top of page
Search
Writer's pictureBalu

துயரங்கள் விற்பனைக்கல்ல - கார்த்திக் மதிப்பீடு


பாலு,

‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். ‘நிலவொளி சொனாட்டா’ கதையில் காதலுறவையும் கிரிக்கெட்டையும் ஒப்பிட்டது நன்றாக இருந்தது. ‘மனைவியால் கைவிடப்பட்டவன்’ கதையில் நாயகன் பல பெண்களைப் புணர்ந்து அதற்கு மனைவியிடம் சாக்குப்போக்கு சொல்வது ஏற்புடையதாக இல்லை. ஆனால் அக்கதையின் முடிவு ரசிக்கும்படியாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக என்ன தோன்றியது என்பதைச் சொல்கிறேன். தொகுப்பு நன்றாக இருந்தது. உன்னுடைய கதைகளை நான் எப்படிப் புரிந்துகொண்டே என்பதைத் தெரியப்படுத்த விரும்புகிறேன். உனது பெரும்பாலான கதைகளில் நீ காதலையும் காமத்தையும் பிரித்து எழுதியிருக்கிறாய். அதாவது ஒர் உறவில் இருக்கிற ஆணும் பெண்ணும் காதலை ஒருவருக்கும் காமத்தை ஒருவருக்கும் தருவதாக எழுதியிருக்கிறாய். இது பற்றி நாம் கல்லூரிக் காலத்திலேயே உரையாடியிருக்கிறோம்.

ஒருவர் ஓர் உறவிலிருந்துகொண்டே அவர் மாற்றாருடன் புணர்ச்சியில் ஈடுபடுவது எனக்கு ஏற்புடையதாக இல்லை. நீயே அதைப் பல இடங்களில் தவறு என்றுதான் எழுதியிருக்கிறாய். செக்ஸ் என்பது ஆன்மிக உணர்வுடன் கூடி நடக்கும்போதுதான் அது அழகாக மாறுகிறது. நீ செக்ஸை மையமாக வைத்து எழுதிய கதைகள் அனைத்திலும் எதிர்மறையான முடிவுகளே எட்டப்பட்டிருக்கும். எனவே உன் எழுத்திலேயே பதில் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. காதலும் காமம் இரு வேறு வழிகளை எடுத்து, இரு வேறு நபர்களுக்கு அளிக்கப்படும்போது அது உன் புத்தகத்தின் தலைப்பைப் போல்தான் இருக்கும். ஒரு கட்டத்தில் அதன் முடிவு துயரத்தை நோக்கியே செல்லும் என்று நினைக்கிறேன். அது நீ சப்டெக்ஸ்ட்டில் சொல்ல வரும் கருத்தா என்பது எனக்குத் தெரியவில்லை.

கதையின் பல இடங்களில் செக்ஸ் வருவது வலிந்து திணிக்கப்பட்டதாகவும் தோன்றியது. ஒருவேளை புதிதாக இலக்கியத்தை வாசிப்பதால்கூட எனக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். பிறர் எப்படி எழுதுகின்றனர் எனவும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் பல இடங்கள் ரசிக்கும்படியாகவும் இருந்தது. நான் மிக விரைவில் படித்த புத்தகம் இதுதான். விரைவில் ‘சொனாட்டா’ வாசிக்க வேண்டும். இனி தொடர்ந்து வாசிக்கலாம் என்று இருக்கிறேன்.

கார்த்திக்.
*



கார்த்திக்,

என் முதல் நூலான ‘கால வெளியிடை’யிலிருந்து வெளி வர எனக்கு வெறும் 6 மாதங்களே ஆனது. ‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ நூலிலிருந்து வெளியேற அதைவிடக் கூடுதலாக 6 மாதங்களை எடுத்துக்கொண்டேன். காரணம், முதல் நூலைவிட எழுத்தில் முன்னேறியிருக்கிறேன் என்ற சிறு பெருமிதம். இப்போது படிக்கும்போது எனக்கே பல இடங்களில் முரண் இருக்கிறது. ஆகவே எதையும் திரும்பிப் பார்ப்பதில்லை. இந்த நூலுக்கு அவ்வளவாக மதிப்புரைகளும் வருவதில்லை. அப்படி இருக்கும்போது உன்னுடைய இந்த மதிப்பீடு ஒருகணம் என்னையே திரும்பிப் பார்க்க வைக்கிறது. அதுமட்டுமின்றி, உன்னுடைய அவதானிப்பு இந்தத் தொகுப்புக்கு மிகவும் புதியது.

யாரும் சொல்லாதது. நீ குழம்புவது போல் நான் எந்தக் கருத்துகளையும் சப்டெக்ஸ்ட்டில் கூற எத்தனித்து எழுதுவதில்லை. நான் அப்படி எந்தக் கதைகளையுமே எழுதுவதில்லை. அப்படித் திட்டமிட்டு எழுதினால் சமைப்பது போலாகிவிடும். சினிமாக்காரர்கள் அதை Cook செய்வது என்பார்கள். அதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை. கலையை சமைக்க முடியாது. அது ஒரு வெளிப்பாடு. அப்படி வெளிப்படுத்தும் வகையில்தான் இப்போதெல்லாம் எழுதுகிறேன். கருத்துகளைக் கூறுவதின் பொருட்டு எந்தக் கதையையும் சொல்வதில்லை நான்.

உன்னுடைய ஒரு விமர்சனத்தைத் தீவிரமாகக் கருத்தில்கொள்கிறேன் இப்போதும். இந்தக் கதையில் செக்ஸ் வலிந்து திணிக்கப்பட்டதாகவும் இருக்கலாம் என இப்போது தோன்றுகிறது. இதைத் தொகுப்பு வெளியானபோதே என் தாய் ஒரு விமர்சனமாக வைத்தார். மேலும் நம் வயதொத்த ஒரு வாசகனும் கூறினான். நான் இப்போது எழுதுவது இளைஞர்களுக்காக என்பதால் அவர்களின் மதிப்பீட்டை ஆழமாக உள்வாங்கிக்கொள்வேன். அதற்காக அதைத் தவிர்ப்பவன் கலைஞன் அல்ல. ‘சொனாட்டா’விலும் செக்ஸ் இருக்கிறது. ஆனால் அது வலிந்து திணித்தது போல் இருக்காது. படிக்கும்போது நீ உணர்வாய். காமம் சார்ந்த எல்லா விஷயங்களும் அதில் காரணங்களுக்காகவே எழுதப்பட்டிருக்கும். வெளிச்சத்தைத் தேடி ஓடுபவனின் கதையை எழுதும்போது இருண்மையில் அவன் சிக்கித் தவிப்பதை எழுதியே ஆக வேண்டும். முதற்படியை ஏறாமல் பத்தாவது படியில் கால் வைக்க முடியாதது.

‘சொனாட்டா’ நீ அவசியம் படிக்க வேண்டிய நாவல் என்பேன். உன் மதிப்பீட்டை அறியக் காத்திருக்கிறேன்.

பாலு.



23 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page