செகாவ் பிறந்தநாள் கட்டுரையை எழுத வேண்டுமென மாதம் துவங்கியது முதலே நினைத்திருந்தேன். தீனனிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கட்டுரையை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் சமர்ப்பிக்கலாமெனத் தோன்றியது.
காலை அவரிடம் சந்திக்கக் கோரி மின்னஞ்சல் அனுப்பினேன்; உடனே அழைத்து, வரும்படி சொன்னார். நானும் தீனனும் அவரைச் சந்திக்கச் சென்றோம்.
ரஷ்ய இலக்கியங்களைப் பற்றி அவர் நிகழ்த்திய உரைகளையும் எழுதிய கட்டுரைகளையும் ஒன்று விடாமல் பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன். இருந்தும் செகாவைப் படிப்பதும், செகாவைப் பற்றிப் படிப்பதும் தீராமல் உள்ளது. எஸ்.ராவிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவர் தன் Blog-ஐ திறந்து காண்பித்துச் சொன்னார், ‘காலைதான் செகாவின் பிறந்தநாள் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தேன். அச்சமயத்தில் உங்கள் மின்னஞ்சலைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது.’
‘நான் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் இலக்கிய நூல்களைக் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். எனக்கான எழுத்தாளனைத் தேர்ந்தெடுப்பதற்கே இவ்வளவு காலம் ஆகிவிட்டது. செகாவைப் படிக்கத் துவங்கியவுடன்தான் ஓர் எழுத்தாளனைத் தேடித் தேடிப் படிக்கும் வேட்கையில் இறங்கினேன்’ என்றேன்.
‘இந்த ஆர்வத்திற்குக் காரணம் நீங்களோ செகாவோ அல்ல; உங்கள் வயது. இந்த வயதில் எல்லோருக்கும் ஒரு பிடிப்பு தேவைப்படுகிறது. சிலர் சினிமாவைப் பிடித்துக் கொள்கிறார்கள், சிலர் மதுவுக்கும் புகைக்கும் அடிமையாகிக் கிடக்கிறார்கள். அப்படித்தான் நீங்கள் செகாவைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆர்வம் உங்களை எங்குக் கூட்டிச் செல்கிறது என்பதே முக்கியம்’
இவான் புனினைச் சந்திக்கும்போது செகாவ் கேட்கிறார், ‘நீ தினமும் எழுதுகிறாயா?’ அதற்குப் புனின் தான் எப்போதாவது எழுதுவதாகச் சொல்கிறார். செகாவ்: ‘எழுத்தாளர்களாகிய நாம் தினமும் எழுத வேண்டும். அதைவிட நமக்கு வேறு என்ன கடமை இருக்க முடியும்?’ என்கிறார். என்னால் இந்தப் பத்தியைப் படித்ததும் கடந்து போக முடியவில்லை. நான் எப்போதாவது எழுதக்கூடியவன். என்னால் தினமும் கதைகளையோ கவிதைகளையோ எழுத முடியாது. அது ஓர் அற்புதம்; தன்னால் நிகழ வேண்டும். எழுத நினைக்கும் என்னைப் போன்றவர்கள் தினமும் எழுதுவதன் அவசியம் குறித்துக் கேட்டேன்.
‘தினமும் எழுத வேண்டுமென்றால் கதை எழுதுவதல்ல. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை வெவ்வேறு மாதிரியாக எழுதிப் பார்ப்பது; பயிற்சி. ஒரே விஷயத்தை விவரித்தும் சுருக்கமாகவும் எழுதிப் பயிலலாம். எப்படி வயலின் கலைஞன் தினமும் வாசித்துப் பழகுவானோ அதேபோல தினமும் எழுத வேண்டும். கதை எழுதுதல் என்பது வயலின் கலைஞன் செய்யும் கச்சேரி போன்றதாகும். கச்சேரி செய்வதற்குப் பயிற்சி அவசியம். அதேபோல, கதையை உங்களால் மிக எளிதாகக் கையாண்டு விட முடிகிறதெனில் நீங்கள் தவறான Text-ஐ எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
மேலும், இப்போதைக்கு உங்களை எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ளவே கூடாது. சேருமிடத்திற்கான பேருந்தில் இப்போதுதான் ஏறியிருக்கிறீர்கள். இலக்கை நெருங்கும்போது உங்களுக்கே தெரிய வரும்.
