கட்டற்ற காம எண்ணங்களிடம் தினந்தோறும் தோற்று மனச்சோர்வுற்று மீளத் துடிக்கும் ஒருவனின் கரங்களைப் பற்றி, கடினமான இடத்தில் அவனை அமர வைத்து, மகிழ்ச்சியின் மெய்யான பொருளைச் சொல்லி, அதனைத் தக்க வைத்துக்கொள்வதின் வழிகளையும் முக்கியத்துவத்தையும் உணர்த்திச் செல்கிறது, அவனின் முந்தைய தலைமுறை.
இன்ஸ்டாகிராம் பதிவுகளில் ஆண் பெண் உறவுகளில் அவர்களைப்பற்றிய தனித்தனியான பாலுவின் கருத்துகளில் சிலவற்றில் எப்போதுமே உடன்பட முடிந்ததில்லை. அவ்வண்ணமே தொடர்கிறது இந்நாவலிலும்.
ஒவ்வொரு அத்தியாயங்களின் பக்கங்களையும் புரட்டும் போதும் ஆதவனை நினைவூட்டியபடியே இருந்தது நாவல். பாலு, உனக்கு மொழி கைகூடத் தொடங்கிவிட்டது. பெருஞ்செயலாக்கத்தின் பாதையில் நீ எடுத்து வைத்திருக்கும் முதல் அடி இது. இன்னும் போக வேண்டிய தூரம் பல மைல்கள் இருக்கின்றன. அதில் சென்று கொண்டிருக்கும்போது செய்து முடித்தவற்றின் பிரக்ஞையேதுமின்றி உன் மொத்தப் பார்வையையும் முன்னோக்கி வைத்து மேலும் பல மகத்தான செயல்களைச் செய்தபடியே இருக்க வாழ்த்துகிறேன்.
நண்பனொருவன் எழுத்தாளர் சாரு நிவேதிதா சொன்னதாக, 'இலக்கியம் என்றாலே சோகமும் அழுகையுமாகவே இருக்க வேண்டுமென்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் மகிழ்ச்சியை எழுதுகிறேன்' என்றான். இதைக் கூறி, ‘ஒருவரின் துயரைத்தானே நாம் உணர்ந்து எடுத்துக்கொள்ள முடியும்; மகிழ்ச்சியை எவ்வாறு அப்படி?’ என்று கேள்வி எழுப்பினான். இலக்கியம், துயரிலிருப்பவனையும் குழப்பத்தில் சிக்கித் தவிப்பவனையும் அதிலிருந்து மீட்டெடுக்கவும் மாற்றோருக்கு மேலும் சிறக்க உந்துதலாகவும் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். எல்லாம் தாண்டி ஒருவன் எதை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானோ அவ்வாறே மாறி திளைத்து அழிவான் அல்லது வாழ்வான். நிச்சயமாக உன் எழுத்து மீட்பதில் பங்காற்றும் என்று நம்புகிறேன்.
மீட்சியை ருசித்து அதனை நாவலாகவும் மாற்றியிருக்கும் பாலுவுக்கு அன்பும் வாழ்த்துக்களும்.
சென்னை புத்தகக் காட்சியில் அரங்கு எண் F61-ல் கிடைக்கும்.
Comments