக்கினார் எங்கள் துணைத் தலைமை ஆசிரியர். அந்த இரண்டு நாட்களும் அனைவரும் பள்ளிக்கு வந்தே ஆக வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது. பொதுவாக பத்தாம் வகுப்பில் மாணவர்கள் எப்படிப் பேய் மாதிரி படிக்க வைக்கப்படுவார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த இரண்டு சிறப்பு நாட்களின் மூலம் பள்ளி நிர்வாகத்திற்கு எங்கள் மீதிருந்த அக்கரையை உணர முடிந்தது. எங்கள் வகுப்பில் மொத்தம் இரண்டு அறிவியல் ஆசிரியர்கள்; ஒருவர் ஆண், ஒருவர் பெண். அந்த இரண்டு நாட்களில் மாணவர்களுக்கு ஆண் ஆசிரியரும், மாணவிகளுக்குப் பெண் ஆசிரியரும் கற்பித்தனர். அடிப்படையான வகுப்புகள் முடிந்ததும் ‘காமம் சார்ந்த என்ன கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம்’ என்று அறிவித்தார் ஆசிரியர். நாங்கள் சுய இன்பப் பழக்கத்தைப் பற்றிக் கேட்டோம். அது கிறிஸ்துவப் பள்ளி என்பதால், ஒரே நாளில் 47 முறை கர மைதுனம் செய்து உயிரிழந்த ஓர் அர்ஜென்டினா ஆணைப் பற்றி எங்கள் ஆசிரியர் பேசிக்கொண்டிருந்தார். மேலும், அதிக முறை சுய இன்பம் செய்தால் ரத்தம் கசியத் துவங்கிவிடும் என்றார். அந்த அதிகத்தின் எண்ணிக்கையை மட்டும் சொல்லத் தவறிவிட்டார். திருநங்கை, திருநம்பி போன்ற சப்ஜெக்ட்களையும் சொல்லிக்கொடுத்தார். அந்த இரு நாட்களும் எங்கள் மனதில் மறக்க முடியாத நினைவுகளாகத் தங்கிவிட்டன. இரண்டாவது நாள் கடைசி பீரியடின்போது, “டேய் பசங்களா, கடைசி சந்தேகம் ஏதாவது இருக்காடா கண்ணுங்களா?” என்றார் ஆசிரியர். என் நண்பன் ஒருவன் எழுந்து, “சார், அரவாணிக்கு Sperm வருமா?” என்று கையைப் பாம்புபோல் வளைத்தபடி கேட்டான். நாங்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். ஆசிரியர் கைக்குட்டையை எடுத்து தனது வழுக்கைத் தலையில் வடிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டார். இவ்வளவு சொல்லிக்கொடுத்த பிறகும் ஒருவனுக்கு Sexist-ஆன கேள்விகள் எழுகிறதெனில், அதற்கு எல்லோரும் சிரிக்கின்றனர் எனில், அந்தப் பாலியல் கல்வியின் பயன் என்ன? காலம் மாறிய பிறகு உறைக்கும் என்பதெல்லாம் சும்மா பேச்சு. அவன் கேட்ட கேள்வியை இப்போது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது.
