top of page
Search
Writer's pictureBalu

என் குளியலுக்குத் துணை லக்ஸ் எடர்னா


2024-ம் ஆண்டின் ஜனவரி 11-ம் தேதியின் மாலை, எனக்கு இத்தனை சுகந்தமாய்த் தெரிவதற்கு என் வியர்வையும் ஒரு காரணம். பாலு எழுதியிருக்கும் சொனாட்டா நாவலைப் படித்து முடித்துவிட்டு, கையோடு உடற்பயிற்சிக் கூடத்தை எட்டி, 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்ததால் வந்த வியர்வை, மாலையின் பொற்கிரணங்களுடன் என் உடலையும் வான்போல் அழகு செய்தது. எனவேதான் இந்தச் சுகந்தம் என்னை பரவசமாய் வைத்திருக்கிறது.

சொனாட்டா? இது ஒரு இத்தாலியச் சொல். மூலத்தை லத்தின் வழங்கி இருக்கிறது. இதன் பொருள், வெவ்வேறு அமைப்புகளால் ஆன இசை வரிசைகளைக் கொண்ட ஓர் இசைக்குறிப்பு. வாய்ப்பாட்டு இல்லாமல், முழுக்கவும் இசையால் நிரம்பி இருப்பது சொனாட்டா. பின்னணி இசை வேறு, சொனாட்டா வேறு. இது முழுக்க முழுக்க இசையமைப்பாளனின் சுதந்திரம். மிகத்தேர்ந்த கட்டுப்பாடுகளும் இலக்கணங்களும் கொண்ட அமைப்பு. இதுதான் சொனாட்டா நாவலின் மையக்கருத்தும் கூட. இலக்கணம் அல்லது ஒழுக்கம் என்பதைக் குறியீடாகக் கொண்டு பாலு உலகுக்குச் சொல்லியிருக்கும் அற்புதச் செய்தி - சொனாட்டா.

அப்படி என்ன கதை? பருவத்தின் வீரியத்தால் ஆபாசப்படம் என்ற சிக்கலுக்குள் அகப்பட்டுக் கொள்ளும் இளைஞனின் மீட்சியே கதை. இது மட்டுந்தான் கதையா? என்றால் கொஞ்சம் மேலே சென்று சொனாட்டாவுக்கு நான் கொடுத்த பொருளை மீண்டும் படித்துப் பார்க்கவும். இந்த சொனாட்டாவுக்குள்ளும் பல்வேறு கதைகளின் பின்னல் சரியான விகிதத்தில் பின்னப்பட்டிருக்கிறது.

சமீபத்திய கட்டுரைகள் மற்றும் காணொளிகள் மூலம் மாற்றுக் கருத்து உண்டாகி, நான் கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த எழுத்தாளர் பாலு, சொனாட்டா நாவல் மூலம் அவ்வெண்ணத்தை மாற்றி இருக்கிறார். சொனாட்டா இசைக் கலைஞனின் சுதந்திரம் என்று சொன்னேனே. இங்கும், சுதந்திரம் என்பதன் உண்மைப் பொருளைப் பாலு சொல்லிக் கொடுத்திருக்கிறார். உணர்ச்சி வசப்படவும், ஆழ்ந்த சிந்தனைக்குள் உந்தப்படவும், அதீத யோசனைக்குள் தள்ளப்படவும் பல்வேறு இடங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் சொனாட்டா, இன்றைய இளைஞர்கள் படிக்க வேண்டிய புத்தகம் என்று பரிந்துரைப்பதைக் கடமையாகக் கருதுகிறேன்.

நாவலுக்குள் ஆண்மை, பேராண்மை என்பதைப் பற்றியெல்லாம் பாலு நிறைய எழுதி இருக்கிறார். பல இடங்களில் என்னால் ஆமோதிக்கவும் சில இடங்களில் என்னால் மாற்றுச் சிந்தனையின்றி எதிர்க்கவும் நேர்ந்தது. குறிப்பாக, பெண்மையைக் குறித்த விவரிப்புகள் பல இடங்களில் மறுப்பையே சம்பாதித்தன. சில இடங்களில் ஆண்மைக்கு இவர் வரையறுத்திருக்கும் தத்துவங்களும் தேவையற்றதாய்த் தோன்றியது. ஆனால், அவற்றை நான் பாலுவிடமே கூட விவாதம் செய்ய விரும்பவில்லை. தத்துவங்களில் பிடித்தம் கொண்டு, மாற்றிக்கொள்ள விரும்பாத இருவர் விவாதம் செய்வது கால, ஆற்றல் விரையமே. நாவலுக்குள் உடற்பயிற்சி மற்றும் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசும் இடங்களில் பாலு எத்தனை உடற்பயிற்சிக் காதலர் என்பது தெரிகிறது. அது ரசித்து உடற்பயிற்சி செய்யும் அனைவருக்கும் மிகப் பரவமூட்டும் இடமாக இருக்கும். குறிப்பாக மூக்கால் மூச்சு விட்டபடி உடற்பயிற்சி செய்தால்தான் உடல் உஷ்ணத்தை சமன்படுத்த முடியும், மனத்தை மலைபோல் நிறுத்தி வைப்பதே தியானம் என்பது போன்ற இடங்கள் சிலிர்க்க வைக்கின்றன.

