அன்புள்ள பாலுவுக்கு நவீன் எழுதுவது,
‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ புத்தகம் கிடைத்ததும் நீங்கள் என்ன எழுதியுள்ளீர்கள் என்று ஆவலோடு பார்த்தேன். கையெழுத்தோடு சேர்த்து ‘Never Sell your tragedy’ என்று இருந்தது. அந்த ஒரு வாக்கியத்துக்குப் பல அர்த்தங்கள் இருப்பதை உணர்ந்தேன். அதே மனநிலையில்தான் அனைத்துக் கதைகளையும் படித்தேன்.
புத்தகம் வாங்கியவுடன் முதல் சிறுகதையை மட்டும் படித்தேன். வித்தியாசமான முறையிலும் நான் எதிர்பார்க்காத முடிவுமாக இருந்தது. கடந்த காலங்களில் நானும் இரு நவீன மனிதனாக இருந்துள்ளேன் என்று எண்ணி என்னையும் ஒரு குற்ற உணர்வுக்குள் தள்ளியது.
அதன்பிறகு, அடுத்த கதையில் நான் அறிந்துகொள்ளாத இசையமைப்பாளர்களின் பெயர் மற்றும் பாடல்கள் இடம் பெற்றிருந்தன. சரி, அந்த இசையைக் கேட்டுப் படிக்கலாமென விட்டுவிட்டேன்.
நான் பணிபுரியும் நிறுவனத்தில் நான் வேலை செய்யும் Process-லிருந்து வேறு ஒரு புதிய Processல் மாற்றப்பட்டதால் அதைக் கற்றுக்கொண்டு அதைப் பிழையில்லாமல் குறுகிய நேரத்தில் முடிக்க ஒரு மாதத்திற்கும் மேலாயின. படிக்கும் ஆர்வம் குறைந்திருப்பதையும், படிக்காமல் புத்தகங்கள் இருப்பதையும் உணர்ந்தேன். இன்ஸ்டாகிராம் லைவில் நீங்கள் ஒன்று கூறியிருந்தீர்கள் : “படிக்க வேண்டுமென்று நினைத்தால் எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் படிக்கலாம்” என்று. அதன்பிறகு யோசித்துப் பார்த்ததில் சோம்பேறித்தனத்தை எனக்குள் நானே அனுமதித்து மெல்ல மெல்ல அடைக்கலம் கொடுத்ததை அறிந்தேன்.
சில நாட்களில் பத்து மணி நேரங்கள்கூட இருந்தாலும் ஒரு சில நாட்களில் ஒரு மணி நேரம் கிடைக்கும். அதைப் பயன்படுத்தியிருந்தால் இவ்வாறு ஆகியிருக்காது என்றும் உணர்ந்தேன்.
புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்த பின்புதான் புத்தகத்தோடு, படிக்கும் ஆர்வத்தையும் பெற்று வந்தேன். வீட்டிற்கு வந்ததும் மறுநாள் படிக்கத் துவங்கிவிட்டேன். ‘எக்ஸ்பீரியன்ஸ்’ பாடலை ஓட விட்டபடியே இரண்டாவது சிறுகதையைப் படிக்கத் துவங்கினேன். உண்மையில் எனக்கு ஒரு நல்ல உணர்வு ஏற்பட்டது. இந்தக் கதையில் மட்டுமல்ல; நீங்கள் குறிப்பிட்ட இடமெல்லாம் அந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டேதான் படித்தேன். அன்றிரவே லைவில் உங்களையும் தினாவையும் கண்டதும் மகிழ்ச்சியடைந்தேன். தினா பாட்கேஸ்டையும் அன்று வேலை செய்யும்போதுதான் கேட்டேன்.
அனைத்துச் சிறுகதைகளிலும் ஒவ்வொரு துயரங்கள் இடம்பெற்றிருந்தன. ‘D மைனரும் C மேஜரும்’ சிறுகதை முடிவில் நகைச்சுவையாய் இருந்தாலும் அதிலும் ஒரு துயரம் இருக்கத்தான் செய்கிறது. ‘மெய்யுறவு’ சிறுகதையில் நல்ல கருத்துகள் இருந்தன. அதைப் படித்து முடித்தவுடன் எனக்கு ஒன்று தோன்றியது. அந்தக் கருத்துகளை வைத்துக்கொண்டே 2 கதைகள் அமைத்திருக்கலாம் என்று.
1] தற்கொலை செய்பவன் மனநிலையிலிருந்து அமையும் கதை.
2] கதையின் தொடக்கத்திலேயே காதலி காதலனிடம் அவ்வாறு கேட்டு, அதற்குப் பின் நீங்கள் எவ்வாறு எழுதியிருப்பீர்கள் என்று நினைத்துக்கொண்டேன். இப்போதுகூட ஆர்வமாகத்தான் உள்ளது.
உங்களுக்குப் பிடித்திருந்தால் அல்லது எழுதி வைத்திருந்தால் பதிவிடுங்கள்.
‘மனைவியால் கைவிடப்பட்டவன்’ கதையைப் படித்தபொழுது பயங்கரமான ஒரு எரிமலை வெடித்தது போலிருந்தது. உங்கள் கதையில் வரும் திவாகரைப் போலப் படித்ததும் உணர முடிந்தது.
