பள்ளி சிறுமி தற்கொலை செய்து கொள்வதற்காகத் தூக்கில் தொங்கும்போது அவரது தந்தை வந்து தடுத்து விடுகிறார். தலையில் அடித்துக்கொண்டு தற்கொலைக்கான காரணத்தை மகளிடம் கேட்கும்போது, “அம்மாவுக்கு வேற ஒருத்தர்கூட அஃபேர் இருக்குப்பா” என்கிறாள் மகள். இது அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருப்பதையும், அதற்கு அவர் எந்த எதிர்வினையையும் கொடுக்காததை எண்ணி ஆச்சரியமாகிறாள். “ச்சீ, உங்களுக்காகத் தற்கொலை செய்துகொள்ள நினைச்சேன் பாருங்க” என்று அவரிடம் சொல்லிக் கூசுகிறாள்.
இத்தனைக்கும் அவர்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். கணவனிடம் கலவியில் திருப்தியடையாததால் காமத்திற்கு மட்டும் வேறு ஒருவனை நாடுகிறாள் மனைவி. “அம்மாதானே நம்மளை நல்லா பாத்துக்கிறா!” என்ற காரணத்தைச் சொல்லி அவளது செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறார் புகழேந்தி. மகளுக்கு இது அருவருப்பூட்டுகிறது. மாலை அம்மா வீட்டிற்கு வந்ததும் அவள் முகத்தில் முழிக்கவே நாணுகிறாள்.
புகழேந்தி இல்லாத சமயத்தில் அவருடைய மனைவி மகளிடம் “அம்மா இனி அப்படி நடந்துக்க மாட்டேன்” என்று மன்னிப்பு கேட்கிறாள். அழுதுகொண்டே ஓடுவதைத் தவிர என்ன செய்வதென்று மகளுக்குத் தெரியவில்லை. மகள் அழுவதைப் பார்த்த கணவர், எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்துவிட்டதை உணர்கிறார்.
“அவ உங்ககிட்ட சொல்லிட்டாளா?” என்றாள் மனைவி.
“எனக்கு முன்னாடியே தெரியும்” என்றார் புகழேந்தி. அவளின் அழுகை மேலும் அதிகமாக, “ஏய், அவ சின்ன பொண்ணு, அவளுக்கு என்ன தெரியும், விடு. இது உன்னோட வாழ்க்கை. உன்னோட சுதந்திரம், உன்னோட தேவை. இதுல யாருக்கும் தலையிட உரிமையில்ல. இனிமே அவளுக்கு தெரியாத மாதிரி நடந்துக்க, அவளுக்கு இன்னும் பக்குவம் வரல” என்கிறார் புகழேந்தி.
*
அரிசங்கர் எழுதிய ‘தகிக்கும் நிமிடங்கள்’ என்ற கதையைப் படித்ததும் கோபத்தில் ஒரு மோசமான காரியத்தைச் செய்தேன். அதை விடுவோம்.
சுவாரசியமான இந்தக் கதையை நிராகரிப்பது எனது எண்ணம் இல்லை. பலர் இந்தக் கதையை வாசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதை எழுதுகிறேன். இக்கதை தங்களை Influence செய்ய யாரும் தங்களை அனுமதித்துக்கொள்ளக்கூடாது என்பதே என் எண்ணம்.
‘தகிக்கும் நிமிடங்கள்’ சிறுகதை ஏற்படுத்திய முதல் அதிருப்தி, ஆண் தன் பலவீனத்தை அறிந்து அதிலேயே சுவாத்தியநிலையைக் கண்டுகொள்வது.
சமீபத்தில் என் முன்னாள் காதலியிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு விஷயத்தை ஒன்றரை மணி நேரத்திற்கு அறிவுரையாகக் கூறினாள்: “நமது பிழைகளை நாம் ஏற்றுக்கொள்வதைத் தவிர நமக்கு வேறு எந்த வழியுமில்லை. நானே உன் கடந்த கால பிழைகளை ஏற்கும்போது நீ உன் பிழைகளை ஏற்பதில் என்ன குறை?”
‘விஸ்வரூபம் 2’ படத்தின் வசனம் ஒன்று நினைவுக்கு வந்தது : “பொம்பள மாதிரி பேசாத, பொம்பளைங்ககிட்ட பேசாத”
என் முன்னாள் காதலி அப்படிச் சொன்னதுதான் சரி. அவளது பெண்தன்மை அதைச் சொல்ல வைத்திருக்கிறது. அவள் அப்படிச் சொல்லாமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியம். ஆனால் அதற்காக நான் அதைத் தேவ வாக்காகக் கருதிப் பின்பற்றத் துவங்கிவிட்டால் என்னைவிட முட்டாள் யாராவது இருக்க முடியுமா? ஆண்கள் தங்கள் பிழைகளை ஏற்றுக்கொள்ளப் படைக்கப்பட்டவர்களா என்ன? என் பிழைகளை மன்னித்துவிட்டு முன் நகர்வதுதானே சரி!
