top of page
Search
Writer's pictureBalu

கேயாஸ்

தங்களையே நேசித்துக்கொள்பவர்கள் வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் எடுத்துக்கொள்வது போலத்தான் நானும் இந்த இடைவெளியை எடுத்துக்கொண்டேன். பிரேமிடமிருந்தும், மோகனிடமிருந்தும், என் குழப்பங்களிலிருந்தும் ஓர் இடைவெளி. மோகனைக் காதலித்திருக்க வேண்டாமோ என, அன்பின் தானத்தை நாடி கரங்கள் உயர்த்திய பிறகு தோன்றியது; பிரேமையும்தான். அன்பளிக்க முடிவெடுத்தால் அலாதியாக, அளவிற்கு மீறிக் கொடுத்துத் திகட்டச் செய்து, அதனைப் பெறுபவரைத் திடுக்கிட வைத்து சுய சந்தேகத்தை ஏற்படுத்துவதே பெண்பாலாகும். ஆனால் பிரேம் மற்றும் மோகன் ஆகியோரால் காதலிக்கப்பட்டதால் சுய சந்தேகத்திற்கு உள்ளானதென்னவோ நான்தான்.

கல்லூரியின் முதல் வகுப்பில் மாணவர்கள், தங்களை திரைப்படக் கதாநாயகர்களின் ரசிகர்களாக அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது, பிரேம் தன்னை ஃபிடில் காஸ்ட்ரோவின் ஃபாலோவராக அறிமுகம் செய்துகொண்டான். அன்று நான் மதிய உணவைக் கொண்டு வராததை அறிந்து, கேன்டீனிலிருந்து எனக்காக வெஜ். ஃப்ரைட் ரைஸ் வாங்கி வந்து கொடுத்தான். பேசப் பேசப் பொருள் நிறைந்தவன், பழகப் பழகப் பண்பானவனாகத் தோன்றினான். பிரேமால்தான் நான் அரசியல் குறித்துக் கொஞ்சம் தெரிந்துகொள்ள நேர்ந்தது. வண்ணாரப்பேட்டையில் நடந்த சிஏஏ போராட்டத்தில் பிரேமுக்காகவே கலந்துகொண்டேன்.


"பிரேம்! உனக்கு சமச்சு போடணும்னு எனக்கு ஆச. ஆனா எனக்கு சமைக்கத் தெரியாது. இருந்தாலும் பரவால்ல, இந்த வாரம் எங்க வீட்டுக்கு சாப்பிட வரியா?" என்று காதலை முன்மொழிந்தேன்.


"அட! தாராளமா வரலாம்”


"எங்க அக்கா வீட்லதான் தங்கியிருக்கேன். ஆனா நீ என் அம்மா சமையல சாப்பிடணும்னுதான் என் விருப்பம்"


"அவங்க எங்க இருக்காங்க?"


"சேலம். அவங்க சென்னை வந்தா நா சொல்றேன். இந்த சண்டே எங்க அக்கா வீட்டுக்கு வந்துடு. அவங்ககிட்ட உன்னப் பத்தி சொல்லிருக்கேன்"


"என்னனு?"


"எனக்கு நீ-ன்னா ரொம்ப பிடிக்கும்னு" - புன்னகைத்தான்.


ஞாயிற்றுக்கிழமை காலை, பிரேம் கைப்பேசிமூலம் அழைத்து வர இயலாது எனவும், மற்றொரு நாள் நிச்சயம் வருவதாகவும் சொல்லி மன்னிப்பு கேட்டான். பிரேமிடம் உரிமையுடன் சண்டை போட வேண்டும் போல் இருந்தது. ஆனால் எதுவும் பேசாமல் ஃபோனைத் துண்டித்துவிட்டேன். அப்போது எங்கள் தெரு பக்கமாக மோகன் வந்திருந்தான்.


"என்னடா இந்தப் பக்கம்?"


"உன்ன பார்க்கத்தான்"


"என்ன பார்க்கவா?"


