top of page
Search
Writer's pictureBalu

சாத்தான் - டால்ஸ்டாய்

‘Nothing must interfere with the development of the hero. which is inside you, and if lust stands in a way, lust must be overcome to choose the pleasure of growth.’

- Friedrich Nietzsche

‘சாத்தான்’ நாவலின் யூஜின் ஓர் ஹீரோவாகத்தான் அறிமுகமாகிறான். தன்னம்பிக்கை உடையவனாகவும், உடற்பயிற்சியால் வலிமையான தசைகள் கொண்டவனாகவும், பெண்கள் மத்தியில் ஆட்டக்காரனாகவுமே அவனது ஆரம்பச் சித்தரிப்புகள் இருக்கின்றன. ஆனால் நீட்ஷே சொல்வது போலக் காமம் அவனது வலிமையைச் சிதைக்கிறது.

சமூக ஒழுக்கத்தையோ அல்லது சுய ஒழுக்கத்தையோ மீறும் இடத்தில்தான் டால்ஸ்டாயின் காதல்/காமம் கதைகள் வேகமெடுக்கும். ஸ்டீபன் தன் மனைவியை விடுத்து வேறொரு பெண்ணுக்குக் காதல் கடிதம் கொடுக்கும் முதல் அத்தியாயத்திலேயே ‘அன்னா கரீனினா’ நாவலின் தீவிரத்தன்மை தொடங்கிவிடும். அதேபோல் இங்கு யூஜின் ஏற்கெனவே திருமணமான ஸ்டெஃபானிடாவிடம் உறவு கொள்ளும் இடத்தில்தான் இந்நாவல் தொடங்குகிறது. அதுவுமே தாமதமாகாமல் உடனே நடந்துவிடுகிறது.

யூஜின் ஒரு Sexually Active என்பது இந்நாவலில் பிரச்சனை அல்ல; அவன் Sexually Uncontrollable என்பதில்தான் Conflict தொடங்குகிறது. நகரத்தில் வாழ்ந்த அவன், கிராமத்திற்கு வந்து தன் அம்மாவுடன் வாழ நேர்ந்தபோது அவனால் தொடர்ந்து புணர்ச்சிகளில் ஈடுபட முடியாமல் போகிறது. இது அவனை நிலைகுலையச் செய்கிறது. கட்டாய சுய கட்டுப்பாட்டில் அவன் இருக்க நேர்வது அவனைத் தொந்தரவுக்குள்ளாக்குகிறது. அடிமைத்தனத்திற்கான அறிகுறியை டால்ஸ்டாய் இப்படி மறைமுகமாகச் சித்தரிக்கிறார். ஆனால் யூஜின் நினைப்பதோ வேறு! தான் இதை ஆரோக்கியத்தின் பொருட்டு மட்டுமே செய்வதாகவும், என் உடலுக்கும் மனதுக்கும் இது பசி போலத் தேவை என்பதற்காக மட்டுமே புணர்ச்சிக் களியாட்டங்களில் ஈடுபடுவதாகவும் அவன் மனதார நம்புகிறான். பெரும்பாலானவர்களிடம் இப்படியான ஒரு வாதம் இருக்கிறது. காமம் மனிதனுக்கு அடிப்படைத் தேவை என்பதில் அது கிடைக்காமல் போகும்பட்சத்தில் ஒருவனது சிந்தனை குழப்பங்களுக்குள்ளாகும் என்பதில் மறுப்பதற்கில்லை. ஆனால் அதை உணவுப் பசியுடன் ஒப்பிடுவதைப் பலரிடம் பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நீண்ட காலம் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே பசி காமம் மட்டுமே. காமத்தின் அதீத சுவை அதை ஈடுபடுவதால் கிடைப்பதில்லை; கட்டுப்பாட்டில் கிடைப்பதாகவே நம்புகிறேன்.

பாலியல் வறட்சி ஒருவனை மதம் பிடிக்க வைத்துப் பைத்தியமாக்கும் என்று சொல்வார்கள். டால்ஸ்டாய் உலகில் அது நேர்மாறாக நடக்கிறது. ஸ்டெஃபானிடாவுடனான உறவை முறித்துக்கொண்ட சில நாட்களில் அவன் லிஸாவை மணந்துகொள்கிறான். லிஸா தான் கர்ப்பமானதும் 2 பெண்களை வீட்டு வேலைக்கு வைக்கிறாள்; அதில் ஒருத்தி ஸ்டெஃபானிடா. தனது பழைய காதல் உணர்ச்சிகள் எல்லாம் முழுமையாக அழிந்துவிட்டதாக முழுமையாக நம்பிய யூஜினுக்கு, ஸ்டெஃபானிடாவை மீண்டும் பார்த்ததும் மனதில் தடுமாற்றம் ஏற்படுகிறது. அவன் அவளைக் கண்டு அஞ்சுகிறான். அவளுடன் அவன் முன்பு பகிர்ந்த காமம்தான் இங்கு ‘சாத்தான்’ ஆகக் காட்டப்படுகிறது. உண்மையில் ஸ்டெஃபானிடா யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் இருக்கிறாள். ஆனால் அவள் மீதிருக்கும் மோகமே யூஜினின் மனநிலையைக் கொல்கிறது.

ஆண் மீதான காதல் குறித்த கற்பிதம் ஒரு பெண்ணை எந்த எல்லைக்குக் கொண்டு செல்லும் என்பதை செகாவ் ‘நாய்க்காரச் சீமாட்டி’ கதையில் எழுதியிருப்பார். அதேபோல பெண் மீதான காமம் குறித்த கற்பிதம் ஒரு ஆணை எப்படிப் பைத்தியமாக்குகிறது என்பதே ‘சாத்தான்’. இவ்விஷயங்களில் எதிர் தரப்பினர் எவ்வித வசியமும் செய்யாமலே ஆணும் பெண்ணும் மனதுக்குள் ஒரு போரையே நிகழ்த்துவர். ஸ்டெஃபானிடா எந்தத் தொந்தரவும் அளிக்காதபோதே யூஜின் அஞ்சுகிறான் எனில் உண்மையில் பிரச்சனை அவனிடத்தில்தான்.

கதைக்கு இரு முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டிலுமே யூஜின் பைத்தியக்காரனாகக் கருதப்படுகிறான். இப்படியான ஒரு கதைக்கு மகிழ்ச்சிகரமான மாற்று முடிவே இருக்க முடியாது!



52 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page