அதையெல்லாம்விட, நீங்கள் ஏன் எழுத வேண்டும்? இந்தக் கேள்வியை நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ள வேண்டும். பணம் சம்பாதிக்கவும், புகழடையவும் பல வழிகளுண்டு. ஒருவர் எழுதுவதாலும் எழுதாமல் போவதாலும் உலகில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. மீறி எழுத்தை தேர்ந்தெடுத்திருக்கிறீர்களெனில் ’நான் எதற்காக எழுத வேண்டும்?’ என்ற தேடலில் இறங்க வேண்டும். இல்லையெனில், ஒரு கட்டத்தில் இது உங்களுக்கு Exhaust ஆகிவிடும்.’ என்றார்.
எங்கள் உரையாடல் இதிலிருந்து செகாவுக்குத் திரும்பியது. செகாவ் தன் கதைகளில் காமம் சார்ந்து விஷயங்களைப் பேசியதே இல்லை. அதிகபட்சமாக ’In the Dark’ கதையில் கலவியை ‘அது’ என்று குறிப்பிடுகிறார். பழையத் தமிழ்ப் படங்களின் முதலிரவு காட்சியில் குருவியையும் பூவையும் காட்டுவதைப் போலத்தான் செகாவ் காமத்தைத் தன் கதைகளில் கையாண்டிருப்பதாகச் சொல்லிச் சிரித்தார் எஸ்.ரா. டால்ஸ்டாயைத் தன் வாழ்நாளில் பத்து முறை சந்தித்திருக்கிறார் செகாவ். அவருடைய மகள் மாஷாவிடன் செகாவுக்கு நட்புறவு ஏற்பட்டது. டால்ஸ்டாயுடனான சந்திப்பு முடிந்ததும் அவர்கள் சாலையில் பேசிக்கொண்டே நடந்து போவார்கள். அதைக் கண்ட டால்ஸ்டாய் தன் பணியாளரிடம் வேடிக்கையாகச் சொன்னாராம், ‘எவ்வளவு கண்ணியமான மனிதன்! இவனை நம்பி தைரியமாக ஒரு பெண்ணை ஒப்படைத்துவிட்டுச் செல்லலாம்.’
‘சமீபத்தில் செகாவைப் பற்றி வாசித்த அனைத்து புத்தகங்களிலும் சிறுகதைகள் எழுதுவது குறித்து அவரது அறிவுரைகள் கூறப்பட்டிருந்தன. அதன்படி சென்ற ஆண்டு நான் எழுதிய ஒரு சிறுகதையை மீண்டும் எடிட் செய்தேன். 1,600 வார்த்தைகள் கொண்ட அச்சிறுகதையிலிருந்து 600 வார்த்தைகள் வெட்டியெடுக்க நேர்ந்தது…’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது இடைமறித்துச் சொன்னார்,
‘இந்த அறிவுரை சொல்லப்பட்டு நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் காலத்தில் அவருடைய எழுத்து ஒரு புது அலையை உண்டாக்கியது. இப்போது சிறுகதைகளின் முகங்கள் பல்வேறு வடிவங்களைக் கண்டுவிட்டன. இன்னும் செகாவ் பாணியைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற அவசியம் தற்கால தமிழ் இலக்கியச் சூழலுக்கு இல்லை. சிறுகதை எழுத நினைப்பவர்கள் அடிப்படையாக செகாவ் போன்றவர்களை வாசிக்க வேண்டுமே தவிர அதைத் தன் படைப்பில் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. உலக இலக்கியத்திற்கு ஒரு செகாவ் போதும். இக்காலத்தில் யார் வேண்டுமானாலும் செகாவைப் போலக் கதைகள் எழுதிவிட முடியும்.
நான் இப்போது செகாவைப் படிக்கும்போது வடிவத்தின் அடிப்படையில் மட்டுமே படிப்பேன். எழுதப்பட்ட காலகட்டத்தை நினைத்து வேண்டுமானால் ஆச்சரியம் வரும். நான் உற்று நோக்குவதெல்லாம் என்னவென்றால் செகாவ் எந்தெந்த இடங்களில் தடுமாறுகிறார்; எதனையெல்லாம் அவரால் அடைய முடியாமல் போனது? அவரது குறைகள் என்ன? இவைதான்.