"இல்ல. இந்தப் பக்கம் வந்திருந்தேன். அப்படியே உன்னைப் பார்த்துட்டு போலாம்னு..."


மோகன் பள்ளியிலிருந்து என்னுடன் படித்து வருபவன். அதிகம் பேசாதவன். ஒருவேளை பிரேம் இந்தக் கல்லூரியில் சேராமல் இருந்திருந்தால் பள்ளி நாட்களைப் போலவே மோகனுடன்தான் அதிக நேரம் செலவழித்திருப்பேன். விவரம் தெரிந்த வயது முதலே என் சொல் பேச்சைத் தட்டாமல் கேட்பவன் மோகன். அடுத்தவர்களுக்கு இன்ட்ரோவர்ட்டாக இருந்தாலும் என்னிடம் நன்றாகப் பேசக்கூடியவனாகவே இருந்தான். நான் பிரேமுடன் பழகுவதை அவன் விரும்பாமல் இருந்தாலும் என்னுடைய மகிழ்வைச் சிதைக்கும் சிறு சொல்லைக்கூடச் சொல்ல அஞ்சுபவன். அவனது இன்றைய வருகை, என்னுடன் நேரம் செலவழிப்பதன் ஏக்கமாகத்தான் காணப்பட்டது.

*

பல மதிய உணவு வேளைகளையும், மாலை தேநீர் பொழுதுகளையும், நூலக வகுப்புகளையும் கடந்து கல்லூரியின் இறுதி நாள் வந்திருந்தது. "பிரேம். ரெண்டு வருஷம் கழிச்சு எங்க வீட்டுக்கு வந்து பேசுறியா?" என்றேன்.


"என்ன பேசணும்"


"எனக்கு உன்கூட இருக்கணும்"


சந்திக்க விரும்பாமல் திசை மாறிய அவனது கண்கள் அவனுடைய முடிவைத் தெரிவித்துவிட்டன. ஆனால் நான் மௌனப் பிரிவை விரும்புபவள் அல்லள். அவனது எண்ணங்களைத் தெரிந்துகொள்ள எத்தனித்தேன்.


"எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும், இந்து. சொல்லப்போனா நானும்தான் உன்னக் காதலிச்சேன். ஆனா எனக்குக் கல்யாணத்துல விருப்பம் இல்ல. சமூகத்துல ஒழிய வேண்டிய முதல் விஷயமா எதைக் கருதுறேனோ நானே அதை செஞ்சிக்க விரும்பல. நம்ம கூண்டுக் கிளிங்க இல்ல. பறக்க வேண்டியவங்க”


“என்ன லவ் பண்ணியுமா இந்த முடிவ எடுக்குற?”


”ரொம்ப சுயநலவாதியா இருக்கானேன்னு நெனைக்காத. பொதுநலத்தோட இருக்கிற சுயநலம் நல்லது”


உன்னைப் பிடித்து வைக்க மாட்டேன். வழியனுப்பி வைக்கையில் விசும்பவும் மாட்டேன். போய் வா, பிரேம்! நான் சிந்தும் கண்ணீரைத் தரையில் சிந்த விடாமல் கோப்பையை ஏந்துபவன் என் அன்பைப் பெற்றாலும் பெறலாம்.


அப்படியொரு கோப்பையில் மதுவை நிரப்பி எனது கண்ணீரைக் கலந்து அருந்தினான் மோகன். ஆண்டுகள் கழித்து, மீண்டும் என் நேரத்தை அவன் பெற்றிருந்தாலும், என்னுடைய சோகம் அவனைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கும். என்னை இதிலிருந்து மீட்டெடுக்க முயன்று தோற்றாலும், அவனுடைய மெனக்கெடல் அபாரமானது. பிரேமை மறப்பதற்கான காரணங்களைத் தொடர்ந்து அவன் எனக்குக் கொடுத்துக்கொண்டே இருந்தான். மோகன் என் இன்பத்திற்குக் காரணமானவனாக இல்லாது இருந்தாலும் துயரத்தைத் துடைக்கும் கைக்குட்டையாக இருந்தான். முந்தைய காதலிலிருந்து முழுதாக மீளாதபோதிலும், என் துன்பத்தைத் துரத்த முற்படுபவனுடன் இன்பமாக இருக்க முடியுமென யூகித்து மோகனுடன் காதலுறவில் சென்றேன். "பிரேம் இன்னும் எனக்கு முழுசா தீரல. இருந்தாலும், உன்கூட ரிலேஷன்ஷிப் தப்பில்லைன்னு தோனுது. உனக்குப் பிரச்சனையா இருந்தா.." என்ற நிபந்தனையுடன். அதற்கு மோகன் அளித்த பதில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் வீட்டில் வளர்த்து வந்த கேண்டியின் ஞாபகத்தை வரவழைத்துவிட்டது.


