top of page
Search
Writer's pictureBalu

பாடகி - ஆன்டன் செகாவ்

அவள் இளமையாகவும் அழகாகவும் இருந்த காலத்தில் ஒருநாள் அவளது ரசிகரான நிகலாய் பெத்ரோவிச் கோல்பகோவ், அவளது வீட்டின் வெளி அறையில் அமர்ந்துகொண்டிருந்தார். அந்த அறை தாங்க முடியாத வெக்கையால் நிறைந்திருந்தது. மதுவையும் இரவுணவையும் முடித்திருந்த கோல்பகோவுக்குச் சலிப்பாக இருந்தது. அவருக்கு மட்டுமல்ல; சலிப்பு அவர்கள் இருவரையுமே பிடித்துக்கொண்டிருந்தது. அந்த வெக்கையான நாள் முடிவடைவதற்காக அவர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.



திடீரென, அறையின் காலிங் பெல் அடித்தது. அதிர்ந்து போன கோல்பகோப், பாஷாவைப் பார்த்தார்.

"தெரில. போஸ்ட்மேனா இருக்கலாம். இல்லனா க்ரூப் சிங்கர்ஸ் யாராவது இருக்கலாம்" என்றாள் பாடகி பாஷா.

தபால்காரரிடமோ பாடகிகளிடமோ மாட்டிக்கொள்வதில் கோல்பகோவுக்குக் கவலையில்லையெனினும், அவர் தனது ஆடைகளை எடுத்துக்கொண்டு அடுத்த அறையில் ஒளிந்துகொண்டார். ஆனால் வெளியே ஓர் அழகான இளமங்கை காத்துக்கொண்டிருந்தாள்.

செங்குத்தான படிக்கட்டுகளில் ஓடி வந்ததால் அவளுக்கு மூச்சுத் திணறியது.

"சொல்லுங்க?" என்றாள் பாடகி பாஷா.

அந்தப் பெண் எதுவும் பதிலளிக்காமல் வீட்டிற்குள் நுழைந்து அறையை நோட்டமிட்டாள். நிற்க முடியாததால் அங்கிருந்த ஒரு நாற்காலியில் அவள் அமர்ந்துகொண்டாள்; அவளுக்கு ஏதேனும் நிற்க முடியாத ஒரு நோய் இருக்கலாம். பேச இயலாத அவளது உதடுகள் நடுங்கின.

"என் புருஷன் இங்க இருக்கானா?" என்று கேட்டாள் அப்பெண். பாஷா தனது கண்களை உயர்த்தினாள்.

"புருஷனா?" - பயத்தில் பாஷாவின் கைகள் நடுங்கின. "என்ன புருஷன்?" என்றாள்.

"என் புருஷன்… நிகலாய் பெத்ரோவிச் கோல்பகோவ்"

"இ . . . இல்லங்க. . . . அப்படி . . . அப்படி யாரையும் எனக்குத் தெரியாது"

நிசப்தம். அப்பெண் தனது கைக்குட்டையை உதடுகளுக்கு மேல் செலுத்தி, தன் நடுக்கத்தை நிறுத்த மூச்சைப் பிடித்தான். பயந்துபோயிருந்த பாஷா, அப்பெண்ணின் முன் அச்சத்துடன் அசையாமல் நின்றுகொண்டிருந்தாள்.

"அப்போ அவன் இங்க இல்ல?" என்றாள் அப்பெண்.

"நீங்க . . . நீங்க எதப்பத்திக் கேக்குறீங்கன்னே தெரில"

"சிறுக்கி மவளே…" எனப் பாஷாவின் கண்களைப் பார்த்துக்கொண்டே சொன்னாள். "என்னடி பாக்குற? சிறுக்கித்தான் நீ. அப்டித்தான் கூப்டுவேன்"

அவளது கோபமான கண்கள், அவளின் மீது ஏதோ பயங்கரமான மற்றும் அசாதாரணமான தோற்றத்தை ஏற்படுத்தியதாக பாஷா உணர்ந்தார். அவளது சிவந்த கன்னங்கள் மற்றும் நெற்றிச் சுருக்கங்களைக் கண்டு பாஷா அஞ்சினாள். அந்த நெற்றிச் சுருக்கங்கள் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் அவள் ‘மரியாதைக்குரியவள் அல்ல’ என்ற உண்மையை மறைத்திருக்க முடியும் என்று பாஷாவுக்குத் தோன்றியது. அவளும் இவ்வளவு பயப்பட வேண்டிய அவசியமில்லை.

