பொதுவாகவே, கதை சொல்லப் பிடிப்பதால் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தை விரும்பிப் படித்தேன். இப்போது எம்.ஏ தமிழ் இலக்கியம் படிக்கும் அளவுக்கு தமிழின் மீதான போதை குறையவே இல்லை. தமிழ் மாணவர்களிடம் இரண்டு எல்லைகள் உள்ளன. அது அடிதடி, ரகளை, கிண்டல், கேலி, கொண்டாட்டம் என்ற ஒருதலையும், கதை, கவிதை, காதல், ரசனை, இலக்கியம் என்ற மற்றொரு தலையும் ஆகும். நான் இதில் இரண்டாம் பிரிவு. அவற்றுள் காதல் மட்டும் விதிவிலக்கு.
தமிழ் நடத்தும் எல்லா ஆசிரியர்களும் வகுப்பில் “ஆராரிராரோ” பாடிக்கொண்டு இருக்கின்றனர். தமிழ் மாணவர்களைப் போல தமிழுக்கும் இரண்டு படிமங்கள் உள்ளன. தமிழ் நம்மை இனிப்படையவும் செய்யும் சலிப்படையவும் செய்யும். அவை ஆசிரியர் வசமே உள்ளது. ஒருமுறை வகுப்பில் நான் செமினார் எடுக்க நேர்ந்தது. கம்பராமாயணத்தை ராவணன் படத்தோடு ஒப்பிட்டு பாடம் எடுத்ததால் அத்தனை பேரும் ஆர்வத்துடன் கவனித்தனர். சினிமாவோடு எதை ஒப்பிட்டுக் கூறினாலும் மாணவர்கள் உற்சாகமாகி விடுகின்றனர். சினிமாவையே வாழ்க்கையிலிருந்தும் இலக்கியத்திலிருந்தும் எடுத்தாலும் மக்களுக்கு, வாழ்க்கையையும் இலக்கியத்தையும் புரியவைக்க சினிமாவையே உதாரணமாகக் கூற வேண்டியிருக்கிறது. தொல்காப்பியத்தில் வரும் முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருளைப் புரியவைக்கவே கற்றது தமிழ் படத்தில் பிரபாகரன் கடற்கரையில் காதலர்களைக் கொன்றதற்குக் காரணம், அன்று கூடுதலாகக் கொளுத்திய ஐந்து டிகிரி வெயில்தான் என்று விளக்க வேண்டியிருக்கிறது. இதனாலேயே என்னை எல்லா ஆசிரியர்களுக்கும் பிடித்திருந்தது. என் பெயர் பிரின்சிபால் வரை எட்டியிருந்தது. அவர் என்னை அழைத்து படிப்பைப் பற்றி விசாரித்து, ஒரு அரியர் கூட வைக்காத என்னைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்.
"ஒரு நல்ல ஆசிரியன் நல்ல கதை சொல்லியா இருக்கணும். நீ சுவாரஸ்யமான நரேட்டர். ஆசிரியனாகக்கூடிய எல்லா தகுதியும் இருக்கு. சோ நீ மாஸ்டர்ஸ் முடிச்சிட்டு இங்கயே பணியாற்றலாம்" என்றார். 'தமிழ் படிச்சிட்டு என்னத்ததான் செய்யப்போறியோ?' என்று பாவப்பட்ட எல்லோர் முன்பும் 'அடிச்சான் பாரு அப்பாய்ன்மெண்ட் ஆர்டர்' என்பது போல் உணர்ந்தேன்.
படிக்கும்போது, இந்தக் கல்லூரி வாழ்க்கை நித்தியமாக இருக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். அதற்குக் கிடைத்தப் பரிசாகவே இந்த ஆசிரியர் வேலையைக் கருதுகிறேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாளில் இரண்டு வகுப்புகளுக்குப் பிறகு ஒரு இலவச வகுப்பு கிடைத்தது. ஆசிரியர் அறையின் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது நூறடி தூரத்தில் கல்லூரி நூலகம் தெரிந்தது. இச்சமயம் அங்கு சென்று, ஏதேனும் புத்தகத்தைப் புரட்டலாமா என யோசிக்கையில், நூலக ஜன்னல் வழியே வந்து நின்றாள் ஒருவள். அங்கு பணியாற்றும் ரிசப்ஷனிஸ்ட்டாக இருக்க வேண்டும். அவளைப் பார்த்ததும் 'பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம் நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி!' என்ற பாரதியார் வரிகள் ஞாபகத்திற்கு வந்தன. எங்களிருவருக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருப்பது போன்ற உள்ளுணர்வு ஏற்பட்டது. பின்னிருந்து பெண்ணொருவள் வந்து என்னிடம் "உனக்கு அவளை பிடிச்சிருக்கா?" என்றாள்.