நாவலுக்குள் குறிப்பிட்டு 52-வது பக்கத்தில் பாலு செய்திருக்கும் செயல், பல்வேறு உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது. அதன் பிறகான 10 பக்கங்களைக் கடந்தபின் அவரை அழைத்து “என்ன டா எழுதிருக்க...” என்று பாராட்டாய்க் கடிந்தேன். இதே இடத்தைக் குறிப்பிட்டு தோழன் சீனிவாசன் திட்டியதாகத் தெரிவித்தார். அப்போது பாலு இன்னொன்றும் சொன்னார். “நீங்கள்லாம் ஃபோன் பண்ணி பேசுற தூரத்துல நா இருக்கேன். முகம் தெரியாத வாசகனோட நெலம எப்டி இருக்கும்” என்றார். அப்போது அவரை ஏன் அழைத்து நம் உணர்ச்சியை முன்கூட்டியே வெளியிட்டோம் என்று இருந்தது. உண்மைதான்! நான் பொறுத்திருக்க வேண்டும்.

நாவலில் காமத்தைக் கையாள்வது குறித்து பாலு நிறைய எழுதி இருக்கிறார். அதில் குறிப்பாக, காமம் என்ற கலை மட்டும்தான் பயிற்சி செய்யாமல் இருக்க இருக்கப் பெருகும் என்பது போல் குறிப்பிடுகிறார். அதாவது உணர்ச்சிகளைச் சேமித்து வெளிக்காட்டும்போது பல்கிப் பெருகும்என்ற தொணியில் அவர் எழுதி இருக்கிறார். அது அனைத்து உணர்ச்சிகளுக்கும் பொருந்தும். நாவலைப் படித்து முடித்ததும் ஆயிரம் எண்ணங்கள் மனதுக்குள் ஓடின. ஆனால் அவை அனைத்தும் உணர்ச்சிகளால் உந்தப்பட்டவை. சொனாட்டாவை நான் படித்துவிட்டேன் என்பதற்கான மரியாதையே அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பில் எதையும் செய்துவிடக் கூடாது என்பதுதான். அதனால் உடனே சிந்தனையை மாற்ற உடற்பயிற்சி, மற்றும் சில வேலைகளைச் செய்து முடித்து, பாலு பரிந்துரைத்திருக்கும் படியாகவே லக்ஸ் எடர்னாவை ஒலிக்கவிட்டு, குளிர்ந்த நீரில் அற்புதக் குளியலை இட்டு, முற்றிலும் படித்த அனுபவத்தை அறிவுக்குக் கொண்டு சென்று இந்தக் குறிப்பை எழுதுகிறேன்.

பாலுவின் 3 புத்தகங்களையும் நான் வாசித்திருக்கிறேன். முதல் புத்தகத்தில் வாசித்தவனின் மொழிகளாக ஒரு குறிப்பையும் எழுதி இருக்கிறேன். அதன் அடிப்படையில், முதல் இரண்டு நூல்களைக் காட்டிலும் பாலுவின் சொனாட்டா தொழில் ரீதியாக செம்படைப்பு. அதற்கு எழுத்தாளர் சரவண சந்திரனின் பூரண வழிகாட்டுதலே காரணம் என்று பாலு சொன்னார். மேலும் ஒரு பதிகப்பகத்தின் வாயிலாக புத்தகம் வெளியாகி இருப்பதால் விரல்விட்டு எண்ணும் அளவுக்கே எழுத்துப் பிழை காணப்படுகிறது. சில சொற்கள் எளிய பதத்திலேயே பயன்படுத்தலாம். அதை பாலு போகப்போக உணர்வார் என நம்புகிறேன். உதாரணத்திற்கு existence என்ற பதம் அநேக இடங்களில் வருகிறது. அதற்கு வலிந்து ‘இருத்தலியல்’ என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. அதை ‘இருப்பியல்’, ‘இருப்பு’ என்றே சொல்லலாம். இப்படிச் சிலவே எனினும் அவை திருத்தத் தகுந்தவை.
அதேபோல், சில அந்தரங்கக் காட்சிகளை எழுதும்போது பாலுவிடம் சூட்சுமத்தைக் கையாளப் பழகிக் கொள்ள கூடாதா என சில முறை வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். அவரது முந்தைய பெயர் சிறுகதையில் இருந்தே அதை சிரத்தை எடுத்து முயன்ற பாலுவுக்கு, சொனாட்டா நாவலில் அந்தக் கலை அற்புதமாக கைகூடிவிட்டது. என் பரிந்துரையை சிரமேற்கொண்டு செயலாக்கிச் சாதித்துள்ளமைக்கு என் தனிப்பட்ட நன்றிகள் என்றும் நிலைத்திருக்கும்.

