நண்பன் பாலுவின் ‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். முதலாவதாக என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொற்களைப் பயன்படுத்தும் விதத்தில் பல மைல்கல்லைத் தொட்டு இருக்கிறான். அவன் பயன்படுத்திய ஒவ்வொரு சொல்லும் அவனுடைய வளர்ச்சியைக் குறிப்பிடுகிறது. படித்ததில் நான் புரிந்து கொண்டவை பற்றிய குறிப்புகள் தானே தவிர எடை போடவில்லை இதில் முழுக்க என்னுடைய புரிதலைத்தான் விவரித்து இருக்கிறேன்.
‘உயிர்த்தெழுதல்’
சிறுகதையில் சாப்டர்ஸ் வகையில் எழுதப்பட்டது புதிதாக இருந்தது. அங்கும் இங்கும் அலைபாய்ந்தபடியே இருந்தாலும் சுலபமாக இறுதியில் விளக்கம் அளிக்கப்பட்டது சிறப்பு. மாளவிகாவைவிட இந்துஜாவின் கதாபாத்திரம் நன்கு வடிவமைக்கப்பட்டு இருந்தது. மாளவிகா வாழ்வின் மாற்றத்துக்கு முதற்காரணம் அவளுடைய காதலன் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகத்தான் எனக்குப்பட்டது. அவளுக்குக் கடினமான சூழ்நிலை அவனால் உண்டாக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அவள் வாழ்க்கை தடம்புரண்டதற்குக் காரணம் அவளே. ஒரு வகை ஸ்டீரியோடைப் கதாபாத்திரமாகத் தோன்றிற்று. இந்துஜா தடைகளைத் தாண்டியும் தடம்புரளாதவளாய் முடிக்கப்பட்டது சிறப்பு. இதில் டுகோபார்ஸ் மக்களைப் பற்றிய சிறு குறிப்பு புதிதாக நான் கேள்விப்பட்டது ஒன்று.
‘D மைனரும் C மேஜரும்’
காதலும் காமமும் இசையும் கவிதையும் பின்னிப் பிணைந்த கதை. கதைக்கு மிகவும் பொருத்தமான தலைப்பு. மெட்டாஃபராக பொருத்தப்பட்டது சிறப்பு. கதை, காதல் பற்றித்தான் விவரிக்கிறது; உண்மை காதல் பற்றி..!!
‘நிலவொளி சொனாட்டா’
இந்த முக்கோண காதல் கதை, டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் பற்றி விவரிக்கிறது. பெரிதளவு பாதிக்கவில்லை எனினும் கதை சொல்லல் விதம் புதுமை.
‘உடுத்துவதொன்றே’
சிறிய பக்கங்கள் கொண்ட கதைகள்தான் சிறந்தது என்று சும்மாவா சொல்லி இருக்கிறார்கள். என் மனதை வருடிய, மனதுக்கு நெருக்கமான கதை. எளிமையும் காதலும்.
‘மனைவியால் கைவிடப்பட்டவன்’
மனைவியைப் பிரிந்த காதலனின் வலியை வெகுவாக நமக்குள் கடத்துகிறது அந்த வலியை ஏற்படுத்திய வரிகள் சிறப்பு. அதில் ஒன்று:
‘பிரிந்தவர்களை நினைத்துச் செய்வதற்குப் பெயர் சுய இன்பமா சுய துயரமா?’
‘ஃபோர் ஃபோர்ஸ் ஆர்?’
குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்தும் நோஸ்டாலஜிக் கதை. குடும்ப வாழ்க்கை முறையில் உள்ள எதார்த்தங்களையும் சிக்கல்களையும் பற்றி அலசுகிறது. தர்மன் போன்ற கதாபாத்திரங்கள்… நம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தர்மன் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை அழிந்து போக நினைக்கவில்லை. மாறாக தன்னைவிட நல்ல நிலைமைக்கு வரப் பாடுபடுகிறவர்கள். ஆனால் அவர்களுடைய இயல்பையும், சித்தாந்தங்களை நோக்கி கேள்வி எழுப்பும் யாரும் அவர்களுக்கு எதிரிதான். அந்தச் சித்தாந்தங்கள், மரபு ரீதியாக விதைக்கப்பட்டவை. ஏன், நமக்குள்ளும் ஒரு தர்மன் இருக்கிறான் என்பது உண்மை.
‘மெய்யுறவு’
உண்மையில் அந்தக் கேள்வி என்னை நோக்கி கேட்கப்பட்டிருந்தாலும் எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
அவன் உண்மையாகக் காதல் கொண்டிருந்தால் ஒப்புக்கொண்டு இருக்கலாம். அதுதான் தூய்மையான ஒன்று. ஆனால் ஒப்புக்கொள்ளாமல் இருந்தால் தன் சுயநலத்தைக் குறிக்கிறது. இதில் என்ன இருக்கிறது? எனக்குச் சொந்தமானவள் எனக்கு மட்டும்தான் என்பது இயல்பு. ஆனால் அதுவும் ஒரு அடக்குமுறைதான். ஆனால் இந்த விவகாரம் இயல்புக்கு கசப்பாகத்தான் இருக்கும்.
‘உறவுகள் தொடர்கதை’
இந்தக் கதையை வாசிக்க ஆரம்பித்தபோது ஈர்ப்பு இல்லாமல் தான் இருந்தது. போகப் போகக் கதை சொல்லும் நோக்கம் புரிய வந்தது.
தற்போது ஹோமோசெக்சுவல் சார்ந்த விஷயங்கள் வெளிப்படையாகப் பேசுவது சிறந்த விஷயமாகும். காலம் காலமாக தன்னுள் புதைத்துக்கொண்டு தான் வாழ நினைத்த வாழ்வை வாழாமல் சென்றிருக்கிறார்கள் பலர்.