அவள் சக தமிழாசிரியை மகிழினி. என்னைப் போலவே தமிழைத் திரைப்பட உவமையோடு கற்றுத்தருபவர். தன் பேருக்கு ஏற்றதைப்போல் வாழ்ந்து வரும் அவளுக்கும் எனக்குமிடையில் நல்ல நட்பொன்று பிறந்தது. நாங்கள் மதிய உணவை சேர்ந்தே உண்போம்; மாலை வீடு திரும்புகையில் சேர்ந்தே செல்வோம்; கல்லூரியில் பணிபுரியும்ந்த சமயங்களில் சேர்ந்தே உலவிக்கொண்டிருப்போம். ஒரு சிலர் எங்களைக் காதலர்கள் என்றே முடிவு செய்துவிட்டனர்.
மகிழினி அந்த நூலக ரிசப்ஷனிஸ்ட்டின் பெயரைக் கண்டுபிடித்து என்னிடம் சொன்னாள்.
சாஹித்யா !
தமிழ் எழுத, படிக்க, பேசத் தெரிந்த கன்னடத்துப் பெண். எனக்கு சாஹித்யா மீதிருக்கும் ஆர்வத்தை அறிந்து, அவளை எப்படி அணுக வேண்டுமென்று பாடமே எடுத்தாள் மகிழினி. அவளுடைய கண்களைப் பார்த்து பேச வேண்டுமென்று சொன்ன அவள், என்ன பேச வேண்டுமென்பதை எல்லாம் சொல்லவில்லை.
"என்னால எப்படி பேசணும்னு சொல்லதான் முடியும். என்னத்த பேசணும்னு எழுதியெல்லாம் தர முடியாது. எனக்கு வேற வேலை இல்ல?'’ என்று சொல்லி கிளம்பிவிட்டாள்.
சாஹித்யா யாருடனும் சரியாகப் பேசி நான் பார்க்காததால் என்னிடமும் ஒரு ஈடுபாட்டுடன் பேசுவாளா? என்பதும் சந்தேகம்தான். நான் பேசச் சென்று அவளுக்கு தொந்தரவு கொடுப்பவனாக ஆகிவிட்டால்? எனக்கு அவளுடைய இருப்பு அவசியமாகப் பட்டதால் இப்படி பார்த்துக் கொண்டிருப்பதே போதுமென்று இருந்தது. அவளை நெருங்குகிறோம் என்ற படபடப்பினாலேயே நூலகத்தினுள்ளே நுழையவில்லை…
"நீ அவ பக்கத்துல போகவே பயப்புட்ற. அவளப் பத்தி புரிஞ்சிக்கவே மெனக்கெடல. நீயெல்லாம் எங்க லவ் பண்ணி... " என்று சகித்துக் கொண்டாள் மகிழினி. தங்கள் உணர்வை ஆண்கள் எப்பொழுதும் புரிந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கும் பெண்கள், ஆண்களின் இந்தத் தயக்கத்தை ஒருபோதும் புரிந்து கொள்ளப் போவதில்லை.
ஆசிரியர் அறை ஜன்னலிலிருந்து, நூலக ஜன்னல் வழியே சாஹித்யாவைப் பத்து மாதங்களாக பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்தேன். அவளிடம் பேசுவதற்கான வாய்ப்பும் வாய்க்கவில்லை: நானும் முயற்சிக்கவில்லை. நான் கற்றுத்தந்த எல்லா குறுந்தொகைப் பாடல்களிலும் அவள் பிம்பமே நிறைந்திருந்தது.