"என் புருஷன் எங்கே?" எனத் தொடர்ந்தாள். "அவன் இங்க இருக்கானோ இல்லையோ. என் காசை காணும். நிகலாய் பெத்ரோவிச்சைத் தேடிட்டு இருக்காங்க. . . . அவனை அரெஸ்ட் பண்ணப் போறாங்க"

அந்த பெண் எழுந்து அறையில் நடக்கத் துவங்கினாள். பாஷா எதுவும் விளங்காத பயத்துடன் காணப்பட்டாள்.

"இன்னைக்கே கூட அவனைக் கண்டுபிடிச்சு அரெஸ்ட் பண்ணலாம்" என்று சொல்லி அழுதாள். அவளது அழுகையில் எரிச்சல் ஒலித்தது. "அவன் இந்த நிலைமைக்கு வந்ததுக்கு யார் காரணம்னு எனக்குத் தெரியும்டி. என் இயலாமை உனக்குப் புரியுதா? உன்னைவிட நான் மனசளவுல பலவீனமா இருக்கேன். என்னையும் என் குழந்தைகளையும் பார்த்துக்க யார் இருக்கா? கடவுள் எல்லாத்தையும் பார்த்துட்டுத்தான் இருக்காரு. என் அழுகைக்கெல்லாம் சேர்த்து வெச்சு உன்னைத் தண்டிக்கத்தான் போறாரு. நேரம் வரும்; அப்போ உனக்கு என் ஞாபகம் வரும்…!"

மீண்டும் நிசப்தன். அந்தப் பெண் அறையைச் சுற்றி நடந்துகொண்டே கைகளைப் பிசைந்தாள். பாஷா ஆச்சரியத்துடன் அவளை வெறுமையாகப் பார்த்தாள்.

"எனக்கு எதுவும் தெரியாதுங்க" என்றபடி பாஷா அழத் துவங்கினாள்.

"பொய்!" - கோபத்தில் கண்ணீர் சிந்தியபடியே அப்பெண் சொன்னாள், "எனக்கு எல்லாம் தெரியும். எனக்கு உன்ன ரொம்ப நாளாவே தெரியும். அவன் போன மாசம் எல்லா நாளும் உன்கூடதான் இருந்தான்னும் தெரியும்!"

"ஆமா. அதுக்கு? அதுல என்ன இருக்கு? என்னப் பார்க்க நிறையப் பேர் வருவாங்க. நானா யாரையும் கட்டாயப்படுத்துறது இல்ல. அவருக்குப் பிடிச்சதப் பண்ண அவருக்கு உரிமை இருக்கு"

"இங்க பாரு. காசைக் காணும்! ஆஃபிஸ் பணம் வேற! உன்ன மாதிரி ஒரு கேவலமானவளுக்காக அவர் தப்பு பண்ணிருக்காரு" எனப் பாஷாவைப் பார்த்துக்கொண்டே தொடர்ந்தாள். "உனக்கு வேணா வாழ்க்கைல ஒழுக்கம் இல்லாம இருக்கலாம். அடுத்தவங்கள அழிக்கவே வாழ்றவ நீ. அது உன் இஷ்டம்; ஆனா உனக்குத்தான் கொஞ்சம்கூட உணர்வுங்கிறதே இல்ல! அவருக்குன்னு பொண்டாட்டி, குழந்தைங்கலாம் இருக்காங்களே… அவருக்கு ஏதாவதுன்னா அவங்கலாம் பட்னி கெடப்பாங்க… இதெல்லாம் எங்கேயாவது புரியுதா உனக்கு! அவரைக் காப்பாத்த நிறைய வழி இருக்கு. தொள்ளாயிரம் ரூபிள் கொடுத்தா அவங்களே அவரை விட்டிடுவாங்க. வெறும் தொள்ளாயிரம் ரூபிள்!"

"என்ன தொள்ளாயிரம் ரூபிள்?" பாஷா மெதுவாகக் கேட்டாள். "எனக்கு… எனக்குத் தெரியாது. நான் எடுக்கல"

"நான் உங்கிட்ட காசு கேட்கல… உங்கிட்ட காசும் இல்ல, உன் காசும் எனக்குத் தேவையில்ல. நான் வேற ஒன்ன கேட்டு வந்திருக்கேன்… உன்ன மாதிரி பொம்பளைங்களுக்கு ஆம்பளைங்க எப்போமே எக்ஸ்பென்சிவான கிஃப்ட் தருவாங்க. என் புருஷன் அப்டி ஒன்ன உன்கிட்ட கொடுத்தான்ல. அதை மட்டும் கொடுத்திடு!"