அவருடைய கதாபாத்திரங்கள் நீரின் நிறம் கொண்டவர்கள். அவரால் ‘குற்றமும் தண்டனையும்’ ரஸ்கோல்னிகோவ் மாதிரியான இருள் படிந்த பாத்திரத்தைப் படைக்க முடியாது. அவன் குற்றம் புரிபவனாக இருந்தாலும் இதே சமூகத்தில் வாழ்பவன்தானே? செகாவின் கதைமாந்தர்கள் பெரும்பாலானோர் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆன்டன் செகாவால் Antagonist என்ற விஷயத்தை அடைய முடியவில்லை.
இதேபோல் தொடர்ந்து அன்றாட வாழ்வை எழுதி வந்ததன்மூலம் தத்துவம் சார்ந்த மாபெரும் கேள்விகளை எழுப்ப மறுத்துவிட்டார். அதில்தான் டால்ஸ்டாயும், தஸ்தயேவஸ்கியும் ஒரு படி மேலே உள்ளனர்…’ என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது இடைமறித்துக் கேட்டேன், ‘ஒருவேளை அவர் நாத்திகனாக இருந்ததால் அந்த எண்ணங்களுக்கே இடம் கொடுக்காமல் போய்விட்டாரோ?’
‘என்னதான் நாத்திகனாக இருந்தாலும் வாழ்வின் தலையாய நோக்கங்கள், அர்த்தங்கள் குறித்த கேள்விகளை எழுப்புவதுதானே எழுத்தாளனின் வேலை? இன்று நாம் சந்தித்திருக்கிறோம். இந்தச் சந்திப்பு எதர்ச்சியானதா அல்லது திட்டமிடலின் பெயரில் நிகழ்ந்ததா என்று யோசனையாவது வர வேண்டுமல்லவா? அவர் அதையெல்லாம் யோசிக்க மாட்டார்.
செகாவ் தொடர்ந்து பெண்களின் தனிமையை மட்டுமே கருப்பொருளாகக் கொண்டு பெரும்பாலான கதைகளைப் படைத்திருக்கிறார்.’ (A lady with the Dog (நாய்க்காரச் சீமாட்டி), Ionitch, Betrothed (மணமகள்), At Christmas Time, The Huntsman, A Lady’s Story, The Chemist’s wife, Anna on the Neck, Agafya, At a Summer Villa, A Tragic Actor, Bad Weather, A Misfortune).
பின்பு, ரஷ்ய இலக்கியம் குறித்துப் பேசினோம். தஸ்தயேவஸ்கி, டால்ஸ்டாய், துர்கேனிவ், செகாவ் போன்ற மேதைகளின் படைப்புகளே தற்போது ரஷ்யாவில் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன என்ற நம்பவே முடியாத தகவலைச் சொன்னார். மீள முடியாத ஆச்சரியத்தில், ‘நம் சமூகத்திலேயே ரஷ்ய இலக்கியம் பரவலாக வாசிக்கப்படுகிறதே! அங்கு எப்படி?’ என்று கேட்டதற்குச் சிரித்துக்கொண்டே, ‘நம் சமூகத்தில் சண்முகசுந்தரம் போன்ற எழுத்தாளர்கள் வாசிக்கப்படுகிறார்களா என்ன? அதேபோல்தான் அங்கு டால்ஸ்டாயும், தஸ்தயேவஸ்கியும்; அவர்கள் மேதைகள் என்பது தெரியும். ஆனால் வாசிக்கப்படவில்லை. இங்கு 100 பேர் படித்தால் அங்கு 200 பேர் படிப்பார்கள், அவ்வளவுதான் வித்தியாசம். ‘அன்னா கரீனினா’, ‘குற்றமும் தண்டனையும்’, ‘ஆறாவது வார்டு’ ஆகியவற்றைப் படங்களாகப் பார்த்திருக்கிறார்கள்; கதைகளாகப் படித்ததில்லை. சிங்கிஸ் ஐத்மாத்தவோடு ரஷ்ய இலக்கியத்தில் பேரலை முடிந்துவிட்டது.’