மேலும் கர மைதுனம் செய்வது குறித்து அவர் அவ்வளவு பயமுறுத்தியும் அன்று மாலையே வீட்டிற்குச் சென்று சுய இன்பம்தான் செய்தேன். அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்து செய்தேன். அந்த 15 வயது மாணவனுக்கு விந்தணுக்களின் வல்லமை பற்றித் தெரியவில்லை. ஆனால் காமத்தில் ஈடுபடும் வயதை எட்டிய பிறகே Semen Retention-ன் முக்கியத்துவம் விளங்குகிறது. இது புணர்தல் சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமல்லாமல், விந்தணுக்கள் என்பது ஒரு Energy என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. மைக் டைசன் தனது ஆட்டத்தின் உச்சத்திலிருந்த குறிப்பிட்ட ஐந்து ஆண்டுகளுக்கு அவர் செக்ஸே வைத்துக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், மிகச்சிறந்த அமெரிக்க ஓட்டக்காரர் ஒருவர் தனது போட்டியின் முந்தைய நாள் செக்ஸ் வைத்துக்கொண்டதால் தங்கத்தைத் தவறவிட்டார் என்ற செய்தியையும் அறிந்திருக்கிறேன். ஆக, இது செக்ஸுக்கு எதிரான பதிவல்ல. விந்தணுக்கள், எப்போது எஜாகுலேட் செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தம் வசம் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு சராசரி இந்தியன், பள்ளியில் பாலியல் கல்விப் பாடங்களைக் கற்றதிலிருந்து சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகே கலவிக்கு அறிமுகமாகிறான். ஆனால் இந்த நவீனத் தொழில்நுட்ப காலத்தில் ‘கால மாற்றம்’ என்பது ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் நிகழ்கிறது. அப்படியிருக்க, அதற்கேற்றாற்போல் மனிதனுக்குக் காமத்தின் மீதிருக்கும் ஆசைகளும் சந்தேகங்களும் மாறிக்கொண்டே இருக்கும். நமக்கு முந்தைய தலைமுறையினர் கலவியை இனவிருத்தி செய்யும் செயலாகவே கருதினர். ஆனால் நவீனக் காலம், கலவி என்பது இன்பத்திற்கான செயல் என்ற புரிதலை முழுதாக எட்டிவிட்டது. இந்த இன்பத்தின் அளவைப் பலமடங்கு பெருக்கிக்கொள்ளத் துடிக்கும் பின்நவீனத்துவக் காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு Fetish-ஐ முகமூடி போல் அணிந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த முகமூடி முகத்தில் வெளியே தெரியக்கூடியது அல்ல. இந்த Fetish-கள் மூலம் மனிதர்கள் அடையும் இன்பம் பன்மடங்கு உயர்கிறதெனில், அது சார்ந்த சிக்கல்கள் மற்றும் சந்தேகங்களும் பலமடங்கு அதிகரிக்கும். இதுதான் தற்கால மனிதர்களுக்கு இருக்கும் காமம் சார்ந்த பிரச்சினை என்றிருக்க, அவர் அதுசார்ந்த தேடலில் இறங்க வேண்டுமே தவிர எட்டாம் வகுப்பு பாலியல் கல்விக்குப் போர்க்கொடி தூக்குவதில் ஒரு பிரயோஜனமும் இருக்கப்போவதில்லை.
இந்த Fetish முகமூடியை நமக்கு அளித்ததில் ஆபாசத் திரைத்துறைக்கு பெரும் பங்குண்டு. மேலும் அது கலவியில் கதைத்தன்மை என்ற போலியான எதிர்பார்ப்பையும் கலந்துவிடுகிறது. தினசரி கர மைதுனம் செய்யும் ஒவ்வோர் ஆணும் தனது உயிரியலுக்கு விசுவாசமாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறான். அதேபோல ஆபாசப் படங்களைப் பார்ப்பவன் உளவியலுக்கு விசுவாசமாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறான். சமூக வலைதள அடிமைகளுக்கும் இது பொருந்தும். இவை நமது தூண்டுதல்களை அதிதீவிரப்படுத்தி நம்மை அடிமையாக்கக்கூடிய வல்லமை படைத்தவை என்ற யதார்த்தத்தை நம்ப மறுப்பவர்கள் ஏராளம். தனது உயிரியலுக்கும், உளவியலுக்கும் விசுவாசமாக இருப்பது இயற்கை என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். நாம் அவற்றிற்கு விசுவாசமாக இருக்கத் துவங்கும்போது அவை நம்மை ஆட்கொள்ளத் தொடங்கிவிடும். இதன்மூலம் நாம் நம்மீது வைத்திருந்த கட்டுப்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் துவங்கிவிடுவோம். தன்னைத் தானே கட்டுப்படுத்தத் தெரியாதவனால் உலகை ஆட்கொள்ளவும் வெல்லவும் முடியாது. ஒரு தேசத்தின் ஆண்கள் அனைவரும் தங்களது கட்டுப்பாட்டை இழந்து, உயிரியலுக்கும் உளவியலுக்கும் விசுவாசமாக இருந்து, எவ்வித கூடுதல் முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் உலாவிக்கொண்டிருந்தால் அந்தத் தேசமே அழிந்துபோகும். அல்லது பிற தேசத்தால் கைப்பற்றப்படும்.
Nice