‘உறவுகள் தொடர்கதை’யில் இருந்து ‘விமர்சகன்’ வரை ஒரே மூச்சாகப் படித்து முடித்தேன். அக்கதையிலிருந்து தொடர்ந்து 6 சிக்சர்கள் அடித்துள்ளீர்கள். ‘உறவுகள் தொடர்கதை’ இருமுறை ரசித்துப் படித்தேன். எழுத்தாளராகக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் வார்த்தைகளை வைத்து சிக்ஸ் அடித்துள்ளீர்கள். அந்தக் கதையின் அமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘உவமானம்’ கதையைச் சிரித்துக்கொண்டே படித்தேன். அக்கதையில் வரும் கதாபாத்திரம் போலவே எனது பள்ளிப் பருவத்தில் சிலரை நான் கண்டுள்ளேன். அடுத்ததாகப் புத்தகத்தின் தலைப்பில் உள்ள கதையைப் படித்தேன். மிக ஆவலோடுதான் படிக்கத் துவங்கினேன். வெறும் மூன்றே பக்கங்கள் கொண்டு துயரங்கள் விற்பனைக்கு அல்ல என்று நிரூபித்திருந்தீர்கள். இக்கதையிலும் எதிர்பாராத முடிவு என்னை ஆச்சரியப்படச் செய்தது. அடுத்ததாக என்னைப் பாதித்த கதை ‘மௌனம் ஒரு வன்முறை’. மிகுந்த மன அழுத்தத்தோடுதான் படித்து முடித்தேன். இந்தப் புத்தகத்தில் இந்தக் கதையில்தான் அதிகமாக துயரமடைந்தேன். பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மனநிலையைச் சரியாகவும் தெளிவாகவும் எழுதியிருந்தீர்கள். ‘விமர்சகன்’ கதையில் அடுத்த நாள் என்ன நடந்தது என்ற ஆவல் என்னுள் இருந்துகொண்டேதான் இருக்கிறது.
காதல், கல்யாணம் மற்றும் Open Relationshipல் இருக்கும் பிரச்சனைகள், துயரங்கள், சிக்கல்கள், தனிமை என அனைத்தைப் பற்றியும் தெளிவாக அந்தக் கதாபாத்திரங்களின் பார்வையிலிருந்து மிகச் சரியாக எழுதியிருந்தீர்கள்.
முதல் புத்தகத்தைவிட இரண்டாவது புத்தகத்தில் வாக்கிய அமைப்புகள் மற்றும் வார்த்தைகள் கூர்மையாக இருந்தது.
தங்களின் அடுத்த புத்தகம் எனக்குத் தெரியாத, உங்களுக்குத் தெரிந்த அந்த பதிப்பகத்திலிருந்து வெளிவர வாழ்த்துகள்.
செகாவை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி. இப்போது அவர்தான் எனது ஹீரோ. தங்களின் பரிந்துரை எனது வாழ்க்கையில் மிகவும் ஒரு முக்கியமான புள்ளி.
என்றும் அன்புடன்,
த.நவீன்குமார்
***
அன்புள்ள நவீன்,
‘கால வெளியிடை’க்குக் கிடைத்தது போலவே ‘துயரங்கள் விற்பனைக்கல்ல’வுக்கும் உங்களின் அன்பு அஞ்சல்காரரின்மூலம் கைக்குக் கிடைத்தது.
பொதுவாகவே புத்தகங்களில் கையெழுத்து கேட்பவர்களின் ஏதேனும் எழுதிக் கொடுப்பது எனது வழக்கம். கேட்போரைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தால் எங்களுக்கு இடையேயான ஓர் அந்தரங்கமும் வாக்கியமாக இடம்பெறக்கூடும். சில பெண்களுக்கு அவர்களது குடும்பத்தாருக்குப் புரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஃப்ரென்ச், ஜெர்மனி போன்ற மொழிகளிலும் கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் பார்த்து எழுதிக் கொடுத்திருக்கிறேன். கலையைக் கொண்டாடுவோருக்கு அது சார்ந்த வாக்கியத்தை எழுதித் தந்திருக்கிறேன். இந்தப் புத்தகத்திற்குக் கையெழுத்துப் போடுவதற்காக முதல் 5 பிரதிகளை எடுத்தபோது என்ன எழுதலாமென யோசித்துக்கொண்டிருந்தேன். அதில் உங்களுக்கான பிரதியும் அடங்கும். அப்போது தோன்றியதுதான் ‘Never sell your tragedy’ என்ற வாக்கியம்.
’கால வெளியிடை’யில் தமிழ்த் திரையிசையாக அள்ளி வீசியிருப்பேன். அவை பெரும்பாலும் சார்ட்பஸ்டர் பாடல்கள் என்பதால் வாசகர்களால் எளிதாகப் பொருத்திக்கொள்ள முடிந்தது. ஆனால் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் இசைக் கலைஞர்களும், சிம்ஃபனிகளும் உலக இசை. அதற்கு 2 காரணங்கள் உள்ளன.