ஒரு நாள் மகிழினி, என்னிடம் ’சாஹித்யாவுக்கு பெங்களூரில் திருமணம் நடக்கப்போகும் காரணத்தால் இனி இந்த கல்லூரியில் பணியாற்ற மாட்டாள்’ என்று சொன்னாள். அத்தனை நாட்கள் பேசத் தவறியதற்கு அன்று வருத்தப்பட்டேன். இதோ! கல்லூரி சாலையில் என்னை விட்டுப் பிரியும் இந்த யட்சியிடம் இப்பொழுதே சென்று பேசலாம்தான்; அதனால் ஒரு அற்புதமும் நிகழப்போவதில்லை. இப்படியொருவன் தன்னைக் காதலித்தான் என்பது அவளுக்குத் தெரியுமா என்பதே சந்தேகம்தான்.
"உன் ரெண்டு வருஷ ஊமக்காதல் முடிஞ்சிடிச்சி பாத்தியா" என்று மகிழினி மொழிந்தது என்னை மேலும் கொன்றது. கல்லூரி முடிந்து பெரும்பாலான மாணவர்கள், ஆசிரியர்கள் சென்று விட்டனர். நான் கல்லூரிப் பூங்காவில் அமர்ந்து யோசனைகளுக்குள் புகுத்துவிட்டேன். என்னைச் சுற்றி காற்றிலாடும் மரக்கிளைகளில் சப்தமும் குயில்களின் கூவலும் ஒலித்தது. இதற்கிடையில் "ஏன் துக்கத்தில் மிதக்கின்றாய்?" என்று மென்மையான குரலொன்று கேட்டது. என்னைச் சுற்றி யாருமில்லை; அது என் மனக்குரலும் இல்லை. மீண்டும் ஒரு முறை கேட்டது.
"யாரது?" என்று மனக்குரலால் கேட்டேன்.
"கடவுள் என்று கருதிக் கொள்ளவும்"
"நான் எப்படி நம்பறது?"
"மானிடனே ! நாள்தோறும் உன் மாணவர்களுக்கு என்னைப் பற்றிய செய்யுளை நடத்தி, இப்பொழுது என்னையே நம்ப மறுக்கிறாய். நான் முன்நின்றால் என்னை வணங்குபவர்களே என்னை சந்தேகிக்கின்றனர். நாத்திகர்கள் வணங்க மறுத்தாலும் வாழ்த்தி வரவேற்கின்றனர்"
"சரி நம்புறேன்"
"இப்போது சொல் உன் சோகத்தை”
"எனக்கு ஒரு பெண்ணை பிடிச்சிருந்தது.. அவளிடம் பேசவே தயக்கம் கொண்டதால் இப்போது அவளையே இழந்துட்டேன். அவ வேறொருவனை திருமணம் செஞ்சிக்க போறா"
"சரி. சுற்றிப்பார். உன் கண்களில் தென்படுவதென்ன?"
"கல்லூரி பூங்காவில் சில காதலர்கள்"
"என்ன தோன்றுகிறது அவர்களை பார்த்தால்?"
"எனக்கு ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருக்கு! எப்படி இந்த வயசுல ஒரு பெண்ணை இவ்வளவு தைரியத்துடன் அணுகி பேசுறாங்க. எனக்கேன் இவ்வளவு தயக்கம்? சாத்திரங்களிலும் சினிமாக்களிலும் சுந்தரிகளை போகப்பொருளா சித்தரிப்பதால் பெண்களை நெருங்கவே நான் அஞ்சுகிறேனா?”
"எந்த ஆண்டில் இருக்கிறாய்?"
"2019"
"அதுதான் இல்லை. உலகம் இப்போது 2034ல் ஓடிக்கொண்டிருக்கிறது. நீ காணும் யாவரும் உன்னைப்போல் தயக்கம் கொண்டு, தவற விட்டவர்களை எண்ணி வருந்தியவர்களே. அவர்களுக்கு மறுவாய்ப்பு கொடுக்கும் பொருட்டே காலச்சக்கரத்தை பின்னோக்கி விட்டுள்ளேன். அவர்கள் அனைவரும் தங்கள் மறுவாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்”
கடவுளின் மனக்குரலில் இதைக் கேட்பதற்கே பிரமிப்பாக இருந்தது. எனக்கு39 வயதா? 2034ல் யார் ஆட்சி செய்துக்கொண்டிருக்கிறார்? தண்ணீருக்கான மூன்றாம் உலகப்போர் தொடங்கி விட்டதா? சாதி ஒடுக்குமுறை ஒழிந்து விட்டதா? தமிழ் சினிமா எந்த நிலையில் உள்ளது? என்று அவரிடம் எழுப்ப எனக்கு கேள்விகள் பல இருப்பினும் நான் ஒரு வேண்டுகோள் மட்டுமே வைத்தேன்.