"அப்படி எதுவும் அவர் எனக்குத் தந்ததில்லை" என்றாள் பாஷா.

"அவன் சுத்தி இருக்கிற எல்லாருடைய நேரத்தையும் வீணடிச்சுக்கிட்டு இருக்கான். உன்னக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்! உன்னக் கேவலமா பேசுனதுக்கு மன்னிச்சிரு. நீ என்னை வெறுக்கிறன்னு தெரியும். ஆனா என் இடத்துல இருந்து யோசிச்சுப் பாரு. எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்திடு"

"இருந்தா கொடுக்க மாட்டேனா? அவர் என்கிட்ட எதையுமே கொடுக்கல. என்னை நம்புங்க. ஒரு வகைல நீங்க சொல்றது உண்மைதான். அவர் எனக்காக ரெண்டே ரெண்டு சின்ன கிஃப்ட் கொடுத்திருக்காரு. அதை வேணா திருப்பித் தந்திடுறேன்"

டேபிளிலிருந்த இழுப்பறை ஒன்றை பாஷா வெளியே இழுத்து, அதிலிருந்த தங்க வளையலையும், மாணிக்கத்துடன் கூடிய மெல்லிய மோதிரத்தையும் எடுத்தாள்.

"இந்தாங்க" என்று அவற்றை அப்பெண்ணிடம் கொடுத்தாள்.

அந்த மங்கைக்குக் கோபம் வந்தது.

"என்னது இது? நான் என்ன நிதியுதவியா கேக்குறேன். உனக்குச் சொந்தமில்லாததைத்தான் கேக்குறேன் தெரிஞ்சிக்கோ. ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்காத… அந்தாளு இருக்கானே… வியாழக்கிழமை, நான் உன்ன என் புருஷனோட பார்த்தப்போ உன் கைல ஒரு காஸ்ட்லியான ப்ரேசஸும் வளையலும் இருந்துது. என்கிட்ட உன் ஏமாத்து வேலையெல்லாம் வெச்சுக்காத. கடைசியா கேக்குறேன். கொடுக்கப் போறியா இல்லையா?"

“சத்தியமா சொல்றேன். இந்த ரெண்டு சின்ன கிஃப்டைத் தவிர நிகலாய் பெத்ரோவிச் வேற எதையுமே எனக்குத் தரல. அவர் எனக்கு நிறையக் கேக் மட்டும்தான் வாங்கித் தந்திருக்காரு"

"கேக்கா" என்றபடி சிரித்தாள். "வீட்ல கொழந்தைங்களுக்குத் தின்ன ஒன்னுமில்ல. உனக்குக் கேக்கு கேக்குதா. அவர் கொடுத்ததைத் தர மாட்டல்ல? இப்போ என்னப் பண்ணலாம்? தொள்ளாயிரம் ரூபிள் கிடைக்கலைன்னா எல்லாரும் நாசமா போகா வேண்டியத்தான். ஒன்னு, உன்ன நான் கொல்லனும். இல்ல, உன் கால்ல விழனும்"

அவள் தனது கைக்குட்டையால் தனது கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

"உன்னக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்" - பாஷா அப்பெண்ணின் அழுகையைக் கேட்டாள். "நீ என்னையும் என் புருஷனையும் அழிச்சிட்ட. அவரக் காப்பாத்து… உனக்குத்தான் உணர்வுங்கிறதே இல்ல… ஆனா குழந்தைங்க… குழந்தைங்க என்ன பண்ணாங்க பாவம்?"

அந்தக் குழந்தைகள் தாயுடன் நடுத்தெருவில் பசியுடன் நிற்பது போன்ற கற்பனையைச் செய்து பார்த்து பாஷா கண்ணீர் விட்டாள்.

