ஆகஸ்ட் 7
எனது நெருங்கிய நண்பர்களில் பலர் Facebook அதிகம் பயன்படுத்தாதவர்கள். அவர்களிடம் Facebook influence அதிகம் இல்லாததாலேயே என்னால் அவர்களுடன் நெருக்கமாக முடிந்தது.
எனது நெருங்கிய நண்பர்களைப் பொறுத்தவரையில் நான் Instagram அதிகம் பயன்படுத்தாதவன். Instagram கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டு இருப்பதாலேயே அவர்களால் என்னுடன் நெருக்கமாக முடிந்தது.
ஆகஸ்ட் 8
அவளின் எல்லாச் செயல்களிலும் காதல் உளவா என்று கண்காணிப்பதை நிறுத்த வேண்டும். எனக்கான உணர்வுகளை மெனக்கெட்டு நீர்த்துப்போகச் செய்யும் அவளிடம் நான் ஏன் அதைத் தேட வேண்டும்?
அழுத்தங்கள் நிறைந்த காதலுறவிலிருந்து மிகவும் மகிழ்ச்சியாகப் பிரிந்திருக்கிறோம். ஒரு பிரிவு இவ்வளவு இனிமையாக இருக்குமெனில், இரு பாலருக்கும் அளவுகடந்த சுதந்திரத்தை அளிக்குமெனில், துர்க்கந்தங்களைத் துறக்கத் துணை புரியுமெனில், எல்லாவற்றையும் விட நெஞ்சத்தில் நேசத்தை அதிகம் வளர்க்குமெனில் இது ஏன் இவ்வளவு தாமதமானது? காதலின் தேனிலவுக் காலத்தைவிட, பிரிவுக்குப் பின் சேர்ந்து இயல்பான உலாவுவது கொண்டாடத்தக்கது. அது அர்த்தங்களும் ஆழங்களும் நிறைந்தது. பல சுயபரிசீலனைக்குப் பிறகு நான் நானாக அவளுக்குத் தோன்றும்போது, அக்கண்களுக்கு நானாகிய இவன் யாருமற்றவனாக ஆகிவிடுகிறான் என்பதைத் தவிர இதில் வேறெந்தத் துன்பங்களுமில்லை.
Comments