செகாவின் நண்பர்களாகிய கார்க்கி, புனின் பற்றிப் பேசினோம். புனினை இரண்டாம் தர எழுத்தாளராக வகைப்படுத்தினார். அரசியல் கருத்தியல் சார்ந்து எழுதியதாலேயே அவர் நோபல் பரிசு வெல்ல நேர்ந்ததாகச் சொன்னார். ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் ஏகப்பட்ட அனுபவம் இருந்தால் அவனால் இலக்கியத்தில் முழுமையாகச் செயல்பட முடியாதென்பதற்கு கார்க்கியே சிறந்த காரணம். கார்க்கி குறைந்த அளவில்தான் நல்ல கதைகள் எழுதியிருப்பதாகச் சொன்னார்.
‘முதன்முதலில் சினிமா உருவான காலத்தில் டால்ஸ்டாயால் அக்கலையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆரம்பக் கால திரைப்பட கலைஞர்கள் அதை நாடகத்தின் மறுவடிவம் என்றே விளக்கியுள்ளனர். டால்ஸ்டாயின் குடும்பத்தினர் வீட்டில் விளையாடும் காட்சிகளைப் பதிவு செய்து காண்பிக்கிறார் ஒரு வீடியோகிராஃபர். ஆச்சரியத்தில் டால்ஸ்டாய் கேட்கிறார், ‘இது அழியாதா?’. பத்திரமாக வைத்துக் கொண்டால் எத்தனை காலமானாலும் அழியாதெனத் தெரிய வந்ததும் திரைப்பட கலையை ஓவியத்தைவிட முக்கியமானதாகக் கருதினார். அடுத்த நூற்றாண்டில் இவ்வுலகையே இந்தக் கலை வடிவம்தான் ஆளப்போகிறது என்று அந்நாட்டின் முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கணித்திருக்கிறார் டால்ஸ்டாய். மேலும் சில கேள்விகளை அடுக்கிக் கொண்டு போகிறார்:
‘படம் பார்ப்பவர்கள் யார்?’
‘பாமர மக்கள்’
‘எடுப்பவர்கள்?’
‘வசதியுள்ளவர்கள்’
‘முதலில் அதை மாற்ற வேண்டும். படம் எடுப்பதை மேல்தட்டு மக்களிடம் ஒப்படைத்தால் சரி வராது’ என்றாராம் டால்ஸ்டாய்.’
எஸ்.ரா மேலும் சொன்னார், ‘நான் பெரும்பாலும் 19ம் நூற்றாண்டில் வெளி வந்த உலக இலக்கியத்தைத்தான் விரும்பிப் படிப்பேன். இலக்கியத்தில் பேரலையை எழுப்பிய நூற்றாண்டு என்றே அதனைச் சொல்லலாம். வாழ்க்கைக்கான அர்த்தத்தையும், மனிதக் குலத்துக்கான முக்கியமான கேள்விகளையும் இலக்கியம்மூலம் 19ம் நூற்றாண்டில்தான் பேசப்பட்டது. அவையே 20 மற்றும் 21ம் நூற்றாண்டின் கேள்விகளாகவும், தேடலாகவும் இருக்கின்றன. இதுபோன்ற அலைகள் எப்போதாவதுதான் எழும். இதற்கு முன் 16,13,9,2 ஆகிய நூற்றாண்டுகளில் எழுந்தன.
புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை ஆகிய சங்க இலக்கியங்களில் Anthology அறிமுகமான காலமது. பெரும்புலவரான கபிலரின் கவிதைக்குப் பக்கத்தில் வெறும் பதிமூன்று பாடல்கள் மட்டுமே எழுதிய வெள்ளிவீதியாரின் பாடல் இடம்பெறுவது எவ்வளவு பெரிய விஷயம்! இந்தக் காலத்தில் அதெல்லாம் சாத்தியமில்லைதானே! இதை முதன்முதலில் செய்தது புத்த இலக்கியம். அதனிடமிருந்து ஜப்பானிய இலக்கியம் Anthology முறையைக் கையிலெடுத்தான். ஜப்பான் இலக்கிய தாக்கத்திலிருந்து தமிழ்ச் சங்க கால இலக்கியத்தில் இந்த முறை பின்பற்றப்பட்டது. எப்படித் தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் ஆங்கில நாவல்களின் தாக்கம் நிறைந்ததோ அதேபோல சங்க இலக்கிய பாடல்கள் உருவாகப் புத்த இலக்கியத்திற்குப் பங்குண்டு.