இந்த Acceptance மனநிலையை நான் முற்றிலும் வெறுப்பதால் புகழேந்தி பேசியவை அனைத்தும் எனக்கு முட்டாள்தனமாகவே படுகிறது. அவனுடைய மகள் பேசும் அனைத்துமே மிகச்சரியாக இருக்கிறது : “நீங்க பேசுறது உங்களுக்கே அசிங்கமா இல்லையாப்பா, அம்மா உங்களுக்குப் பச்சையா துரோகம் பண்ணிட்டு இருக்காங்க. நீங்க என்னடான்னா அது சரின்னு சொல்லிட்டு இருக்கீங்க. வெக்கமா இல்லையா உங்களுக்கு”
இரண்டாவது அதிருப்தி - மகள் சொல்வது போலவே தாய் செய்தது துரோகம். இதற்காக அவள் கொஞ்சமும் குற்றவுணர்வாக உணர்ந்ததாகத் தெரியவில்லை. இதைத் தன் விருப்பம், தன் சுதந்திரம், தன் தேவை என்கிற ரீதியில் கருதினால் உலகமே narcissistic மனிதர்களால் நிறைந்திருக்கிறது என்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது ஒப்பந்தங்களுடன் கூடிய உறவைக் கையாள தகுதியற்ற மனிதர்களாக மாறிவிட்டோம் என்று சொல்லலாம். ஏற்கெனவே சொன்னது போல, Men having an affair differs from Women having an affair. பெண் அதை ‘வெறும் கலவி’க்காகத்தான் செய்கிறாள் எனில், அவளது உயிரியல் கூறுகளில் பிழை இருக்கும் எனத் தோன்றுகிறது. பெண்களால் ஆண்களைப்போல் காதலையும், காமத்தையும் இரு வெவ்வேறு உணர்வுகளாகப் பிரித்து அணுக முடியும் என்று நான் நம்பவில்லை. “அவ உன்னையும் என்னையும் அவ்ளோ லவ் பண்றா” என்று புகழேந்தி தன் மகளிடம் சொன்னபோது ஒரு முழு ஏமாளியாகவே அவர் தெரிந்தார்.
காமம் என்பது காதலின் கொண்டாட்டம் என்பதைத் தாண்டி அது ஒரு போர். ஒரு பெண்ணை அடையும்போது அவளை வென்றுவிட்டதாகவே ஆணின் அகங்காரம் சொல்லும். ஆண்கள் ஒருபோதும் அந்த வெற்றியுணர்வைப் பிறருக்குக் கொடுத்துவிடக்கூடாது. தன்னவள் அதைக் கொடுக்கவும் அனுமதிக்கக்கூடாது.
கடைசி அதிருப்தி - புகழேந்தி தனது எண்ணத்தைப் பக்குவத்துடன் பொருத்திப் பார்ப்பது. “இனிமே அவளுக்கு தெரியாத மாதிரி நடந்துக்க, அவளுக்கு இன்னும் பக்குவம் வரல” என்ற கடைசி வரியைப் படித்துத்தான் கோபமடைந்து அந்த மோசமான காரியத்தைச் செய்தேன். எனக்கு மகள் பக்குவமடைந்துவிட்டதாகவே தோன்றுகிறது. இந்த ஒட்டுமொத்த சம்பவத்தை மகளின் கோணத்தில் பார்க்கும்போது ஒரு சுவாரசியமான Novelty இருக்கும். அதை நிராகரிப்பதே பக்குவத்திற்கான சான்றுதானே. அம்மா அப்படிச் செய்த என்ற அதிர்ச்சியில், ‘அவ்வாறு செய்வது தவறில்லை போல’ என்று தவறாகப் புரிந்துகொள்ளாதது எவ்வளவோ மேல். இச்சம்பவம் மகளின் வாழ்வில் பெரிய Trauma-வாக மாறும். மோசமான தலைமுறையைச் சேர்ந்தவராக இருப்பது மட்டுமல்லாமல் அதை அடுத்தவர்களுக்கும் கடத்தும் பாவத்தையே புகழேந்தி செய்கிறார்.
Comments