"கடவுளே ! இவர்களுக்காக 15 வருடங்கள் காலச்சக்கரத்தை பின்னோக்கி விட்டதுபோல் எனக்காக ஓர் ஆண்டு பின்னோக்கி விட்டால் நான் என் மறுவாய்ப்பை தவற விட மாட்டேன்"
"இதொன்றும் பெரிய விடயமல்ல. ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. நீ உன் ஒரு வருட நினைவுகளை மறந்து விடுவாய். இதில் நீ உறுதியாய் இருந்தால் மட்டுமே செல்லலாம்"
யாரென்றே தெரியாத சமயத்தில்தானே நான் அவள்மீது ஆர்வம் கொண்டேன். அதே நம்பிக்கையில் கடவுளிடம் அவர் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டேன். அவர் எதுவும் பேசாமலிருந்தார். அந்த மூன்று நொடி மௌனத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை …..
"ஒரு நல்ல ஆசிரியன் ஒரு நல்ல கதை சொல்லியா இருக்கணும். நீ ஒரு சுவாரஸ்யமான நரேட்டர். ஒரு ஆசிரியன் ஆகக்கூடிய எல்லா தகுதியும் உனக்கு இருக்கு. சோ நீ மாஸ்டர்ஸ் முடிச்சிட்டு இங்கயே பணியாற்றலாம்" என்றார். 'தமிழ் படிச்சிட்டு என்னத்த தான் செய்யப்போறியோ?' என்று பாவப்பட்ட எல்லோர் முன்பும் 'அடிச்சான் பாரு அப்பாய்ன்மெண்ட் ஆர்டர்' என்பது போல் உணர்ந்தான்.
படிக்கும்போது இந்தக் கல்லூரி வாழ்க்கை நித்தியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தவனுக்குக் கிடைத்த பரிசாகவே இந்த ஆசிரியர் வேலையைக் கருதினான். வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் இரண்டு வகுப்புகளுக்கு பிறகு ஒரு இலவச வகுப்பு கிடைத்தது. ஆசிரியர் அறையின் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது, நூறடி தூரத்தில் கல்லூரி நூலகம் தெரிந்தது. இச்சமயம் அங்கு சென்று ஏதேனும் புத்தகத்தை எடுத்து புரட்டலாமா என்று யோசித்து அங்கு சென்றான். அங்கிருந்த ரிசப்ஷனிஸ்ட் ஜன்னல் பக்கம் சென்றதும் அது அவனுக்கு பழக்கப்பட்ட இடம் போல் தோன்றியது. அங்கு வீசிய வாசத்தை அவன் முன் ஜென்மத்தில் முகர்ந்த ஞாபகம். நூலக ஜன்னல் வழியிலிருந்து, தான் வந்த ஆசிரியர் அறை ஜன்னலை நோக்கினான். அச்சமயம் சாஹித்யா வந்து தன் கைப்பையை பென்ச்சில் வைத்து இவன் வேடிக்கை பார்ப்பதை பார்த்தாள். அப்படி எதை அவன் உற்று நோக்குகிறான் என்பதை அவனருகில் சென்று அவள் பார்க்கையில் ஆசிரியர் அறை ஜன்னல் வழியே வந்து நின்றாள் ஒருவள் (மகிழினி). அவளைப் பார்த்ததும் 'பட்டுக் கருநீலகப் புடவை பதித்த நல்வயிரம் நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி!' என்ற பாரதியார் வரி ஞாபகத்திற்கு வந்தது. அவர்கள் இருவருக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருப்பது போன்ற உள்ளுணர்வு அவனுக்கு ஏற்பட்டது. பின்னிருந்து பெண்ணொருவள் (சாஹித்யா) வந்து, என்னிடம் "உனக்கு அவளை பிடிச்சிருக்கா?" என்றாள்.
Comments