"நான் என்னங்க பண்றது?" என்றாள் பாஷா. "நான் கீழ்த்தரமானவதான். உங்க நிகலாய் பெத்ரோவிச்சை நாசமாக்குனவதான். கடவுள் சத்தியமா அவர்கிட்ட இருந்து நான் எதையும் வாங்கிக்கல… எங்க கோரஸ் சிங்கர் க்ரூப் ஃப்ரெண்ட்ஸ்ல ஒருத்திக்கு மட்டும்தான் பணக்கார ரசிகர். மத்தவங்கலாம் சோத்துக்கு பொழச்சிட்டு இருக்கிறவங்க. நிகலாய் பெத்ரோவிச் படிச்சவர், நல்லவர். அதுனாலதான் அவரோட பழகினேன்"

"நான் உன்கிட்ட என் ஜ்வெல்லதான் கேட்டேன். அதக் கொடு. நான் அழுறேன்… ச்ச, என்னை நானே அவமானப்படுத்திக்கிறேன்… வேணும்னா உன் கால்லகூட விழுறேன்"

பாஷா பயந்தே போனாள். அப்பெண் தனது மானத்தைத் துறந்து காலில் விழுந்தது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"கொடுத்திடுறேன்" என்று பாஷா தனது கண்களைத் துடைத்தபடியே சொன்னாள். "இதெல்லாம் நிகலாய் பெத்ரோவிச் மட்டும் கொடுத்ததில்ல. எங்கிட்ட இருக்கிறது எல்லாமும் இதான். உங்க ஜ்வெல் எதுவோ அதை எடுத்துக்கோங்க…"

பாஷா ட்ராயரை வெளியே இழுத்து ஒரு வைர ப்ரூச், ஒரு பவள நெக்லஸ், சில மோதிரங்கள் மற்றும் வளையல்களை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தாள்.

"இதுல எது வேணுமோ எடுத்துக்கோங்க. ஆனா எதுவும் உங்க புருஷன் கொடுத்ததில்ல. எடுத்துக்கிட்டு பணக்காரியாகிக்கோங்க. நீங்க ஒரு நல்ல பொம்பளையா இருந்தா, ஒரு நல்ல பொண்டாட்டியா இருந்தா அவரை உங்க கூடவே வெச்சிக்கனும். நான் அவரை இங்க வர சொல்லல; அவராத்தான் இங்க வந்தாரு"

அழுதுகொண்டே அப்பெண் தனக்குக் கொடுக்கப்பட்டதை ஆராய்ந்து சொன்னாள்:

"இது பத்தாது… இது ஐந்நூறு ரூபிள்கூட தேறாது"

ஒரு தங்கக் கடிகாரம் மற்றும் ஸ்டட்களை அவசரமாக வெளியே எறிந்துவிட்டு, கைகளை உயர்த்தி பாஷா கூறினாள்:

"இதுக்கு மேல ஒன்னுமில்ல, வேணும்னா தேடிக்கோங்க!"

அந்தப் பெண் தனது கைக்குட்டையை எடுத்து கண்களைத் துடைத்துவிட்டு, ஒன்றும் பேசாமல் வீட்டைவிட்டு வெளியேறினாள்.

அடுத்த அறையிலிருந்து அவர் வெளியே வந்தார். மிகவும் பதட்டத்துடன் இருந்த அவரது கண்களில் கண்ணீர் மின்னியது.

"நீ எப்போடா எனக்கு கிஃப்ட் கொடுத்த?" என்றாள் பாஷா.

"கிஃப்டை விடு. ச்ச, உன்னை மாதிரி ஒருத்தி முன்னாடி அவ அழுது, கால்லலாம் விழுந்து…" என்றபடி கோபத்துடன் சொன்னார் நிகலாய் கோல்பகோவ்.

"உன்னதான் கேக்குறேன். நீ எப்போ எனக்கு கிஃப்ட் கொடுத்த?" என்று பாஷா அழுதாள்.

"கடவுளே! அவ எப்பேர்ப்பட்ட பொண்ணு தெரியுமா… உன் கால்ல போய் அவ விழுந்துட்டா. இதுக்கெல்லாம் நான்தான் காரணம்! என்னை நான் மன்னிக்கவே மாட்டேன்! என்னை விட்டுப் போடி… தேவுடியா முண்ட!" என்று அவர் பாஷாவைத் தள்ளிவிட்டு நகர்ந்தார். "அய்யோ, உன் கால்ல போய் விழுந்துட்டாளே"

அவர் அவசர அவசரமாகத் தனது ஆடைகளை உடுத்திக்கொண்டு பாஷாவைத் தள்ளிவிட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறினார்.

பாஷா படுக்கையில் படுத்துக்கொண்டு சத்தமாக அழத் தொடங்கினாள். ஏற்கெனவே அவளது உடைமைகள் பறிபோனது குறித்து வருந்தினாள். தற்போது அவளது உணர்வுகளும் காயப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வியாபாரி எந்தக் காரணமும் இல்லாமல் அவளை அடித்ததை நினைவு கூர்ந்து, இன்னும் சத்தமாக அழத் தொடங்கினாள்.





126 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page