பிரேமை மறந்தே ஆக வேண்டும் என்பதை நினைவு கொண்டே மறக்க மறந்துவிடுகிறேன். பிரேம் மீதான காதலைவிட, அவனது இன்மையினால் ஏற்படும் சோகத்தைவிட, மோகனை முழுமையாகக் காதலிக்க முடியாத குற்றவுணர்வே மிகுந்திருந்தது.


"நீ போய் அவன்கிட்ட பேசு. உனக்குத் தோணுறதை எல்லாம் சொல்லு. கெஞ்சு, கால்ல விழு. அதான் கடைசி ஆப்ஷன்" என்றான் மோகன்.


அந்தியில் கதிர் அஸ்தமித்துக்கொண்டிருந்தது. மனதுக்குள் இருந்த எல்லா வேதனைகளையும் விடுத்து பிரேமிடம் மன்றாட அவனைத் தேடிச் சென்றேன். மார்கழியின் சில்லென்ற தென்றல் செவிகளைக் கிழிக்கும் விதமாய் வீசிக்கொண்டிருந்தது. உடலும் மனமும் நடுங்கிக்கொண்டிருந்தன. நெருங்கும் நேரத்தில், வீதிகளிலும் வீடுகளிலும் விளக்குகள் போடப்பட்டிருந்தன. திண்ணையில் அமர்ந்து சீட்டாடிக்கொண்டிருந்த பிரேம், என்னைக் கண்டதும் ஆட்டத்தைப் பாதிலியில் நிறுத்திவிட்டுப் பேச வந்தான்.


"நான் எங்க அம்மாகிட்ட சொல்லிக்கிறேன். எனக்குக் கல்யாணம்லாம் வேண்டாம். உன்கூட இருந்தா போதும். நீ வந்துடு, பிரேம்"


"தள்ளி இருந்தாலும் உன்னப் பத்தி தெரிஞ்சவங்ககிட்டலாம் விசாரிச்சிட்டுத்தான் இருந்தேன். மோகன் ரொம்ப நல்லவன். அவனுக்கு நீ இதை செஞ்சிருக்கக்கூடாது"


"முடிஞ்சத பேச வேணாம். நான் கேட்டதுக்கு பதில் சொல்லு"


"எனக்கு உன்மேல இருந்த காதலெல்லாம் போய்டிச்சு இந்து. உன்னையும் உன்ன சுத்தி இருக்குறவங்களையும் ஹர்ட் பண்ணாம பார்த்துக்கோ"


தானம் கேட்டு கைகள் ஏந்தியதன் பயனாக என்மீதிருந்த வற்றிய காதலின் நிராகரிப்பே மிஞ்சியது. கைவிடப்படுதலின் துயர் என்பது மனிதர்களுடைய இழப்பின் மதிப்பைக் கற்றுத்தருகிறது. என்னை அறியாமல் மனமும் கால்களும் மோகனுடைய வீட்டிற்குச் சென்றது. அவன் மாடியில் நின்றுகொண்டு காற்றுடன் கதை பேசிக்கொண்டிருந்தான். அவனிடம் ஒரு முக்கியமான விஷயத்தைக் கேட்க முற்பட்டேன். கேட்பதற்கு முன்பே பதில் சொல்லிவிட்டான்.


"மறுபடியும் வேண்டாம்"





51 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page