சங்க இலக்கியம், இயற்கையை மிக அருகில் காண்பித்தது. சினிமாவில் ஆணை காண்பித்த அடுத்த காட்சியில் பெண்ணுக்கு Close up வைத்தால் அவர்கள் இருவருக்கும் காதலுறவு உள்ளதென அர்த்தம். Mid Shot/Wide Angle இருந்தால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மனதளவில் தூரமாக உள்ளனர் என்று எடுத்துக் கொள்ளலாம். சங்க இலக்கியம் அப்படித்தான் இயற்கைக்கு Close up வைக்கிறது. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் அப்படி என்ன உறவு இருக்கிறது?’ என்ற கேள்வியை முன்வைத்தார் எஸ்.ராமகிருஷ்ணன்.
ஏற்பட்ட சிறிய மௌனத்தைக் கலைக்க, எனது ‘செகாவ் 161’ கட்டுரையை அவரிடம் வாசிக்கக் கொடுத்தேன். ஒவ்வொரு பக்கத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் குறிப்பிட்ட விஷயத்தைக் குறித்த அவரது கருத்துக்களைச் சொன்னார். சில இடங்களில் உடன்பட்டார்; சில இடங்களில் முரண்பட்டார். ‘Anton Chekhov 1980 (2015) படத்தில் அவருக்குப் பிடித்த காட்சியைக் குறிப்பிட்டார். செகாவின் நாடகங்கள் அனைத்தும் நாவலுக்கான கருப்பொருள். அக்கதாபாத்திரங்களுக்குப் பின் கதைகளுண்டு. செகாவ், நாடகங்களின் வழியே அதைச் சொல்ல மறுத்துவிட்டாதாகச் சொன்னார் எஸ்.ரா. முழுக் கட்டுரையைப் படித்ததும்,
‘நல்லா எழுதியிருக்கீங்க. Chekhov Flavour is Missing. செகாவ் எங்கே திருமணத்தை எதிர்த்தார்? அவர் பொருந்தா திருமணங்களையும் எதிர்பார்ப்புகள் கொண்ட திருமண வாழ்வையும்தானே எதிர்த்திருக்கிறார்! இவ்வளவு எழுதிய அவரே தன் மனைவியைச் சந்திக்கும் சமயங்களில், அவள் நாடகங்களுக்காக மேக்-அப் போட்டுக்கொண்டிருக்கும்போது ஒன்றரை மணி நேரம் இவர் வெளியே காத்திருப்பார். அப்போது அவர் போட்டுக் கொண்ட ஒப்பந்தங்கள் எங்கே? சரி, இவர் அவ்வளவு ஒப்பந்தங்களைப் போட்டார்! ஓல்கா? அவளுக்கு இவ்வுறவு குறித்து ஒரு புகாரும், நிபந்தனைகளும் இல்லை. செகாவை எப்படிச் சமாளிக்க வேண்டுமென்பதை அவளறிந்திருந்தாள். திருமணத்திற்குப் பிறகும் ஓல்காவுக்கு ஏகப்பட்ட காதல் உறவுகள் இருந்தன.’
செகாவை நெருங்கியோர் பலருக்கு ஓல்காவைப் பிடிக்காது. அவருடைய நண்பர்களே ஓல்காவைத் திருமணம் செய்து கொண்ட செய்தியைக் கேட்டதும் வருத்தப்பட்டனர். ஒருவேளை இதுதான் காரணமாக இருக்குமே எனத் தோன்றியது.
எங்கள் சந்திப்பு நிறைவுக்கு வந்தது. கிளம்பும் முன் ‘செகாவ் வாழ்கிறார்’ புத்தகத்தில் அவரது கையெழுத்தைப் பெற்றுக் கொண்டேன். செகாவ் வாழ்கிறார் என அறிமுகப்படுத்திய எஸ்.ராமகிருஷ்ணன், அன்றைய நாளில் என்னிடம் எங்கெல்லாம் செகாவ் வீழ்கிறார் என்பதையே அதிகம் எடுத்துரைத்தார். அதுவே அச்சந்திப்பை அர்த்தமுள்ளதாகவும் மாற்றியதும். ‘The Pink Stocking’ கதையில் செகாவ் எழுதிய ஒரு வரியையே நினைத்துக் கொண்டேன்:
‘audiatur et altera pars: The opposite side needs to be heard’
コメント