top of page
Search
Writer's pictureBalu

‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ - ஸ்ரீனியின் மதிப்பீடு

எழுத்தாளன் பாலுவிற்கு,

நான் முதலில் சொன்னது போலத்தான், இந்தத் தொகுப்பிற்கு நான் மதிப்புரை எழுதுவதென்பது வேறொரு புத்தகம் எழுதுவதைவிடக் கடினமான ஒன்று. ராமனின் வனவாசத்தின் பதினான்கு வருடங்கள் கடினமாக இருந்ததோ இல்லையோ, இந்தப் பதினான்கு கதைகளையும் தொடர்ச்சியாகப் படிப்பதில் பெரும் சிரமம் இருந்தது.

சிரமம் என்று நான் கூறுவது, எழுத்தின் தாக்கத்தைக் குறித்தே.

‘உயிர்த்தெழுதல்’ கதையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு புது விதமான படிமம், கதையை வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. கதையிலுள்ள பள்ளியைப் போன்றொரு சூழலில் பள்ளிப்படிப்பை முடித்ததால் எனக்கு இந்துஜாவின் கதையே மிகவும் பிடித்திருந்தது. ஒரே இரவில் புத்தகத்தை முடிக்கலாம் என்று நினைத்த என்னை, ஆழ்ந்த சிந்தனைக்குத் தள்ளிய கதைகளில் இது முதலாவது.

ஒரு சராசரி நாளில் நாம் ஆசைப்படாத ஒன்று மடியில் விழும் இன்பத்தை ‘D மைனரும் C மேஜரும்’ தந்தது. இறுதி வரியில் கதாநாயகனின் நிலைமையை எண்ணிச் சிரித்துவிட்டேன். எழுத்தாளர்கள் பாவப்பட்டவர்கள் என்று தோன்றியது.

‘நிலவொளி சொனாட்டா’வின் வழியே மிக முக்கியமான ஒரு உரையாடலை நிகழ்த்தியதற்குப் பாராட்டுகள்.

‘மனைவியால் கைவிடப்பட்டவன்’, இத்தொகுப்பின் சிறந்த கதை. இதற்கு மேல் இக்கதையைக் குறித்து என்ன எழுதினாலும் போலியாக இருக்கும். இந்தக் கதையைப் படித்துவிட்டு, இரண்டு நாட்கள் கழித்துத்தான் மீதமுள்ள கதைகளைப் படிக்க முடிந்தது.

‘மெய்யுறவு’ கதை வாயிலாய் கேட்கப்பட்ட கேள்வி, பலரின் சமநிலையைக் குலைக்கும். எனக்கும் என் சிந்தனைகளின் மீது மறு ஆய்வு நடத்தத் தூண்டிய கதை. நல்லவேளை பெரிதும் யோசிக்காமல் எனக்குப் பதில் கிடைத்துவிட்டது.

‘உவமானம்’ கதையின் நடை, மிகவும் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு முறையும் ஒரு காதல் உச்சத்தை அடையும்போது, தேஸ்மன் பார்வையில் அடுத்து வரப்போகும் ‘அமுதூறும் குரலுடையாள்’ யார் என்ற எதிர்பார்ப்பும் உற்சாகமும் கூடுகிறது.

‘மௌனம் ஒரு வன்முறை’, மிகவும் நேர்த்தியாகவும் அளவாகவும் வடிவமைக்கப்பட்ட கதை. கதைசொல்லியின் இடத்தில் நான் கடந்த காலத்திலிருந்துள்ளதால், கதையின் கருவை முழுமையாக உணரமுடிந்தது,

‘பட்டாம்பூச்சியைப் போல’ கதையும் வடிவ ரீதியாகச் சிறப்பாக உள்ளது. சுதர்ஷன் மணிமொழியிடம் போடும் கடலைகளும் அவன் மனம் அவனிடம் அதற்குக் கேட்கும் கேள்விகளும் கச்சிதம்.

‘விமர்சகன்’, எல்லா கடினமானவர்களுக்குள்ளும் இருக்கும் சராசரி மனிதனை அப்பட்டமாகப் போட்டு உடைக்கிறது. அசௌகரியமான சூழலில், உண்மையும் சொல்ல முடியாமல், பொய்யும் சொல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாவது மிகவும் இயல்பாக இருந்தது. கடைசி மூன்று கதைகளும் ‘Surprise of the Lot’ என்றே சொல்லலாம்.

‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ தொகுப்பின் மூலமாக நாம் பேச விரும்பாத, பேச மறுக்கும், பேச முடியாத, பேசத் தவறிய பல உணர்வுகளையும் உறவுகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த எழுத்தாளன் பாலுவுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

ஶ்ரீனி.

03.01.2022




*

அன்புள்ள ஸ்ரீனி,

இப்போதைக்கு ‘எழுத்தாளன்’ எனக் குறிப்பிட வேண்டாம். மற்றபடி, மதிப்பீட்டுக்கு அன்பும் நன்றியும்.

பாலுவும்

பிரியமும்


59 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page