இன்றுதான் உங்களின் ‘சொனாட்டா’வை படித்தேன். ருத்ரவ்வின் கீழ்மை, இயலாமை, காமம், ஒழுக்கமின்மை, சோம்பல், அடிமைத்தனம், அத்தனையும் என்னுள்ளும் இருக்கிறது. நான் என் உடலுக்கு, மனதிற்கு, உணர்வுக்கு எவ்வளவு அடிமையாக இருக்கிறேன் என்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் என்னால் இன்று வரை என்னை வெல்லவே முடியவில்லை.
நானும் மீட்சிக்காகப் பல அவதானிப்புகளைச் செய்து, முயற்சிகளை எடுத்திருக்கிறேன். அவை அனைத்தும் என் கீழ்மையிடம் தோற்றுத்தான் போகின்றன. ஆனாலும் மீட்சி பெற வேண்டும், ஒரு சிறந்த ஆணாக, என் சிறப்பானவற்றை வெளிப்படுத்த வேண்டும், நான் சாதாரணமானவனாக இருக்க விரும்பவில்லை என்றெல்லாம் எனக்குத் தோன்றும். உங்கள் நூல் நல்லதொரு உத்வேகத்தைக் கொடுத்தது. சலிப்பிற்குப் பழக வேண்டும் எனும் பார்வை எனக்கு முற்றிலும் புதிதாக இருந்தது. நான் செய்ய வேண்டியவற்றைச் சரியாக, மிகச் சரியாகச் செய்கிறேனா என்று அதிகம் யோசிப்பேன். நேர்த்தியாக இல்லை என்றால் ஒரு சிறு தடை, சிறு பின்வாங்கல் ஏற்படுமென்றால் மிகவும் குறுகிய மனநிலைக்குச் சென்று விடுவேன். ஆனால் உங்கள் சொல் வழியாக எவற்றைச் செய்யக்கூடாதோ அதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று புரிந்தது.
விடுதலையான நிமிர்வுடன், தெளிவுடன் உடல் வலிமையுடன், வீரமும் அன்பும் பொறுமையும் அறிவுமிக்க ஆணாக மாற வேண்டும் என்பது என் விருப்பம். அதற்கு உங்களின் நூல் நல்ல உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. உங்களின் பணி வருங்காலத்திலும் மேலும் சிறக்க, ஞானம் பெருக இறைவனை வேண்டுகிறேன். நன்றி பாலு.
コメント