மூன்றாம் பிறையின் அந்தி சாய்ந்த பொழுதில் ஆகாயத்தில் மங்கையின் இடுப்பைப் போல் வளைந்து நெளிந்திருக்கும் அந்த அழகிய நிலாவை பார்த்தவாறே அவன் சாலையில் நடந்துக் கொண்டிருந்தான். திடீரென அந்தச் சந்திரனின் ஏதோவொரு அங்கம் அவனைத் திடுக்கிட வைத்தது. அவனுக்கு மூச்சு வாங்கி படபடக்கத் தொடங்கியது. நிச்சயமாக அது அச்சமில்லை. அந்த இடத்திலேயே நின்றுவிட்டான். நேரம் சுற்றிக் கொண்டிருந்தது. கடிகாரத்தின் முட்கள் அவனை இல்லத்திற்கு அழைக்கவில்லை. வீட்டில் அவனுடைய தாய் காத்துக்கொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் கூட அவனை அங்கிருந்து நகர்த்தவில்லை.
அவனுக்குத் தாய் மட்டும்தான்; தந்தையோ சகோதர சகோதரிகளோ இல்லை. அவனுக்கு நண்பர்களும் எதிரிகளும் மட்டுமே இருக்கிறார்கள். அவனுடைய தாய் உடம்பு சரியில்லாமல் படுத்தப் படுக்கையாக இருக்கிறாள். அவன் பிறந்த உடனே அவனுடைய தந்தை ஒரு கலவரத்தில் இறந்துவிட்டார். வலிமைமிக்க அவனது தாய் தனியாகவே வாழ்க்கையின் சவால்களைப் போராடி இவனை வளர்த்தாள். பெண்ணல்லவா! அதை பாரமாகவே கருதவில்லை. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நண்பர்களால் இவன் வீடே தங்குவதில்லை. அதனாலேயே தாயை கவனிக்க மறந்துவிட்டான். இப்போதுகூட அவளுக்கு மருந்துதான் வாங்கிச் செல்கிறான். அந்தத் திங்கள் அவனைத் தடுத்ததால் அம்மாவுக்கு மூச்சுத் திணறத் தொடங்கிவிட்டது. 'மகன் இன்னும் வரவில்லையே!' என்று கட்டிலிலிருந்து இறங்கிவந்து வாசலைப் பார்க்க எத்தனித்தாள் தாய். வெறும் வீதியும் மகன் திடுக்கிட்டு பார்த்துக்கொண்டிருக்கும் வளைந்த மதிதான் தெரிகிறது.
நாழிக்குப் பிறகு அந்த வள்ளியைப் பார்த்தவாறே "கடவுளே!" என்றான். கேட்பதற்கு நம்பகத்தன்மையற்றுதான் இருக்கும், கூப்பிட்டவுடன்அந்த ஆசாமி அவனுடைய கண்முன் தோன்றிவிட்டார். அதுவும் அவன் கும்பிடும் கடவுள்! அவனுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை; பேச வார்த்தையில்லை. அவரே தொடர்ந்தார் "உமக்கொரு தகவலும் வாரமும்."
"என்ன வரம் கடவுளே?"
"முதலில் தகவல். உன் தாய் செத்துக் கொண்டிருக்கிறாள். இப்போது கேள் உமது வரத்தை" என சொல்லி 'தாயைத் தாண்டி அப்படியென்ன வரத்தை அவனால் கேட்டுவிட முடியும்!' என்று அசட்டுப்பார்வை பார்த்தார்.
"அந்த நிலவுக்குப் போகும் வரம் வேண்டும்" என்றான். அவருக்கு விந்தையாக இருந்தது. 'அப்படி எதனை அதில் கண்டுவிட்டான்!' என்று திகைத்துவிட்டார். இருந்தும், அவன் கேட்கும் காரணத்தைத் தெரிந்துக் கொள்ளவே அவ்வரத்தை அளித்தார்.
அவன் நிலவுக்குச் சென்றான்; ஒரு கடப்பாரையுடன். அதனை சுக்குநூறாக நொறுக்கினான். பல துகள்களாக உடைந்த நிலவின் வெளிச்சம் பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதியில் பிரிந்தது. விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் அதன் தாக்கம் பெரிதளவில் இல்லை. வரமளித்த கடவுளுக்கே இவன் செய்த காரியம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 'என்னிடமிருந்து வரம் பெற்று நான் தாங்கும் விருந்தகத்தையே அழித்து விட்டான்!' என்ற கோபத்தை கட்டுப்படுத்தி குற்றவுணர்வுடம் அவருடைய இருப்பிடத்திற்கு சென்றார்.
அவன் பெரும் மகிழ்ச்சியுடன் அவனது வீட்டிற்கு சென்றான். நிலா நொறுக்கப்பட்டதை தவழ்ந்தபடி தாய் பார்த்து நடுங்கிவிட்டாள். உலகம் அழியப்போகிறதோ என்ற பதைபதைப்பு அவளுக்குள் தோன்றியது. மகன், வீட்டை நோக்கி தான் செய்த சாதனையை நினைத்துச் சிலிர்த்துக் கொண்டே சென்றான். வீட்டு வாசலில் தாய், தூணைத் தாங்கிப் பிடித்தவாறு நின்றுக் கொண்டிருந்தாள். அவனிடம் மருந்தில்லாததைக் கண்டதும், பிரபஞ்சத்தின் அழுவுகாலத்தைப் பற்றி யோசித்தத் தாய் தன்னுடைய அழிவு காலத்தை உறுதி செய்துகொண்டாள். ஆனால் அதைப் பற்றி கவலைப் படாதவள்,
"மகனே! நிலவு நொருங்கிப் போனதைக் கண்டாயா?"
"நான்தான் வெட்டினேன் அம்மா. எப்படி உன் மகனின் வீர சாதனை?" என்றான். நெற்றியில் குங்குமம் வைத்திருந்த அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டன.
"ஏன் அவ்வாறு செய்தாய்?" என்றாள் குழப்பத்துடன்.
"அம்மா! வளைந்த நிலவை ஒட்டியுள்ள நட்சத்திரத்தை நீ காணவில்லையா? வானத்தை பச்சை நிறமாக ஒருகணம் நீ கற்பனை செய்துக்கொள்ளவில்லையா? அப்பாவைக் கொன்ற ஆட்களின் மதம் உனக்கு ஞாபகத்துக்கு வரவில்லையா? இந்த நிலவு மட்டுமே மிச்சமிருப்பதாக எனக்குத் தோன்றியது. நம் கடவுளின் அருளால் நானங்கே செல்ல நேர்ந்தது. இப்போதுதான் மனம் நிறைவாக உள்ளது அம்மா" என்றான் நிம்மதியாக. அவள் தொடர்ந்து விசும்பிக் கொண்டே இருந்தாள்.
"உன் மகனின் சாதனையைக் கண்டு ஏன் அழுகிறாய் அம்மா?"
"அந்த வளைந்த நிலவைக் காட்டித்தான் உன் சிறுவயதில் உனக்குச் சாதம் ஊட்டினேன் என் அன்பு மகனே!" என்று சொல்லிக்கொண்டே அவள் இறந்தாள்.
Comentarios