1] கடந்த 2 ஆண்டுகளில் எப்படி ரசனை கொஞ்சம் மேம்பட்டிருப்பதாக உணர்கிறேன். எப்படியெனில், எதை அணுக வேண்டுமென்பதைவிட எதை அணுகக்கூடாது என்பதின்மீது தெளிவு உண்டாகி, சில வகையான கலையை நுகராததின்மூலம் எனது ரசனையை மேம்படுத்திக்கொண்டேன்.
2] இலக்கியத்தில், குறிப்பாகப் புனைவில் இசை எழுதுவதில் எனக்கு ஜப்பானிய எழுத்தாளர் முரகாமி மீது ஓர் ஈர்ப்பு உண்டு. அவர் மீது சில விமர்சனங்கள் எனக்கு இருக்கவே செய்தாலும், முதுமையிலும் இளமையைப் பற்றிக்கொண்டிருக்கும் அவரை எப்படி மறுப்பது? கதைகளில் அவர் இசையைச் சேர்ப்பதே, கதையின் அந்தப் போக்கிற்கு ஒரு பின்னணி இசை கொடுக்கும் விதமாகத்தான் என அவரே நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். உலகளவில் அவரது வாசகர்கள் அதை அப்படித்தான் வாசிக்கின்றனர். ஆனால் இதேபோல் நானும் வாசகர்களிடம் என் சிறுகதையை இப்படி வாசியுங்கள் என்று கேட்க முடியாது. அது அவர்களது சுதந்திரத்தின் மீது கை வைக்கும் செயலாக இருக்கும். ஆனால் நான் கேட்டுக்கொள்ளாமலே நீங்கள் அவ்வாறு வாசித்ததற்கு நன்றி.
‘மெய்யுறவு’ சிறுகதையில் நல்ல கருத்துகள் இருந்ததாக எழுதியிருந்தீர்கள். ஆனால் இலக்கியத்தில் கருத்தை முன்வைக்க வேண்டுமென்பது எனது நோக்கமே அல்ல. ஆனால் அவ்வாறு உங்களுக்குத் தோன்றியிருந்தால் அதற்கு முழுப்பொறுப்பு நானே. அதைக் ‘கருத்து’ உள்ள கதையாகவே வைத்துக்கொள்வோம். அந்தக் கதையை நீங்கள் 2 விதமாகப் பிரித்துப் பார்த்திருப்பதைப் படித்தேன். நீங்கள் கேட்ட இரு விதமான சூழ்நிலைகளும் ஏற்கெனவே இந்தத் தொகுப்பில் வேறு கதைகளின்மூலம் எழுதப்பட்டிருக்கிறது.
சிறுகதைகளைத் தனியாகப் படிப்பதைவிட அவற்றைத் தொகுப்பாகப் படிப்பதைச் சுகமென நினைப்பவன் நான். பல தொகுப்புகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் புரிந்துகொள்ளும் அழகை உணர்ந்திருக்கிறேன். அதுதான் சிறுகதைத் தொகுப்பின் அழகு. ’மெய்யுறவு’ குறித்து உங்களுக்குத் தோன்றிய அந்த 2 சூழ்நிலைகளை வைத்துப் பார்த்தோமானால் :
1] தற்கொலை செய்பவன் மனநிலையிலிருந்து அமையும் கதை - இதுதான் ‘மனைவியால் கைவிடப்பட்டவன்’. ஒருவேளை கண்ணன் ஒரு கடிதம் எழுதியிருந்தால், அல்லது கண்ணனுக்குக் கல்யாணம் ஆகிய பிறகு அவன் தன் காதலியை, அதாவது மனைவியைப் பிரிந்து கடிதம் எழுதியிருந்தால் அதற்கு அவனே ‘மனைவியால் கைவிடப்பட்டவன்’ என்று தலைப்பிட்டுத் தற்கொலை செய்திருப்பான்.
2] கதையின் தொடக்கத்திலேயே காதலி காதலனிடம் அவ்வாறு கேட்டு, அதற்குப் பின் நீங்கள் எவ்வாறு எழுதியிருப்பீர்கள்!. - இது ‘நிலவொளி சொனாட்டா’. காதலன் முன்பே காதலி டிண்டர் பயன்படுத்துவது தனக்கு அதிர்ச்சியளிப்பதாகச் சமீபத்தில் நண்பர் ஒருவர் எழுதியிருந்தார். பூரணன் விவரிக்கும் அந்தக் கற்பனை நிகழ்வில் காதலனிடம் நண்பனுடன் காமத்தில் ஈடுபடுவது குறித்து ஒரு காதலி அனுமதி கேட்கிறாள் எனில், அவள் பெயர் ஏவாளாகத்தான் இருக்கும். ஏவாளைப் போன்றவள் அனுமதியெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பாளா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
தொடர்ந்து வாசியுங்கள் நவீன். செகாவின் விரலைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். வாழ்வின் பல கட்டங்களில் அவர் தனது கதைகளை உங்களுக்கு நினைவூட்டுவார். ரொம்ப நல்ல மனிதன்.
பாலுவும்,
பிரியமும்
Comments