பாலு, தம் முன்னுரையில் இந்த நூல் உருவான விதத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். உடல் ரீதியாக தயாராகாத வரை, இந்நூலை எழுதக் கூடாது என்று தமக்கொரு சவாலை வைத்துக்கொண்ட அவர், உடற்பயிற்சி என்னும் அமிழ்தத்தின் அடிபற்றி, தம்மை உடல் ரீதியாக தயார் செய்துகொண்ட பிறகே நாவலை எழுதி முடித்திருக்கிறார். அந்த வினைத்திட்பம் பெரும் ஊக்கத்தை அருள்கிறது. அதேபோல் கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்திலும் தம்மைப் பெருமளவு இழைத்திருப்பதாகக் கூறுகிறார். வாசித்த நானும் அனைத்துக் கதாபாத்திரங்களிலும் என்னை உணர்ந்தேன். ஆனால், எதிலும் என்னை முழுதாக நிறுவிக் கொள்ள முடியாதபடி அனைத்திலும் ஏற்பட்ட முரணுடன் அவற்றிலிருந்து வெளியேறியும் வாசித்தேன். எழுத்தாளர் சரவண சந்திரன் தம் முன்னுரையில் பாலுவுக்கு நாவலின் வடிவம் கைவந்திருப்பதைக் குறிப்பிட்டுப் பாராட்டி இருக்கிறார். அதையே நானும் கூற ஆசைப்படுகிறேன். நாவல் முழுவதும் பாலுவின் தேர்ந்த எழுத்துடன் சேர்த்து, உழைப்பும் மின்னுகிறது. அது வேண்டாத இடம் என்று ஒருபகுதி கூட இல்லாமல் ஆக்கி, அழகிருத்துகிறது.

2024 ஐ பெரும் திட்டங்கள் மற்றும் ஆர்வத்துடனும் தொடங்கி இருக்கும் எனக்கு, சொனாட்டா படிக்கக் கிடைத்ததைப் பராசக்தியின் ஏற்பாடாக எண்ணி மகிழ்கிறேன். எப்போதும் சொல்லும் வாசகத்தை, தூரத்து வாசகன் என்ற நிலையைக் கடக்க முடிந்த உரிமையில் “சபாஷ் பாலு” என்று கூறி வாழ்த்துகிறேன்.

எதிர் வெளியீடாக வந்திருக்கும் சொனாட்டா புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். நிச்சயம் படிக்கத்தக்குந்த நாவல்.

விவேக்பாரதி
11.01.2024
மாலை 07.35


****


‘சொனாட்டா’ குறித்த கவிஞர் விவேக் பாரதியின் மதிப்புரைக்காகச் சொல்லிக்கொள்ளாமல் மனதுக்குள்ளேயே காத்திருந்தேன். அவரின் இந்த மதிப்பீட்டால் நெகிழ்ந்து போகிறேன். விவேக் இதை வாசிப்பதற்கு முன்பே கணித்ததுதான். கருத்தியல் ரீதியாக அவர் எதிர்க்கும் சில இடங்களை வெவ்வேறு கதாபாத்திரங்களின் வாயிலாக இதில் எழுதியிருக்கிறேன். அதிலிருந்து தள்ளி நின்றுகொண்டாரே அன்றி, கருத்தியலை மட்டுமே வைத்து அவர் இந்நாவலை அளவிடவில்லை. ஒரு நல்ல வாசகருக்கான பண்பு இது. நிறை குறை என எல்லாவற்றையும் சுட்டிக்காட்டும் அற்புத நண்பர்! சொனாட்டாவுக்கு இதைவிட ஒரு நல்ல மதிப்புரை கிடைக்குமா எனத் தெரியவில்லை.

பாலு


13 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page