‘உவமானம்’
இக்கதை பெரிதாகப் பாதிப்பு ஏற்படுத்தவில்லை சுவாரசியம் குறைவாகத்தான் இருந்ததது. காரணம் புத்தகத்தில் இருக்கும் அநேக கதைகளில் கல்லூரியின் வகுப்பறைக்குள் நம்மை எடுத்துச் செல்கிறது. அந்த ரிப்பிடேஷனை தவிர்த்திருக்கலாம்.
ஜானி படத்தின் முக்கியமான ஒரு வசனத்தை நினைவுபடுத்தியது.
‘அன்பின் பாலே’
பொதுவாகத் திருமணத்துக்குப் பின்னால் பல தம்பதியரின் நடவடிக்கை, இக்கதை போன்றுதான் இருக்கிறது. இதற்குப் பெரும் காரணாமாக இருப்பது எந்த விஷயமாக இருக்கட்டும், அதன் மீது உள்ள எண்ணம், தம்பதியின் இருவருடைய நிலையை இருவரும் அறிந்து முடிவெடுப்பது இல்லற வாழ்க்கைக்கு நன்மை தரும். அதில் ஒருவருடைய ஆதிக்கம்தான் பல கசப்புகளுக்குக் காரணமாக இருக்கிறது. மறைமுகமாகவே, தான் ஒரு ஆதிக்கம் கொண்டவன் என்று அறியாமல்தான் வாழ்வைக் கழிக்கிறான் அந்தக் கணவன்.
திருமணத்திற்குப் பின் ஏற்பட்ட மாற்றத்தின் காரணம்தான் என்று புரிகிறது. ஆனால் கதையில் தெளிவின்மை இல்லாததால் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை. இருதரப்பினரிடையே உள்ள சிக்கல்கள் பற்றி மேலும் தெளிவாக விவரித்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும்.
‘துயரங்கள் விற்பனைக்கல்ல’
திருமணமாகட்டும், காதலாகட்டும்… பொதுவாக ஆண் வயது 24 என்றால் பெண் வயது 24க்குக் குறைவாக இருந்தால்தான் மேற்கொண்டு செயல்படுத்துவார்கள். ஏன், நானும் சில சமயம் சில பெண்களைப் பார்க்கும்போது நம்மைவிட வயது கூடியவளாய் இருப்பாளோ என்று எண்ணியதுண்டு. காலப்போக்கில் அவை பொருட்படுத்துவதை விட்டுவிட்டேன். காதல் வயதைக் கடந்தது. ரஞ்சனியின் நிலைப்பாடு சரியானதுதான். இதற்கு முன்பு படித்த கதைகள் காதலும் காமமும் பிணைந்து இருந்தது. ஆனால் இப்படி ஒரு கதைக் கருவைக் கொண்டு அதனைப் பிரித்துக் கட்டியது சிறப்பு.
‘மௌனம் ஒரு வன்முறை’
காதல் சிறுகதைகள் தொகுப்பு என்று நினைத்திருந்து படிக்கையில் இடை இடையில் ‘ஃபோர் ஃபோர்ஸ் ஆர்?’, ‘மௌனம் ஒரு வன்முறை’ போன்ற கதைகள் ஆச்சரியப்படுத்துகின்றன. ஒருவன் மீது செலுத்திய வன்முறைகளைக்கூடக் கடந்துவிடலாம். ஆனால் ஒருமுறை செய்த தவற்றின் எச்சம் காலம் முழுக்க பின்தொடரும். அருமையான கதை.
‘பட்டாம்பூச்சியைப் போல’
ஒரு ஃபீல் குட் கதை போன்று மென்மையாக நகர்ந்தது. சுதர்ஷன் ஒவ்வொரு முறையும் தன் மனைவியின் இலக்கியம் சார்ந்த எண்ணங்களை வைத்துக் கவர நினைத்தது ரசிக்கும்படி இருந்தது. அந்த மின்மினிப் பூச்சியின் மெட்டாஃபர் அருமை.
‘விமர்சகன்’
ஒரு சிறந்த விமர்சகனின் எண்ண ஓட்டங்கள் தெளிவுற்றவை. ஒரு படத்தைப் பற்றி ஆராய்ந்து சரியான வாதங்கள் முன்வைப்பது சமுதாயத்தை வழி நடத்துவதுக்குச் சமம். இக்கதையில் வரும் விமர்சகன், தன் காதலி (நடிகை) நடித்த படத்தை விமர்சனம் செய்யும் பொறுப்பில் இருக்கிறான். அவர்கள் இருவருக்கும் நடக்கும் எண்ண ஓட்டங்கள் எனக்குத் தெளிவின்மையைத்தான் கொடுத்தது. நன்றாக விவரித்து இருந்திருக்கலாம்.
ஏறக்குறைய எல்லாச் சிறுகதைகள் காதலும் காமத்தையும் பற்றியே விவரிக்கிறது. தொகுப்பாகப் பார்த்தால் வெவ்வேறு கோணங்களாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதே சமயம் It’s all same என்றும் எடுத்துக் கொள்ளலாம். படிப்பவர்களின் எண்ணத்தை பொறுத்துத்தான்.
வாழ்த்துகள் பாலா
மேலும் பல படைப்புகளை எதிர்கொண்டு காத்துக்கொண்டு இருக்கிறேன்.
அன்புள்ள நிர்மல்,
சிறப்பான மதிப்பீடு. உன் பணிகளுக்கு மத்தியில் ஒவ்வொரு கதைகளைப் பற்றி எழுதியதற்கும் நன்றி. பாராட்டுகளையும் முரண்களையும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.
பாலுவும்
பிரியமும்
Comments